The Joys Of Doordarshan – undecidedindubaiQUIZ TIME... Ep #26 - YouTube

ஏன் என்ற கேள்வி (தொடர்ச்சி)

நிறையக் கற்றுக் கொண்டேன் .

குவிஸ் நடத்துவது வேறு; நிகழ்ச்சி தயாரிப்பது வேறு; விளம்பரதாரர் நிகழ்ச்சியாகத் தொலைக்காட்சிக்குத் தயாரிப்பது வேறு; அதை மார்க்கெட் செய்யும் திறமையை வளர்த்துக் கொள்வது வேறு. என்றெல்லாம் புரிந்து கொண்டேன்.

நிகழ்ச்சியின் மிக அடிப்படையான விஷயம் மாணவர்கள் பிரிலிமினரி தேர்வு. அதை நடத்த இடம் வேண்டும். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் 13 எபிசோட் நிகழ்ச்சிகளை ஷூட் செய்ய மினிமம் நான்கு நாட்கள் ஸ்டுடியோ தேவைப்படும். இந்த  நான்கு நாட்களும் வார விடுமுறைகளில் வைத்துக் கொண்டால் ஸ்டுடியோ செட் எல்லாவற்றையும் கழற்றி மறுபடி மாட்ட வேண்டிய தேவை வரும். அது செலவைக் கட்டுக்கடங்காமல் செய்துவிடும். எனவே நான்கு நாட்களுக்குத் தொடர்ச்சியாக ஸ்டூடியோவை வாடகைக்கு எடுக்கவேண்டும். இரண்டு காமிராக்கள் இரண்டு காமிராமேன்கள் ஆகியோரும் வேண்டும். தயாரிப்புக் குழுவில் உள்ள ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குனர் , எடிட்டர் ஆடியோ ஆபரேட்டர்கள் ,உதவியாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் போன்றவர்களும் வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களைத் தேடிச் செல்ல இயலாது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடந்தால்தான் இதெல்லாம் சரியாகவரும்; பட்ஜெட்டும் கட்டுக்குள் இருக்கும்.

இங்குதான் முதல் சிக்கல் முன்வந்து நின்றது. எல்லாப் பள்ளிப் பிள்ளைகளும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எடுக்கத் தயங்கினார்கள். பள்ளிகள் ஒப்புக் கொள்ளாதென்று மாணவர்களும் பெற்றோர்களும் என்னை சந்தித்து உதவி கேட்டார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்திரண்டு பள்ளிகளையும் தொடர்பு கொண்டு நானே பேசினேன்.

“இது ஒரு சாதாரண பொழுது போக்கு நிகழ்ச்சி அல்ல. மாணவரிடையே பொது அறிவை வளர்க்கின்ற நிகழ்ச்சி; பள்ளிகளுக்கிடையே நடக்கும் பல போட்டிகளில் மாணவ மாணவியர் கலந்து கொள்கின்றனர். இதுவும் அதே மாதிரிதான்; மேலும் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படப் போவதால் பள்ளிகளுக்கும் ஒரு நல்ல “எக்ஸ்போஷர்” கிடைக்கும்.

மேலும் முதல் இரண்டு நாட்கள் கால் இறுதிச் சுற்றுக்கள், மூன்றாம் நாள் அரை இறுதி , நான்காம் நாள் நிறைவு சுற்று என்று நடைபெறும் போது , நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே லீவ் தேவைப்படும்.

பங்கெடுக்கும் அத்தனை மாணவ மாணவியருக்கும் பொது அறிவுப் புத்தகங்களும் பரிசுகளும் உண்டு.”

கல்விப் பணியில் நான் இருந்த காரணத்தால் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி பள்ளி நிர்வாகிகளை ஒப்புக்கொள்ளவைக்க முடிந்தது.

அணிகளில் உள்ள மாணவர்கள் யாருக்கேனும் உடல்நலக் குறைவு நேர்ந்தால் ,அதை சரி செய்ய ஒவ்வொரு அணியிலும் மூன்றாவதாக ஒரு மாணவரை ரிசர்வாகத் தேர்ந்தெடுத்தோம். இல்லையெனில் கண்டின்யூவிடி இருக்காது,

இது அன்றைய எங்கள் அணுகுமுறை. இப்போதெல்லாம் சீரியலில் கூட “தொடர்ச்சி” பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. “ இவருக்கு பதில் இவர்” என்று ஒரு ஸ்லைடு போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

அணிகளுக்கு அவரவர் பள்ளிப் பெயர்களே சூட்டப்பட்டன. மாணவ மாணவியர் பள்ளிச் சீருடைகளை அணிந்தே பங்குபெறவேண்டும். பள்ளி அணிகளோடு ஒரு ஆசிரியர் ஸ்டுடியோவில் அனுமதிக்கப்படுவார் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. எனினும் நிகழ்ச்சி படப்பிடிப்புத் துவங்கும் நாள் மாணவர்களின் நண்பர்கள், பெற்றவர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே எ வி எம் ஸ்டுடியோ வில்  கூடிவிட்டது.

“சார்! நாங்க இதெல்லாம் பாக்க ஆசையோடு உள்ளோம். இது போல ஸ்டுடியோ புரோகிராம் எல்லாம்  நாங்க பாத்தது கிடையாது “ என்று சிலர் சொன்னார்கள். (மீண்டும் நினைவுறுத்துகிறேன். இன்று இதெல்லாம் ரொம்ப காமன். மொத்த நிகழ்ச்சியையும் ஆண்டராய்டு போனில் எடுத்துவிடலாம். நான் சொல்வது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய சேதி)

ஸ்கிரிப்ட் , குவிஸ்மாஸ்டர், தயாரிப்பு, மார்கெட்டிங் போன்றவை என் பொறுப்பு. இயக்கம், காமிரா, எடிட்டிங், ஒப்பனை, ஒருங்கிணைப்பு போன்றவை எனது மீடியா நண்பர்களின் பொறுப்பு எனப்  பிரித்துக் கொண்டு செயல்பட்டோம்.

இரு நண்பர்களைப் பற்றி இங்கே நான் சொல்லவேண்டும். ஒருவர் அஸ்வினி குமார் ; எழுத்தாளர் தா. நா. குமாரசுவாமியின் குமாரர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்; இன்னொருவர் தொலைக்காட்சி காமிரா மேன் சங்கர்; எழுத்தாளர் சிட்டியின் இளைய குமாரர். இருவருக்கும் இலக்கியம் மீடியா இரண்டிலும் நிறைய பரிச்சயம் உண்டு. “கிரியேட்டிவ்” ஆற்றல் கொண்டவர்கள். தயாரிப்பு சம்பந்தமான டெக்னிக்கல் விவகாரங்களில் இவர்கள் செய்த உதவிகளுக்கு நான் நிச்சயம் நன்றிசொல்ல வேண்டும்.

வினாக்களைத் தயாரிப்பதில் மட்டும் நான் யாருடைய துணையையும் நாடவில்லை. அது மட்டுமல்ல. அத்தனை வினாக்களுக்கான பதில்களுக்கும் ரெஃபரென்ஸ் வைத்திருந்தேன். இதுவும் ஒரு விதத்தில் உபயோகமானது.

அரையிறுதிச் சுற்றிலேயே ஒரு மிகப் பிரபலமான சென்னைப் பள்ளி (பெயர் சொல்வது நாகரீகம் அல்ல.) வெற்றி வாய்ப்பை இழந்தது. அப்பள்ளி மாணவர்களுக்கு “ஒரு ஆட்டிட்யூட்” இருந்தது. . தோல்வியை கண்ணியமாக ஏற்றுக் கொள்ளாத குணம். பணக்காரவீட்டுப் பிள்ளைகள். அவர்களது எபிசோட் முடிந்து ரிசல்ட் சொன்ன பிறகு , நான் அடுத்த எபிசோட் ரெக்கார்ட் செய்ய ஸ்டூடியோவுக்குள் செல்லப் போகிறேன். அந்த எபிசோடுக்கான அணிகளும் ஒப்பனை சரி பார்த்து உள்ளே அனுப்பப்பட்டு விட்டனர்.

அப்போது எனது அஸ்ஸிஸ்டெண்ட் “ சார் உங்களுக்கு போன் வந்திருக்கு. பாம்பே யிலிருந்து பேசுகிறார்கள். அவசரமாம்.” என்றான். ( இப்போது போல மொபைல் வசதி கிடையாது. லாண்ட் லைன் தான். )

பேசியவர் பம்பாயில் இருந்து பிரசுரமாகும் ஒரு பிரபல ஆங்கில வார இதழின் ஆசிரியர். மேலே நான் குறிப்பிட்ட பிரபல பள்ளியின் அணியில் பங்கு பெற்ற இரு மாணவருள் ஒருவனின் தந்தை.

“ நான் இந்த குவிஸ் நிகழ்ச்சியின் குவிஸமாஸ்டரிடம் பேசவேண்டும்”

“ சொல்லுங்கள் . நான் குவிஸமாஸ்டர் தான் பேசுகிறேன்.”

“ என்னோட சன் ஒங்க குவிஸ் ல பார்ட்டிசிபேட் பண்ணி வின் பண்ணல. அவன் இப்பத்தான் எனக்கு போன் பண்ணினான். ஹி செட் சம் கொஸன்ஸ் ஆர் நாட் கரெக்ட் . அதான் அவன் லூஸ் பண்ணியிருக்கான் .. சீ ஐ ஹாவ் டு டாக் “

“ சார் ! ஒரு நிமிஷம்.. இப்ப அடுத்த எபிசோட் ஆரம்பிக்க எல்லாரும் உள்ள போயாச்சு. இன்னும் ஒன் அவர்ல உங்களோட பேசறேன்” என்று சொல்லி போனை வைக்க முற்படுகையில் அவர் கோபமாக ஏதோ சொல்லிக்கொண்டே எதிர் முனையைத் தூண்டித்தார்.

ஒரு மணி நேரம் கழித்து அவருக்கு நான் போன் செய்தேன்.

“ஓ அயாம் சர்ப்ரைஸ்ட்.. .. டி வி காரங்க எல்லாம் போன் பண்ணுவாங்க ன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை” என்று கிண்டல் தொனியில் பேசினார்.

“ நோ வொண்டர் ஒங்க பையனுக்கு ஒங்க குணம்தான் வந்திருக்கு.. அவசரமான தவறான முடிவுகள் . அதுதான் அவன் தோல்விக்குக் காரணம்” என்றேன்.

“ஹவ் டேர் யூ”

“இருங்க சார் ! நான் சொல்லறத கேளுங்க .. பர்ஸ்ட் ஆப் ஆல் நான் டி வி ஆசாமி இல்ல. இது ஸ்பான்சர் புரோகிராம் . நடத்தற என் பேரு டாக்டர் சுப்பிரமணியன். சென்னை விவேகானந்தா கல்லூரி புரொபஸர். நான்தான் குவிஸ் மாஸ்டர். நான்தான் எல்லா கேள்விகளும் தயார் செய்தேன். எல்லாவற்றிற்கும் ரெஃபரென்ஸ் வச்சிருக்கேன். நவ்  டெல் மி த எக்ஸாக்ட் பிராப்ளம். “

“ ஓ அயம் வெரி சாரி.. ஐ மிஸ்டுக் அவன் நல்ல படிக்கற பையன்.. எல்லா குவிஸ் போட்டிகளிலும் அவன் ஸ்கூல்தான் மொதல்ல வரும்.. அதனால அவன் ரொம்ப அப்செட் ஆகி போன் பண்ணினான். நானும் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்.”

“ சார்! அயம் வில்லிங் டு கிவ் எனி கிளாரிபிகேஷன் “ என்று சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தேன்.

“ கையில் பந்தை வைத்துக் கொண்டு ஓடுகின்ற ஒருவன் ஓடிக்கொண்டே அந்தப் பந்தை கையிலிருந்து நழுவ விட்டால் அது 1) அதே இடத்தில் விழுமா 2) பின்னால் விழுமா 3) முன்னால் விழுமா என்பது கேள்வி . உணக்கள் பையன் அணி “பின்னால் விழும் என்றது. அது தவறு . அது முன்னாலவிழும். ஆனால் இவன் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் அது பின்னால் விழுந்தது போன்ற மாயையைக் கொடுக்கும். இந்தக் கேள்வியை நான் “அமெரிக்கன் சயின்டிஸ்ட்” என்ற அறிவியல் ஆய்வு இதழிலிருந்து எடுத்தேன். லேட்டஸ்ட் இஷ்யு. ஷால் ஐ செண்ட் “

“ இல்லை இல்லை  .. உங்கள் தரமான நிகழ்ச்சியில் நான் குறுக்கிட்டதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன் . என் மகனிடமும் இந்த விளக்கங்களைக் கொடுக்கிறேன் ” என ஆங்கிலத்தில் சொன்னவர் தொடர்ந்து “ சார் அடுத்த ஆண்டு ஒங்க காலேஜுலதான் பையனை      பி. காம். சேர்க்கணும்” என்று விடை பெற்றார். அவர் பையன் நல்ல மதிப்பெண்களோடு அடுத்த வருடம் எங்கள் கல்லூரியில் சேர்ந்தான்.

அவர் அவரது மகன் இருவரும் பல ஆண்டுகள் என்னோடு தொடர்பில் இருந்து நட்பு பாராட்டியவர்கள்.

குவிஸ் நடத்தப் போய் இதெல்லாமா அனுபவம் என்றால் .. அதுதான் வாழ்க்கை .. எந்தச் சூழலும் அனுபவம் தான்.

(தொடரும்)