பெரும்பாணாற்றுப் படை

பெரும்பாணாற்றுப்படை | மௌவல் தமிழ் இலக்கியம்

பெரும்பாணாற்றுப் படையை எழுதியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் ஆவார். இவர் தான் பட்டினப்பாலையையும் எழுதியவர்.  இவர் எழுதிய  பாடல்கள் அகநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. தொண்டைமான் இளந்திரையன் எனும் குறுநில மன்னன் மீது இந்நூலைப் பாடி உள்ளார் .இந்நூல் அகவற்பாவாலானது. மொத்தம் 500 அடிகளைக் கொண்டதாகும்.

  தொண்டைமான் இளந்திரையன் என்பவன் சோழர் குலத்தைச் சேர்ந்தவன். இம்மன்னன் காஞ்சிபுரத்திலிருந்து அரசாட்சி புரிந்தவன் ஆவான்.  இம்மன்னன் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் கிடைத்துள்ளது .

பரிசு பெற்றுத் திரும்பிய ஒரு பாணன் வறுமையினால் வருந்தும் இன்னொரு பாணனை இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினைக் கொண்ட உடைய பொன்னாலான கம்பியினை வார்த்தாற்போல் முறுக்கு அடங்கின நரம்பினால் கட்டமைக்கப்பட்ட யாழை வறுமையால் வருந்தும் பாணன் இடது பக்கத்தில் அணைத்து வைத்துக் கொண்டுள்ளான்.

அந்தப் பாணனின் வறுமை கீழ்க்கண்ட அடிகளில் காட்டப்படுகிறது.

வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்,  
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!

 ” மிகுந்த சுடுதலைக் கொண்டுள்ளான் கதிரவன். இங்கே நிலவும், வலிமையுடன் திரிகிறது. அப்படிப்பட்ட உலகில் பரிசில் அளிக்கும் புரவலர்களைப் பெறாமல் நீ தவிக்கின்றாய்.,  மழைக்காலம் போனபின் மேகம்  சூழ்ந்த மலையில் பழுத்த மரத்தைத் தேடித் திரியும் பறவைகளைப் போல் வருந்தி  ஓரிடத்தில் தங்காமல் ஓடித் திரிகின்றாய்.  நீ கற்ற கல்வியையும்  வெறுத்துக் கூறுகின்றாய் பாணனே!” என வந்த பாணன் கூறுகின்றான்.

”நாங்கள் எம் சுற்றத்தாருடன் பிறர்க்குக் கொடுத்தும் குறையாத பெரும் செல்வத்தைப் பெற்றுவருகிறோம். வெள்ளை நிறக்குதிரைகளுடன் வலிமையுடைய யானைகளையும் வாரிக்கொண்டு, நாங்கள் திரையனின் ஊரிலிருந்து வருகின்றோம். நீங்களும், மறத்தைப் போக்கின அறத்தை விரும்பின செங்கோலையும் உடைய, பல வேல் படைகளையுடைய திரையனிடம் செல்ல எண்ணுங்கள். அவனை அடைந்தால்  உன் துன்பம் நீங்கும்.

திரையனின் பெரிய நாட்டில்  பாம்புகளும் யாரையும் தீண்டாதாம். காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் தராதாம்.  நீ அங்குத் தங்கி சற்று இளைப்பாறலாம். விரும்பின இடத்தில் தங்கலாம். நீ செல்வாயாக!   உன் மனமானது மகிழ்ச்சி   கொள்ளட்டும்.” என மொழிகிறான்.

பாணன் சில வழிகளைக் கூறுகின்றான்.”சிறிய துளையினை உடைய வளைந்த நுகத்தடியில் கட்டின பெரிய கயிற்றை உடைய உப்பு வண்டிகள் அங்கே சென்று கொண்டு இருக்கும். அவற்றைக் காவல் காத்துக்கொண்டு உப்பாகிய உணவின் விலையைக் கூறி,  உப்பு வணிகர்கள் ஊர்தோறும் செல்லுகின்ற நீண்ட வழி ஒன்று உண்டு. 

அடுத்து எயினர் குடிசைகள் இருக்கும் என்று கூறியவன் அக்குடிசைகள் பற்றிக் கூறுகிறான்.

”நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த,
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன,
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது”

 என அக்குடிசைகளைப் பாடல் அடிகள் காட்டுகின்றன.

அதாவது நீண்ட அடிப்பகுதியை உடைய இலவமரம். அதன்  கிளைகளில் காய்த்த பஞ்சினையுடைய  பசுமையான காயின் முதுகு வெடித்தால்  பஞ்சு  விரிந்து தோன்றும். அதுபோல வரியை முதுகில் உடைய அணிலும் எலியும் நுழையாதபடி அக்குடிசைகள் இருக்குமாம்.

அங்கு வாழும் எயிற்றியர் கடப்பாரையால், கீழ் மேலாகப் புரளும்படிக் கரம்பை நிலத்தைக் குத்துவர். அப்பொழுது எழும் புழுதியைத் துழாவி, மெல்லிய புல்லரிசியை எடுத்துக் கொள்வர். அவர்களிடம் “நாங்கள்  மலை நாட்டை உடைய மன்னனின் பாணர்கள்” என்று கூறுங்கள். ”சமைத்த கருவாட்டுக் குழம்புடன் கூடிய சோற்றைத் தேக்கின் இலையில் குவித்து அவர்கள் தர, சுற்றத்துடன் மிக்க உணவை நீங்கள் பெறலாம்.

அடுத்துப் பாலை நிலத்தைக் கடந்தபின் தொடர்ந்து செல்லுங்கள். அங்கே எயினருடைய அரண் இருக்கும். அங்கே  நீங்கள் தங்கினால்  மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த சமைத்த சோற்றை  அவர்கள் தருவார்கள். மேலும் அவர்களின் நாய் கடித்துக் கொண்டுவந்த  உடும்பின் பொரியலும் ஒவ்வொரு வீட்டிலும் உங்களுக்குத் தருவார்கள்.

அடுத்து வரும் குறிஞ்சி நிலம் தாண்டி இடையர் குடியிருப்பில் தங்குவீர். அங்கே

”எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்,
இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன,

பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்;” .

அதாவது அங்கே எருமைகளையும் நல்ல பசுக்களையும் கன்றுகளையும் கொண்ட இடையர் குடியிருப்பில் நீங்கள் தங்கலாம். அங்கே  நண்டு ஈன்ற சிறு குஞ்சைப் போன்ற    தினை அரிசியால் ஆக்கப்பட்ட சோற்றைப் பாலுடன் பெறுவீர்கள்” என்று ஆற்றுப்படுத்தும் பாணன் கூறுகிறான்.  

”அடுத்து முல்லை நிலம் வரும். அங்கே  அவரை விதையின் பருப்பைத் துழாவியதால் இனிதாக இருக்கும் வரகின்  சோற்றை உங்களுக்கு அளிப்பார்கள். அடுத்து மருத நிலம் வரும்.  அங்கே  அசையாத குடியிருப்புகள் உடைய வளம் மிகுந்த ஊரில் நீங்கள் தங்கலாம். உழவர்கள்  வெள்ளை நெல்லின் சோற்றை, அவர்கள் வீட்டில் வாழும் கோழிப் பெடையினால் சமைத்த பொரியலோடு அளிப்பார்கள்.

”கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை  
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்”

என்னும் பாடல் அடிகள் அக்காலத்தில் கரும்பாலைகள் இருந்ததைக் காட்டுகின்றன.  யாளி என்னும் விலங்கு தாக்குதலால், யானைகள் கலங்கிக் கதறினால் போல, அந்தக் கரும்பாலையின் எந்திரம் ஒலிக்குமாம், அங்கே கரும்புச் சாற்றைக் கட்டியாகக் காய்ச்சுவார்கள். புகைசூழ்ந்த அந்த ஆலைகளில்  கரும்பின் இனிய சாற்றை  அவ்வழிச் செல்பவர்கள் பருகலாமாம்”

”அடுத்து வலைஞர்களின் குடியிருப்புகள் அமைந்திருக்கும். அங்கே  குற்றாத அரிசியினால் சமைத்த களிக்கூழை அளிப்பார்கள். மேலும் பன்னாடையால் வடிகட்டப்பட்ட  விரலால் அலைத்துப் பிழிந்த கள்ளை, பச்சை மீனைச் சுட்டதனுடன் பசியால் தளர்ந்தவிடத்து நீங்கள் பெறுவீர்கள்” எனப் பாணன் கூறுகிறான்.

அடுத்து அந்தணர் குடியிருப்புகளை அடைந்தால் அங்கே சிவந்த பசுவின் நறுமணமான மோரிலிருந்து எடுத்த வெண்ணெய்யில் கிடந்து வெம்மையுற்ற மாதுளையின் துண்டுகளையும், மிளகுப்பொடி கலக்கப்பட்டு, கறிவேப்பிலை இலைகளைச் சேர்த்து, மாவினது நறுமணமான வடுக்களைப் பலவாக இட்டுச் செய்த அழகு மிக்க ஊறுகாயினையும், வேறு பல உணவுகளையும் அவர்கள் பெறலாமாம்.  

அடுத்து நீர்ப்பாயற்றுறை எல்லையில் உள்ள பட்டினத்தை அடைந்தால் அங்கே பெண் பன்றிகளுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாமல், நெல்லை இடித்த மாவு ஆகிய உணவினைத் தின்னப் பண்ணின பற்பல நாளும், குழியில் நிறுத்திப் பாதுகாத்த ஆண்பன்றியின், கொழுத்த கொழுப்புடைய தசையுடன் களிப்பு மிகுந்த கள்ளைப் பெறுவீர்கள். அடுத்து வரும் தோப்புக்குடில்களில் தங்கினால் அங்கே  பனை மரத்தின் நுங்குடன் வேறு இனிய பல உணவுப் பண்டங்களையும் , முளையைப் புறத்தில் உடைய வள்ளி முதலிய கிழங்குகளை உண்ணுவீர்கள்”

பிறகு பல நாடுகளைக் கடந்து சென்றால் திருமால் துயில் கொள்ளும் திருவெஃகாவை அடையலாம். அங்கே சிறிது  இளைப்பாறுங்கள். பின்னர் அங்குள்ள அரிய வலிமையுடைய கடவுளை வாழ்த்துங்கள். உங்களுடைய கரிய தண்டினையுடைய இனிய யாழை இயக்கி அந்த இடத்தில் சற்று நின்று நீவீர் செல்லுங்கள்.” என்ற பாணன் மேலும் கூறுகிறான்.

”அந்தத் திருவெஃகா எனப்படும் காஞ்சிபுரத்தில்தான் திரையன் ஆட்சி செய்கிறான். அவன் அடங்காத படையுடன் சினந்து வந்த, தன் ஏவலுக்கு ஒத்துக்கொள்ளாத பகைவர் தோன்றும்போது வெற்றிக்களிப்புடன் ஆரவாரித்தவன் ஆவான். வழங்கும் தன்மைகளில் தலைமை சான்ற தொண்டைமான் இளந்திரையன். தன்னை விரும்பி வந்தவர்களுக்கு பாதுகாவலாக இருப்பவன் ஆவான்”

அவன் அமைச்சருடன் அமர்ந்திருக்கும் முற்றத்திற்குச் செல்லுங்கள்.  பகைவர்களின் நிலத்தில் கொண்ட கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குலத்தில் தோன்றியவனே! போர் மறவர் மதிக்கும் போர் மறவனே! கொடியோர்க்குக் கொடியவனே! செல்வரும் மதிக்கும் செல்வமானவனே! போரில் வெற்றி அடைபவனே!

வெள்ளை அலைகளையுடைய கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய அணிகலன்களை உடைய முருகனைப் பெற்ற, பெரிய வயிற்றினையும் துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய கொற்றவையைக் கடவுள்கள் புகழ்ந்தாற்போல், விடாத கொடையினையுடைய உன்னுடைய பெரும் பெயரைப் புகழ வந்தேன் பெருமானே, நீ நீடு வாழ்வாய் என, இடப்பக்கத்தில் தழுவுதலை உடைய பேரியாழை இயக்கும் முறைப்படி இயக்கி, யாழில் உறையும் கடவுளுக்கு முறைப்படி இயற்றிக் கையால் தொழுது, புகழ்ந்து பாடுங்கள்.  

அவன் உன்னுடைய நிலையினை அறிவதற்கு முன்னமே, உன்னை அழைத்து, உன்னுடைய இடையில் கிடந்த பாசியின் வேரை ஒத்த .பாழ்பட்ட ஆடையை நீக்குவான், ஆவியை (பால் ஆவியை) ஒத்த விளங்குகின்ற நூலால் செய்த ஆடையை, மிகப் பெரிய சுற்றத்துடன், ஒருசேர உடுக்கச் செய்வான்.

வளைந்த அரிவாளைக் கொண்ட வடு அழுத்தின கையையுடைய சமையல்காரன் ஆக்கின பல இறைச்சியின் கொழுத்த தசையும், அரித்து ஈரம் போக உலரவைத்த பெரிய செந்நெல்லின் தேர்ந்தெடுத்த அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோறும், அரிய காவல் செய்து போற்றிய இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் பிறவும் ஆகிய, பார்த்தவர்கள் விரும்பும் முறைமையுடைய மூடி வைத்தலுடைய உணவுகளை, இரவில் விண்மீன்கள் மலர்ந்தாற்போல் வெள்ளிக் கிண்ணங்களைப் பரப்பி, உங்கள் யாவரையும் தாய் தன் மக்களைப் பார்க்குமாறு பிள்ளை முறை பிள்ளை முறையாகப் பார்த்து, முகத்தை இனிது காட்டி, அமையாத விருப்பத்துடன் தானே எதிர் நின்று ஊட்டுவான்.

 குதிரை நூலைக் கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய, திருமாலின் பாற்கடலில் சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளை நிறப் பிடரி மயிரையுடைய ஒன்றாகத் தொழில் செய்வன ஆகிய குதிரைகள் நான்கினை ஒருசேரப் பூட்டி, காற்றினை ஒத்த தேரைக் கொடுத்தும் மன நிறைவு பெறாமல், தன்னுடன் போரில் தோற்ற பொருந்தாத பகைவர்கள் புறமுதுகு இட்டபோது விட்டுப் போன விண்ணிலே பறப்பதுபோன்று விரைகின்ற குதிரைகளுடன், புதிய குதிரைச் சேணமும் தந்து, நீவீர் சென்ற நாளே பரிசில் தந்து விடுவான்”என்று பாணன் ஆற்றுப்படுத்துகிறான்.

மேலும் அவன் இளந்திரையனது மலையின் பெருமையை இவ்வாறு கூறுவதுடன் பெரும்பாணாற்றுப் படை முடிவடைகிறது.

……………………………………………….இன்சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்,  
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந்தீப் பேணிய முனிவர், வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே!

 ” இனிய தாளத்தில் கின்னரம் என்னும் பறவைகள் பாடும் அந்த மலைச் சரிவில் கடவுள் மறைந்திருக்கிறார். மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இள மரங்கள் உடைய காட்டைக் கொண்டது அம்மலை.  ஆண் குரங்குகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் கொண்டது. பெண் குரங்குகள் அவ்விடத்தில் கிடக்கும் குப்பையை வாரும். மானும் புலியும் துயில் கொள்ளும் முற்றத்தைக் கொண்டது அம்மலை. அதில், சிவந்த தீயைக் கைவிடாமல் காக்கும் முனிவர்கள்,வேள்வியைச் செய்வார்கள். வெள்ளைத் தந்தங்களை உடைய ஆண் யானைகள் முறித்துக் கொண்டு வரும் விறகினால் அவ்வேள்வியைச் செய்வார்கள். மேலும்ஒளியுடன் விளங்கும் அருவிகளையுமுடையது, வேங்கட மலை. அதை  ஆளும் உரிமையுடையவன் இளந்திரையன் ஆவான்.”