குலோத்துங்கன்-தொடர்ச்சி

குலோத்துங்க சோழனின் கதையை முடித்து முடிவுரை கூறுவோம். முதலில், கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டாரைப்பற்றிச் சற்றுக் கதைப்போம்.
ஜெயங்கொண்டார், குலோத்துங்கன் அவைக்களப்புலவரானபின், பல தென்னாட்டுப் புலவர்களை வாதங்களில் வென்றதன் காரணமாக அவருக்கு ‘ஜெயங்கொண்டார்’ என்ற பெயர் நிலைத்தது.
ஒரு அரசவைக்காட்சி:
கலிங்கத்தை வெற்றி கொண்ட செய்தி, குலோத்துங்கனின் அரசவைக்கு வந்த தருணம் அது. செய்தி கேட்ட மன்னன், அரியணையில் மகிழ்ந்திருந்தான்.அரசவையில் அமர்ந்திருந்த ஜெயங்கொண்டாரைப் பார்த்தான். புன்னகை பூத்தான்.
ஜெயங்கொண்டார், “மன்னர் மன்னா? தங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் யாதோ” என்று வினவினார்.
குலோத்துங்கன், “கவிச்சக்கரவர்த்தியே! இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. வட கலிங்கத்தை நமது சோழப்படைகள் வென்றுவிட்டன” என்றான்.
ஜெயங்கொண்டார் “ஆஹா! என்னே மகிழ்ச்சிகரமான செய்தி” என்றார்.
குலோத்துங்கன், “புலவர் பிரானே! மகிழ்ச்சிக்குக் காரணம் அதுமட்டுமல்ல” என்றார்.
ஜெயங்கொண்டார், “சொல்லுங்கள் மன்னா? வேறென்ன?” என்று ஆவலுடன் வினவினார்.
“இன்றுவரை நீங்கள் ஜெயங்கொண்டார்..” என்று இழுத்தான்.
“ஆம். அதற்கென்ன” என்றார் புலவர்.
“இன்று கலிங்கத்தை நான் வென்றுவிட்டேன்” என்றான் மன்னன்.
‘என்ன சொல்கிறான் மன்னன்’ என்று யோசனையில் ஆழ்ந்தான் கவிஞன்.
“ஆதலால் இன்றுமுதல், நானும் ஜெயங்கொண்டான் ஆகிறேன்” என்று இடி இடியென நகைத்தான்.
“மன்னவா! தங்களுக்கன்றோ, அந்தப் பெயர் மிகவும் பொருத்தமானது. அங்கனமாயின், ஜெயங்கொண்டானைச் ஜெயங்கொண்டான் பாடுதல் மிகப் பொருத்தமுடையதன்றோ” என்று உரைத்தார். அதைக்கேட்ட மன்னன் உவந்தான். சில நாட்களில், புலவர் ‘கலிங்கத்துப்பரணி’ என்ற ஓர் அரிய நூலை இயற்றி வந்து ௮ரசனது ௮வைக்களத்தே அரங்கேற்றினர்.
அரங்கேற்றம், அரண்மனையில் நடந்தது. அரியணையில் அமர்ந்திருந்த குலோத்துங்கன், பரணிப் பாடல்களை மகிழ்வுடன் கேட்டுக்கொண்டு வந்தான். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேங்காயைப் பரிசிலாகக் கொடுத்துச் சிறப்பித்தான். (கதை உண்மையோ இல்லையோ, கருத்து உண்மையானது). ‘பரணிக்கோர் ஜெயங்கொண்டான்’ என்று அவையிலிருந்த அறிஞர்கள் புலவனைப் பாராட்டினர்.
குலோத்துங்கனும் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தவனாக இருந்தான். ஜெயங்கொண்டார் இவனைப் ‘பண்டித சோழன்’ என்றும், ‘அறிஞர் தம்பிரான் அபயன்’ என்றும் கலிங்கத்துப்பரணியில் குறித்துள்ளார். முன்பு, வேங்கியில் மன்னனாக இருந்த போது அங்குத் தெலுங்கு தான் ஆட்சி மொழி. ஆக, குலோத்துங்கன் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பாண்டித்யம் பெற்றிருந்தான்.
அந்தப்புரச் செய்திகள்:
பட்டத்தரசி மதுராந்தகி. இவள், குலோத்துங்கனின் அம்மான் இரண்டாம் ராஜேந்திரசோழனின் மகள். குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்து 26 ஆண்டுகள் வரை பட்டத்தரசியாக இருந்து, இறந்தாள். அதற்குப்பிறகு, அவனுடைய இன்னொரு மனைவி தியாகவல்லி பட்டத்தரசியானாள்.
மூன்றாவது மனைவியின் பெயர் ஏழிசைவல்லபி. இவள் குலோத்துங்கன் எழுதிய இசைநூலில் பெரும் புலமை உள்ளவளாக இருந்ததுடன், அதை ஏழிசையால் பாடி, பெருமை சேர்த்தார். அதன் காரணமாக, அருள்மொழிநங்கை என்ற பெயர் கொண்ட இவள் ஏழிசைவல்லபி என்று சிறப்பிக்கப்பட்டாள்.
‘அந்தப்புர அட்வென்சர்’ அத்துடன் முடியவில்லை. இந்த மூவரைத்தவிர, மேலும் நான்கு மனைவியரும் அந்தப்புரத்தை அலங்கரித்தனர். அவர்கள் : கம்பமாதேவி, காடவன்மாதேவி, சோழகுலவல்லி, திரைலோக்கிய மாதேவி.
சமயச்செய்திகள்:
குலோத்துங்கன், தன்னுடைய முன்னோர்களைப் போலச் சிவபெருமானிடம் எல்லையில்லா அன்பு கொண்டிருந்தான். அதனால், ‘திருநீற்றுச்சோழன்’ என்ற விருதுப்பெயர் இவனுக்கு வழங்கியது. சைவசமயம் சார்ந்தவனாக இருந்தாலும், வைணவம், பௌத்தம் போன்ற பிற சமயங்களையும் ஆதரித்தான். சூரியனுக்குத் தனிக்கோயில் அமைத்தான்.
வெளிநாட்டுச் செய்திகள்:
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமல், குலோத்துங்கன், சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். ஆட்சி அமைத்த பின்பு, சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். வாணிகம் அவனது ஆட்சியில் சிறப்புற விளங்கியது. சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் சுங்கவரியை நீக்கினான். இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.
குலோத்துங்கன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான். திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தின் இறுதியில், சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது.
இவனது இறுதிக்காலத்தில், கங்கபாடி, நுளம்பபாடி, இலங்கை, வேங்கி நாடுகள் சோழரிடமிருந்து விடுபெற்றுப்போனது.
ஆட்சியின் இறுதிக் காலத்தில், கி.பி. 1116 இல் விஷ்ணுவர்த்தன் என்ற போசள அரசன் (Hoysala King) சோழப்பேரரசின் மீது போர் தொடுத்துக் கங்கபாடி, நுளம்பபாடி ஆகிய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான். முதலாம் இராசராசன் காலம் முதல் சோழர் ஆட்சியின்கீழ் இருந்துவந்த கங்கபாடி, நுளம்பபாடி ஆகிய நாடுகளை குலோத்துங்கன் தன் காலத்தில் இழந்தான்.
வேங்கிநாடும் கைவிட்டுப்போனது. குலோத்துங்கன், தன் தந்தையின் நாடான வேங்கியையும் இழந்தான். வேங்கியில் தன்னுடைய மகன் விக்கிரமசோழன் என்பவனை அரசுப் பிரதிநிதியாக நியமித்து ஆட்சி புரிந்துவரும்படி செய்தான். விக்கிரமசோழன், கி.பி. 1093 முதல் வேங்கி நாட்டைச் சோழருடைய அரசு பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தான். பின்பு, குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்திலேயே விக்கிரம சோழனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுவதற்காக கி.பி. 1118 இல் அவனைச் சோழநாட்டுத் தலைநகருக்கு வரவழைத்துக் கொண்டான்.
விக்கிரமசோழன் இருந்த இடத்தில் தெலுங்குச் சோழர்களில் ஒருவனை அரசு பிரதிநிதியாக நியமித்து, வேங்கி நாட்டை ஆண்டு வரும்படி செய்தான். குலோத்துங்கனின் இச்செயலை வேங்கி நாட்டு மக்கள் விரும்பவில்லை. இதனால் வேங்கி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. வேங்கியை மேலைச் சாளுக்கிய நாட்டோடு இணைத்துக்கொள்ள வேண்டுமென்று நெடுங்காலமாக முயன்று கொண்டிருந்த ஆறாம் விக்கிரமாதித்தன் இதைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான். வேங்கி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை எளிதாக வென்று கைப்பற்றிக் கொண்டான். குலோத்துங்கன்மேல் இருந்த தன் பரம்பரை வஞ்சத்தை, ஆறாம் விக்கிரமாதித்தன் தீர்த்துக்கொண்டான்.
ஈழம் கைவிட்டுப்போனது பற்றி முன்பே பார்த்தோம்.
இப்படிச் சுற்றி இருந்த நாடுகள் பல விலகிப்போனாலும், சோழ அரசு பலமானதாகவே இருந்தது. அவனது சந்ததியர்கள் சோழநாட்டுப்புகழைத் தக்க வைத்துக் கொண்டனர்.
அவர்கள் கதையைத் தொடர்ந்து விவரமாகப் பேசுவோம்.

சோழர் வரலாறு சுவைமிகு வரலாறு.
LikeLike