அச்சம், நாணம், மடம்
தோழர் ஜீவானந்தம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? அதை தமிழ் Quora-வில் பகிர  முடியுமா? - Quora
ஏம்மா! கொஞ்சமாவது பெண் பிள்ளைக்கான அச்சம், நாணம், மடம்  இருக்கா என அவளுக்கு புரியாத வார்த்தைகளால் என் பெயர்த்தியை திட்டிக் கொண்டிருந்தேன்.
அவள் சற்று நேரம் பேசாமல் இருந்தாள். அப்பாடி! ஒரு வழியா பெயர்த்தியை மடக்கியாச்சு. அவளுக்குத் தெரியாத வார்த்தைகளால் திட்டியாச்சு என்ற சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்க வில்லை.
“ அப்படின்னா என்ன தாத்தா?” கேள்வியை வெடி குண்டாக்கி என் மீது வீசினாள். முதல் இரண்டுக்கும் ஏதாவது சொல்லி சமாளிக்களாம். ‘மடம்’ என்ற சொல்லிற்கு என்ன கூறுவது. சரி, சமாளிப்போம்.

“அதாம்மா! அச்சம் என்றால் பிறரைக் கண்டு பயப்படுதல், நாணம் என்றால் வெட்கப்படுதல், மடம் என்றால் மடமை, அறிவீனம்” எனக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது என் முதுகில் யாரோ ஓங்கி தட்டுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.

துவைத்து மடித்து வைத்து கட்டிய நான்கு முழ வேட்டி. ஓரிரு இடங்களில் கைத் தையல் போடப்பட்டிருந்தது. அது போல துவைத்து காய வைத்த கயிற்றுத் தடத்துடன் வெள்ளை அரைக் கை சட்டை. சட்டைக் கை முழங்கையை மறைத்திருந்தது. பார்த்திருக்க வில்லையென்றாலும் கவர்ச்சி நிறைந்த முகத்தில் நரைத்த மீசையை பார்த்தவுடன் அதிர்ச்சி குரலில் தெரிய ‘ஐயா! நீங்களா?” என்றேன்.
அமைதியான முறுவலுடன் “ஆம்” என்றார் ‘ இந்தியாவின் சொத்து’ என காந்தி மகானால் அழைக்கப் பட்ட ஜீவா அவர்கள்.
‘என்ன ஐயா! இவ்வளவு தூரம்’ என்றேன். ‘நீங்கள் பெயர்த்தியுடன் பேசிக் கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது. நெஞ்சு பொறுக்க வில்லை, உடன் வந்தேன்’ என்றார்.
‘குழந்தையுடன் சற்று விளையாடினேன் ஐயா’ என்றேன் நான்.
“ விளையாட்டிற்கு கூட சரியானதைச் சொல்லிக் கொடுக்கலாமே, பாரதி பாப்பாவை ‘ஓடி விளையாடச் சொல்லி ஓய்ந்து இருக்கலாகாது, கூடி விளையாடு’ என்றெலாம் சொல்லிக் கொடுக்க வில்லையா? எங்கே, அச்சொற்களுக்கு சரியான விளக்கம் இப்பொழுது கூறுங்கள் பார்க்கலாம்” என்றார் ஜீவா அவர்கள்.

“ ஐயா! நான் எப்படி, நீங்கள்தான் ‘புதுமைப் பெண்’ பற்றி நிறைய பேசியுள்ளீர்கள், நீங்களே கூறுங்கள்” என்றேன் அடி பட்ட முதுகைத் தடவிக் கொண்டே.

“ குழந்தை! இங்கே வாம்மா, அச்சம் என்றால் தீ வினைகளுக்கு அஞ்சுதல், நாணம் என்றால் பழி பாவங்களுக்கு நாணுதல், மடம் என்றால் சான்றோர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றில் மிக உறுதியோடு இருத்தல், ” என அன்போடு தலையை நீவிக் கொண்டே கூறினார்.

மேலும்’ இந்த நற் குணங்கள் பெண்களுக்கு அவசியம் என் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன குழந்தை” என்றார் ஜீவா அவர்கள் கனிவோடு.

“ சங்க காலத்திலும் என்ன ஒரு ஆணாதிக்கம் தாத்தா” என்ற கேள்வியால் அவரையே திடுக்கிட்டு ‘என்ன சொல்கிறாய் அம்மா’ எனக்  கேட்க வைத்தாள் அவள்.

‘ பின்ன என்ன தாத்தா, இந்த மூன்று குணங்களும் பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்களுக்கு வேண்டாவா? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என வள்ளுவர் பாடி உள்ளாரே’ என்றாள் அவள்.
தன்னை மறந்து கல கலவென சிரித்தார் ஜீவா அவர்கள்.

“ நான் அதைத்தான் கூற வந்தேனம்மா. சங்க இலக்கியமான தொல்காப்பியம் ‘பெருமையும் அறிவு வலிமையும் ஆண்பாலர்க்கு உரியவை. அச்சம், நாணம், மடம் என்ற இயல்புகள் எப்பொழுதும் பெண்பாலார்க்கு உரியவாம் எனக் கூறுகிறது”

ஆண் உயர்வு- பெண் தாழ்வு என்ற கருத்துதான் தொல்காப்பியத்தில் ஊடுருவி நிற்கிறது.
சங்க காலத்தில் சற்று பின்னர் வந்த இலக்கியங்கள் “ ஆண் உயிர்; பெண் உடம்பு” என்ற கருத்தை வெளிப்படுத்தின. வினையாற்றுதல் ஆணின் உயிர், அந்த ஆண் பெண்ணின் உயிர் என்றன. பெண்களை குடும்பத் தலைவியாக பெருமைப் படுத்தின. இருப்பினும் பொருள் தேடவோ, போர் புரியவோ வெளியே செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது. பெண்ணில் சிலரை ‘பொது மகளிர்’ ஆக்கி இழிவு படுத்திய அன்றைய சமுதாயம் ஆணில் எவனையும் ‘பொது மகன்’ ஆக்கி இழிவு படுத்த வில்லை. மாறாக ‘ உயிரினும் சிறந்தது நாணமும், நாணத்தினும் சிறந்தது கற்பும்’ என கற்பை பெண்களுக்கும் மட்டும் உடமையாக்குகிறது.

வள்ளுவர் கூட எந்த குறளிலும் ஆணும் பெண்னும் சரிசமமென்று கூற வில்லை. மாறாக பல இடங்களில் பெண்ணிற்கு சில கட்டுப் பாடுகளை அறிவுரையாக கூறுகிறார்.

வள்ளுவன் காலத்திற்கும் நம் காலத்திற்கும் இடைவெளி இரண்டாயிரம் ஆண்டுகள். அன்று அன்றுதான்; இன்று இன்றுதான்.

அவை அனைத்திற்கும் பதில் கூறும் விதமாய் பாரதியின் ‘புதுமைப் பெண் “ நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞானம் நல்லறம் வீர சுதந்திரம் பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” எனக்  கார சாரமாய் கோபத்தைக் கொட்டுகிறாள்.

உன்னை பாரதியின் புதுமைப் பெண்ணாக காண ஆசைப் படுகிறேனம்மா’ எனக்கூறிய அவர்
‘ஒன்றைக் கவனமாகக் கேள், அனுபவம் தாய்ப் பால் போன்றது; சிந்தனை பசுவின் பால் போன்றது; நூல் படிப்பு புட்டிப் பால் போன்றது. நூலறிவை விட சிந்தனை அறிவும், சிந்தனை அறிவை விட அனுபவ அறிவும் சிறந்தது என்பதை மனதில் வைத்து நடந்து கொள்ளம்மா” என கூறிக் கொண்டே மறைந்தது அம்மாபெரும் மனிதம்.

திகைத்து நின்றோம் என் பெயர்த்தியும் நானும்.