புரிதல் - சிறுகதைகள்தெரிந்த ஒருவர் பரிந்துரைத்து வந்ததாக 40 வயதான சுனிதா அறிமுகம் செய்து கொண்டாள். கூடவே கணவன் பார்கவ்(வயது 50), தம்பி சுந்தரம்(35), அவர் மனைவி ரித்திகா(35), இவர்களைத் தவிர, சுனிதாவின் தங்கைகள் மூவரும், இளைய தங்கை ராசியின் கணவரும் வந்திருந்தார்கள்.

சுனிதா ஜாடை செய்ய, பார்கவ் தொடங்கினார். அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருப்பதாகவும், சமீபத்தில் சுனிதாவின் பெற்றோரின் மரணத்திற்குப் பின்னர் மூத்தவரானதால் குடும்பத்தலைவ பொறுப்பு தன்னுடையதாக ஆனதாகவும் விளக்கினார்.

சுந்தரத்தைத் தட்டிக் கொடுத்தவாறு பார்கவ் விவரித்தார். கடந்த ஆறு மாதங்களாகச் சுந்தரம் யாரிடமும் பேசாமல் தனிமையைத் தேடுகிறார், எரிச்சல் படுகிறார், சரியாக உணவைச் சாப்பிட மறுக்கிறார், வேலையில் கவனம் சரிகிறது என்றார். சுந்தரத்தை வற்புறுத்தி அழைத்து வந்ததால் எல்லோரும் வந்திருப்பதாகக் கூறினார்.

எங்கள் அணுகுமுறையை விவரித்து, சுந்தரத்தின் நிலையை அறிந்த பிறகு தேவைக்கேற்றபடி மற்ற குடும்பத்தினரை ஸெஷன்களுக்கு அழைப்பேன் என்று விளக்கினேன்.

சுந்தரம் ரித்திகாவைத் தவிர மற்றவர்கள் வெளியேறினார்கள். உடனடியாக ரித்திகா, சுந்தரம் தாங்கள் நன்றாக இருந்ததாகவும், ஏறத்தாழ ஆறு மாதத்திற்கு முன்னால், தங்களின் வளர்ப்புப் பெண் மஹிமாவை சுனிதா கூட்டிக்கொண்டு சென்று விட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது எனக் கூறினாள். சுந்தரத்தை விவரிக்க ஊக்குவித்தேன்.

முதுகலைப் பட்டதாரியான சுந்தரம் சொந்த நிறுவனம் இருப்பதாக விவரிக்க  ஆரம்பித்தார். வருமானத்தின் ஒரு சிறிய பங்கைச் சகோதரிகளுக்காக ஒதுக்கி வைத்திருப்பதைக் கூறினார். அக்காவின் வற்புறுத்தலில் வந்ததாகக் கூறி நிறுத்திக் கொண்டார். உடனே ரித்திகா எல்லாம் மஹிமாவால்தான் என்றதும் சுந்தரம் கோபித்துக் கொண்டு வெளியேறினார்.

மறுநாளே பார்கவ் சுந்தரத்தை மீண்டும் அழைத்து வந்தார், சுந்தரத்தின் ஒத்துழைப்பு முக்கியம் என்று நான் கூறியிருந்ததால்.

நிலைமையைத் தான் விவரிப்பதாகத் தொடங்கினார். ஒரே ஆண்பிள்ளையான சுந்தரம் கூடப்பிறந்தவர்களுக்கு எல்லா கடமைகளையும் முழு மனதுடன் செய்து வைப்பார். ஆனால் சுந்தரம்-ரித்திகாவிற்குக் குழந்தை இல்லாதது சங்கடப் படுத்தியதால் பிரசவம், குழந்தை பிறப்பு, பராமரிப்பு என்றால் நெருங்கி வரமாட்டார்கள். அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப் படுவதால் போவதைத் தவிர்த்தார்கள்.

இவர்களின் இந்த நிலையைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் பார்கவ்-சுனிதா தம்பதியர் தங்களுக்கு பிறக்கப்போகும் அடுத்த குழந்தையை சுந்தரம்-ரித்திகாவிற்குத் தத்துக் கொடுக்க முடிவு செய்தார்கள் எனக் கூறினார் சுந்தரம்.

மறுவினாடியே, சுந்தரம் குழந்தை மஹிமாவைத் தான் கண்ணும் கருத்துமாக வளர்த்ததாக வலியுறுத்தினார். திடீரென ஆறு மாதங்களுக்கு முன்பு அவளை பார்கவ் அழைத்துச் சென்று விட்டதாகவும் அதிலிருந்து மஹிமாவைப் பக்கம் அண்டவிடவில்லை என்று சொல்லும்போது கண்கலங்கியது. நிலைமையைப் புரிந்து கொள்ள வெளியிலிருந்த ரித்திகாவை அழைத்தேன். பார்கவ் வெளியேறினார்.

ரித்திகா விவரித்தாள். மஹிமா அவர்களுக்குத் தரப்பட்ட குழந்தை என்றதால் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். உதாரணத்திற்கு, கேட்டதை வாங்கித் தருவதும், எந்த இடத்திற்குப் போக வேண்டும் எனச் சொன்னாலும் அழைத்துச் செல்வதும். பணத்திற்குப் பஞ்சம் இல்லாததால் உத்தமமான நவீனமான சீர் உடைகள். முழு சுதந்திரத்தில் மஹிமாவை வளர்த்து வந்தார்கள்.

எப்போதும் அவளைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். யாரும் மஹிமாவை எதுவும் சொல்ல இடம் கொடுத்ததில்லை. மறைமுகமாக மஹிமாவைப் புகழ்வோருக்கே வரவேற்பு.

மஹிமா படிப்பில் மந்தம். அதைச் சரிக்கட்ட, சுந்தரம் ஆசிரியர்களுக்கு நன்கொடை தந்து, அழுத்தம் கொடுத்தார். இவையெல்லாம் தான் செய்தபின் அவளை அழைத்துச் சென்றது ஏன் என்றார் சுந்தரம். தன் அன்பை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே ஊர்ஜிதமாகிறது என்றார்.

தங்கை ராசிக்குப் பெயர் சூட்டப்பட்டதே அவள் ராசியானவள் என்பதால். சுந்தரம் அவளுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்தார். கல்யாணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை வினோத் சுந்தரத்தைச் சில கடுமையான கேள்விகள் கேட்டுவிட்டு ராசியை இவர்களிடம் விட்டுச் சென்றார். தன்னைத் தவறாகக் கணக்கிட்டுத் தான் செய்வதில் தவறு  கண்டுபிடிக்கிறார்கள் என்று வருந்தினார் சுந்தரம். மஹிமாவைத் திரும்பப்பெற வழியைக் கேட்டார்.

ஸெஷன்கள் சுறுசுறுப்பாகப் போனது. சுந்தரத்தை தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை மற்றும் மிக அஞ்சிய தகவல்களைப் பல ஸெஷனில் ஆராய்ந்தோம். இதனைத் தொடர்ந்து, மஹிமாவைப் பார்த்துக் கொண்ட விதத்தையும்.

இதிலிருந்து விளக்கங்கள் வெளிவந்தது. ரித்திகாவின் கோணத்திலிருந்தும் பார்க்க, குழந்தைக்குக் கொடுத்த சலுகைகள் எந்த அளவுக்கு அதிகமானது என்றும், அதன் பாதிப்புகளையும் பல ஸெஷன்களுக்குப் பிறகு சுந்தரம் புரிந்து கொண்டார்.

எல்லாவற்றையும் தன்னால் முடிந்தவரை முற்பட்டுச் செய்தால் வாழ்க்கையில் கடமைகளை நன்றாகச் செய்கிறோம் என்று சுந்தரம் நினைத்தார். ஆனால் தாம் செய்வது சரிதானா என்பதை ஆழமாகப் பார்க்கவில்லை. இந்த அணுகுமுறையால் உறவுகள் பாதிக்கப் படுகின்றன என்று புரிந்து கொண்டார். பிறருக்கு நிறையச் செய்தால், நன்றிக்கடன் பிடியில் இருப்பார்கள், தனக்கு  முக்கியத்துவம், மரியாதை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் செய்கிறோம் என்ற புரிதல் ஸெஷன்களின் உரையாடலால் வந்தது.

தன்னை அறியாமல் எழும்பும் தீய எண்ணங்களை அடையாளம் கண்டார். உதாரணத்திற்கு, நற்செயல் செய்த சுனிதா-பார்கவ் மஹிமாவைத் திருப்பி எடுத்துக்கொண்ட பின்பு அவர்கள் மீது பழி உணர்வு மேலோங்கியது என்று அடையாளம் கண்டார்.

இதைச் சரிசெய்ய இரு வழிகளை விடுத்தேன். முதலாக, தினந்தோறும் சுந்தரம்-ரித்திகா இருவரும் கூடப்பிறந்தவர்களால் நடந்த ஓர் நன்மை மற்றும் ஒரு தீமை எழுத வேண்டும். முதலில் தீமைகள் குவிந்தது. இவற்றுடன் தன் உள்ளுணர்வையும் சேர்க்கச் சொன்னேன்.

வெளிப்பட்ட தகவல்களை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இது அவர்களின் கண்களைத் திறக்க உதவியது.

இரண்டாவதாக, சுனிதா-பார்கவிடம் இதைப்பற்றி நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். இதுவரை ஏன் செய்யவில்லை என்பதைப்பற்றி ஸெஷனில் ஆராய, அகம்பாவம்தான் அதற்குக் காரணம் என இப்போது புரிந்தது.

இந்த அறிதலைத் தொடர்ந்து சுனிதாவை தன் கோணத்திலிருந்து நிலைமையை எடுத்துக் கூறச் சொன்னேன். மஹிமாவுக்கு வயதிற்கு ஏற்ற பக்குவம் இல்லாதது சுனிதா-பார்கவை வாட்டியது. எட்டு வயதிலும் சில சமயங்களில் கொச்சையாகப் பேசுவாள். மிக நவீன வளர்ப்பில் முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருந்தது. மஹிமாவின் சுபாவத்தில் துளிகூட மென்மை இல்லாதது கவலை தந்தது. பார்கவ்-சுனிதா வளர்ப்பைச் சரி செய்ய வேண்டும் என்று அழைத்து வந்து விட்டார்கள்.

அவளுடைய பல பழக்கவழக்கங்களை எவ்வாறு மாற்றுவது எனத் தவித்தார்கள். அதுவும் இப்போது மஹிமா பதினோரு  வயதை அடைந்த நிலை. சட்டதிட்டங்கள் இல்லாமல் வளர்ந்ததில் யார் சொல்வதையும் கேட்டுக் கொள்வதில்லை. சுந்தரம் பண பலத்தைப் பள்ளியில் காட்டியதில் படிப்பு பின்தங்கிய நிலை நீடித்தது. முரண்டு பிடித்து எதிர் பேச்சுப் பேசுவதே சுபாவமாக ஆகியது. இப்படிப் பல எதிர்மறைகள்.

இவற்றைச் சுதாரிப்பது அவசியமாயிற்று. அதற்கு சுனிதா-பார்கவ் அவர்களுக்குள் மஹிமாவுக்கு எதை அனுமதிப்பது, எது செய்யக்கூடாது என்று பகிர்ந்து முடிவுசெய்ய ஸெஷன்கள் அமைத்தேன். அடுத்த கட்டமாக, முடிவு செய்ததை வீட்டில் அமல்படுத்திச் செயலுக்குக் கொண்டு வந்தார்கள்.

இதிலிருந்து சுனிதா-பார்கவ் புரிந்து கொண்டது, வளர்ப்புப் பெற்றோருக்கு அதிக முக்கியத்துவம், சலுகை தரவேண்டும் என்பதில்லை. குழந்தைகளுடன் கூட வசிக்கும் மற்ற பெரியவர்கள் சொல்வதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும் முக்கியமான கொள்கையே. இவற்றைப் பார்த்துக்கூடப் பிள்ளைகள் பின்பற்றுவார்கள்.

மஹிமாவை அழைத்து வரப் பரிந்துரைத்தேன். அந்த முயற்சி இன்னும் போய்க்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் சுந்தரத்துடனும் ஸெஷன்கள் தொடர்ந்தது. ராசியின் நிலைமை அறிந்திருந்ததால் அதை எடுத்துக் கொண்டேன். சுந்தரம் ராசியை அழைத்து வந்தார்.

எப்போதும் ராசியிற்காக எல்லாவற்றையும் சிந்தித்துச் செயல் படுத்தியது சுந்தரம். கல்யாணத்திற்குப் பிறகும் நிலைமைகளை எவ்வாறு கையாளுவது என விழித்தால் சுந்தரத்தைக் கேட்டுக் கொள்வாளாம். இப்படி உல்லாசப் பயணம் போகும் இடம் தேர்வு செய்வதிலிருந்து, எல்லாவற்றையும் ராசி சுந்தரத்திடம் முதலில் பகிர்ந்து அவர் சொல்வதைச் செய்வாள். வினோத் இதை இடையூறாகக் கருதுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் சுந்தரம். தானே எல்லாம் செய்ததில் ராசி-வினோத் உறவில் ஒரு வெறுமை நிலை நிலவியதை அவர் அடையாளம் காணவில்லை.

ஸெஷன் போகப்போகச் சுந்தரத்திற்குப் புரிந்தது, ராசியைப் போலவே மஹிமாவையும் நடத்தியதை, அதாவது அவர்களைச் சொந்தமாகச் செய்து அடிபட்டு வளரவிடாமல், தானே அனைத்தும் செய்ததை. இது தன்னுடைய பாதுகாப்பற்ற உணர்வினால், அவர்கள் தனக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தரவேண்டும் என்பதற்காகவே, என்பதைச் சுந்தரம் இன்னும் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. உள்ளுணர்வில் தன்னை விட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சம். தன் குறைபாட்டால் இவர்கள் மீது ஆக்கிரமிப்பு செய்ததை உணர வேண்டும். இதனால் வினோத்-ராசி உறவில் பிளவு ஏற்பட்டதையும், மஹிமாவின் குணாதிசயங்கள் பாதிக்கப் பட்டதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இதெல்லாம் சுந்தரத்துக்குப் புரிய இன்னும் பல ஸெஷன் தேவைப்படும் போலிருக்கிறது.