பல வருடக் கனவு..

Baby goat fence hi-res stock photography and images - Alamy

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும். அது இப்போதுதான் பலித்தது.

கொஞ்சம் தொலைவுதான்.. சோழிங்கநல்லூரின் அந்தப்புரத்தில் பல சந்துகள் கடந்து அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஓர் அத்வானத்தில் நிலம் வாங்கத்தான் என் பொருளாதார நிலமை ஒத்துழைத்தது. அதில் எண்ணூறு சதுரடியில் வீடு. வீட்டைச் சுற்றி நான்கு பக்கங்களும் முள் வேலி.

தனி வீடு வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதற்கு முக்கிய காரணமே சிறுவயதிலிருந்தே செடிகள் மீதான எனக்கிருக்கும் காதல். அதற்கு முக்கிய காரணம் என் பாட்டி சிவகாமுதான். பள்ளி விடுமுறை நாட்களில் நான் கிராமத்துக்குப் போகும்போதெல்லாம் பாட்டி செடிகளுடன் பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்,

“நீ பயாலஜி பாடத்துல படிப்பே பாரு.. செடிகளுக்கும் உசிர் உண்டு. மனுஷங்க கூட பேசற மாதிரி செடிங்ககூடவும் பேசணும். அப்பத்தான் அதுங்களுக்கும் நம்ம கூட ஒரு பிணைப்பு ஏற்பட்டு இன்னும் நல்லா வளரும்”

பாட்டி ஒவ்வொரு செடியுடன் பேசும் அழகே தனி. அதுவும் ரோஜா செடியுடன் ஒரு மாதிரி பேசுவாள். முல்லை செடியுடன் வேறு மாதிரி பேசுவாள். அவரைக் கொடியுடன் குரலே மாறிவிடும். இப்போதெல்லாம் சொல்கிறார்களே வாய்ஸ் மாடுலேஷன்.. பாட்டியின் குரலில் அனாயாசமாக அது வெளிப்படும்.

செடிகளின் மீது பாட்டிக்கு இருக்கும் காதலைப் பார்த்துப் பார்த்து என் மனதிலும் அது பதிந்து விட்டது. வீட்டுக்கு முன்னால் ஒரு தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் விஸ்வருபம் எடுத்து நின்றது.

”காணி நிலம் வேண்டும்” என்று பாரதி பராசக்தியை வேண்டியது போல் என் மனதும் வேண்டியது.

ஆனால் சென்னையில் நாங்கள் முதலில் குடியிருந்த வீட்டில் வாசல் படியை விட்டு இறங்கினால் தெரு. மற்ற மூன்று பக்கங்களிலும் ஒரு அங்குலம் இடைவெளி கூட இல்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் தீப்பெட்டியளவு வீடுகள். இதில் தோட்டத்தைப் பற்றி நினைக்க முடியுமா? சில வருடங்களுக்குப் பிறகு அப்பா வாங்கின பலமாடி குடியிருப்புக்கு மாறினோம். அங்கும் தோட்டம் அமைக்க வாய்ப்பே இருக்கவில்லை.

ஆனால் பத்திரிகையிலோ டிவியிலோ தோட்டத்தைப் பார்த்தால் உடனே மனம் ஏக்கத்துக்குத் தாவி விடும்.

இத்தனை வருடங்கள் காத்திருந்து.. எனக்கு திருமணமாகி.. மத்திய அரசு வேலையில் இருக்கும் என் சம்பளத்தையும் பேங்கில் பணிபுரியும் என் மனைவியின் சம்பளத்தையும் சேர்த்து பட்ஜெட் போட்டு இதோ இந்த தனி வீட்டைக் கட்டியாகிவிட்டது.

வீட்டுக்கு முன்னால் பதினஞ்சுக்கு பத்து இடத்தைக் காலியாக வைத்திருந்தேன்.

“ஏன் சார் இவ்வளவு இடத்தை வேஸ்ட் பண்ணறீங்க? உங்க பட்ஜெட்குள்ளயே இன்னொரு ரூமோ சிட்-அவுட்டோ எழுப்பிரலாமே”

நான் மறுத்துவிட்டேன்.

சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் இடது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் வந்தால் அங்கே ஒரு நர்சரி இருந்தது.

முதல் கட்டமாக துளசி, ரோஜா, எலுமிச்சை செடிகளுக்கான கன்றுகளை வாங்கிக்கொண்டேன்.

மறுநாள் சீக்கிரமே எழுந்து மம்முட்டியுடன் காரியத்தில் இறங்கினேன்.

ஒரு மணி நேரத்துக்குள் இடம் பார்த்து பள்ளம் தோண்டி மூன்று கன்றுகளையும் பிரதிஷ்டை செய்தாகிவிட்டது.

என் நீண்டநாள் கனவு..

திருப்தியுடன் பார்த்தேன்.

என்னுடைய திருப்தியைப் பார்த்து என் மனைவிக்கும் சந்தோஷம். உடனே மொபைலில் மூலக் கன்றுகளுடன் என்னை ஃபோட்டோ எடுத்தாள்.

அன்று முழுவதும் சந்தோஷமாக இருந்தது. மாலையில் வழக்கம்போல் மனைவியையும் அழைத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து திரும்பியவனுக்கு அதிர்ச்சி.

மூன்று கன்றுகளையும் காணும்..

சுற்று முற்றும் பார்த்தேன்.. சுவடே தெரியவில்லை.

நெருங்கிப்போய் பார்த்ததில் யாரோ பலமாக வேரோடு பிடுங்கியிருப்பது தெரிந்தது. யாராக இருக்கும்?

என் முகம் வாடியிருப்பதைக் கண்டு என் மனைவி..

“யாராவது பசங்க விளையாட்டுத்தனமா பண்ணியிருப்பாங்க.. விடுங்க.. நாளைக்கு வேற வாங்கி நட்டாப் போச்சு”

மறுநாளே மறுபடியும் மூன்று கன்றுகளை வாங்கி வந்து நட்டேன்..

ஆனால் மீண்டும் மாலையில் வரும்போது அவை காணாமல் போயிருந்தன..

என்னவென்று புரியாமல் கன்றுகள் நட்ட இடத்தையே வெரித்துக் கொண்டிருந்தேன்.

அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் வம்பு பேசும் ஆவலோடு..

“என்ன சார்..”

யாரிடமாவது சொல்ல மாட்டோமா என்ற ஆதங்கத்தில் கொட்டினேன்..

அவர் பொறுமையாக கேட்ட பிறகு..

“அதுவா?.. ஆடு சார்”

“ஆடா?”

“ஆமா சார்.. இந்த ஏரியாவுல உங்க வீடு இருக்கிற இந்த இடத்துல மட்டும் தான் பச்சைப் புல்லு இருக்கும். முன்னால இங்க சுத்தி ஒரு ரசாயன ஃபேக்டரி இருந்தது. ஜனங்க எதிர்க்கவே அதை இழுத்து மூடி கட்டிடத்தையே இடிச்சிட்டாங்க.. சுத்தி எல்லா இடத்துலயும் இன்னமும் சிமெண்டும் கான்க்ரீட்டும் கொஞ்சம் ரசாயனமும் இறைஞ்சு பூமி வரண்டுதான் இருக்கும். அதனால இங்க சுத்திட்டிருக்கிற எல்லா ஆடுகளும் உங்க இடத்துலதான் மேய வரும். வீடு கட்டும்போது கூடப் பார்த்திருப்பீங்களே.. அதே பழக்கத்துலதான் இன்னமும் இங்க மேஞ்சிட்டிருக்கு”

அட ஆமாம்.. வீடு கட்டுமானத்தின் போது பார்வையிட வந்தபோதெல்லாம் இங்கே சில ஆடுகள் மேய்வதைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

“”ஒண்ணுமில்லை சார்.. உங்க வேலியைக் கொஞ்சம் பலப் படுத்துங்க. கம்பிலாம் வேணாம். கொஞ்சம் கயிறு வாங்கி அதிக இண்டு விழாம கட்டிருங்க. அப்ப ஆடு உள்ள வர முடியாது. உங்க செடியும் தப்பிச்சுரும்”

உடனே செயலில் இறங்கினேன். கொஞ்சம் தடிமனான சணல் கயிறு வாங்கி வந்து எவ்வளவு நெருக்கமாகக் கட்ட முடியுமோ அவ்வளவு நெருக்கமாக நான்கு பக்க வேலியிலும் கட்டினேன். சுற்றிப் பார்த்ததில் திருப்தியாக இருந்தது.

மீண்டும் துளசி, ரோஜா, எலுமிச்சை கன்றுகள் நடப்பட்டன.

அலுவலகம் கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்தேன். வேலி திடகாத்திரமாகத்தான் இருந்தது.

நிம்மதியுடன் கிளம்பினேன்.

மாலையில் வந்து பார்த்தவனுக்கு மீண்டும் அதிர்ச்சி.

கன்றுகளைக் காணவில்லை.

சோதித்துப் பார்த்ததில் வேலியின் ஒரு மூலையில் சணல் கயிறு சின்னாபின்னமாகியிருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தேன்.

“இதப்பாருங்க.. இதெல்லாம் சரிப்பட்டு வராது. செலவோட செலவா வீட்டை சுத்தி காம்பௌண்ட் சுவர் எழுப்பிரலாம்.”

மனைவி சொன்னதும்..

“ஆனா.. அதுக்குப் பணம்..?” 

“எங்க பேங்க்குல தானே ஹவுசிங்-லோன் வாங்கியிருக்கோம். கூட கொஞ்சம் லோன்.. பிரச்சனையிருக்காது”

இஞ்சினியரைக் கூப்பிடவில்லை. அவர் செலவை இழுத்து விடுவார். மேஸ்த்ரியைக் கூப்பிட்டு வேலையை ஒப்படைத்தேன். பத்து நாட்களில் கனகச்சிதமாக காம்பௌண்ட் சுவர் எழும்பி சுண்ணாம்பு அடித்து தயாராகிவிட்டது.

ஒரு சின்ன பொந்து கூட இல்லாமல் பார்த்துக்கொண்டேன். வாசல் கேட்டிலும் டின் ஷீட் அடித்து மறைத்து விட்டேன்.

மீண்டும் மீண்டும் துளசி, ரோஜா, எலுமிச்சை கன்றுகளை வாங்குவதைப் பார்த்து அந்த நர்சரிகாரருக்கு சந்தேகம்..

“ஒருவேளை இவன் நம்மகிட்ட வாங்கி அதிக விலைக்கு வெளில விக்கறானோ?”

நான் விவரம் சொன்னவுடன்..

“எந்த ஏரியா?”

சொன்னேன்.

“அப்ப சரி.. ஆடுங்கதான்.. சுவரு கட்டிட்டீங்கல்ல? இனிமே தொல்லை இருக்காது”

இந்தமுறை துளசி, ரோஜா, எலுமிச்சையோடு ரொம்பவே துணிச்சலுடன் அரளி, சங்கு புஷ்பம், நந்தியாவட்டை ஆகிய கன்றுகளையும் வாங்கியதில் நர்சரிகாரருக்கு ரொம்பவே திருப்தி. வாழை, மாங்கன்று அடுத்த முறை வாங்குவதாகச் சொன்னவுடன் ரொம்பவே சந்தோஷமாகிவிட்டார்.

எல்லா கன்றுகளுமே தோட்டத்தில் சமர்த்தாக அமர்ந்து விட்டன. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அந்தப் பச்சைத் தளிர்கள் காற்றில் ஒய்யாரமாக ஆடுவதைப் பார்க்கவே பரவசமாக இருந்தது..

மறுநாள் விடுமுறை என்பதால் அன்று இரவு ஓடிடியில் “அயலான்” பார்த்துவிட்டு படுக்கப் போக இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. விளைவு மறுநாள் ஒன்பது மணிக்குத்தான் கண் விழித்தேன்.

நிதானமாக பல் விளக்கி, சூடான காப்பியை உறிஞ்சியபடி மொபைலில் வாட்ஸ்-ஏப்பை அலசிக் கொண்டிருக்கும்போது சட்டென்று கன்றுகளின் நினைவு வந்தது.

உடனே எழுந்து வாசலுக்கு வந்தேன்.

கன்றுகள் என்னைப் பார்த்து முகமலர்ந்து சிரித்தன.

“குட்மார்னிங்”

அருகில் சென்று மெதுவாகத் தடவிக் கொடுத்தேன்.

“என்ன செட்டில் ஆயிட்டீங்களா?”

பாட்டியின் ஞாபகத்தில் பாசத்தோடு கேட்டேன்.

“மே.. மே..”

மதிற்சுவருக்கு பின்னாலிருந்து ஆடுகளின் குரல்.

என் மனதில் வெற்றி மிதப்பு.. உதட்டில் ஆணவப் புன்னகை..

அலட்சியத்தோடு மதிற்சுவருக்கு மேல் எட்டிப் பார்த்தேன்.

ஆடுகளின் பசி கலந்த ஏக்கப் பார்வையை சந்திக்க முடியாமல் மனம் கனத்தது.