
புத்தகம் : மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
ந பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்ரா வரை
எழுதியவர் : ஜீவி
இது சந்தியா பதிப்பகத்தின் முதற் பதிப்பு (2016)
பக்கம் : 264 விலை : ₹225
ஒரு முறை ஏதோ ஒரு புத்தகத்தை வாங்குவதற்காக அசோக் நகரில் உள்ள சந்தியா பதிப்பகத்துக்குச் சென்றிருந்தபோது, பளிச்சென்று கண் முன்னே தோன்றிய இந்த நூலையும் வாங்கி வந்தேன். தமிழ்ச் சிறுகதைகளையும் சிறந்த தமிழ் சிறுகதாசிரியர்களையும் பற்றிய நூல் என்றவுடனேயே வாங்கி விட வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. வாங்கிய பின் பல மாதங்களாக என் அறையிலேயே படிக்கப்படாமல் இருந்ததை சமீபத்தில்தான் எடுத்துப் படித்தேன்.
தமிழிலே மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அனைவருடைய எழுத்தையும் படிப்பது என்பதே சிரமமான காரியம்தான். 73 வயதாகும் சென்னைவாசியான ஜீவி என்ற ஜீ. வெங்கட்ராமன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழில் வரும் உயரிய படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறார். தனது வாசிப்பனுபவம் மூலமாகக் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல். நூலின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளது போல தனது உணர்வெழுச்சிகளையும், விமர்சனங்களையும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சகவாசகர்களுடன் ஜீவி பகிர்ந்து கொள்கிறார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற தலைப்புகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிவிட்டு, படிக்கும்போது பெரிய ஏமாற்ற உணர்வையே பெற்றிருந்தேன். ஆனால், இந்தப் புத்தகம் அப்படி அல்ல. தெளிவான நடையில், தேவையான அளவு, அழகான கருத்துகளையும், ஆழமான மதிப்பீடுகளையும் ஆசிரியர் ஜீவி இந்த நூலில் நம்மோடு
பகிர்ந்திருக்கிறார்.
ஜீவி அவர்களே இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். எல்லாவிதமான எழுத்து வகைகளையும் எழுதிப் பார்த்தவர். பாசாங்கு இல்லாமல் எழுதுகிறார். இந்நூலைப் படிக்கும்போது ஒரு நூற்றாண்டு தமிழ் எழுத்துலகை வலம் வந்த உணர்வை நம்மில் ஏற்படுத்துகிறது.
37 தமிழ் எழுத்தாளர்கள் : ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி .எஸ். ராமையா, புதுமைப்பித்தன், மௌனி, சி. சு. செல்லப்பா, விந்தன், லா.ச.ரா, ஆர். வி, கரிச்சான் குஞ்சு, எம். வி. வெங்கட்ராம், தி.ஜானகிராமன், மீ.ப. சோமு, நகுலன், அகிலன், கு.அழகிரிசாமி, ஜெகசிற்பியன், ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, நா.பா, ஜெயகாந்தன், சுஜாதா, சா.கந்தசாமி, ஆதவன், விட்டல் ராவ், சிவசங்கரி, அம்பை, பாலகுமாரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன், வண்ண நிலவன், கலாப்ரியா மற்றும் எஸ். ராமகிருஷ்ணன். இவர்களே இந்நூலில் இடம் பெற்றவர்கள்.
ஒவ்வொரு எழுத்தாளரையும் அவருடைய எழுத்துக்களையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் எழுதுபொருள் ஆக்கியிருக்கிறார் ஜீவி. ஒவ்வொருவருக்கும் நான்கைந்து பக்கங்கள். அந்த நான்கைந்து பக்கங்களில், அந்தந்த எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றி சுருக்கமாகவும் ரசனையுடனும் தன் பங்கை அளித்துள்ளார் ஜீவி.
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூல்.
.
ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :
- The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel) June 2023
- BITS of Social Impact” ( English)
எழுதியவர்கள் : Harsh Bhargava and Sai Prameela Konduru July 2023
- Adventures Of A Countryside Doctor
( By Dr.Thomas T. Thomas ) August 2023
தமிழில்: ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்
( தமிழாக்கம் : துரை தனபாலன் )
- பாரதி கண்ட தெய்வ தரிசனம் September 2023
எழுதியவர் : நஜன்
- அம்மா அம்மா ( சிறுகதைத் தொகுப்பு )
எழுதியவர் : பூர்ணம் விஸ்வநாதன் October 2023
- கந்தர்வர்களின் உலகம் ( கவிதைகள்)
எழுதியவர் : லாவண்யா சத்யநாதன் November 2023

மிக்க நன்றி நண்பரே. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சமூக வலைதளம் என்றிருக்கும் இக்காலத்தில் சிறந்த படைப்புகளை காட்டும் முயற்சி வரவேற்கிறோம்
LikeLike