காணவில்லை
![]()
“மாமி! இன்றைக்குப் படித்த செய்தி கேளுங்கள்!” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்டாள் அல்லிராணி. அங்கயற்கண்ணி மாமி கேட்டாள்: “அது என்ன செய்தி! சொல் சொல்!”.
“மாமி, காணவில்லை என்று போஸ்டர் போடுவார்களல்லவா? இந்தச் செய்தியில், விண்வெளியில் இருந்த ஒரு பொருள் திடீரென்று காணாமல் போயிற்று” என்றாள்.
”என்ன அது?” -மாமி.
“தக்காளி”-அல்லி.
“என்ன? தக்காளியைக் காணவில்லையா?”-மாமி.
“ஆமாம். அது சாதாரணமான தக்காளி இல்லை” என்ற அல்லியை இடைமறித்த மாமி ”அப்புறம் அது என்ன, ஞானப்பழமா?” என்று நமுட்டுச்சிரிப்புடன் கேட்டாள் மாமி.
“நீங்களும் உங்க மொக்கையும்” என்று அலுத்துக்கொண்ட அல்லி தொடர்ந்தாள்.
“அந்தத் தக்காளி, விண்வெளியிலேயே முளைத்து, காயாகி, பழுத்து, பின் அறுவடை செய்யப்பட்டது. ஐ எஸ் எஸ் , அதாவது ‘ விண்வெளி மையம்’ (ISS) இல் ரூபியோ என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர், அதை அறுவடை செய்தாராம்” என்றாள் அல்லி.
“சரி..அப்புறம் என்ன ஆச்சு?” என்றாள் மாமி.
“அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்தாராம். வெல்குரோ போட்டு, எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தாராம். அதை அவர் பத்திரப்படுத்திய பிறகு, அது காணாமல் போயிற்றாம்” -என்றாள் அல்லி.
“சும்மா கதை. ஒரு வேளை கொலைப்பசியால், அவரே அதைத் தின்னுட்டு ‘காணவில்லை’ என்று கதையளக்கிராரோ என்னமோ?” -மாமி.
“அப்படித் தான் சில பேரும் நினைத்தார்கள். ஆனால் மாதங்களுக்குப் பின், ஐ எஸ் எஸ் ஆராய்ச்சியாளர் மோக்பெலி அதைக் கண்டுபிடித்தார். ரூபியோ மேலே வந்த பழி போயிற்று” – அல்லி.
“நல்ல வேளை, ஒரு பெரிய ஆராய்ச்சியாளருக்குத் ‘தக்காளித் திருடன்’ என்ற பெயர் வராமல் தப்பித்தாரே” என்ற மாமி “தக்காளி விக்கிற விலையில், பூமியிலேயே அது காணாமப் போக வாய்ப்பு இருக்கு” என்றாள்.
“மாமி.. தக்காளி என்ற உடன் நீங்கள் வைக்கும் தக்காளி ரசம்.. அந்த ஈயச்சொம்பில் வைப்பீர்களே, அது சூப்பர் ஆக இருக்கும்“ என்றாள் அல்லி.
“ஆமாம் இன்னைக்கும் அது தான் வச்சிருக்கேன்… கொதிச்சுக்கிட்டிருக்கு” என்ற மாமி, “அய்யய்யோ” என்றலறினாள்.
“என்ன ஆச்சு” விசாரித்தாள் அல்லி.
“உன்னோடு பேசிக்கிட்டதிலிருந்து, மறந்தே போனேன். ஈயச்கொம்பு உருகி மறைந்து விட்டது.”என்றாள் மாமி.
“மாமி.. அவராவது தக்காளியைத்தான் தொலைத்தார்.. நீங்கள் ஈயச் சொம்பையே தொலைத்துவிட்டீர்கள்” என்று பெரியதாகச் சிரித்தாள்.
மாமியின் முகத்தில் ஈயாடவில்லை!
இது ஒரு அதிசய உலகம்!
https://www.cbsnews.com/news/tomato-lost-in-international-space-station-found-nasa-astronauts/

வித்தியாசமான கட்டுரை! (‘அறிவு ஜீவி’ என்பவர் யார்?)
LikeLike