
- ஆவரணா- திரை
ஒரு கதைசொல்லி ஒரு குடும்பக் கதையைத் தன் எழுத்தின் மூலம் அருமையாகச் சித்தரிக்கலாம். அது அக்கதாசிரியரின் எழுத்தின் வலிமை, சொல்லின் அற்புதம். ஆனால், ஒரு பெரும் சமுதாயத்தை, நாட்டினைப் பிடித்து ஆட்டும், பாதிக்கும் ஒரு விஷயத்தைக் கதைவடிவிலாக்கி, ஒரு நாவலாக்கி, நம்மைச் சிந்திக்க, பிரமிக்க வைப்பன சில புத்தகங்களே (முற்றிலும் என் கருத்து). அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைப்பற்றி அதை எழுதிய பேரறிஞரைப் பற்றி நம் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்ததன் விளைவே, அவர் அதனைப்பற்றி எழுதுமாறு என்னைத் தூண்டி நான் எழுதும் இந்தக் கட்டுரை. இதை எழுதுவதற்காகவே இந்தப் புத்தகத்தை இரண்டாம் முறையாகக் கீழே வைக்க மனமின்றிப் படித்தேன்.
எழுத்தாளர்- எஸ் எல் பைரப்பா- மூலம்- கன்னடம்
தமிழ் மொழியாக்கம்- ஜெயா வெங்கட்ராமன்
புத்தகத்தின் மூலப்பெயர்- ஆவரணா;
தமிழ்ப்பெயர்- திரை.
இது கதைச் சுருக்கமல்ல. கதாசிரியரின் திறமையை, உத்திகளை, கதைப்பொருளில் அவருக்கிருக்கும் பற்றை, கருத்துக்களை, அவரின் ஆழ்ந்த அறிவாற்றலை, ஆய்வை உணர்ந்த பிரமிப்பால் விளைந்த ஒரு மதிப்புரை எனலாமா? கட்டுரை என வெறுமனே சொல்ல என் மனது இடம் கொடுக்கவில்லை! இரண்டாம் முறை படித்தபோது எழுதியவர் என் மதிப்பில் எங்கோ ஓங்கி உயர்ந்து வாமனன் வானளாவ நின்றதுபோல நிற்கிறார்.
ஜெயா வெங்கடராமனைப் பற்றிக் கூறாமல் இருக்க இயலாது. தமிழ், கன்னடம் இரண்டிலும் பாண்டித்திியம் வாய்ந்த தமிழர். எத்தனையோ நூல்களையும் எழுதியுள்ளார்; எழுதியும் வருகிறார். அவரது மொழியாக்கம் இல்லாவிடின் பைரப்பா எனும் கன்னட இலக்கிய உலகின் மிக முக்கியமான ஒரு ஜாம்பவானைப் பற்றி நான் அறிந்துகொண்டிருக்கவே இயலாது.
2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நாவல் 30 தடவை மறுபதிப்புகள் கண்டுள்ளதாம். இந்நாவலின் உண்மைத்தன்மையே அதற்குக் காரணமாகும்.
இந்த நாவல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆழமாக ஆராய்ச்சி செய்து சரியான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினம் இது. மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம், அட்டூழியங்கள், அரசியல்வாதிகளின் கள்ளத்தனம் போன்ற அனைத்து உண்மைகளையும் மிக ஆழமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த சதாவதானி கணேஷ் என்பவர் பைரப்பாவைப் பற்றிக் கூறும்போது அவர் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படாதவர், எதைப்பற்றி எழுதினாலும் ஆழ்ந்த ஆய்வின் பின்பே தீவிரமாக எழுதும் வன்மை படைத்தவர் என்கிறார். இந்த நாவல் வெளிவந்தபோது கன்னட இலக்கிய உலகில் ஒரு பெரிய புரட்சியே ஏற்பட்டதாம்.
நாவலாசிரியர் பைரப்பா அவர்களைப்பற்றி: இளம்வயதில் வாழ்வில் பல துயரங்களை அனுபவித்துப் போராடி முன்னுக்கு வந்தவர். 27ம் வயதில் மனோதத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பின் பி. எச்.டி. பட்டமும் பெற்றார். ஏராளமான இலக்கிய விருதுகளையும் பட்டங்களையும் பெற்ற இவருக்கு ஞானபீட விருது இன்றுவரை கிடைக்கவில்லை என்பது வருந்துதற்குரிய விஷயம்.
ஜெயா வெங்கடராமன் கூறுகிறார்: ‘இந்த நாவலை இரண்டாவது முறை படித்தால்தான் இதன் ஆழத்தை உணர இயலும். இது சமூகப் பின்னணியில் எழுதப்பட்ட சரித்திர நாவல். சமூக நாவலுக்குள் ஒரு சரித்திர நாவல் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
கதாநாயகியான லக்ஷ்மி எனும் ரஸியா, அவளுடைய கணவன் அமீர், பேராசிரியர் சாஸ்திரி, இன்னும் ஒரு சிலர் – இவர்களைச் சுற்றியே நாவல் சுழல்கிறது. லக்ஷ்மியும் அமீரும் திரைத்துறை எனும் ஒரே படிப்பைப் படித்து அத்தொழிலில் இருப்பதால் காதல்வயப்பட்டுத் திருமணமும் செய்து கொண்டவர்கள். லக்ஷ்மி தன் பெயரை ரஸியா என மாற்றிக் கொள்கிறாள். இவர்களிடையே அவ்வப்போது மதமும் அதன் நெறிமுறைகளும் குறுக்கிட்டு அலைக்கழிக்கின்றன. லக்ஷ்மியின் தந்தை அவள் அமீரைத் திருமணம் செய்து கொண்டபின்பு அவளுடனான தொடர்பையே நிறுத்தி விடுகிறார். இந்த லக்ஷ்மி எனும் ரஸியா தனது தந்தை இறந்தபின், அவர் சேகரித்து வைத்திருந்த சரித்திரக் குறிப்புகள், ஆவணப் புத்தகங்களை சில ஆண்டுகள் ஆழ்ந்து படித்து, பின்பு அவற்றின் சரித்திரப் பின்னணியில் ஒரு நாவல் எழுதுகிறாள். அதன் விளைவுகள் என்ன என்று கதையில் படிக்கலாம். நான் கதைச் சுருக்கம் தரப் போவதில்லை. ஏனெனில் படிப்பவர்களின் ஆர்வத்திற்கு அவை தடையாக இருக்குமல்லவா?
ஒன்றை நிச்சயமாகக் கூறுவேன். இது ஆரம்பித்தால் கீழே வைக்க இயலாதபடி கதையோட்டம் உள்ள புத்தகம்!! என்னைத் திரு. பைரப்பாவின் தீவிர ரசிகையாக்கிய அற்புதமான நாவல். தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்ட திரு பைரப்பாவின் புதினங்கள் அனைத்தையும் வாங்கி ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டுள்ளேன். இந்த நாவலில் உள்ள சில குறிப்புகளையும், சிந்தனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
தன்னுடைய முன்னுரையில் பைரப்பா ‘ஆவரணம்’ எனும் சொல்லின் பொருளை அழகாக பல தத்துவ, வேதாந்த நூல்களின் துணைகொண்டு விளக்குகிறார். ‘சத்தியத்தை மறைக்கும் மாயையின் வேலை ஆவரணம் என்று சொல்லப்படுகிறது.’ அதுவே சுருக்கமாக மாயை! ‘சம்வ்ருதி’ என்பது இல்லாமல் இருக்கும் பொருளை இருப்பது என்று சொல்லி, இருப்பதை மூடிவைக்கும்.’ நாவல் முழுமையும் இந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதனால் ஆசிரியரின் திறமை, புலமை என்னை ஒரு பேரலை போல அடித்துக் கொண்டு போனது; பிரமிக்க வைத்தது.
‘சரித்திரத்தின் உண்மைகளைப்பற்றி ஒரு எழுத்தாளர் எழுதப் புகும்போது அதன் முழுப்பொறுப்பும் அவருடையதாகிறது,’ என்கிறார். சத்தியமான இந்த வார்த்தைகள் இந்த மேதையைக் கைகூப்பி வணங்க வைக்கின்றன. முஸ்லிம் நண்பர்களுடன், அவர்கள் குடும்பங்களுடன் தங்கியிருந்து அவர்களுடைய ஆசார விசாரங்களையும் நமாஸ் செய்யும் முறைமையையும் தென், வட இந்தியாவில் இவ்வாசாரங்களில் காணும் சில வித்தியாசங்களையும் கண்டும் கேட்டும் அறிந்து கொண்டவர், பல புத்தகங்களைப் படித்தும், பற்பல அறிஞர்களுடன் உரையாடிக் கருத்துத் தெளிவு பெற்றும், பாடுபட்டு உழைத்து, இந்த நூலை எழுதியுள்ளார். ஆசிரியரின் முயற்சியும் அயரா உழைப்பும் (ஏனெனில் இவர் எழுதும் அத்தனை நூல்களுக்குமே இவர் இவ்வண்ணமே உழைப்பவராம்) மேலும் வியப்பூட்டுகின்றன.
காதல்மணம் புரிந்து கொண்ட கணவன்- மனைவி ஜோடியான அமீர் – லக்ஷ்மி (ரஸியா) பற்றியதே கதை. கதையின் ஓட்டத்தை மேலே சிறிது கோடி காட்டியுள்ளேன். இதில் ஆச்சரியமான அழகான பிரமிப்பான விஷயம், லக்ஷ்மியின் தந்தை சேர்த்து வைத்த புத்தகங்கள் என்று நாவலின் முடிவில் ஒரு பதினைந்து பக்கங்களுக்கு நூல்களின் பட்டியலொன்றை இணைத்துள்ளார். திரு. பைரப்பாவின் ஆய்வேயன்றிப் பின் அது என்ன? வியப்பின் எல்லைக்கே சென்று விடுகிறோம். பாடுபட்டு எழுதிய புதினம்.
சில விவரிப்புகள் படிப்பதனை நிறுத்திச் சிலபோது நம்மைச் சிந்திக்க வைக்கின்றன: எடுத்துக்காட்டாக ஒன்று: லக்ஷ்மி தன் தந்தையின் குறிப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு வியாசபீடத்தின் எதிரில் உட்கார்ந்தாள். ‘சரித்திரத்திற்கு ஒரு குறிக்கோள் இருக்கிறதா இல்லையா என்பது கேவலம் தத்துவ சாஸ்திரத்திற்கு சம்பந்தப்பட்ட பகுத்தறிவுடன் Logic உடன் படிக்கும் பிரச்சினை. ஆனால் சரித்திரத்தைப் படிப்பதற்குமுன் சத்தியத்தைக் கண்டு பிடிக்கும் ஒரு தெளிவான எண்ணம் இருக்கிறது.’ (யாராவது இந்தக் கட்டுரையைப் படித்தபின்பு இந்த நூலை வாங்கிப் படித்தீர்களானால் ஆசிரியர் சொல்ல வருவது தெள்ளென விளங்கும்.)
நமக்குப் போதிக்கப்பட்டு நாம் உண்மையென நம்பிக்கொண்டிருக்கும் நமது சரித்திரத்தை ஆதாரங்களுடன் தகர்த்தெறிகிறது இதிலுள்ள கதைக்குள் ஒரு கதை. ராஜபுதன அரசர்களைத் தோற்கடித்துச் சிறைபிடித்து எவ்வாறு நபும்சகர்களாக்கி உபயோகப் படுத்திக் கொண்டனர் என்றும், ஷாஜஹானின் மதத்தை வலுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும், ஔரங்கசீப்பின் அடாவடித்தனங்கள் பற்றியும் படிக்கும்போது பகீரென்கிறது. அறிவுஜீவிகள் எனப்படும் சில பேராசிரியர்கள் எவ்வாறு சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு பிழைக்கிறார்கள் என விளக்குகிறார். கதைப்போக்கிலேயே கதைமாந்தரின் வாயிலாகவே ஞானவாபியின் சரித்திரத்தை விளக்குகிறார்.
ஓரிடத்தில் ஒரு பாத்திரத்தின் வாய்மொழியாக, ‘தத்துவத்தின் எந்த மட்டத்தில் இருக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல கடவுளையும் சிருஷ்டிக்கிறோம்,’ என்கிறார். எத்தகைய பேருண்மை. யாக்ஞவல்யரின் ஸ்மிருதியிலிருந்தும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்தும் பகுதிகளை கதைக்கு விளக்கங்களாக விவரிப்பது வாசிப்பவனை/ளை பிரமிக்க வைக்கவில்லையெனில் அதுதான் உலகமகா பேராச்சரியம்!
பாடுபட்டு ஆராய்ச்சிசெய்து லக்ஷ்மி எழுதிய புதினத்தின் கதி என்னவாயிற்று, இன்னும் இப்புதினம் கூறவருவதென்ன என்றெல்லாம் அறிந்து கொள்ள இதனை முழுமையாக வாசிக்க வேண்டும். கதைச் சுருக்கத்திற்கு உட்படுத்த முடியாத நாவல் இது.
வாசிக்க விரும்புவோருக்கு: புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் இந்தப் புத்தகம் (திரை) கிடைக்கிறது.
வாங்கி வாசிக்கலாம்; சிந்திக்கலாம்; பிரமிக்கலாம்!
பின்னொரு நூல் பற்றிய கருத்துக்களுடன் சந்திப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாசிக்கத் தூண்டும் விமர்சனம்
LikeLike
பிறமொழிப் பெருநூலைப் பிறங்கிடும்
சிறந்த மதிப்புரை.
LikeLike