—————————————————————————————————————————————-

நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக நான் தேர்ந்தெடுத்துள்ள  சிறுகதை: ஆனந்த விகடன் 15-11-2023இல் சவிதா எழுதிய “நெருங்கத் தொடுத்தது” என்ற கதை.

  • இராய செல்லப்பா (05-12-2023 மிக்ஜாம் புயலுக்கு நடுவே)

—————————————————————————————————————————————-

 

2023 நவம்பர் மாத சிறுகதை தேர்வுக்கு மொத்தம் 35 சிறுகதைகள்  எடுத்துக் கொள்ளப்பட்டன: 

இவற்றில் கீழ்க்கண்ட ஐந்து கதைகளைச்  சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்:

(1)‘குங்குமம்’ 17-11-2023 இல் வெளியாகி இருக்கும் ஆயிஷா நடராஜன் எழுதிய “நடக்காத மரபணுவியல் மாநாடு” என்ற அறிவியல் கதை.

உலகில் குறைந்துகொண்டே வரும் பெண்களின் தொகையைப் பாதுகாக்கவும், இனி யாரும் பெண் சிசுக்களைக் கொல்லாமல் இருக்கவும், புதிய மரபணுவியல் சோதனையை இரகசியமாக நடத்துகிறார்கள் சம்பந்தப்பட்ட அறிவியலாளர்கள். அறிவிக்காமல் நடக்கும் அதற்கான மாநாடு பற்றிய  கதை.    

(2)‘தினமலர்’ 05-11-2023 வாரமலரில் வெளியாகியிருக்கும் சி.க. வசந்தலக்ஷ்மி எழுதிய  அம்மான்னா அம்மா தான் என்ற கதை.

பள்ளி மாணவியான அத்தை பெண்ணை மாமன் மகன் கற்பழித்துவிடுகிறான். இருவருக்கும் கல்யாணம் செய்துவைப்பதன்மூலம் சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்கிறார் வசதியான நிலையில் இருக்கும் மாமன். சொந்தங்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாலும், பெண்ணின் தாய் மறுக்கிறாள். தவறு செய்தவனுக்குத்  தன் மகளைத் தரமறுக்கிறாள். காரணங்கள் இரண்டு. ஒன்று, அவன் மீண்டும் வேறெந்தப் பெண்ணோடும் இதே தவற்றைச் செய்யமாட்டான் என்பது என்ன நிச்சயம்? இரண்டு, இந்தப் பெண் இன்னும் படிக்கவேண்டும். டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆகவேண்டும் என்று கனவு கண்டால் அதை நாம் ஏன் தடுக்கவேண்டும்? 

திருமணம்  நடக்காமல் போகிறது. அந்தப் பெண்ணும் படித்து கலெக்டராகிறாள். (அவனோ திருமணமாகி, குழந்தை குட்டிகளுடனும் கஞ்சாப் பழக்கத்துடனும் நோயாளியாக வாழ்கிறான்). சொந்தங்களில் நடக்கும் சுலபமான தவறுகளுக்கு வழக்கமாக வைக்கப்படும்  தீர்வுகளை எதிர்க்கும் புதுமைக் கருத்துள்ள கதை. 

(3)‘தினமலர்’ வாரமலர் 13-11-2023 இல் வெளியாகியிருக்கும் பி. பாண்டியன் எழுதிய “வசந்தத்தின் அறிகுறி” என்ற கதை. 

பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்தால் விழா எடுக்கிறார்கள். திருமணம், சீமந்தம் இவற்றைப் பெரிய விழாவாக நடத்துகிறார்கள். இந்தக் கதையில் ஒரு தந்தை தன் பெண்ணுக்கு வேறு மாதிரியான விழாவை நடத்துகிறார்! 

பிடிக்காமல் நடந்த திருமணத்தில் இருந்து அவளுக்கு விவாகரத்து கிடைத்ததை விழா எடுத்துக் கொண்டாடுகிறார். இனிமேல் அவளுக்குப் புதுவசந்தம் அல்லவா என்கிறார். பாராட்டுக்குரிய புதுமைக் கருத்துள்ள கதை.

இன்றும் கிராமங்களில் நிலவும் தீண்டாமை – சாதி வேற்றுமை என்ற இரட்டைத் தீமைகளின் விளக்கமாக இரண்டு கதைகள் இந்த மாதம் வெளியாகியுள்ளன. 

(4)‘வாசகசாலை’ இணைய இதழ் – 2-11-2023 இல்  வசந்த் முருகன் எழுதிய  நீல சொம்பு என்ற கதையும், (5) ‘சொல்வனம்’ இணைய இதழ் -15-11-2023 இல்  சாமி கிரீஷ் எழுதிய “தீர்த்தம்” என்ற கதையும். 

தீண்டத்தகாதவர்கள் குடிப்பதற்காகவே தண்ணீர்த் தொட்டியின் அருகில் சொட்டை விழுந்த  நீல நிறச் சொம்பு வைக்கப்படுவதை வசந்த் முருகன் வர்ணிக்கிறார்.  

வெவ்வேறு சாதியினருக்கு வெவ்வேறு குடிநீர்க் குழாய் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள கிராமத்தில், ஒரு தெருவில் ஒன்று பழுதாகும்போது, நீர்வேட்கை மூலம்  வாழ்வின் யதார்த்தம் எவ்வாறு வேற்றுமைகளைக்  களையும் கருவியாகச் செயல்படுகிறது  என்று அழகாகக் காட்டுகிறார்  சாமி கிரீஷ்.   

இனி, நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக நான் தேர்ந்தெடுத்துள்ள  சிறுகதை: ஆனந்த விகடன் 15-11-2023இல் சவிதா எழுதிய “நெருங்கத் தொடுத்தது” என்ற கதை.

பாசமுள்ள அக்கா -பணிந்து போகும் தம்பி என்ற உறவுமுறை பற்றிய கதைகள் எவ்வளவோ வந்துள்ளன. தம்பிக்குத் திருமணம் ஆகாதவரை பிரச்சினையில்லை; ஆகிவிட்டால், அவனுக்கென்று ஒருத்தி வந்துவிட்டால், அவளால் நாத்தனாரின் தலையீட்டை எவ்வளவு நாள் பொறுக்கமுடியும்? இந்தக் கதையில் தம்பியின்  மனைவியை சுதந்திரமாக முடிவெடுக்க வாய்ப்பே அளிக்காமல்,  ஒவ்வொரு கட்டத்திலும் அக்கா எவ்வாறு திட்டமிட்டு வேலை செய்கிறாள் என்பதையும், மனைவிக்குத் தெரியாமல் பண விஷயங்களிலும் வீடு வாங்குவதிலும் அக்காவின் சொல்படியே தம்பி எதிர்ப்பே சொல்லாமல் செயல்படுவதையும் ஆசிரியர் மிகவும் இயற்கையாகச் சொல்லிக்கொண்டு போகிறார். படித்து அனுபவிக்கவேண்டிய கதை.

ஒரு கட்டத்தில் குழந்தைகளின் கல்வியைச் சாக்கு வைத்து அவன் அக்காவின் செல்வாக்கு வலையில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்குக் குடியேற முற்படும்போதும், அவனை மீண்டும் தன் கட்டுக்குள் வைக்க அக்கா தந்திரம் செய்கிறாள். அவன் பார்த்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தனக்கும் வீடு பார்க்கச் சொல்கிறாள். ஆனால் அதுவரை அடங்கிப் போய்க்கொண்டே இருந்த தம்பி அந்தக் கட்டத்தில்  ‘இல்லக்கா, அது சரி வராது’ என்று தைரியமாக அவளைப் பார்த்துச் சொல்வதுதான் கதையின் உச்சக்கட்டம்.

அக்கா – தம்பி இடையில் நிலவும் பாசத்தை விடவும், தத்தம் குடும்பத்தின் தேவையும் உணர்வுகளும்தான் முக்கியம் என்பதும், அந்தப் பாசமும் பந்தமும் ஒரு கட்டத்தில் புளியம்பழமும் ஓடும் போல விலகவில்லையேல் இருவருக்குமே இழப்பு தான் –  என்பதும் நிரூபிக்கப்பட்ட வாழ்வியல் உண்மை. அதனைத் திறமையான கதைப்பின்னலின் மூலம் வெகுசிறப்பாகக் கொண்டுவருகிறார் ஆசிரியர் சவிதா. அதற்காகவே இக்கதையை இம்மாதத்தின் சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுக்கிறேன்.

சவிதா அவர்களுக்கு வாழ்த்துகள்!

 

*******