நோபல் மருத்துவப் பரிசு-2023
![]()
அன்று காலையே சஞ்சய் வந்து மாலை ஆறு மணிக்கு அவர்கள் வீட்டிற்கு சரவணன் தன் அம்மா, அப்பாவுடன் வரவேண்டுமென்றும் இரு முக்கிய நபர்களைச் சந்தித்து விட்டு பின்னர் அவர்கள் வீட்டிலேயே இரவு உணவை அனைவரும் சாப்பிடலாம் என்றும் சொல்லியிருந்தான். அவன் அம்மாவும், அப்பாவும் சரூவின் பெற்றோரை அலைபேசியில் அழைத்தனர்.
சரூவிற்கு ஒரே குடைச்சல்- யார் அந்த முக்கிய நபர்கள்? எதற்கு விருந்து? எதுவாக இருந்தால் என்ன, இரவுணவை ஒரு கை பார்க்க வேண்டியதுதான்!
இவர்கள் மாலை ஆறு மணிக்கு அழைப்பு மணி அழுத்தியதும் திறந்தவர் வட இந்தியரைப் போலிருந்தார். புன்னகையுடன் கை குலுக்கி வரவேற்றவர் ‘நீங்கள் சரவணன் மற்றும் அவனோட பேரன்ட்ஸ் என நினைக்கிறேன். ஐ அம் ஈஸ்வர் சந்தர், மைக்ரோ பயாலிஜிஸ்ட்டாக (Micro Biologist) வேல பாக்கறேன்; இவுங்க என் வொய்ப், விரூபாக்ஷி, சுருக்கமா விரூ. அவங்களும் மைக்ரோ பயாலஜிஸ்ட். சஞ்சயோட அம்மாவும், இவங்களும் ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சவங்க. நாங்க இன்னிக்கு ராத்திரி 10 மணிக்கு ப்ராஜெக்ட்-கம்-ரிசர்சுக்காக இலண்டன் போறோம்.’ அவர் பேசும் ஆங்கிலம், வங்காளியரின் உச்சரிப்பு போலிருந்தது. அதற்குள்,சஞ்சய், பவானி அவர்களின் பெற்றோர் எல்லோரும் ஹாலுக்கு வந்தனர்.
சூடான இஞ்சித் தேநீரும், பக்கோடாக்களும் சாப்பிட்டுக் கொண்டே அவர்கள் பேசத் தொடங்கியதும் இடமே கலகலப்பாகி விட்டது.
“சரூ, நீ நன்னாப் படிப்பயாமே? என்னவா வர ஆசப்படறே? பவானிதான் நீ ரொம்ப கெட்டிக்காரன்னு சொன்னா”
பவானியைப் பார்த்து வெட்கப் புன்னகை செய்த அவன், ‘அப்டில்லாம் ஒண்ணுமில்ல, மேம்.’ என்றான்.
“இங்க பாருடா, எம் புள்ளக்கிக் கூட அடக்கமெல்லாம் இருக்கு” என்று சரூவின் அப்பா சொன்னதும் அனைவரும் சிரித்தார்கள்.
‘ஏ ஐ ஆர்கிடெக்ட், (AI Architect) மேம்’
“குட், பவானி நீ?”
‘ஸ்பேஸ் சயின்டிஸ்ட்’
“நைஸ், சஞ்சய் நீ?”
‘மருத்துவத் துறையில் ஆய்வுகள் செய்பவனாக’
‘க்ளியராக இருக்கீங்க நீங்கள்லாம்; உங்க வயசுல என்னக் கேட்டிருந்தா பேய் முழி முழிச்சிருப்பேன்’ என்று சிரித்தார் ஈஸ்வர்.
“சஞ்சய், உங்கிட்டேந்து ஆரம்பிக்கிறேன். இந்த வருஷம் மருத்துவதற்கான நோபல் யாருக்குக் கெடச்சிருக்கு?”
‘ரெண்டு பேருக்கு ஆன்டி, கேடலின் கேரிகோ,(காதலீன் கரிகோ- Katalin Karico) ட்ரூ வைய்ஸ்மன்.’(Drew Weissman)
“குட்” என்ற ஈஸ்வர், அந்தப் பரிசு எதுக்காக?” என்று கேட்டார்.
‘அவங்க இரண்டு பேரும் பண்ண ஒரு ஆராய்சியினால, கோவிட்-19க்கான தடுப்பூசிய பெரிய அளவுல தயாரிக்க முடிஞ்சது.’ என்று முந்திக் கொண்டாள் பவானி.
“கரெக்ட், 13 பில்லியன் தடுப்பூசி மருந்த மிகக் கொறஞ்ச நாள்ல ஃபைஸர், (Pfizer) மடெர்னா (Moderna)தயாரிச்சு கோடிக்கணக்குல உயிர்கள காப்பாத்தியிருக்காங்க. சரூ நீ சொல்லு, அந்த வேக்சினுக்குப் பேரென்ன?”
‘அது எம் ஆர் என் ஏ (mRNA)-மெசஞ்சர் ரிபோ ந்யூக்ளிக் அமிலம்’(Messenger Ribo Nucleic Acid)
“மூணுமே நல்ல சமத்து” என்ற விரூ “ஏன் இந்த வழில தடுப்பூசி செய்யறாங்க?” என்று கேட்டார்.
‘நம்மோட செல்லுல அதாவது, திசுவுல இருக்கற மையக் கரு டி என் ஏ (DNA); அதுதான் நம் உறுப்ப, உடல அமைக்கறத்துக்கான செய்தியை வச்சுண்டு இருக்கு.’
“ஓ, ஃபைன், ஆனா, சரூ, ஆர் என் ஏயை பத்தின்னா சொன்னான்?”
‘நான் சொல்றேன், ஆன்டி; டி என் ஏ சொல்ற செய்திய திசுக்களுக்குக் கொண்டு போறத் தூதுவன் ஆர் என் ஏ.’
“கரெக்ட்” என்றார் ஈஸ்வர்.
‘அங்கிள், எனக்கொரு சந்தேகம். இந்த எம் ஆர் என் ஏ நம்ம உடம்புலயே இருக்கறச்சே ஏன் அதத் தடுப்பூசியாப் போடணும்?’
“வெரி குட், பவானி, நல்ல கேள்வி. சரூ, சஞ்சய் உங்களுக்குத் தெரியுமா?”
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘கொஞ்சம் தெரியும், மேம் ‘என்றான் சரூ
“பயப்படாம தெரிஞ்சத சொல்லு சரூ”
‘நம்ம உடம்புல இருக்கற நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நம்ம எம் ஆர் என் ஏ வோட புரத அமைப்பு தெரியும். ஆனா, வெளிலேந்து வரதோட அமைப்பு தெரியாததால அத எதுக்கும்.”
“ஏன் அப்படி ஏத்துக்காம எதுக்கறதுன்னு தெரியுமா?”
‘எனக்குக் கொஞ்சம் தெரியும். நம்முடைய எம் ஆர் என் ஏவுல இருக்கும் புரதக் குறியீடுகள், நம்ம நோய் எதிர்ப்பு செல்களுக்குத் தெரியும்; ஆனா, அந்தக் குறியீடில்லாதது வந்தா அது அத ஏத்துக்காது. உடம்பு வீங்கும், நெறய ஜூரம் வரும்.’ என்றான் சஞ்சய்
வியந்து போனார் ஈஸ்வர். “அந்த மேடம் காதலீன் ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட்; ட்ரூ வைய்ஸ்மன் ஒரு இம்யூனலாஜிஸ்ட்- (Immunologist) அதவது நோய் எதிர்ப்பைப் பற்றி ஆராயறவர். அமெரிக்காவுல, பென்சில்வேனியால கிட்டத்தட்ட 15 வருஷமா ஆராஞ்சு, அவங்க ஒரு எம் ஆர் என் ஏவ அமைச்சாங்க. அது நம்ம நோய் எதிர்ப்பு மண்டலம் இதை எதிர்க்காத வண்ணம் உருவாச்சு.”
“தடுப்பூசிங்கறது, நோய்த் தொற்றைத் தடுக்கற ஒரு வேக்ஸின். நோய்த் தொற்றோட அமைப்ப ஆராய்ந்து, வரிசைப்படுத்தி, அத மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு (Immune system) தடுப்பூசி மூலம் அறிமுகம் செஞ்சுடலாம். அப்போ, நோய் தொற்றும் போது, அந்தக் கிருமிகளை, நம்ம நோய் எதிர்ப்பு மண்டலம் கண்டு பிடிச்சு ‘டேய், எதிரி, நம்ம பேட்டக்குள்ள வராண்டா, அடிச்சு துரத்துடான்னு’ செயல்ல இறங்கி தொற்று நோய்லேந்து நம்மக் காப்பாத்தும்.”
‘அப்ப்டின்னா, ஆன்டி, நம்ம கோவேக்சின், கோவிஷீல்ட் இதெல்லாம் வேற மாறியா?’
“ஆமாம், பவானி. கோவேக்சின், வைரஸோட, எந்தப் பகுதி கிருமியை வச்சுண்டிருக்கோ அதக் கொண்டு இதுதான் கிருமி, இத வளரவிடாம அழிக்கிற வேலய அந்தக் கிருமி நம்ம உடம்புல தொத்தும் போது தடுக்கும்; நம்ம உயிரக் காப்பாத்தும். கோவிஷீல்ட் அந்தத் தொற்றை ஒரு ‘வெக்டர்’ (Vector) மூலமா உள்ளே செலுத்தி, அதப் போல நிஜத் தொற்றுக் கிருமி வந்தா அதப் போராடி ஜெயிச்சு நம்மக் காப்பாத்தும்.”
‘ஹெபாடிடஸ் பி தடுப்பூசி எந்த வகைல செஞ்சாங்களோ, அந்த வழி கோவேக்சின். எபோலா வேக்சின் வழி முற கோவிஷீல்ட்.’
“ஆமாம், மேம், ஏன் இந்தியாவுல எம் ஆர் என் ஏ வைப் பயன்படுத்தல?”
“அந்த வேக்சினுக்கு மைனஸ் 120-130 டிகிரி குளிர்பதனம் வேணும் . கோவேக்சினுக்கும், கோவிஷீல்டுக்கும் ஃப்ரீஸர் குளிர் நிலயே போறும்.”
“வைரச ஆராய்ந்து அதுலேந்து ஆண்டிஜெனப் பிரிச்சு சுத்தம் செஞ்சு அப்புறமா வேக்சின் மூலமா நம்ம உடம்புல செலுத்தறது ஒரு வக. உடம்பே அதுக்கப்பறமா நெறைய ஆண்டிஜெனை உண்டாக்கிக்கும்.ஆனா, இந்த வைரசை உண்டாக்குவதுலேந்து, பல நிலைகள் இருக்கறதால, இதுக்கு மாசக் கணக்குல, வருஷக் கணக்குல ஆகும். இப்போ, எம் ஆர் என் ஏவ வச்சு செய்யற தடுப்பூசிக்கி அந்தக் கிருமியோட வரிசை முறை மட்டுமே போறும். டிஜிட்டல் மூலமா அந்தக் கிருமியோட அமைப்பை எந்த ஆய்வகத்திற்கும் அனுப்பி, ஒரு வாரத்துல வேக்சின் செஞ்சுடலாம். அந்த ஆய்வகத்தில் அதுக்குண்டான கட்டமைப்பு, தொழில் நுட்ப அறிவு, புரிந்து கொள்ளும் திறமை எல்லாமே இருக்கணும்.
பல சந்தேகங்கள் நிவர்த்தியான நிகழ்வில் எல்லோருக்குமே ஒரு தெளிவு வந்திருந்தது. வெஜிடபில் புலாவ், பூந்தி ரைய்தா, பால் போளி என்று அனைவருக்கும் வயிறு நிறைந்தது. இரண்டையும் மனதில் கொண்டு ‘மேம், நீங்க எப்போ திருப்பியும் வருவீங்க?” என்று சரூ கேட்ட கேள்வியைப் புரிந்து கொண்டு பவானி மனதிற்குள் சிரித்தாள்.

அறிவியல் கட்டுரையை கதை ரூபத்தில் சொன்னவிதம் சிறப்பு.
LikeLike