கே டி சந்தானம்
சந்தக் கவிகளில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் 1958 ல் வெளியான நடிகர் திலகம் நடித்த அம்பிகாபதி திரைப்படத்தில் இடம்பெற்ற தமிழ் மாலை தனைச் சூடுவாள் என்ற பாடலாகும்.
கதையின்படி அம்பிகாபதி 100 பாடல்கள் பாட வேண்டும். இந்தக் காட்சிக்காக கவிஞர் ஐந்து பாடல்கள் எழுதினார். இவற்றை வைத்து நூறு பாடல்களைப் பாடுவதாக காட்சி அமைப்பு செய்யப்பட்டது. இந்த முறையில் ஐந்தாவது பாடல் 99 ஆவது பாடலாக அமைந்தது.
பாடும் புலவன் உணர்ச்சி வசப் படுகிறான். கடைசிப் பாடலின் இறுதி ஐந்து வரிகளை ஒரே மூச்சில் பாடுகிறான். இந்த ஐந்து வரிகளின் சொற்பிரவாகம் கேட்பவர்களை மெய்ம்மறக்கச் செய்தது. இந்தப் பாடல் தான், படத்தின், எழுதிய கவிஞரின் முத்திரைப் பாடல் என்று சொல்லப்படுகிறது. இத்தகு பெருமை கொண்ட கவிஞர் தான் திரு கே டி சந்தானம் அவர்கள்.
எத்தனைப் பாடல்கள் ! அத்தனையும் முத்து முத்தாய்த் தந்தவர் திரு கே டி சந்தானம் அவர்கள்.
- சிந்தனை செய் மனமே
- தனிமையிலே இனிமை காண முடியுமா
- ஒண்ணுமே புரியலை உலகத்திலே
- வாடா மலரே தமிழ்த் தேனே
- பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
- கல் எல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
- அம்புலியை குளம்பாக்கி அரவிந்த் ரசமோடு
- கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே
- காவேரி ஓரம் கதை சொன்ன காதல்
- தலைவா தவப் புதல்வா வருகவே
- நடந்தாய் வாழி காவேரி
1950 களில் தமிழ்த் திரையுலகில் பல்வேறு வகைப் பாடலாசிரியர்கள் இருந்தார்கள். உடுமலை நாராயண கவி – திராவிட இயக்க சார்பு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம – பொது உடமை சார்பு நிலை, மருதகாசி – விவசாயம் சார்பு நிலை, தொடர்ந்து இனிமையான காதல் பாடல்களை கு மா பாலசுப்ரமணியம், கண்ணதாசன் – வாழ்க்கை, காதல், தத்துவம் தொடர்பான பாடல்களை எழுதினார். தஞ்சை ராமையா தாஸ் , சாதாரண மக்களுக்குப் பிடித்த ஜனரஞ்சகமான பாடல்களை எழுதினார். இந்நிலையில் கே டி சந்தானம் சந்தக்கவி எனச் சொல்லப்படும் தாளக்கட்டுடன் கூடிய பாடல்களை இயற்றி தன் முத்திரையைப் பதித்தார்.
இரண்டு பாடல்கள் இதற்கு உதாரணங்கள் –
தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்
தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளையளித்திட வேணுமெனத் துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
தமிழ் மாலை தனைச் சூடுவான்
சற்றே சரிந்த குழலே
துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட
துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார
நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம்
புறப்பட்டதே! தலையலங்காரம் புறப்பட்டதே!
இது போன்ற சந்த நடை தந்தவர் கவிஞர் சந்தானம் அவர்கள்.
இன்னொரு பாடல், கண்காட்சி திரைப் படத்தில் இடம் பெற்றது.
குன்னக்குடிவைத்யநாதன் இசையில் கே .டி .சந்தானம் எழுதிய பாடல் தொகையறா ஏபிநாகராஜனே தன் மென்மையான குரலில் சொல்வார் .
‘வெண்ணிலவை குடை பிடித்து , வீசு தென்றல் தேர் ஏறி
மென் குயில் தான் இசை முழங்க ,மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி , கனகமணி பொற்பாவை
அன்னநடை ரதியுடனே , அழகு மதன் வில்லேந்தி
தன்முல்லை , மான் , தனிநீலம் , அசோகம் எனும்
வண்ண மலர் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே !’
ஏ பி நாகராஜன் முடித்ததும் சந்தபாடல் ஆரம்பிக்கும்
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர்க்கன்பம் வழங்கும்
உன் புகழ் சொல்லவா
கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்தோங்கும் கயற்கண்ணியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம்
தரும் கன்னியே
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும்
வையகம் அல்லவா
இது போல் சந்தக் கவிதை எழுத யார் இருக்கிறார்கள் இப்போது என்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது அல்லவா.
80 களில் வந்த மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வா வெண்ணிலா என்ற தனது பாடலுக்கு கவிஞர் சந்தானம் அவர்கள் சண்டிராணி படத்திற்காக இயற்றிய வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே… என்ற பாடல் தான் உத்வேகம் கொடுத்ததாக இளையராஜா கூறினார். இந்த பாடல், மெல்லிசை மன்னருடன் இணைந்து இளையராஜா இசை அமைத்தது.
1950 ஆம் ஆண்டில் வெளியான விஜயகுமாரி என்ற திரைப்படத்தில் சந்தானம் எழுதிய லாலு லாலு என்ற நடனப் பாடலை நாயகி வைஜயந்திமாலா , சி ஆர் சுப்பராமன் இசையில் பாடியிருக்கிறார். அக்காலத்தில் இப்பாடல் பிரபலமானது
ஏ வி எம் தயாரித்த வாழ்க்கை படத்திற்கு இவர் தான் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யபட்டார். அப்புறம் அதை நிறுத்தி விட்டு, டி ஆர் ராமச்சந்திரன் அவர்களை கதாநாயகனாக்கி படம் வெளி வந்தது. ஆனாலும, அவரின் முதல் படத்தில் நாயகி , கனவுக்கன்னி ராஜகுமாரி.
நடிகர் திலகம் மிகுந்த மரியாதையுடன் வாத்தியார் என்றுதான் கூறுவார். ஆரம்ப காலங்களில், நாடகங்களில் நடிக்கும் போது, தமிழ் உச்சரிப்பிற்காக, இவரிடம் வாங்கிய பிரம்படிகள் கொஞ்ச நஞ்சமில்லை என்று கூறிய நடிகர் திலகம், அவரால் தான் வசன உச்சரிப்பு வளர்ந்தது என்பார். அந்தக் காலத்தில், நாடகக் குழுக்களில், பி டி சம்பந்தம் என்ற நடிகரும் இவரும் தான் மிகவும் கண்டிப்பானவர்கள் என்பார்கள்.
அதே திரு சந்தானம் அவர்கள் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். பாசமலர் படத்தில சிவாஜி அவர்களின நண்பராக, ராஜ ராஜ சோழன் படத்தில சிலை வடிக்கும் சிற்பியாக, குலமா குணமா,என நடிகர் திலகத்துடன் பல படங்கள். திருமலை தென்குமரி போன்ற ஏ பி நாகராஜன் அவர்களின பல படங்களும் உண்டு.
பாடல்களில் உயிரோட்டம் மற்றும் நடை அழகும் இவரின் சிறப்பு.
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
துணை இல்லாத
வாழ்வினிலே சுகம்
வருமா
அதை சொல்லி
சொல்லி திரிவதனால்
துணை வருமா
மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமா
வெறும்
மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமா
மலரிருந்தால்
மனம் இருக்கும் தனிமை
இல்லை
செங்கனியிருந்தால்
சுவை இருக்கும் தனிமை
இல்லை
கடல் இருந்தால்
அலை இருக்கும் தனிமை
இல்லை
நாம் காணும்
உலகில் ஏதும் தனிமை
இல்லை
தனிமை என்ற வருத்தம் தேவையே இல்லை என்பதை மிக அற்புதமாக தந்திருக்கிறார்.
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? – உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? – அந்தக்
கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா? – பொங்கும்
விழி நீரை அணை போடவா?
பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் – அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் – ஏழை
விதியோடு விளையாடுவார் – அன்பை
மலிவாக எடை போடுவார் –
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா? – பொங்கும்
விழி நீரை அணை போடவா?
அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் – வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் – தன்னை
எளிதாக விலை பேசுவார் – என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா? – பொங்கும்
விழி நீரை அணை போடவா?
சந்திரபாபுவின் வாழ்க்கையை அப்படியே கூறுவதாக இவர் எழுதிய குமாரராஜா படத்தில் ஒரு பாடல் – டி ஆர் பாப்பா அவர்கள் இசை இணைய, சிந்து பைரவி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் கேட்கும்போது, உருகாத நெஞ்சம் கூட உருகி விடும் –
ஒண்ணுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
ஒண்ணுமே புரியல உலகத்துல
கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே
காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே
என்னானு தெரியலே சொன்னாலும் விளங்களே
என்னை போலே ஏமாளி எவனும் இல்லே
கண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
என்னை போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியல உலகத்துல
தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக நினைத்து வாழ்ந்த திரு சந்தானம், 25 வருடங்கள் தமிழ்த் திரை உலகில் தடம் பதித்தவர். சின்னதுரை, வளையாபதி, சண்டிராணி, தேவதாஸ், கைதி, காதல், சக்கரவர்த்தி திருமகள், கோமதியின் காதலன், கடவுளின் குழந்தை, மணமகன் தேவை , வா ராஜா வா, திருமலை தென் குமரி, என பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
மோகனசுந்தரம் என்ற படத்தில்,
பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா
பகுத்தறிவாளர் பேசும் ஜாதிப் பாகுபாடு
சீர்திருத்த பாட்டு வேணுமா
ஞானம் பிறந்த தமிழ் நாட்டில்
நாத்திகம் வந்ததற்குப் பாட்டு வேணுமா
வான் மழை வறண்டது போல
நல்ல வைதீகம் கேட்டதற்கு பாட்டு வேணுமா
என்று காலத்தின் கண்ணாடியாக ஒரு பாடலை, திரு டி ஆர் மகாலிங்கம் அவர்கள், ராக மாலிகையில் பாடி இருக்கிறார்.
அகத்தியர் படத்தில்,
நடந்தாய் வாழிகாவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மை எல்லாம் சிறக்க
அடர்ந்த மலைத் தொடரில் அவதரித்தாய்
அழகு தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
அசைந்து வளைந்து நெளிந்து தொடர்ந்து
அலைகடல் எனுமொரு மணமகன் துணை பெறவே
என்ற பாடலில் சந்தானத்தின் சங்கத் தமிழ், சீர்காழியின் சங்க நாதமாய் ஒலிக்கிறது.
இப்படி சந்தானம் தந்த பாடல்கள், சந்தம் நிறைந்தவை மட்டுமல்ல, சந்தனமாய் மணம் பரப்பும் பாடல்கள் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.
.

கவிஞர் கே டி சந்தானம் பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றி நண்பரே!
LikeLike
மிக அருமையான பதிவு. நன்றி அன்பரே.
LikeLike