மார்கழி மாதமும் சங்கீதமும்!

“மாதங்களில் எனக்குப் பிடித்த மாதம் மார்கழி” என்கிறான் கீதையில் கண்ணன்! 

மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ? | வினவுமார்கழி மாதத்திற்கு அதனாலேயே அதிக சிறப்பு உண்டு. தேவர்களுக்கு அதிகாலைப் பொழுது என்பது மார்கழி மாதம் முழுவதும் என்கின்றன புராணங்கள். 

சென்னையில் மார்கழி மாதத்திற்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. சென்னையே கோலாகலமாக ஒரு திருவிழாவின் மகிழ்ச்சியோடு இருப்பதாகத் தெரியும்.

காலையில் பனி மூட்டம், இரவு பெய்த பனியில் ஈரித்திருக்கும் விசும்பு, இலேசான குளிர் – பின்னர் நாள் முழுதும் இதமான வெய்யில். மனதிற்கு மிகவும் ரம்யமான சீதோஷ்ண நிலை!

கோயில்களில் தனுர்  மாத பூஜைகள் அதிகாலையிலேயே தொடங்கி விடுகின்றன. எல்லாக் கோயில்களிலும் பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் காலையில் கோயிலுக்குச் செல்வதும், இறை இசை கேட்பது அல்லது இசைப்பது என பக்தியின் பரவசத்தில் இருப்பதும் மார்கழியின் சிறப்புகள்.

கிராமங்களில் காலையில் ஒலிபரப்பப்படும் திருப்பவை, திருவெம்பாவை ஒரு சுகமான அனுபவம். சின்ன வயதில் தூரத்தில் ஒலிக்கும் திருப்பாவை கேட்டபடியே திண்ணையில் படுத்திருக்கும் மார்கழி காலை. சிவன் கோயில்களில் ‘திருவெம்பாவை’ ஒலிக்கும். அதிகாலையே சுறுசுறுப்பாகிவிடும் கிராமத்து வாழ்க்கை. பக்தியும், இசையும் பிரவாகமாக ஓடும். ஆன்மீகம் ஆத்மாவுடன் கரைந்த பரவச நிலை!

வேதத்திற்கு நிகரான திருப்பாவை எனக்குப் பிடிக்கும். எங்கு, எப்போது, யார்  பாடினாலும், திருப்பாவை என்னை மார்கழி மாதக் காலைக்குக் கடத்திவிடும் அற்புதம் நிகழ்கிறது! ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் சூட்டிய பெயர் ‘கோதை’. கோதை என்றால் ‘மாலை’. சமஸ்கிருதத்தில் சொன்னால் ‘கோதா’ – ‘நல்வாக்கு அருள்பவள்’ எனப் பொருள். பூமாலையைச் சூடிக்கொடுத்தாள்; பாமாலையைப் பாடிக்கொடுத்தாள். இரண்டுக்கும் ஏற்றபடி அவள் பெயர் அமைந்துள்ளது சிறப்பு!(சுஜாதா தேசிகன், திருப்பாவை  புத்தகத்தில்).

இன்றைய இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியுமா? இந்தப் பரவசங்களை அனுபவித்திருக்கிறார்களா? சந்தேகம்தான். அவர்களது பார்வைகளும், தேவைகளும், வாழ்க்கை குறித்த புரிதல்களும் வேறு திசையில் – இரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்த திசைக்கு எதிர் திசையில் – திரும்பிவிட்டன.   

Meta Title: சென்னையில் NRI கச்சேரி: நார்வே பாட்டு, அமெரிக்க வயலின், ஆஸ்திரேலிய மிருதங்கம்!|Margazhi Sangamam NRI Carnatic Music Artist Hamsadhwani Sabha

மார்கழியின் சிறப்பு சென்னையில் நடைபெறும் ‘சீசன்’ கச்சேரிகள். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் – கர்னாடக இசைப் பிரியர்கள் – சென்னையில் கூடுவது வழக்கம். இங்கிருப்பவர்களை விட, வெளி நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு கர்னாடக இசையில் அதிக விருப்பம் இருக்கிறதாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் இணைய வழி சங்கீதம் கற்றுக்கொள்வது மிகவும் பழகிவிட்டது. வாய்ப்பாட்டோ, இசைக்கருவிகளில் இசைப்பதோ எல்லாமே இணைய வழியில் கற்றுக்கொள்ளக் கிடைக்கின்றன. ‘மாதா, பிதா, குரு, கூகிள் தானே இப்போது’ என்பாராம் சஞ்சை!

சென்னையின் சபாக்களில் மார்கழி மாதம் முழுவதும் – ‘டிசம்பர்’ சீசன் – காலை முதல் இரவு வரை இசைப் பிரவாகம்தான்! காலையில் நாம சங்கீர்த்தனம், குழுக்களாகப் பாடும் தேர்ந்த இசை, இசை பற்றிய கருத்தரங்கங்கள்! மதியம் ஒன்று முதல் இரவு 9 மணி வரை இசைக் கச்சேரிகள். ஜூனியர் பாடகர்கள் (பெரும்பாலும் இளைஞர்கள்) மேடையேறி முறையாகக் கச்சேரி செய்யும் வாய்ப்புகள் மதிய வேளைகளில் கொடுக்கப்படுகின்றன. சீனியர் இசைக் கலைஞர்களுக்கு 4 மணி அல்லது 6 மணி ஸ்லாட்டுகளில் கச்சேரி செய்ய வாய்ப்பு. சென்னையின் காற்றில் இசை முழுதுமாகச் சுற்றி வரும்!

சபாக்களில் இயங்கும் காண்டீன் – சிற்றுண்டி சாலைகள் – இசைக் கச்சேரிகள் அளவுக்கு (சிலருக்கு, கச்சேரியை விட அதிக அளவிற்கு!) பிரசித்தி பெற்றவை. காண்டீன் மெனு பார்த்து, சபாவைத் தேர்ந்தெடுக்கும் ‘ரசிகர்கள்’ இங்கு உண்டு!

“ஆஹா, கிட்டப்பா கிச்சன் கேக்கணுமா? ஒரு கீரை வடையும், மசால் தோசையும் போட்டான் பாரு – கீரவாணி, ராக மாலிகை எல்லாம் அதுக்கு அப்புறம்தான்!”. வயிற்றுக்கு நிறைவாக ஈந்த பிறகு, செவிக்கும் சிறிது ஈயப்படும், அரங்கில் தூங்காமல் இருந்தால்! 

காலையில் தோளில் ஒரு ஜோல்னா பையுடன், அன்றைய கச்சேரிகளின் பட்டியலுடன், சபாவிற்கு சபா சுற்றி வரும் பெரிசுகள் சென்னை சீசனின் அடையாளங்கள்!

மேடையில் அரங்கேறும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. 

‘மிருதங்கம் எப்படி வாசிச்சார்?’ என்று ஒருவர் கேட்க, பாடகர் சொன்னார், “என் பாட்டுக்கு எங்கெ வாசிச்சார்? அவர்பாட்டுக்கு வாசிச்சிண்டு இருந்தார்!”

ஒரு பாடகர் பாட ஆரம்பித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் இருப்பவர்களுக்குப் பாடுவது தனது கடமை என பாடகர் தொடர, கடைசியில் ஒரே ஒரு ரசிகர் மட்டும் கச்சேரி முடியும் வரை அமர்ந்திருந்தாராம். பாடகர் மிகவும் மகிழ்ந்து, “என் பாட்டுன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்க, அந்த மனிதன் சொன்னது.”நீங்க உட்கார்ந்து பாடின ஜமுக்காளம் வாடகைக்குக் கொடுத்தவன் நான். அதை எடுத்துப்போகக் காதிருக்கிறேன்!”

ஒரு கச்சேரியில் செம்பைக்கு இளைஞர் ஒருவர் வயலின், மிடில் ஏஜில் ஒருவர் மிருதங்கம். சுவரங்கள் பாடும் போது, பா, பா, பா என்று இளைஞரையும், மா, மா, மா என்று மிருதங்கம் வாசிப்பவரையும், தா, தா, தா என்று தன்னையும் சுட்டிக் காட்டினாராம்! 

டிசம்பர் பூக்கள், அழகான கோலங்களும் பறங்கிப் பூக்களும், வைகுண்ட ஏகாதசி, கிருஸ்துமள் கொண்டாட்டங்களும் என மார்கழி முழுதும் பண்டிகைக் கோலம்தான்!

தை மாதம் பிறந்தவுடன், பொங்கல் கொண்டாட்டங்கள்! மார்கழி விட்டுச்சென்ற கோதையும், மாணிக்கவாசகரும், இசையும், ஆன்மீக சுகந்தமும் அடுத்த மார்கழி வரை நம்மை ஆட்கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!

.