நாயன்மார் வெண்பா!

பெரியபுராணம் – Apps no Google Play

             (ஓர் அடியார் – ஒரு வெண்பா)

முன்னுரை

தமிழ் மண்ணில் பிறந்து, பக்தி நெறியை வளர்த்த சிவனடியார்களான நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம்.            இதில் கூறப்படும் நாயன்மார்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்; பல்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள்,  தொழிலால், இனத்தால்,பொருளாதார, சமுதாயப் படிநிலைகளால் பெரிதும் வேறுபட்டவர்கள். எனினும் சிவபெருமான் மீது வைத்த அளப்பரிய பக்தியால் ஒன்றுபட்டவர்கள்.                                                       

இவர்களது திருக்கதையைப் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவர் சேக்கிழார்.

ஒவ்வொரு அடியாரின் கதையை மிகச் சுருக்கமாகச்  சொல்லிவிட்டு, அக்கதையின் மையக் கருத்தினை ஒரேயொரு வெண்பாவில் வருமாறு பாடும் முயற்சியே இந்நூல் 

தில்லைக் கூத்தனின் எல்லையில்லாத் திருவருள்  துணை புரிவதாக.-   தில்லைவேந்தன்.

சிவன் துதி!

கொன்றையும்,கங்கையும்,கூன்பிறையும் செஞ்சடையில்

ஒன்றியொளிர் ஈசனே,உன்னடியார் – நன்றுபுரி

தொண்டின் கதையைநான் சொல்லவிழை வெண்பாவில் 

கொண்டுன் அருளைநீ கூட்டு!

            

பெரியபுராணம் உருவான  கதை

அநபாய குலோத்துங்கச் சோழனின் முதலமைச்சர் சேக்கிழார் பெருமான்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்றுச் சிவனருட் செல்வர்களின் திருக்கதையை எழுதத் தில்லை சென்று அம்பலத்தாடும் ஈசனை வணங்கினார்.

அப்போது, ஈசன் விண்வழியே “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்க,அதனையே தொடக்கமாக வைத்துப் “ பெரிய புராணம்” என்றழைக்கப்படும் ,”திருத்தொண்டர் புராணம்” என்ற நூலைத் தித்திக்கும் தமிழில் எழுதினார்.

                          

ஆக்கி அளித்தார் அமுது!

ஓங்குதில்லை ஈசன்,“உலகெலாம்” என்றருள,

ஆங்கு முதலாய் அதைவைத்து – வீங்குபுகழ்ச்

சேக்கிழார்,தொண்டர் திருக்கதையைச் செந்தமிழில்

ஆக்கி அளித்தார் அமுது!

தில்லைவாழ் அந்தணர்கள்!

(தில்லைத் திருநகரைச் சேர்ந்த மூவாயிரம் அந்தணர்கள், அறம்பேணி, மறையோதி, எரியோம்பி மாசற்ற நல்வாழ்க்கை வாழ்ந்து சிவத் தொண்டு புரிந்து வந்தனர்                                                                                                            

மெய்ப்பொருளாம் சிவனை அறிவதும்,அவன் கோவில் பணிகளைச்  செய்வதும்,மறைகள் ஓதுவதும் அவர்கள் வாழ்க்கை முறையாகும்.      அடியார்களைப் பற்றிக் கூறும் “ திருத்தொண்டத்தொகை” என்ற நூலைச் சுந்தரர்” தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றே தொடங்குகின்றார்.)

மாடமலி மாளிகைகள் மன்னுதில்லை அந்தணர்கள்

தேடலென்றும் மெய்ம்மைத் தெளிபொருள் – கூடலென்றும்

ஆடல்  அரசன் அணிகோவில், நான்மறைகள் 

பாடலென்றும் நல்வாழ்க்கைப் பாங்கு!

1)  திருநீலகண்ட நாயனார்

(தில்லைப் பதியில் மட்பாண்டம் செய்யும் குலத்தினரான திருநீலகண்டர் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒரு நாள் கணிகையர் வீடு சென்று வந்ததால், வருத்தமும், சினமும் கொண்ட  மனைவியார், “ எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்” என்றார் .ஐயனே! இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித்திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு, தம்மைத்  தீண்டக் கூடாது என்றுகூறிவிட்டாள். “எம்மை” என்று பன்மையில் சொன்னதால், அன்று முதல், மனைவி உட்பட  எந்தப் பெண்ணையும் மனத்தினாலும்  தொடாமல் வாழ முடிவு செய்தார்.             

”திருநீலகண்டம்” என்று இறைவன்  பெயரால்  இடப்பட்ட ஆணையை ஏற்று, அயலார் எவரும் அறியாமல் மனைவியுடன் ஒரே வீட்டில் இவ்வாறு  வாழ்ந்து வந்தார். 

காலப் போக்கில்  முதுமை அடைந்தார்.

ஒருமுறை இறைவன், அடியார் உருவில் வந்து திருநீலகண்டரிடம்  ஓடு ஒன்றைக் கொடுத்து அதனைப்  பாதுகாத்து வைக்கச்  சொன்னான்.

பிறகு,அவனே  அந்த ஓட்டை மறைய வைத்து மாயம் செய்தான்..

ஓட்டைக் களவாடவில்லை என்று மனைவியின் கையைப்பற்றி நீரில் மூழ்கிச் சத்தியம் செய்யச் சொன்ன போது, அவர் தங்களுக்குள் நடந்ததைக் கூறினார். பிறகு, இருவரும்  கோல் ஒன்றைப் பற்றி நீரில் மூழ்கி எழும் போது, இறையருளால் பழைய இளமை வடிவைப் பெற்றனர்.                         

உமையம்மையோடு வானில் காட்சியளித்த இறைவன், “என்றும் இந்த இளமை நீங்காமல் என்னுடன் இருப்பீராக” என்று அருள் செய்தான்.            

‘தீண்டாதீர் எம்மை’யென்ற செப்புமொழி பேணியவர்,

ஆண்டடியார் நல்லோ(டு) அதுதொலைய – நீண்டகோல்

பற்றிநீர் மூழ்கப் பழைய வடிவிளமை

பெற்றதன்றோ நீலகண்டப் பேறு!

                           *****

                 2) இயற்பகை நாயனார்

(இயற்பகையார், காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த பெருவணிகர். சிவனடியார்கள் எது கேட்டாலும், ‘இல்லை’ என்று சொல்லாமல் தருவதைக் கொள்கையாகக் கொண்டவர்.                                   ஒருநாள், மறையவர் வடிவில் வந்த இறைவன், அவரிடம் அவர் மனைவியைத் தருமாறு கேட்க, இயற்பகையாரும் தயங்காமல் அளித்தார்.                                 

நாயனாரின் சுற்றத்தார் வெகுண்டு” இவன் பித்தன்” என்று கூறித் தடுத்தனர்.                                                                         இயற்பகையார் வாளேந்திப் போரிட்டு அவர்களைக் கொன்று,ஊர் எல்லைவரை துணையாகச் சென்று திரும்பினார்.                                                                                 

அப்போது மறையவர் அழைக்க மீண்டும் வந்தவர்,மனைவி மட்டும் நிற்பதைப் பார்த்தார்.மறையவரைக் காணவில்லை.                      உடனே  இறைவன், உமையாளுடன்  வானில்  காட்சி தருவதைப் பார்த்தார்.இயற்பகையாரையும், அவர் மனைவியாரையும் சிவலோகத்துக்கு வருமாறு இறைவன் திருவருள் புரிந்தான்.போர் செய்து இறந்த சுற்றத்தாரும் வானுலக இன்பத்தைப் பெற்றனர்.           நாயனார், உலக இயல்புக்கு மாறுபட்டவர் என்பதை உணர்த்தச் சேக்கிழார், ”உலகியல் பகையார்” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது).

இல்லையெனச் சொல்லாமல் இல்லாளை ஈந்துவிட்டு    வல்லவராய்க் காத்துநின்றார் வாள்வீசி- ஒல்லையில்     ஈசனவன்.காட்சி, இயற்பகைக்குத் தந்ததவர்                பேசரிய தன்மையின் பீடு!

              (ஒல்லையில்- விரைவில்)

                           *****

        

          3) இளையான்குடி மாற நாயனார்

(இளையான்குடி என்ற ஊரில், வேளாண் பெருங்குடியைச் சேர்ந்த மாறனார் வாழ்ந்து வந்தார்.                                                     அனைவரையும் சிவனடியாராகக் கருதி உணவளிப்பதையே கடமையாகக் கொண்டவர்.                                                     நாளடைவில், வறுமையுற்ற போதும் இதனைத் தொடர்ந்து செய்து வந்தார்.                                                                            ஒரு மழைக்காலத்து நள்ளிரவில் சிவனடியாராக வந்த இறைவனுக்காக,   வயலில் விதைத்த விதை நெல்லைக் கொண்டு வந்தும்,வீட்டின் கூரையை அறுத்து விறகாக்கியும், தோட்டத்துக் கொல்லையில் இருந்த கீரையைப் பறித்தும் ஏற்பாடுகள் செய்ய, மனைவியார் அமுது சமைத்தார்.                               

அடியாரை அமுதுண்ண அழைக்கும்போது அவர் மறைந்து, அங்குச் சோதிவடிவில் இறைவன் காட்சி தந்தான். மாறனாரும், அவர் மனைவியும் தன்னுடைய பெரிய உலகத்தில் இன்பம் அனுபவிக்க வருமாறு அருள் செய்தான்))

                                                                                              

நட்டவிதை நெல்கொணர்ந்து நாடித்தன் இற்கூரை     வெட்டி எடுத்து விறகாக்கி, – கிட்டிய                         தோட்டத்துக் கீரையுடன் சோறாக்க, ஈசனும்               நாட்டத்தால், வாவென்றார் நன்று!

                         

   

                            *****

                4) மெய்ப்பொருள் நாயனார்!

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மெய்ப்பொருள் நாயனார், சிவபெருமானின் அடியார் கோலத்தை மிகவும் மதித்து, அவர்களுக்குத் தொண்டு புரிந்து வந்தார்.               பெரும் வீரரான இவரிடம் பகைகொண்ட முத்தநாதன் என்பவன் பலமுறை  எதிர்த்துப் போரிட்டுத்  தோற்றான்.                            வஞ்சத்தால் வெல்லக் கருதிய முத்தநாதன், சிவனடியார் வேடம் பூண்டு சுவடிக்குள் கத்தியை மறைத்து  அவர் அரண்மனையுள் புகுந்தான்..தடுத்த, தத்தன் என்னும் மெய்க்காவலனிடம், “அரசனுக்கு உறுதிப் பொருள் கூற. வந்த என்னைத் தடுக்காதே” என்று சொல்லி அரசனின் படுக்கையறைக்குள் புகுந்தான்.அரசியாரையும் அப்பால் செல்ல வைத்தான்.                         

 தரைமேல் இருந்து வணங்கிய நாயனாரை, ஓலைக் கட்டை அவிழ்ப்பவனைப் போல் அதனுள் மறைத்த வைத்திருந்த  கத்தியை எடுத்துக்  குத்தினான்.   முத்தநாதன் உள்ளே சென்ற போதே மனம் அங்கு வைத்த தத்தன் ஓடி வந்து அவனைக் கொல்லத் தன் வாளை ஓங்கினான்.குருதி பெருகும் நிலையிலும் மெய்ப்பொருளார், “தத்தா இவர் நமர்” எனத்தடுத்து வீழ்ந்தார்.முத்தநாதனை நாட்டின் எல்லையைத் தாண்டி பாதுகாத்து விட்டு வருமாறு பணித்தார்.           செய்தியை அறிந்து அக்கொடியவனைக் கொல்ல வந்தவர்களை, மன்னரின் ஆணையைக் கூறித் தடுத்தான் தத்தன். அவனை நகரத்துக்கு வெளியே காட்டில் விட்டு விட்டுத் திரும்பி வந்து மன்னரிடம் அதனை கூற அவரும் அவனை வாழ்த்தினார்.                உமையம்மையுடன் காட்சி கொடுத்த  ஈசன்  மெய்ப்பொருளாருக்குத் தன் திருவடிப் பேற்றினை அருளினான்.                     

வெல்லுமா மெய்ப்பொருளை வீரமிலா முத்தனவன்.        கொல்லத் தவவேடம் கொண்டுகுத்த –  நல்லவரும்.       தத்தா நமரென்றார் சாய்ந்துதரை வீழ்கையில்,பின்       அத்தனடி சேர்ந்தார் அவர்!

                           *****

                  5) விறன்மிண்ட நாயனார்! 

சேர நாட்டைச் சேர்ந்த திருச் செங்குன்றூரில் வாழ்ந்து வந்த விறன்மிண்டர்,சிவனடியாரை வணங்கிய பின்னரே சிவனை வணங்கும் கொள்கை உடையவர்.                                             lஒருமுறை விறன்மிண்டர் திருவாரூரில் அடியவரிடையே இருந்த போது, ஆருராகிய சுந்தரர் அவர்களை வணங்காமல் கோவிலுக்குள் சென்றார். உடனே சினம் கொண்ட நாயனார், சுந்தரரையும், அவரை ஆட்கொண்ட இறைவனையும் “புறகு” (அடியவர்க்குப் புறம்பானவர்கள்) என்று கூறினார்.                                            இதனை அறிந்த சுந்தரர் அடியவரைப் பற்றிக் கூறும் “ திருத்தொண்டத் தொகை” என்னும் பதினோரு பாடல்களைப் பாடினார்.இத்தொகையே, பெரிய புராணம் பாடுவதற்கு முதல் நூலாக அமைந்தது.                                                       திருத்தொண்டத் தொகை பாடுவதற்குக் காரணரான விறன்மிண்டர் பின்னர்க் கயிலாயத்தில் கணநாயகர் ஆகும் பேறு பெற்றார்.

முக்கண் இறைவனுக்கு முன்னடியார் தாள்பணியும்.      தக்கதொரு கொள்கையின் தன்மையிலா- மிக்கபுகழ்.  ஆரூரர்,ஆட்கொண்ட அண்ணல், புறகெனும்சொல்.      சீரார் தொகைதந்த தே!

    

 விளக்கம்:                   

சிவனடியாரை வணங்கிய பின்னரே சிவனை வணங்க வேண்டும் என்ற கொள்கையை  அறியாத    சுந்தரரையும், அவரை ஆட்கொண்ட இறைவனையும் “புறகு” (அடியவர்க்குப் புறம்பானவர்கள்) என்று கூறிய சொல் சிறப்பு மிக்க “திருத்தொண்டத் தொகை” என்ற நூலைத் தந்தது.                         

                             *****

(தொடரும்)