அழுக்கு மூக்குத்தி

( IF YOU HAVE TEARS SHED THEM NOW ! என்ன ஒரு அபாரமான கதை  எழுதிய நேசா அவர்களுக்கு  நெஞ்சார்ந்த வணக்கங்கள் – குவிகம் ஆசிரியர் )

Chennai - small Tea shop near hospital - old lady above 80 years - tea shop owner - another rich man - a few people drinking tea other

(திருமதி நேசா  அவர்கள் எழுதி இரண்டாம் பரிசு Rs 3000 பெற்ற கதை) 

தனக்கு எதிரே உட்கார்ந்து டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த பாட்டியின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே மற்றொரு டீயை தயார் செய்தான் மாணிக்கம். நகரின் முக்கிய இடத்தில் இருந்த அரசு மருத்துவமனையின் அருகில் இருந்தது அவனது டீ கடை.

அதற்கு முன் வரை மார்கெட்டில் எடுபிடி வேலை செய்து தன் பிழைப்பை நடத்தி வந்தான். இவனது உழைப்பைக் கண்டு தான் இவனுக்கு பெண் கொடுத்தார் இவனது மாமனார். இப்போது அவருக்கு முடியாமல் போகவே, கடையை இவனுக்குக் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

கடையில் வியாபாரம் செய்யும் மொத்த நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார்.  அதில் முக்கியமான ஒன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்பது. அதனால் இவனும் அந்த விஷயத்தில் சற்று கறாராகவே இருந்தான். கடன் என்று பேச்சை எடுப்பவர்களை உடனே அங்கிருந்து வெளியேற்றினான். ஒருமுறை கடைக்கு வந்த இவனது மாமனாரும் கூட அதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆனால் போன வாரம் வந்த இந்த பவளமல்லி பாட்டி தான் இவனிடம் எப்படியோ பேசி கடனில் தினமும் டீ, பிஸ்கட்டு, பன் என வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அதை கொடுக்காமல் போய் விடுவாளோ என மாணிக்கத்திற்கு கலக்கமாய் இருந்தது.

டீயை ஆற்றி, வந்தவர் கையில் கொடுத்தவன், திரும்பி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை சுளையாய் முன்னூற்றி நாற்பது ரூபாய் ஆயிற்று. ஆறுக்கு எட்டு அடியில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் இவனுக்கு அது பெரிய தொகை தான்.

டீயைக் குடித்துக் கொண்டிருந்த பவளமல்லிக்கு வயது அறுபது இருக்கும். கையில் அழுக்கு படிந்த பை ஒன்றை வைத்திருந்தாள். சதை வற்றி ஒட்டிப் போய் இருந்த உடலில் பழைய சேலையைச் சுற்றி இருந்தாள். உள்ளங்கைகளும், பாதங்களும் வெளிறி காய்ப்பு காய்ச்சி இருந்தது.

ஒருவேளை இதைப் பார்த்து பரிதாபப்பட்டு தான் இவளுக்கு கடன் கொடுத்து விட்டோமோ என அவனுக்குத் தோன்றியது. இதுமட்டுமா இவளது கதையும் பரிதாபத்துக்குரியது தான். முதல் நாள் பார்த்ததில் இருந்து இன்று காலை வரையில் அவளிடம் பேசித் தெரிந்து கொண்ட விஷயங்கள் அவன் ஞாபகத்திற்கு வந்து போயின.

பவளமல்லிக்கு சொந்த ஊர் தூத்துக்குடி, ஒரே மகன். மகன் பிறந்த சில வருடத்திலேயே கணவர் இறந்து விட்டார். அங்கே உப்பளத்தில் வேலை செய்து மகனைப் படிக்க வைத்தாள். ஆனால் அவனோ சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

இப்போது அவனும் அந்த உப்பளத்தில் தான் வேலை செய்கிறான். வாரத்தில் ஒருநாள் வேலை செய்தால் மற்ற நாட்களில் சினிமா, நண்பர்கள் என வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

போன மாதம் நண்பனுடன் வண்டியில் போகும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து கடந்த ஒரு மாதமாக அங்கிருந்த ஆஸ்பத்திரியில் இருந்தான். இடுப்பில் பலமான அடி, எழுந்து நடக்க முடியவில்லை. மேலும் அடிக்கடி மயக்கம் வந்தது. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூலையில் ரத்தக் கசிவு இருப்பதாகச் சொல்லி, ஆஸ்பத்திரியில் அவர்களே ஆம்புலன்சில் இங்கே அனுப்பி வைத்தார்கள்.

கூடவே வந்த பவளமல்லி இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு மருத்துவர்களும் வந்து பார்த்து ஏதேதோ சொல்கிறார்கள், இவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாள். நேற்று அவனது உடல் நிலை மேலும் மோசமடைந்து விட்டதாகவும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்லி இருப்பதாகவும் சொன்னாள்.

மற்ற நாட்களில் பையன் தனியாக இருக்கிறான் என அவசரப்படுத்தி, கொதிக்க கொதிக்க இருக்கும் டீயை மடக்கென்று குடித்து விட்டு, போகும் போது பிஸ்கட்டோ, அல்லது ஒரு பன்னையோ வாங்கிக் கொண்டு வேகமாக ஓடுவாள்.

ஆனால் இப்போது என்றைக்கும் இல்லாதவிதமாக மிகவும் மெதுவாக டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தாள், ஒருவேளை ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறதோ அதுதான் சாவகாசமாகக் குடிக்கிறாள் போலும் என எண்ணினான் மாணிக்கம். இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறாளோ, எவ்வளவு கடன் ஆகப் போகுதோ என உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.

இருந்தாலும் ஏனோ அவனுக்கு மற்றவர்களிடம் காட்டுவது போல் இவளிடம் முரட்டுத்தனத்தைக் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காகக் கேட்காமலும் இருக்கவில்லை. தினமும் அவள் செல்லும் போது கணக்கைச் சொல்லி தான் அனுப்புவான். கேட்டு விட்டு லேசாகச் சிரித்து விட்டுச் செல்வாள்.

நேற்று மாலை அவள் போகும் போது, “ஊருக்குப் போற நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன் தம்பி” என்று மட்டும் சொல்லிச் சென்றாள்.

அப்போதிருந்து தான் இவனுக்கு கலக்கம் அதிகரித்தது. தனக்கு தர வேண்டிய பாக்கியைத் தந்து விட்டு செல்லுவாளா அல்லது தராமல் போய் விடுவாளா என சந்தேகம் வந்து விட்டது. சந்தேகம் என்று வந்து விட்டால் யாருக்கு தான் நிம்மதி இருக்கும். அதேபோல் தான் மாணிக்கத்தின் மனதும் இப்போது அவளைப் பார்த்ததும் நிம்மதி இல்லாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது.

டீ குடிக்க வந்த மற்ற ஆட்கள் அனைவரும் சென்று விட்டனர். இப்போது பவளமல்லி மட்டும் தான் இருந்தாள். குடித்து முடித்து டம்ளரை வைத்தவள், இடுப்பில் துலாவி எதையோ எடுத்து மாணிக்கத்திடம் நீட்டினாள். அவள் பெஞ்சில் உட்கார்ந்தபடியே நீட்டியது மாணிக்கத்திற்கு சரியாகத் தெரியாததால் எழுந்து எட்டிப் பார்த்தான். அது மூன்று கல் வைத்த சிறிய மூக்குத்தி. அதிகமாக அழுக்கு படிந்து அதன் பழமையைப் பறைசாற்றியது.

இப்போது தான் அவளை நன்றாகப் பார்த்தான் நேற்று வரை அவளது மூக்கில் இருந்தது இப்போது கையில். மூக்கில் மூக்குத்தி இருந்ததற்கான தடயம் நன்றாகத் தெரிந்தது.

“என்ன இது?” என்றான் மாணிக்கம்.

“மூக்குத்தி. என்கிட்ட காசு இல்ல அதான் இந்த மூக்குத்தியை வெச்சிக்கோ” என்றாள்.

“ஆமா நா என்ன அடகு கடையா நடத்தறேன்? எனக்கு இதெல்லாம் எதுவும் வேண்டாம். நீயே யார் கிட்டயாவது கொடுத்து காசு வாங்கிட்டு வந்து குடுத்துட்டுப் போ” என்றான்.

“எனக்கு இங்க யாரையும் தெரியாதுப்பா.” அவள் பேச்சில் கெஞ்சல் இருந்தது.

“அதுக்காக நான் எப்படி மூக்குத்தியை வாங்கிக்கறது?” இவனுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

அப்போது உள்ளே ஆஸ்பத்திரி ஊழியன் ஒருவன் வந்தான், “ஏம்மா நீ இங்கயா இருக்க? சார் அந்தம்மா இங்க தான் இருக்கு சார்” என்று பின்னால் திரும்பிக் குரல் கொடுத்தான்.

அப்போது அங்கு நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவர் உள்ளே வந்தார். அவரது தோற்றத்திலேயே அவரது செல்வச் செழிப்புத் தெரிந்தது. இவளைக் கண்டதும் வந்தவர் நிம்மதியடைந்தார். மருத்துவமனை ஊழியன் தலையைச் சொரிந்தான். சில ரூபாய் தாள்களை அவன் கையில் திணித்து அனுப்பி வைத்தார்.

“ஏம்மா முத்தரசன்கிறது உங்க மகன் தானே?” ஆர்வத்தோடு கேட்டார்.

“ஆமா” என தலையை அசைத்தாள்.

வேகமாக தனது கையில் இருந்த பையைத் திறந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்து, “இந்தாம்மா இதை வெச்சுக்கோ” என திணித்தார்.

மாணிக்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை, என்ன நடக்கிறது என்று யூகிக்கவும் முடியவில்லை. திகைத்து நின்றான்.

பவளமல்லி பணம் இருந்த கையை அப்படியே திருப்பி அவர் கைகளில் பணத்தை வைத்து தனது கையை எடுத்துக் கொண்டாள்.

“தப்பா எடுத்துக்காதம்மா, என் பேரு ராஜன். எனக்கிருக்கும் ஒரே பையனுக்கு கல்லீரலில் பிரச்சினை, ரொம்பவும் சிரமப்பட்டான். இப்ப உங்க பையனோட கல்லீரல் தான் என் பையனுக்கு வெச்சி இருக்காங்க, அதுக்கு ஒரு நன்றி கடனாதான் தரேன். உங்களை எவ்வளவோ சிரமப்பட்டு தான் தேடி கண்டுபிடிச்சி வந்திருக்கேன், மறுக்காதீங்கம்மா” என மன்றாடினார்.

“என் பையனுக்கு மூளை சாவு வந்துட்டுதுன்னு சொன்னாங்க. இனிமே பிழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க. மத்தவங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்தா அதனால் நாலு பேருக்கு நல்லது நடக்கும்னு சொன்னாங்க, அதான் ஒத்துக்கிட்டேன். மத்தபடி எனக்கு அதுக்காக பணம் கெடைக்கும்னு ஒத்துக்கலை” அமைதியாகச் சொன்னாள்.

மாணிக்கத்திற்கு பகீர் என்றது. ‘என்னது பாட்டியோட பையன் செத்துட்டானா? அவனோட உறுப்புகளை தானமா கொடுத்துடுச்சா இந்த பாட்டி.’ திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐயய்யோ, நான் உங்களுக்கு பயன்படுமேன்னு தான் குடுக்கறேன்மா” என்றான் ராஜன் மென்மையாக.

“அதுதான் எனக்கு கையும் காலும் நல்லா இருக்கே, இது எனக்கு வேணாம் சாமி.”

“என்னோட ஆத்ம திருப்திக்காக வாங்கிக்கக் கூடாதாம்மா?” மனிதர் இப்போது கெஞ்சினார்.

“தானம்னு சொல்லி தானே நான் குடுத்தேன் அப்புறம் எப்படி நான் பணம் வாங்குவேன். உயிரோட இருந்த வரைக்கும் என் மகனால எனக்கு தான் பிரயோசனம் இல்லை, இறந்த பின்னாடி ஒரு நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எனக்கு அதுவே போதும், பணம் எதுவும் வேணாம்பா.” ராஜன் முகம் வாட துவண்டு போய் தலையைத் தொங்கப் போட்டார்.

சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்திருந்த மாணிக்கம், “அதான் பெரிய மனசு பண்ணி குடுக்கறாரே வாங்கிகிட்டா தப்பில்லை பாட்டிமா” என்றான்.

“நான் என்ன என் பையனை கூறு போட்டா வித்தேன்? இப்ப நான் பணம் வாங்கிக்கிட்டா அதுக்கு அப்படிதானே அர்த்தம் ஆகும்” என்று அவள் சொல்லியதைக் கேட்டதும் ஆண்கள் இருவரும் அதிர்ந்தனர்.

ராஜனின் கண்கள் கலங்கி கண்ணீர் அருவியாகக் கொட்டியது. மனம் கனத்து கலங்கிப் போய் நின்றார். பின்னர் கையெடுத்து கும்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பவளமல்லிக்கும் இப்போது இரண்டு நீர் துளிகள் திரண்டு கன்னம் வழியே கோடு இழுத்துச் சென்றது. பின்னர் தனது முந்தானையில் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் ஏதோ நினைவு வந்தவளாக, “நீங்க ஒரு சின்ன உதவி செய்யணும்.”

அவள் கேட்டதும் ஒரு நிமிடம் கண்களில் சந்தோஷம் மின்ன நிமிர்ந்தார் ராஜன், “சொல்லுங்கம்மா.”

தன் கையில் இருந்த மூக்குத்தியை அவர் கையில் வைத்து, “இதை வெச்சிகிட்டு எனக்கு ஒரு ஐநூறு ரூபா கொடுங்க,  அது போதும்” என்றாள்.

“மூக்குத்தி இல்லாமலே நான் உங்களுக்கு பணம் தரேன், கடனா கூட நீங்க நினைச்சுக்கோங்க” என ஆர்வமுடன் சொன்னார்.

“கடனுக்கு தான் இந்த மூக்குத்தியைத் தரேன், இல்லைனா எனக்கு பணம் வேண்டாம்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

”சரி” என அவளிடம் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தவர், கையில் இருந்த மூக்குத்தியை பயபக்தியுடன் கண்ணில் ஒற்றி தன் பாக்கேட்டில் போட்டுக் கொண்டார்.

பணத்தால் நன்றி சொல்ல வந்தவர், இப்போது கண்ணீரால் நன்றி சொல்லி விட்டுச் சென்றார்.

பின் மாணிக்கத்திடம் திரும்பிய பவளமல்லி, “இந்தாப்பா உனக்கு நான் குடுக்க வேண்டிய பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சத்தைக் குடுப்பா.”

தனது மகனின் உறுப்பை தானமாகக் கொடுத்து விட்டு சாதாரணமாக நிற்கும் பாட்டியின் முன் மாணிக்கம் தன்னை எண்ணி வெட்கி நின்றான். இப்போது பாட்டியிடம் பணம் வாங்க அவனுக்கு விருப்பமில்லை. “பரவாயில்லை பாட்டி எனக்கு பணம் வேண்டாம்” என்றான்.

“உனக்கு தான் மூக்குத்தியையும் வாங்கிக்க மனசு வரலியே. அதனால தான் அவருகிட்ட இந்த பணத்தை வாங்கினேன். எனக்கும் ஊருக்கு போறதுக்கு பணம் தேவையாயிருக்கு. இதுல உனக்கு தேவையான பணத்தை எடுதுட்டுகிட்டு மிச்ச பணத்தைக் குடு. அதுல நான் ஊருக்கு போயிடுவேன்” என்று கணக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.

முதலில் பணம் தருவாளா என கலங்கிக் கொண்டிருந்தவன் இப்போது தருகிறாளே என தவித்தான். இதை வாங்காமல் போகவும் மாட்டாள் என தெரிந்தது, அரைமனதோடு கல்லாவில் ரூபாயைப் போட்டு சில்லறையை எண்ணிக் கொடுத்தான்.

பணத்தை வாங்கிக் கொண்டு தளர்ந்த நடையுடன் சென்றாள் பாட்டி. அவள் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு கல்லாவில் மூக்குத்தியைப் போல நீட்டிக் கொண்டிருந்தது.