2. சங்கப் புலவர்களின் அறிவியல் அறிவு

சங்க காலப் புலவர்களின் பல்வேறு அறிவியல் சிந்தனைகளை சென்ற இதழ்க் கட்டுரையில் கண்டோம். இக்கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மேலும் சில கருத்துக்களைக் காணலாம்.
கணிதவியல் சிந்தனைகள்
வாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. ( குறள் 392)
என்று வள்ளுவரும் கூறினார். ஔவையாரோ எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும்
என பரிபாடல், பாடல் 2, வரிகள்13-14இல் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.
கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.
மருத்துவச் சிந்தனைகள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.
. . . . . . கோட்கரம் நீந்தி
நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி
(புறநானூறு, 271, 5-7)
இத்தகையதொரு நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)
மண்ணறிவியல் சிந்தனைகள்
பழந்தமிழர்கள் மண்ணின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். நீர் வற்றாத வைகை ஆற்றில் காணப்படும் மணல் செம்பழுப்பு அல்லது கருப்பாக இருக்கும். இம்மணல் பயிர் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததை
வரும்புனல் வையை வார்மணல் அகன்றுறைத்
திருமருதோங்கிய விரிமலர்க் காலின்
(அகநானூறு, 36. 9-10)
இங்கு ஆற்று நீர் கொண்டு வந்த வெண் மணலின் தன்மையை அறிய முடிகிறது.
பருவ மழை பொய்த்தலால் நிலம் வாடுதல்
புவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.
கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி
விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம்
(அகநானூறு, 164, 1-3)
என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.
காலக்கணக்கீடு
நல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாழிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை
‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்
குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’-
(முல்லைப்பாட்டு 57-58)
இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார். அக்கால மகளிர் நேரத்தை வட்டிலைக்கொண்டுதான் கணக்கிட்டனர். அல்லது கதிரவனைக் கொண்டு கணக்கிட்டனர்.
குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கறியா தஞ்சு வரப்பா அய்
(அகநானூறு, 43, 6-7)
நியூட்டனின் விதி
‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)
எய்த வில்லானது யானை, புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து, உயரமான யானையின் மீது எய்யப்பட்ட அம்பு அதனுள் புகுந்து வெளியே வந்து, விசை குறைந்து, யானையைவிட குறைவான உயரமுடைய புலி, மான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்தியது எனச் சொல்லும்போது நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.
சங்கப்புலவர்களின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். சங்க இலக்கியம் ஒரு கடல். கற்பவருக்குப் பல்துறை அறிவு இருந்தாலன்றி சங்க இலக்கியத்தின் முழுப்பொருளையும் அறிதல் சற்றுக் கடினமே. இத்தகைய சங்க இலக்கியங்களில் மெடிரியாலஜி (Meteorology) எனபடும் வானிலையியல் பற்றியும் பாடியிருக்க வாய்ப்பிருக்கிறதுதானே.
வாருங்கள் அதனை கண்டுணரலாம்.

மிகச் சிறப்பு ஐயா.
LikeLike