கடைசி வரை பா.ஜனதா தான்!- கங்கை அமரன் | Tamil News Gangai Amaran Until the  end, it is the BJP!
அமர்சிங என்ற இயற்பெயர் இவருக்கு. பெயரிலே ‘sing’ இருப்பதால், இசையில், பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் போலும்.

பதினாறு வயதினிலே படத்தில் இவரின் செந்தூரப் பூவே பாடலுக்கு, ஜனாதிபதி விருது கிடைத்தது. பாராட்டு விழாவில், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் இந்தப் பாடலை நான் விரும்பிக் கேட்கிறேன் என்றார். கண்ணதாசன, இது போல பாடல்கள் எழுது என்று பாராட்டினாராம்.

● கங்கையின் பாடல்கள் தான் எத்தனை எத்தனை ?
● சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’
● சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’
● என் உள்ளம் எங்கோ

● பூமாலையே பூச்சூடவா
● அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’
● என் இனிய பொன்நிலாவே’
● பூ வண்ணம் போல நெஞ்சம்

● மாசி மாசம் ஆளான பொண்ணு
● தூளியிலே ஆட வந்த வானத்து
● இந்த மான் உன் சொந்த மான்
● மாமா உன் பொண்ணைக் கொடு
● உன் பார்வையில் ஓராயிரம்

● பூவை எடுத்து ஒரு நாரை
● மண்ணில் இந்தக் காதல்
● பூமாலையே பூச் ட்ட வா
● நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
● ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்

இப்படித்தான் என்றில்லாமல் எப்படியும் எழுதினார். ‘அட இவரா இந்தப் பாட்டு எழுதியது’ என்று வியக்கிற – பாடலாசிரியர் கங்கை அமரன், கண்ணதாசன், வாலி இவர்கள் வழியில் பல நல்ல பாடல்கள் தந்தவர். ஜனரஞ்சகமான இது போன்ற பாடல்களும் தந்தவர் –

● ஓரம் போ ருக்குமணி வண்டி வருது
● வச்சுக்கவா ஒன்னை எந்தன் நெஞ்சுக்குள்ளே
● அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
● மாமா ஒன் பொண்ணைக் கொடு
● வாடி என் கப்பக் கிழங்கே
அண்ணே அண்ணே பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவ, அன்றைய முதல்வர் எம் ஜி ஆர், கங்கை அமரன் – இளையராஜா இருவரை அழைத்து செல்லமாக கடிந்து கொண்டார் என்று அன்று செய்திகள் வந்தன.

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
அவங்க அவங்க இஷ்டம் போல
இப்போ அதிகாரம் பண்ணுறாங்க

ஆளுக்குஆளு நாட்டாமை
எங்களை ஆளு வச்சி அடிக்குறாங்க,
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க
சொல்லுறத நான் சொல்லிபுட்டேன் நான்
செய்யுறதா செஞ்சிபுடுங்க

இந்த வரிகள் தான் காரணம்.

இவர், முதலில் பாட்டு எழுதினார். பிறகு இசையமைத்தார். அதையடுத்து பாடவும் செய்தார். பின்னர், படத்தை இயக்கினார். இப்படி பன்முகங்கள் கொண்ட கலைஞனாகத் திகழ்பவர். கங்கை அமரன்.
ஒரேசமயத்தில் இரண்டு வண்டிகளில் பயணிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பல வடிவங்களில், பல வண்டிகளில் பயணித்தது… தமிழ் சினிமாவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால், அதே தான் அவருக்கு பலவீனமாகவும் போனது என்று அவரே பல நேரங்களில் கூறி இருக்கிறார்.

அமர்சிங் என்று அழைக்கப்பட்ட கங்கை அமரன் , அருகே இளையராஜா  என்ற பெரிய மரம் இருந்ததினால் பெரிதாக, ராஜேந்திர சோழன் போன்று தெரியாமல் போனார் எனலாம்.

16 வயதினிலே’ மூலம் பாரதிராஜா கங்கை அமரனுக்குப் பாட்டெழுத வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பாட்டு விருதுக்குரிய பாடலாக அமைந்தது. பாடகிக்கு விருது கிடைத்தது. அது… ‘செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே’. அப்போதிருந்தே கங்கை அமரனுக்கு குவியத் தொடங்கின பாராட்டுப் பூக்கள்.
மீண்டும் இன்னொரு வாய்ப்பு. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’. அந்த ரயிலில் , பூவை எடுத்துக்கொண்டு ஏறினார் கங்கை அமரன். போனமுறை ‘செந்தூரப்பூவே’. இந்த முறை ‘பூவரசம்பூ பூத்தாச்சு’. இந்த இரண்டு பாடல்களும் இன்று வரைக்கும் ஹிட்டான பாடல்கள் வரிசையில்!
அதேவேளையில், ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ என்று இசையமைக்க ஆரம்பித்தார். முக்கியமாக, பாக்யராஜின் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ இன்றைக்கும் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்கும் கூட்டம் உண்டு.

பிறகு ‘மெளன கீதங்கள்’ படத்தில் ’மூக்குத்திப்பூ’வுடன் வந்தார். இப்படியாக தொடர்ந்து பாட்டெழுதிக் கொண்டும் படங்களுக்கு இசையமைத்தும் கொண்டும் இருந்தார். நடுநடுவே பாடவும் செய்தார்.
‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜுக்கு குரல் கொடுத்தது இவர்தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

இவர் இயக்கிய ‘கோழி கூவுது’ , கரகாட்டக்காரன், பல ஊர்களில் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடியது. கங்கை அமரன் தான் திரைக்கதை, வசனம், இயக்கம்.

கங்கை அமரன் கவித்துவமாக பல நேரங்களில் பல பாடல்களைப் புனைந்திருக்கிறார். கண்ணதாசன், வாலி, வைரமுத்து மூவரும் கலந்த கலவையாக அவர் காட்சி தருகிறார்.

இந்தப் பாடல் ஒரு உதாரணம் –

பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.
பூங்கதவே தாள் திறவாய்

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்.

மரபை போற்றும் பாங்கிலும், “மாலை சூடும் அந்நேரம் மங்கல வாழ்த்தொலி கீதம்”
என்ற இயல்பான வரியிலும் கண்ணதாசன் தெரிகிறார்.

பூவாய், பாவாய் என்ற சந்தங்களிலும்,
“பொன்னாகம் பூவாடை
ஆடும் தோரணம் எங்கெங்கும்”

என்ற வரிகளில் வாலியும், புதுக்கவிதை வடிவில் ஒலிக்கும் மற்ற இடங்களில் வைரமுத்துவும் நினைவுக்கு வருகிறார்கள்.

திரு எஸ் பி பி சொன்னது போல் அவர் ஏதாவது ஒரு பணியை மட்டும் மேற்கொண்டிருந்தால், அவரது அண்ணனுக்கு இணையாகப் பேசப்பட்டிருப்பார்.

இன்னொரு பாடல் –

ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது
உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி

பெண் பூவே
வாய் பேசு பூங்காற்றாய்
நீ வீசு காதல் கீதம் நீ பாடு
கன்னிப் பூவும்
உன்னை பின்னிக் கொள்ள
வேண்டும்
முத்தம் போடும்
போது எண்ணிக் கொள்ள
வேண்டும்

முத்தங்கள்
சங்கீதம் பாடாதோ
ஓ உன் கூந்தல்
பாயொன்று போடாதோ

கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன்
வேரோடு

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தில் வரும் ஒரு அழகுப் பாடல். இசையும் அழகு. (ஜேசுதாஸ் – ஜானகி குரலில், கங்கை அமரன் இசையில், அவரின் வரிகள் , பாதை மாறிய பெண்ணின் குடும்ப வாழ்வை மிக இயல்பாகக் கூறுவார்.

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரைக் கொண்டது
தெய்வம் அதை சூடிக் கொண்டது
மாலையென தோளில் கொண்டது

பூவில் உள்ள தேனைக்கண்டு
ஒரு சோலை வண்டு அதை திருடிச்சென்றது
தலைவன் ஒரு கோயிலில்
அவன் தேவியோ தெரு வாசலில்

மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கதில் சோகம் வந்தது
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின்வழி வாழ்க்கை செல்வது, என்று முடிப்பார்.

புதிய வார்ப்புகள் படத்தில், இவரின் பாடல் கவித்துவம் நிறைந்தது.

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது

சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெண் மனம் பூவிலும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது

மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனி கனவுகள் தொடர்ந்திட
தம்தன நம்தன தாளம் வரும்.

அதுபோல

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்…
அழகு நெத்தியிலே…
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்…
சிரிக்கும் பந்தலிலே…
முழு சந்திரன் வந்தது போல்…
ஒரு சுந்தரி வந்ததென்ன…
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்…
பல மாயங்கள் தந்ததென்ன…
இது பூவோ பூந்தேனோ
இப்படிப் பல பாடல்கள் தந்தவர்.

1970 களில் கங்கை அமரன் மனதில் நினைத்தது – அவர் அண்ணனிடம் கூறியது – நான் கண்ணதாசன் போலவும், நீ மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போலவும் வரவேண்டும். நமக்கு வரும் படங்களில் இப்படித் தான் நம் பெயர் வர வேண்டும் என்றாராம். ஆனால், முழுவதும் அப்படி வரவில்லை என்றாலும, கங்கை அமரன் பல நல்ல பாடல்களைத் தந்ததுடன், பல பாடல்களுக்கு நல்ல இசையையும் அளித்திருக்கிறார் என்பதில் இரு வேறு கருத்துகள இல்லை.

அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி