
கதிரவன் உதயம்
மன்னன் கம்சன் மறுநாளும்
வருவ தற்குக் காத்திருந்தான்.
முன்னாள் மேற்கில் மறைந்தகதிர்
மூளும் ஆர்வம் மீதூரச்
சின்னக் கண்ணன் கையாலே
சிதைந்து மாமன் மாய்வதைத்தன்
முன்னால் நடக்கக் காண்பதற்கு
முனைந்து கீழ்வான் மேலெழுந்தான்
கம்சன் மற்போர் அரங்கம் சென்று அமர்தல்
உரங்கொள் கம்சன் முடிபுனைந்தான்
உடைவாள் தன்னை இடையணிந்தான்
நெருங்கும் முடிவை அறியாமல்
நேரே சென்று மற்போர்செய்
அரங்கம் அடைந்து பொற்றவிசில்
அமர்ந்தான் வீரர் வாழ்த்தினரே
மருங்கு நின்ற சிற்றரசர்
வணங்கிப் பின்னர் அமர்ந்தனரே
குவலயாபீடம் என்ற யானையைக் கொல்லுதல்
இருவர் அரங்கில் நுழைகையிலே
எதிரில் குவல யாபீடம்
உருவம் கொண்டு மறித்ததுவே
உலக்கை துதிக்கை சுழற்றியதே
“பருவ ரைபோல் நிற்குமிதைப்
பாகா விலகிப் போகச்சொல்!”
பெருவ ரைமுன் ஏந்தியவன்
பேசு சொல்லைப் புறக்கணித்தான்
வெறிகொண்டு வெகுண்டிருந்த வேழம் தூக்கி
வீசியதே இருப்புலக்கை கண்ணன் நோக்கி
உறிகொண்ட வெண்ணெயுண் பிள்ளை துள்ளி
உடன்நகர வீழ்ந்ததுவே எங்கோ தள்ளி
நறைகொண்ட தார்மார்பன் கொம்பொ டித்து
நலிவுறவே தாக்கியதன் உயிர்மு டித்துக்
கறைகொண்ட குருதிவழி மேனி காட்டிக்
கடிதுவரத் தொடங்கியதே மல்லர்ப் போட்டி
கண்ணனைக் கண்டவரின் உணர்வுகள்
இடியேறோ இவனென்று வியந்தார் மல்லர்
எமைக்காக்க வந்தவனோ என்றார் மக்கள்
வடிவேறும் மாரனெனக் கண்டார் பெண்கள்
வந்தகுலக் கொழுந்தாகக் கொண்டார் ஆயர்
கொடியோராம் மறமன்னர் வேர றுத்துக்
குலம்விளங்கச் செய்பவனோ என்றார் பல்லோர்
முடியேறும் மாமன்னன் என்னைக் கொல்ல
முன்வந்த கூற்றமென நினைத்தான் கம்சன்
(மாரன் – மன்மதன்)
(மற்போர் அரங்கில் சாணூரன், முஷ்டிகன், சாலன்,கூடன், தோசலன் ஆகிய, வலிமையும், திறமையும் கொண்ட மல்லர்களுடன் கண்ணனும், பலராமனும் பொருதல்)
சாணூரன் – கண்ணன் மற்போர்
ஆர்த்தெழுந்த சாணூரன் மலைபோல் வந்தான்
அறைகூவல் கண்ணனுக்கு விடுத்தான், “உன்றன்
போர்த்திறத்தைக் காட்டென்றான்*, புயலாய்ப் பாய்ந்தான்
“பூங்கொத்தைப் போலுன்னைப் பிய்ப்பேன்” என்றான்
பார்த்திருந்த இளையோனும், மல்லன் கைகள்
பற்றித்தன் தலைமேலே உயரத் தூக்கி
வேர்த்தவுடல் சுழற்றிப்பின் அடித்தான் மண்மேல்
வீழ்ந்தவனும் கதறித்தன் உயிரை விட்டான்.
முஷ்டிகனும், மற்ற மூன்று மல்லர்களும் இறத்தல்
முன்னவ னோடு மோதி முட்டிகன் மாண்டு வீழ்ந்தான்
பின்னரும் மூவர் வந்தார் பெயர்ந்துவீழ் மரங்கள் ஆனார்.
மன்னவன் முகஞ்சி வந்தான் மாய்த்திட வேண்டும் நந்தன்
தன்னிரு மைந்தர் தம்மை,, தந்தையும் கொல்வீர் என்றான்
கம்சன் உயிர் பிரிதல்
ஆளரி போலக் கண்ணன் அரசனின் மேலே பாய்ந்தான்
வாளினை உருவும் மன்னன் வன்கையை இழுத்தான், கீழே
நீளமாய் வீழ்ந்த மாமன் நெஞ்சினில் குதித்தான், கம்சன்
மாளவே உயிரும் மாலின் மலரடி இணைந்த தம்மா!
(ஆளரி- சிங்கம்)
வாழ்த்தும், இணைதலும், நந்தன் விடைபெறுதலும்
மாரியென மலர்தூவி மகிழ்ந்தார் வானோர்,
மாதவத்து முனிவரெலாம் வாழ்த்து ரைத்தார்,
நேரிழையும் கொழுநனுடன் கொடுஞ்சி றையின்
நெடுங்கதவம் திறந்திடவே வெளியே வந்தாள்.
காரிழையும் வண்முகிலும், வாலி யோனும்,
கனிவுடனே வணங்கிப்பின் தழுவிக் கொண்டார்.
தாரிலங்கும் எழில்மார்பன் நந்தன் மீண்டும்
தண்பிருந்தா வனம்செல்ல விடைகொண் டானே
(நேரிழை- தேவகியைக் குறிக்கும்)
(கொழுநன்- கணவன்–வசுதேவன்)
(காரிழையும் வண்முகில்- கண்ணன்)
(வாலியோன் – வெள்ளை நிறமுடைய பலராமன்)
( தொடரும்)

மிகச் சிறப்பு ஐயா. உங்களின் பாடல்கள் எனக்குப் பாடங்கள்.
LikeLike
கவிதை நயம் மிக அருமை
LikeLike