முதல் 3  பரிசுக் கதைகளைத் தேந்தெடுத்த பிரபல  எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் கருத்து:

 

வாஸந்தி - சிறுகதைகள்

வணக்கம் . என்னுடைய கணிப்பின் படி சிறுகதைகளின்  தரத்தை வரிசைப்படி எழுதியிருக்கிறேன்.
பிரபாராஜன் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டிற்கான ‘பெண்களை மையப்படுத்தும் சிறுகதைகள் போட்டி’க்கு வந்த கதைகளில் முதல் 3 கதைகளைத்தேர்ந்தெடுக்க என்னைக்கேட்டுக்கொண்டதற்கு மிக்க நன்றி. அதை மிகக் கௌரவமானதாகக் கருதுகிறேன். பெண்களை மைய்யப்படுத்தி எழுதப்பட்ட கதைகள் அதற்கு ஏற்ற வகையில்

பெண்களின் இயல்பையும் ,  நேர்மையையும் ஆதங்கங்களையும் கனவுகளையும்  எனக்கு அனுப்பப்பட்டிருக்கும்  13 கதைகளிலும் எளிய நடையில், பல பேச்சு மொழியிலும்  அழகாக எழுத்தாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

பரிசளிக்க தரத்தை வகைப்படுத்தவேண்டி  மூன்று சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

 நான் மிகவும் ரசித்த கதை வேலம்மா. அதற்கே  நான் அளிக்கும் முதல்  இடம். அரசியல் தளத்தில் தேர்தல் சமயத்தில் கட்சிகள் பணத்தைக் கொடுத்து எப்படிப் பெண்களை உபயோகித்துக்கொள்கிறார்கள் என்பதை மிக அழகாக யதார்த்த பாணியில் கதை நகற்கிறது. பெண்கள் ஏமாளிகள் இல்லை. எல்லாரிடமும் பணம் வாங்கிக்கொள்கிறார்கள். எந்தக் கட்சி என்பது முக்கியமில்லை என்பதன் குரூர யதார்த்தம் கதை நகர்த்தலில் எளிமையாக வெளிப்படுகிறது. அதோடு நாட்டின் வறுமை, ஜனநாயகம் என்ற பித்தலாட்டம் எல்லாம் வெளிப்படுகின்றன. கதையின் க்ளைமாக்ஸ் எதிர்பாராதது. அதுவும் யதார்த்தம். நல்ல கதையின் அடையாளம்.
2. அழுக்கு மூக்குத்தி : ஒரு தாயின் மனத்தை , அவளது துக்கத்திலும் அவள் மனத்தில் தோன்றும் மனிதநேயத்தை , தியாக உணர்வை எளிய நடையில் சொல்லும் கதை. மூளை செயலிழந்த மகனின் உருப்பை தியானம் செய்து , செய்த தானத்துக்குக்காசு வாங்க மாட்டேன் என்ற ஏழைத்  தாயின் கதை. நெகிழவைக்கிறது. எழுத்தாளருக்கு எனது பாராட்டுக்கள்.
3.  சூடா ஒரு காப்பி

    மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கதை. மூளை வளர்ச்சி குன்றிய பெண்ணை வளர்த்து ஆளாக்கி அவளை யார் பார்த்துக்கொள்வார்கள் எனக்குப்பின்னால் என்று கவலைப்படும் தாய் , அவள் இறந்த பிறகு நிம்மதி அடைவதாக துக்கத்துடன் பின்னோக்கிச் சென்று  சொல்வது மிக இயல்பாக நயம்படக் கதை விரிகிறது. அழகாக முடிகிறது.

சிறுகதை என்பது  படைப்பிலக்கியத்தில் வசீகரமான  கட்டுக்கோப்பு. இரண்டு வரிகளிலும் சொல்லல்லாம் . 2000 சொற்களிலும் , 20 பக்கங்களிலும் வடிவமைக்கலாம். கதை அம்சம் இருந்தால் போதாது. வடிவமும், கட்டமைப்பும், அழகியலும் பார்வையின் நுட்பமும்  சேரும்போது படிப்பவரின் மனத்தை ஆட்கொள்கிறது.

எனக்கு இந்தக்கதைகளைப்படிக்க நேர்ந்தது நல்ல அனுபவம். இப்போது நிறைய பேர் எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். குவிகம் போன்ற அமைப்புகள் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு போட்டி வைத்து, கணிசமான தொகையையும் பரிசாக அளிப்பது
மிகவும் பாராட்டப்படவேண்டியது.
இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பரிசு பெறாதவர்கள் சோர்ந்து போகாமல் விடாமல் எழுதவேண்டும். உங்களுக்கு மொழி வளம் இருக்கிறது. எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
எனக்கு இதில் பங்கு கொள்ள வாய்ப்பளித்ததற்கு   குவிகம்/ பிரபாராஜன் அறக்கட்டளைக்கு மிக்க நன்றி.
வணக்கம், வாஸந்தி.
பிரபா ராஜன் அறக்கட்டளை – குவிகம் பெண்ணிய சிறுகதைப் போட்டி

தேந்தெடுக்கப் பட்டவர்கள் :

பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தவர் : எழுத்தாளர் வாஸந்தி
நடுவர்கள் : லதா ரகுநாதன், பானுமதி , வைதேகி

1. நந்து சுந்து – வேலம்மா   (முதல் பரிசு)  Rs, 5000 
2. திருமதி.நேசா – அழுக்கு மூக்குத்தி (இரண்டாம் பரிசு) Rs 3000
.3. ஜி ஏ பிரபா – சூடா ஒரு கப் காபி ( மூன்றாம் பரிசு) Rs 2000

 

Rs 1000 பெறும் மற்ற கதைகள் 

4. ஜே. செல்லம் ஜெரினா –  வாழ்வின் வரமாய்….!
5,. ஜெரா – எப்படியும் சந்திப்போம்”!
6. எல் எல் நாணு  – அடி
7 . ஜெயந்தி ரமணி – அடிமாடு
8. . ராணி கணேஷ் – கல்யாண சாவு
9. . முகில் செல்வராஜ் – மலர்வாய் மலரே…
10. புனிதா பார்த்திபன் – ஒற்றைத் தூண்
11. க.இராஜசேகரன் – வேலம்மா தொழிலுக்குப் புதுசு
12. ஸ்ரீவித்யா பசுபதி – மாயவலை
13. கூடலூர் அன்வர்ஷாஜி – திராட்சைக் கொடி படராத மினாரங்கள்

 

நிகழ்வு பற்றிய விமர்சனம் : 

அறக்கட்டளை எனும் அகத்தூண்டல்! – சிறகு இரவி

இன்றைய நிகழ்வு இரு பகுதிகள் கொண்டது. முதலாவது இரு சாதனைப் பெண்மணிகளுக்கு விருதும் பட்டயமும். ஒருவர் பத்மா மணி ( அகவை 91 ) இன்னொருவர் பத்மா ராஜன் ( அகவை 84 ). இருவருக்கும் பெயரில் பத்மம் இருப்பதால், இதை பத்ம விருதுகள் என்று கூட அழைக்கலாம்.

இரண்டாம பகுதி பிரபா ராஜன் அறக்கட்டளை நடத்திய சிறுகதைப் போட்டியில், குவிகம் இலக்கிய வாசல் முனைப்பு காட்டி தேர்ந்தெடுத்த, சிறந்த கதைகள் பதிமூன்றுக்கு பாராட்டு. முதல் மூன்று கதைகளுக்கு பரிசு. ஒரே ஒரு நிபந்தனை: கதை பெண் முன்னேற்றம் குறித்ததாக இருக்க வேண்டும். எழுதியவர்களில் அதிக விழுக்காடு பெண்கள். பார்வையாளர்களிலும் அப்படியே!
மேடையில் ,மணிமேகலை பதிப்பக செம்மல் ரவி தமிழ்வாணன், மகளிர் படைத்தலைவி கிரிஜா ராகவன், புரவலர் ஆர் வி ராஜன், சிறப்பு சேர்க்க மாசற்ற மரு. முருகுசுந்தரம். அளவாகத் தைத்த சட்டை போல அனைவரின் பேச்சும் அமைந்தது சிறப்பு. ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்ய, திருமதி கிரிஜா சற்று கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டாற்போல் தோன்றினாலும் அது அவசியும் என்பதை உணர முடிந்தது.
பலரும் பரவசப்பட நடந்த விழாவின் நினைவுகள் மனதிலும் மாலை சாப்பிட்டு உருளை போண்டா(கள்) வயிற்றிலும் உருண்டன.
மீ விஸ்வநாதன் 

இன்று (10.02.2024) மாலை சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகரா ஹாலில் “பிரபா ராஜன்” 11ஆம் ஆண்டு நினைவுக் கூட்டம் & குவிகம் பதிப்பகத்தின் 200ஆவது நூல் வெளியீடு இறைவணக்கத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.எழுத்தாளரும், பிரபா ராஜன் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு. ராஜன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான எழுத்தாள மருத்துவர் திரு. முருகு சுந்தரம் குவிகத்தின் 200ஆவது நூலை வெளியிட்டார். முதல் பிரதியை மணிமேகலைப் பிரசுரம் உரிமையாளர் திரு. ரவி தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார். நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிமூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன.

இதில் “வேலம்மா” என்ற சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ. 5000 ஆசிரியர் நந்து சுந்துவுக்கும், இரண்டாவது பரிசு ரூ. 3000″அழுக்கு மூக்குத்தி” சிறுகதை ஆசிரியர் நேசாவுக்கும், மூன்றாவது பரிசு ரூ. 2000 “சூடா ஒருகப் காப்பி” சிறுகதை ஆசிரியர் ஜி.ஏ.பிரபாவுக்கும் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் தொண்ணூறு வயதான திருமதி பத்மா ராஜன், எண்பது வயதான திருமதி பத்மா மணி ஆகியோருக்கு “PRTF Role Model Awards” வழங்கப் பட்டது.

வாழ்க்கையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டு சமுதாயத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்ற இந்த இரண்டு பெண்மணிகளின் திறமையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி கிரிஜா ராகவன் (ஆசிரியர், லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ்) பட்டியலிட்டபோது சபையே கரகோஷம் செய்து மகிழ்ந்தது.மருத்துவர் முருகு சுந்தரம் அவர்களின் உரையைக் கேட்டவர்ககளுக்கு நரையே வராது; நரை வந்தவர்களுக்கு மனத்தில் குறையே வராது. ஜிகினா வார்த்தைகள் இல்லாத எளிமையான அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.

குவிகம் அமைப்பாளர்களில் ஒருவரான திரு. கிருபானந்தன் குவிகத்தின் தொடக்க காலம் முதல் இன்று வரையான வளர்ச்சிக்குத் துணையான எழுத்தாளர்கள், வாசகர்களின் ஒத்துழைப்பை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

நிறைவாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி கிரிஜா ராகவன் நன்றியுரை கூற,

“வாழியச் செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தே மாதரம், வந்தே மாதரம் “

என்று அனைவரும் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அரங்கத்தில் ” வேலம்மா” என்ற சிறுகதைத் தொகுப்பு ரூ.100 க்குத் தரப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவர் எஸ். முருகுசுந்தரம் எழுதிய “டாக்டர் வள்ளுவர்” என்ற நூலை மருத்துவரே வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஜாங்கிரி, போண்டா, காப்பியும் வழங்கப் பட்டது.

இந்த நிகழ்வின் காணொளி :