
ஏற்கனவே அந்த அறையில் பத்து பேருக்கு மேல் உட்கார்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்தவுடன் ஓரமாக ஒரு இருக்கை எனக்குக் காட்டப் பட்டது. உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தேன்.. ஜன்னலே இல்லாத அந்த அறையில் ஏஸி வேலை செய்யவில்லை. ஒரு ஓரத்தில் பெடஸ்டல் பேன் தர்மத்துக்கு ஓடிக் கொண்டிருந்தது.. அங்கிருந்த பலரின் சட்டை வியர்வை ஈரம் பார்த்து உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தது.. இரண்டு மூன்று பெண்கள் ஹேண்ட் பேகிலிருந்து அடிக்கடி சின்ன கண்ணாடியை எடுத்துப் பார்த்து வியர்வையில் மேக்கப் கலையவில்லையே என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டிருந்தனர்.. இன்னும் ஒரு சிலர் மொபைல் கேமராவில் தங்கள் அழகை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்..
பதினோரு மணிக்கு இண்டெர்வியூ என்று அறிவிக்கப் பட்டிருந்தது..
நேரம் ஆக ஆக பலர் நெளிய ஆரம்பித்தார்கள்.
பன்னிரெண்டு ஆகியும் இண்டெர்வியூ ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. எல்லோரும் வெப்பத்தில் பொசுங்கினர்.
டை அணிந்த ஆசாமி ஒருவன் ஆவேசமாக எழுந்து…
“வட் இஸ் திஸ் நான்சென்ஸ்? தே காண்ட் ட்ரீட் அஸ் லைக் எ ஷிட்.. ஐ க்விட்”
என்று எதிகை மோனையோடு அலுத்துக் கொண்டு இண்டெர்வியூ அடெண்ட் பண்ணாமலே வேலையை ராஜினாமா செய்து விட்டுக் கிளம்பிவிட்டான்.. அவனைத் தொடர்ந்து இன்னும் சிலர்..
“இப்பவே இவ்வளவு கேவலமா நடத்தறாங்க.. வேலைல சேர்ந்தா கொத்தடிமை தான்.. வேண்டாம்டா சாமி”
மீதியிருந்தது.. நான்.. எனக்கு அடுத்து ஒரு ஆசாமி.. எதிரே மூன்று பேர்..
பக்கத்திலிருந்தவனைப் பார்த்தேன்..
படிய தலையை வாரிக் கொண்டு.. கொஞ்சம் கசங்கிய சட்டை அணிந்து.. கையிலிருந்த பிளாஸ்டிக் பைலை மார்போடு அணைத்துக் கொண்டு டென்ஷனுடன் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது..
மணி பன்னிரெண்டரை..
இன்னமும் இன்ண்டெர்வியூ ஆரம்பிக்கவில்லை..
பக்கத்திலிருந்தவனை மறுபடியும் பார்த்தேன்.. இன்னமும் டென்ஷனுடன் பைலை அணைத்துக் கொண்டிருந்தான்..
அவனைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்தது.
“என்ன.. டென்ஷனா இருக்கா?”
குரல் கேட்டும் என்னைப் பார்க்காமல் தலையைக் குனிந்துக் கொண்டான்.
“ஹலோ.. ஐ ஆம் விக்னேஷ்.. நீங்க?”
“வந்து.. ஸ்ரீதர்”
தலை குனிந்தபடியே தயங்கியபடி மெலிந்த குரலில் சொன்னான்.
“எதுக்கு இவ்வளவு டென்ஷன்?”
ஸ்ரீதர் மெதுவாக நிமிர்ந்துப் பார்த்தான்.
“இவ்வளவு பேர் எழுந்து போயிட்டாங்க.. ஆனா நீங்க ஏன் இன்னம் போகாம இருக்கீங்க?”
அவன் கேட்டவுடன் தான் எனக்கே அது உரைத்தது.
“அதுவா? நான் ஒரு விஷயத்துல இறங்கிட்டேன்னா.. நல்லதோ கெட்டதோ.. அதோட முடிவைப் பார்க்காமப் போக மாட்டேன்.. ஆமா.. நீங்க.. உகும் நீன்னே கூப்பிட்டுக்கலாம்.. ஆமா நீ ஏன் போகலை?”
ஸ்ரீதர் கொஞ்சம் சகஜமானான். அணைத்திருந்த பைலை இறக்கி மடியில் வைத்துக் கொண்டான்.
”போக முடியாது.. இங்க எப்படியாவது எனக்கு வேலை கிடைக்கணும்.. குடும்ப சூழ்நிலை..”
என்று அவன் ஆரம்பித்தவுடன் படுத்த படுக்கையில் அப்பா, சீக்கான அம்மா, கல்யாணமாகாத தங்கை என்று எனக்குப் பிடிக்காத வழக்கமான சோகக் கதை சொல்லப் போகிறானோ என்று எனக்குக் கிலி பிடித்தது.. உடனே பேச்சை மாற்றினேன்..
“முதல் இண்டெர்வியூவா?”
“வந்து.. இல்லை.. இதுக்கு முன்னால நிறைய..”
“ஒண்ணுல கூடவா வேலை கிடைக்கலை?”
“அது வந்து..”
அவனுடைய தயக்கத்தைப் பார்த்து எனக்குக் கடுப்பாக இருந்தது..
“நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே”
அவன் என்னை மிரளப் பார்த்தான்.
“உன்னோட இந்தத் தயக்கம் தான் உனக்கு எதிரின்னு நினைக்கறேன்.. எதுக்கு டென்ஷன்? தைரியமா இரு.. கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லு.. தெரியலைன்னா தெரியாதுன்னு பட்டுன்னு சொல்லு”
“ஐயையோ.. தெரியாதுன்னு எப்படி பட்டுன்னு சொல்ல முடியும்? அப்புறம் அவங்க வேலை இல்லைன்னு பட்டுன்னு சொல்லிடுவாங்களே”
“அப்ப பதில் தெரியலைன்னா வேற என்ன பண்ணுவே?”
“தெரியலை.. அதான் டென்ஷனா இருக்கு”
அவனைப் பார்த்துச் சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை..
“உங்களுக்கு.. இல்லை.. வந்து.. உனக்கு இது முதல் இண்டெர்வியூவா?”
சம்பிரதாயமாகக் கேட்டான்.
“கிட்டத்தட்ட ஆமா”
“கிட்டத்தட்டன்னா?”
“”இதுவரை நான் மத்தவங்களை இண்டெர்வியூ பண்ணிட்டிருந்தேன்”
ஸ்ரீதர் என்னைப் புரியாமல் பார்த்தான்.
“ஒரு கம்பெனில ஹெச்.ஆரா இருந்தேன்.. புது அபாயிண்மெண்ட்லாம் நான் தான் இன்சார்ஜ். நல்லாத் தான் போயிட்டிருந்தது.. ஆனா தலைங்க கம்பெனியைப் பாழ் பண்ணி பூட்டு மாட்ட வெச்சிட்டாங்க.. அதான் அதே போஸ்டுக்கு இங்க இண்டெர்வியூவுக்கு வந்திருக்கேன்”
“ஐயையோ.. இவ்வளவு கூலாச் சொல்றே.. நான் உன் நிலமைல இருந்தா.. திடீர்னு வேலை போனதுக்கு அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருப்பேன்”
“ஏய்.. ஏய்.. என்ன பேசறே நீ? எதுக்கு இடிஞ்சு போகணும்? கையில சரக்கும்.. சாதிக்கலாம்னு மனசுல நம்பிக்கையும் இருந்தா இப்படிப் பேச மாட்டே”
ஸ்ரீதர் கொஞ்சம் மௌனமாக இருந்தான். பிறகு நம்பிக்கை இல்லாமல் கேட்டான்..
“இன்னிக்கு இண்டெர்வியூ நடக்கும்ல?”
“ஏன் உனக்கு சந்தேகம்?”
“இல்லை.. எதிர்ல உட்கார்ந்திருந்த மீதி மூணு பேரும் எழுந்து போயிட்-டாங்களே”
ஸ்ரீதர் சொன்ன பிறகு தான் நானும் கவனித்தேன்.. இவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் எழுந்து போயிருக்க வேண்டும்..
“இவங்களுக்கெல்லாம் பொறுமையே கிடையாதா? வேலைக்குன்னு வந்திட்டா கொஞ்சம் முன்ன பின்னத் தான் ஆகும்”
அலுத்துக் கொண்டான் ஸ்ரீதர்.
“அதனால என்ன.. உனக்கு நல்லது தானே?”
“எப்படி?”
“உனக்குக் காம்படீஷனே இல்லையே.. நிச்சயமா வேலை உனக்குத் தான்”
“நீ இருக்கியே”
“கவலைப் படாதே.. நானும் கிளம்பறேன்”
“ஏன்.. உனக்கும் அவங்களை மாதிரி பொறுமை போயிருத்தா?”
“அதெல்லாம் நிறைய இருக்கு.. நான் மொதல்ல சொன்ன மாதிரி ஒரு விஷயத்துல இறங்கிட்டா அதோட முடிவு பார்க்கிற வரை விட மாட்டேன்”
“அப்புறம் ஏன் கிளம்பறே?”
“உனக்காகத் தான்.. எனக்கும் இந்த வேலை அவசியம் தான்.. ஆனா எங்க போனாலும் வேலை கிடைக்குங்கற தன்நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு.. ஆனா அது உங்கிட்ட மிஸ்ஸிங்.. அதனால நீயே இந்த வேலையை ஏத்துக்க.. இது நல்ல கம்பெனி.. நெட்டுல பார்த்து அனலைஸ் பண்ணிட்டுத் தான் வந்தேன்.. என் பிரெண்ட் மூலமா விசாரிச்சேன்.. நல்ல பே பேகேஜாம்.. நல்ல வேலையும்.. சம்பளமும் கிடைச்சா மனசுல தானா தன்நம்பிக்கை வரும்.. மேல சாதிக்கணுங்கற வெறி கிளம்பும்.. அப்ப என்னை நினைச்சுக்க.. வரட்டா”
ஸ்ரீதரின் பதிலுக்காகக் காத்திராமல் அறையை விட்டு வெளியே வந்து பைக் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன்.
“சார்.. சார்”
என்று அழைத்தபடி ஒரு சிப்பந்தி ஓடி வந்தார்.
“கொஞ்சம் வாங்களேன்”
“எங்க?”
“அட வாங்க சொல்றேன்”
அவர் காட்டிய அறைகுள் நுழையும் போதே கடும் ஏஸி தாக்கியது.. எதிரே ஒரு பெரிய டேபிள்.. அதில் லேப்டாப்.. சில காகிதங்கள்.. பின்னால் டர்கிஷ் டவல் போர்த்திக் கொண்டு காலி ரிவால்விங் நாற்காலி..
என்ன.. ஏது என்று புரியாமல் குழம்பினேன்..
“என்ன விக்னேஷ்.. ஆபர் லெட்டர் வாங்காம கிளம்பிட்டீங்க.. கொஞ்சம் கூட பொறுமையே இல்லையே”
குரல் கேட்டுத் திரும்பிய எனக்கு அதிர்ச்சி..
டீக்காக உடை அணிந்து தூக்கி வாரிய முடி.. ரிம்லெஸ் கண்ணாடியுடன் ஸ்மார்ட்டாக ஸ்ரீதர்..
“நீ.. நீங்க”
நான் கேட்பதற்குள் அவனே ஆரம்பித்தான்..
“ஸ்ரீதர் ரகுராமன்.. இந்தக் கம்பெனியோட பர்சனல் மேனேஜர்.. எங்க ஹெச்.ஆர். வேலை கொஞ்சம் கடினமானது.. தைரியம்.. பொறுமை, தன்நம்பிக்கை.. அட்ஜஸ்ட்மெண்ட்.. இதெல்லாம் கலந்த ஒரு கேண்டிடேட் தான் வேணும்.. நேரிடையாக் கேள்வி கேட்டு தீர்மானம் பண்றதை விட இப்படிக் கலந்துப் பேசி முடிவு பண்ணினா நல்லா இருக்கும்னு எனக்குப் பட்டது.. அதான் உங்கள்ள ஒருத்தனா வந்து எல்லாருடைய ஆக்டிவிட்டீசையும் கவனிச்சிட்டிருந்தேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கிற குணம் இருக்கானு பார்க்கத் தான் ஏ.ஸி கூட போடலை.. நான் நினைச்ச மாதிரியே இண்டெர்வியூ ஆரம்பிக்கலைன்னு பொறுமை இழந்து எல்லாரும் கிளம்பிட்டாங்க.. ஆனா நல்லதோ கெட்டதோ எதுலயும் ஒரு முடிவு பார்க்காம விட மாட்டேன்னு நீங்க சொன்ன உடனேயே நீங்க தான் எங்களுக்குத் தேவையான ஹெச்.ஆர்னு முடிவு பண்ணிட்டேன்.. கங்ராஜுலேஷன்ஸ்”
ஸ்ரீதர் சந்தோஷமாக என் தோளைத் தட்டி இயல்பாகக் கை நீட்ட..
இதை எதிர்பார்க்காத நான் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

இந்த கதையின் கரு ஏற்கனவே படித்த பல கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்துபோல் உள்ளது! எனினும் நடை நன்று! நல்வாழ்த்துகள்!!
LikeLike
நாணு எதை எழுதினாலும் ரசிக்கும்படி எழுதித் தொலைக்கிறாரே! மனுஷனுக்கு போரடிக்கவே தெரியாதா?
LikeLike