ஹாலோவினும் சைலண்ட் மூவியும்
–
இந்த வருடம் ஹாலோவினுக்கு அமெரிக்காவில் இருந்ததால், கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை.
அக்டோபர் 31, நவம்பர்1,2 தேதிகளில் கொண்டாடப்படும் ஹாலோவின், கிறுத்துவர்களின் நம்பிக்கை, பழக்க வழக்கங்களிலிருந்து, இறந்த சாமியார்கள், உறவினர்களை நினைந்து, மரியாதை செய்யும் வகையில் கொண்டாடப்படுகின்றது (All saints day).
ஹாலோவீன் அயர்லாந்தில் தொடங்கினாலும், இன்று ஐரோப்பா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. அமெரிக்காவில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அடுத்து பெருமளவில் கொண்டாடப் படுவது ஹாலோவீன் என்கிறார்கள்!
நம்பிக்கை உள்ளவர்கள் சில இடங்களில் ஹாலோவின் நாட்களில் மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள் –
ஆப்பிள், உருளைக் கிழங்கு, வெஜிடேரியன் கேக் (Soul cakes) போன்ற உணவு வகைகளையே உண்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. ஆனாலும் இன்றும் சில குறிப்பிட்ட கிறுத்துவர்களும், பாரம்பரிய யூதர்களும் ஹாலோவீன் கொண்டாடுவதை விரும்புவதில்லை.
வீடுகளில் பலவித ஆவிகளின் படங்கள், உருவங்கள் – கருப்புத் துணியில் வெள்ளை ஜிகினாப் பேப்பர் அல்லது வண்ணப் பொடி – பல்லை இளிக்கும் எலும்புக்கூடு! பேட்டரியில் எழுந்து, சிரிக்கும் மண்டை ஓடு, சமாதிகள், வெளவால், ஆந்தை, ப்ளாக் பேந்தர் என வீட்டு வாசல் புல்வெளியில் பல வண்ண விளக்குகளுடன் அலங்காரமாய் வைத்திருக்கிறார்கள்! குழந்தைகள், ஆவிகள் போலும், ஆவி கதைகளின் கேரக்டர்கள் போலும் மாறு வேடமணிந்து வீடு வீடாகச் சென்று சாக்லெட்டுகளும், பரிசுகளும் வாங்கி வருவது மரபு. இது ‘ட்ரிக் ஆர் ட்ரீட்டிங்’ (Trick or Treating) செல்வது எனப்படும். அதாவது, எனக்கு சாக்லெட் கொடுத்து ‘ட்ரீட்’ செய்தால், நான் ஒன்றும் ‘ட்ரிக்’(விஷமம்) செய்ய மாட்டேன் என்பது பொருள்! கறுப்பு, ஆரஞ்ச், ஊதா போன்ற அடர் நிறங்களில் மாறு வேடம் அணிந்து ஆவிகள், பேய்கள், சூப்பர்மேன், பேட்மேன், அயர்ன்மேன், கிரேக்க ரோமானியப் படைவீரர்கள் என வயது வித்தியாசமின்றி ‘ஹாப்பி ஹாலோவின்’ என்று வாழ்த்தி வலம் வருகின்றனர்!
ஹாலோவின் குறித்த ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. பொய், குடி, பாவங்கள் என வாழும் ஜேக், ஒரு நாள் ஒரு சாத்தானை எதிர்கொள்கிறான். தனது சாதுர்யத்தால், அந்தப் பேயை மரத்தில் ஏற்றி, மரப்பட்டையில் ஒரு சிலுவையையும் செதுக்கிவிடுகிறான். மாட்டிக்கொண்ட சாத்தான், ‘அவன் இறந்தால் அவனைப் பிடிக்கமாட்டேன்’ என்று உறுதியளித்து, மரத்திலிருந்து இறங்கித் தப்பிக்கிறது. ஜேக் இறந்தபின், அவனுடைய பாவங்களினால் அவனுக்கு சொர்கத்தில் இடம் மறுக்கப்படுகிறது. சாத்தனும் தான் வாக்களித்தபடி, நரகத்திலிருந்து அவனைக் காப்பாற்றுகிறது! அது ஒரு குளிர்கால இரவு. ஆதலால் அவனுக்கு உதவ, நரகத்தின் நெருப்புக்குண்டத்திலிருந்து, ஒரு நெருப்புத் துண்டத்தை எடுத்து அவன் மீது வீசுகிறது. அந்த நெருப்புத்துண்டத்தை ஒரு குடைந்த பறங்கிக் காயினுள் பிடித்து வைத்து விளக்காக கையில் எடுத்துச் செல்கிறான் ஜேக். அன்று முதல் கையில் இந்த விளக்குடன் தங்குமிடம் தேடி அலைவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது! இதைக் குறிக்கவே, பெரிய பறங்கிக்காய்களில் முகங்களைப் போலக் குடைந்து, உள்ளே விளக்கு வைத்து வீடுகளில் தொங்கவிடுகிறார்கள்!
சியாட்டில் Daவுன் Taவுனில், ‘ராயல் ரூம்’ ரெஸ்டாரெண்டில் ஹாலோவின் பார்ட்டிக்குச் சென்றோம். மங்கிய ஒளியில் சுமார் ஐம்பது பேர் உட்கார்ந்து சாப்பிட வட்டமான மேஜைகள், நாற்காலிகள் – அசையாத, சின்ன மெழுகுவர்த்திச் சுடர்கள்; ஒற்றை ரோஜாப்பூ வைத்த கண்ணாடி ஜாடி, உப்பு,மிளகுக் குப்பிகள் – நீண்ட பற்கள், விரித்துவிடப்பட்ட தலைமுடியுடன் கண் நிறைய மை, வாயருகில் வெள்ளை பெயிண்ட், வாயின் இருபுறமும் தைக்கப்பட்ட வடுக்கள், நீண்ட கருப்புக் கோட், தலையில் தொப்பி என வித விதமான மனிதர்கள்! ஹாலோவினைப் ‘பயங்கரமாக’க் கொண்டாடுகிறார்கள்!
அன்றைய ஹாலோவின் ஸ்பெஷல் – 1920 ல் வெளிவந்த முதல் Horror, சஸ்பென்ஸ் த்ரில்லர் – ஊமைப்படம் – The cabinet of Dr.Caligari (ஜெர்மனி) திரையிடப்பட்டது! சர்ரியலிசம் வகையில் கனவில் நடப்பதுபோன்ற வித்தியாசமான படம். இறுதியில் வரும் ‘ட்விஸ்ட்’ சினிமாவில் முதல் முறையாக வந்தது என்கிறார்கள். படம் எடுத்த ‘செட்’ களில் வித்தியாசமாகக் கோணல் ஜன்னல்கள், கதவுகள், சாய்ந்த சுவர்கள், வளைந்த கோடுகள், நிழல் உருவங்கள், வளைவான படிக்கட்டுகள், ஊசி இலைகள் உள்ள மரங்கள், என திகிலூட்டும் களங்கள். ஊமைப் படம் என்பதால் நடு நடுவே, உரையாடல், விவரணைகள் எழுதிய கார்டுகள்! அன்றைய காலக் கட்டத்தில் மிகவும் பாராட்டப் பட்ட ஒரு திரைப்படம். ஒரு மனோதத்துவ டாக்டர், தன்னுடைய ‘சோம்னாம்புலிஸம்’ உள்ள நோயாளியைக் கொண்டு கொலைகள் செய்வதாயும், கதை சொல்கின்றவனின் காதலியைக் கொலை செய்ய முயலும்போது, அவன் தப்பிவிடுவதாகவும், இதற்கெல்லாம் காரணம் அந்த டாக்டர்தான் என்பதாகவும் செல்கிறது கதை. சிறிதும் எதிர்பார்க்காத ட்விஸ்டுடன் படம் முடியும்போது வியப்பு!
70 நிமிடங்கள் ஓடுகின்ற ஊமைப் படத்திற்கு, திரையின் முன்னே அமர்ந்து பின்னணி இசை கொடுத்த இசைக் குழுவினரின் ஒருங்கிணைப்புப் பாராட்டுக்குரியது. ரீ ரெகார்டிங் செய்வது போல, படத்தைப் பார்த்தபடி, முன்னமேயே எழுதி வைத்துள்ள இசைக் கோர்வைகளை வாசித்தார்கள். ஒரு கீ போர்டு (அவர்தான் இசை மற்றும் நடத்துனர்), ஒருவர் டிரம்ஸ், ஒரு பேஸ் கிடார், கிளாரினெட், சேக்ஸ், ஒரு வயலின் – இவர்கள் காட்சிக்கேற்றபடி இசைத்தது, வித்தியாசமான அனுபவம். பேய் வரும்போது, கொலை நடக்கும்போது, அச்சமூட்டும் இசை – தண்ணீர் கொதிப்பதுபோல், பெண் அலறுவதைப்போல் எல்லாம் வாயினாலேயே ஒலியெழுப்பிய பெண் கலைஞர்கள் ஆச்சரியப்படுத்தினர். உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
வாய்ப்பிருந்தால் Dr.Caligari படத்தை யூ டியூபில் பார்க்கலாம். இன்று எடுக்கப்படுகின்ற நல்ல சஸ்பென்ஸ் திரில்லர்களுக்குக் கொஞ்சமும் குறைவின்றி இருக்கிறது இந்த ஊமைப்படம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள்!
நமது முன்னோர்களௌக்குக் கொடுக்கும் திதிகளைக் கேலி செய்கிறோம் – இங்கு அதையே ஒரு பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்!



ஹாலோவீன் பறங்கிக்காய் விளக்கின் கதையை விளக்கியதற்கு நன்றி டாக்டர். அருமையான அனுபவப் பகிர்வு.
எல்லாம் சரிதான்; ஆயினும், ஹேப்பி ஹாலோவீன் என்று சிறுவர்கள் வீடு வீடாகப் போய் சாக்லேட் கேட்பது போன்ற மேலைநாட்டு வழக்கங்கள், இங்கும் பரவுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை.
(தின்)பண்டம் ஈகை என்பதுதான் பண்டிகை என்று ஆனது என்பார்கள். அவ்வாறு நம் கொடுத்து மகிழும் பண்பாட்டினை விளக்கும் பண்டிகைகளின் ஊடே, இது போன்ற பண்டிகைகளைப் புகுத்துவது முரணாகப் படுகிறது.
LikeLike
நன்றி சார். இந்தியாவில் ஹாலோவின் கொண்டாடப்படுகிறதா என்று தெரியவில்லை. கிறுத்துவர்கள் எங்கும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடலாம்! நம்ம ஊர் பண்டிகைக் கொண்டாட்ட அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை!! நம்ம ஊர்ப் பண்டிகைகளை நீர்த்துப்போகச் செய்யும் காலமிது.
LikeLike