அமெரிக்காவில், “பாஸ்டன்” நகரில் வசிக்கும் பட்டு மாமியின் மாப்பிள்ளை “அமுது” என்று செல்லமாக அழைக்கப்படும் “ஆராவமுதன்,” சென்னையில் ஒரு “ப்ளாட்” (வீட்டு மனை) வாங்க ஆசைப்பட்டார். அது அவருக்காக அல்ல, அந்த “ப்ளாட்” யாருக்காக என்பது தான் இந்த கதையின் “கருவே…”
இரண்டொரு மாதங்களில் சென்னைக்கு வந்து அந்த “ப்ளாட்” டை ரிஜிஸ்டர் செய்து விடலாம் என்று கூறி விட்டு அமெரிக்காவுக்கே ஓட்டம் பிடித்தார் மாப்பிள்ளை.
சென்னை நகர் முழுவதும் “ப்ளாட்” தேடும் படலத்தில் முழு மனத்துடன் இறங்கினார்.
பட்டு மாமி சென்னையில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே “அறுபதுக்கு நாப்பது” , “வடக்கு வாசல் பார்த்தது”, “தெருக் குத்து” இல்லாமல் இருக்கும் ஒரு பிளாட்டை, ஒரு புரோகர் மூலமாகத், தேடி, அலசி ஆராய்ந்து, கடைசியில் தன்னுடைய எல்லா எதிர்ப்பார்ப்புகளுக்கும் ஏற்றார்ப்போல, மேற்கு தாம்பரத்தில் ஒரு “வீட்டு மனை” யை வாங்கிப் போட்டார்.
பட்டுமாமியின் வைரத்தோடு, எட்டுக்கல் பேசரி மூக்குத்தி, கழுத்துல ரெட்ட வடத்துல ஒரு செயின், கையில ரெண்டு வளையல் தவிர, மற்ற அனைத்து நகைகளும், சரி அப்படி என்ன அதிகப்படியான நகைகள் மாமிகிட்ட இருக்கப் போகிறதென்று கேட்கிறீர்களா, தன் மாமியாரிடமிருந்து, தனக்கு சீதனமாக வந்த தங்க ஒட்டியானத்தை தான், வங்கியில் அடமானம் வைத்து, அந்தப் பணத்தில் வாங்கப் பட்டது தான் அந்த மேற்கு தாம்பரம் மனை.
அநேகமாக நடுத்தர வர்க்கத்தில் தங்க ஒட்டியானத்தை வைத்திருக்கிற கடைசி குடும்பமாக இருப்பது பட்டு மாமியின் குடும்பமாகத்தான் இருக்கும். அதுவும் அவளது பெண்ணின் கல்யாணத்திற்குப் பிறகு கண்டிப்பாக காணாமல் போய்விடும்.அதில் சந்தேகமேயில்லை.
முப்பது வருடங்களுக்கு முன்பு பெய்த அடை மழையில், ஆறு மாதங்கள் வரை வடியாமல் காத்திருந்து, வேறு வழி தெரியாமல், வந்த விலைக்கே விற்று விட்டு, மழை வெள்ளத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று, மனையை விற்று விட்ட பிறகும், வடியாத மழைத் தண்ணீரிலேயே, படகின் மூலம் மேற்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு மாம்பலத்துக்கு ஜாகை பெயர்ந்தார் பட்டு மாமி.
பட்டுமாமிக்கும் மேற்கு மாம்பலத்துக்கும் ஒரு அன்னியோன்னியம். கொசுவுக்குப் புகழ் பெற்ற காலத்திலேயே, மாமி, மேற்கு மாம்பலத்தில் காலடி எடுத்து வைத்து விட்ட பெண் வீராங்கனை!
பட்டு மாமி இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள்., அந்தக் கொசுக்கள் எல்லாம் இப்போ எங்கே என்று கேட்குமளவுக்கு, “குட் பை” சொல்லியாச்சு” என்று சொல்லி மேற்கு மாம்பலத்தைப் பற்றி பெருமையாகப் பேச ஆரம்பிப்பாள் பட்டு மாமி..
“ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு” என்று பட்டு மாமிக்கு ஒரே ஒரு பொண்ணு தான்! சென்னை “வெஸ்ட் மாம்பலம்” பகுதியில், பிரபல மண்டபத்து பக்கத்துத் தெருவில் இருக்கும் அந்த “டூ பெட்ரூம்” அடுக்கு மாடி குடியிருப்பு மாமியின் விருப்பத்தின் பேரில் , ஆசையாசையாக வாங்கிய “அடுக்குமாடி” குடியிருப்பு ஆகும். அதை அடுக்குமாடி குடியிருப்பு என்று சொல்வதா அல்லது பெரிய வீடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. அதில் தரை தளம் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்களே உள்ளன
திருவல்லிக்கேணியின் ஒண்டுக்குடித்தனங்கள், குடியிருப்புகள் ரூபத்தில் மேற்கு மாம்பலத்துக்கு இடம் பெயர்ந்து விட்டனவோ என்று சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஏனென்றால், “ஒரு கிரௌன்ட்” மனையில் பன்னிரண்டு ‘ஃப்ளாட்”கள். தரை தளம் மற்றும் முதல் மாடி மட்டுமே கொண்ட பழைய அடுக்குமாடி குடியிருப்பு அது. அதைக் கட்டியவன் மிகத் திறமைசாலி அந்த மண்டபத்து வாசலிலேயே ஒரு “ஸ்டால்” போட்டு பன்னிரண்டு குயிருப்புகளையும் ஒரே நாலில் விற்று விட்டான். அவனது வலையில் வீழ்ந்த முதல் “விக்கட்” நம்ம பட்டு மாமி தான்.
அந்தக் காலத்தில், அந்த மண்டபத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று ஆஜராகி, மண்டபத்தை கலகலப்பாகி விடுவாள் பட்டு மாமி.
மாம்பலத்துக், கொசுக்கடிகளையும் மறந்து, பாகவதர்களின் ஆலாபனைகளுக்கு, தன் தொடையில் தாளம் போட்டுப் போட்டே, மாம்பலம் கொசுக்களை விரட்டியடித்து, அவற்றைக் கொன்று குவிப்பாள்
பட்டுமாமி தாளம் போடுவதைப் பார்ப்பவர்களுக்கு இந்த சூட்சுமம் தெரியாது. பட்டுமாமியைக் கண்டாலே, கொசுக்கள் அவர் பக்கம் வராது. “யூ டர்ன்” எடுத்து அப்படியே வேறு வரிசைக்குச்சென்று விடும். அதனால், பட்டு மாமியின் பக்கத்தில் உட்காருவதற்கு பலரும் போட்டி போடுவார்கள்.
மாமியைப் பார்ப்பவர்கள்,, “பட்டு மாமி கர்நாடக சங்கீதத்தில் ஒரு வித்தகி” என்று நினைப்பர். ஆனால், பட்டுமாமி, ஆரோகனத்துக்கும் தொடையில் தாளம் தட்டுவார். அவரோகனத்துக்கும் தொடையில் தாளம் தட்டுவார். தாளம் தப்பாமல், இரண்டுக்கும் ஒரே வேகம் தான். தாளங்களில் பட்டுமாமிக்கு பேதமில்லை. அனைத்து சங்கதிகளுக்கும் , துக்கடாக்களுக்கும் ஒரே தாளம் தான். பாகவதரின் பக்கத்தில் உட்கார வைத்தால், மிருதங்கமே வேண்டாம். அவ்வளவு பலமாகத் தட்டுவார்,
ஆனால் பாவம், பாகவதர் தான், தாளம் தப்பி, விழி பிதுங்கிப் போவார்.
பட்டுமாமிக்கு முதல் வரிசையில் உட்காருவதற்கு பயம். ஒரு முறை, முன் வரிசையில் உட்கார்ந்த பொழுது, பாகவதர் ஒரு துண்டு சீட்டில் எழுதி, மண்டபம் செகரட்டரியிடம் கொடுத்து, பட்டு மாமியைக் கடைசி வரிசையில் உட்காரச் செய்துவிட்டார் பாகவதர் ,சப்தம் போடாமல்….
அதே போல், தப்புத்தாளம் போடுகையில், பாகவதரே ஒரு நிமிடம், பட்டுமாமியின் தாளத்துக்கேற்றவாறு தன் பல்லவியை மாற்றி அவஸ்தைப் பட்ட நிகழ்ச்சிகளும் பல முறை நடந்தேரின.
பட்டு மாமி, பக்க வாத்தியக்கார்களுக்குக் குறிப்பாக கைதட்டி, அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துவார். மாமிக்கு அவ்வளவு பரந்த மனசு.. ”புதியதாக பாட வந்தவர்கள் மனம் கோனக்கூடாது” என்று நினைத்து அவர்களது அனைத்து சங்கதிகளுக்கும் தாராளமாக தலையை ஆட்டி, தொடையில் தாளம் போட்டு, அவர்களுக்கு உற்சாகம் தந்து கொண்டிருப்பார்..
மாமி கொஞ்சம் குள்ளமாக இருப்பாள். மழை காலத்தில் அவள் கையில் குடை வைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் நுழையும் பொழுது, பகவானே சாட்சாத் வாமன ஸ்வரூபியாக கையும் குடையுமாக வந்திருக்கிறார்” என்று மண்டபத்தில் ஏற்கனவே வந்தமர்ந்து இருக்கும் ஒரு சில சீனியர் மாமாக்கள் மாமியைப் பார்த்து நையாண்டி செய்வார்கள்.
அப்படிப்பட்ட மண்டபத்தில் தான், தன் மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தார் பட்டு மாமி. மண்டபத்தில், சாய் சங்கராவின் ஜாதகப்பரிவர்த்தனை நடக்கும் பொழுது, பட்டு மாமி ஒரு நாள் முன்னதாகவே, மண்டபத்தில் பக்தியோடு அஜாராகி விடுவார். அங்கிருக்கும் அனுமார் சன்னதியை நூற்றியெட்டு முறை சுற்றி, நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வாள்..
அப்படி கிடைத்தவர்தான் இந்த அமெரிக்க மாப்பிள்ளையின் ஜாதகம்.
“ஆச்சு, கல்யாணமும் நல்ல முறையில் நடந்தேறியது! பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்கா கிளம்பிச்சென்றனர்,
“ இரண்டு வருடங்கள் கழித்து மனைவியுடன் மாமியார் வீட்டில் தங்கி, அவர்களைத் திருப்திப் படுத்தலாம், அப்படியே, “வொர்க் ஃப்ரம் ஹோம்” பண்ணி, “லீவையும்” மிச்சம் பண்ணலாம்னு, ஆசையாசையாக விமான,ம் ஏறி வந்தால், ஏரிக்குள் இறங்கியது போல மேற்கு மாம்பலத்தில் மூன்று அடி தண்ணீரில் கால், மன்னிக்கவும் ,இடுப்பை வைக்க வேண்டியதாயிற்று”
பார்த்தார் மாப்பிள்ளை. உடனே தன் மாமியாருக்கு சென்னையில் ஒரு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கித்தர முடிவெடுத்தார்.
ஜாதகப் பரிவர்த்தனையில் பத்து பொருத்தங்களும் இருக்கவேண்டுமென்பதைப் போல, ஒரு பத்து “கன்டிஷன்களை”ப் போட்டு விட்டு விமானம் ஏறினார் மாப்பிள்ளை.
அந்த வருட அமெரிக்க மாப்பிள்ளையின் இந்திய விஜயம் முழுவதும், மேற்கு மாம்பலத்திலுள்ள தன் மாமியார் வீட்டில் புகுந்து ரகளை செய்த மழை நீரை வெளி யேற்றுவதிலேயே கழித்தன.
அமெரிக்காவில் அழகான “பாத் டப்” பில் நின்று கொண்டே, குளித்துப் பழக்கப்பட்ட அவருக்கு, மாமியார் வீடு முழுவதும் “ஸ்விம்மிங் பூல்” போல மாறியதை அவர் சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை.
பட்டுமாமிக்கு மழையின் பேரில் ஏகப்பட்ட கோபம். “வராத மாப்பிள்ளை வந்திருக் கிறார். வெள்ளம்னா வெள்ளம், அப்படிப்பட்ட வெள்ளம். மனுஷாளை எங்கயும் நகர விடாமல் செய்து விட்டது. கார்ப்பரேஷன் காரா எதுக்கு இருக்காள்னு தெரியலேனு” என்று கண்ணில் படுபவர்களிடமெல்லாம் அவளும் மாப்பிள்ளையைப் போலவே புலம்பித்தீர்க்க ஆரம்பித்தாள்.
“சரி பரவாயில்லை, வயசானவங்க பாவம்!” என்று தன் மாமியாருடன் “அட்ஜஸ்ட்” செய்து கொண்டு விட்டார், அமெரிக்க மாப்பிள்ளையான ஆராவமுதன்.
பட்டு மாமியின் மாப்பிள்ளை சென்னையிலுள்ள தன் மாமியார் வீட்டிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். சென்ற வருடத்தைப் போலவே, இந்த வருடமும் மாப்பிள்ளைக்கு வேறு தொல்லை.!
மாப்பிள்ளை சென்னைக்கு வந்திருந்த பொழுது, மாமியின் கஷ்டத்தைப் பார்த்து, மனம் பொறுக்காமல் மாப்பிள்ளை முறுக்கு பண்ணாமல், மாமியாரின் கஷ்டங்களை மறக்க, மிகுத்த சோகத்துடன் தண்ணி அடிக்க ஆரம்பித்தது வேறு கதை..
நீங்கள் யாரும் பட்டுமாமியின் மாப்பிள்ளையைத் தவறாக எண்ண வேண்டாம், அவர் மிகவும் நல்லவர்! பரம சாது!, ஒரு தப்பு தண்டாவுக்கும் போக மாட்டார். வருடத்தில் முன்னூத்தி அறுபத் தைந்து நாட்களும்” பாஸ்டன்” கடுங்குளிரிலும், திறந்த மார்போடு சந்தியாவந்தனம் செய்யும் பழக்கம் உள்ளவர் தான் பட்டு மாமியின் மாப்பிள்ளை “ஆராவமுதன்”
மாப்பிள்ளை தீர்மானித்தார், “இனியும் என் ,மாமியார் இந்த மேற்கு மாம்பலத்தில் தங்கவே கூடாது…. ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும் பொழுது, ஒன்னு, தண்ணியே இருக்காது. இல்லேன்னா, வீட்டைச்சுத்தியும் அஞ்சடிக்கு மழைத் தண்ணி தேங்கிண்டே இருக்கும். என்னால நீச்சலும் தெரியாது. பம்படிச்சு பம்படிச்சு, தோள்பட்டையே எறங்கிப் போயிடுச்சு!”
பட்டு மாமியும் சென்னை நகரில் ஒரு நல்ல வீட்டு மனை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாள். நான்கு வருடங்களாகத் தேடியும் ஒரு நல்ல வீட்டு மனை அவளுக்குக் கிடைக்க வில்லை.
உங்களுக்குத் தெரிந்தால், பட்டுமாமி மேற்கு தாம்பரத்திலும், மேற்கு மாம்பலத்திலும் அவஸ்தைப் பட்டதைப் போல அல்லாமல், மழை நீர் தேங்காமல், வீட்டிற்குள் மழை நீர் புகாமல் சென்னையில் எந்த பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை, ஒரு நல்ல வீட்டுமனையைத் தேடிக் கொடுப்பீர்களா?”
*****


சென்னையில் அப்படி ஒரு இடம் இருப்பதாகத் தெரியவில்லை….
LikeLike
அப்படி ஓரிடம் திருநீர்மலை உச்சியில் இருப்பதாகக் கேள்வி. ஆனால் அது பட்டு மாமிக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை, ஏனென்றால் தினமும் 250 படிகள் ஏறி முழங்கால் பிடித்துக்கொண்டது என்றால் என்னைக் குறை சொல்லக் கூடாது. அது மட்டுமில்லை, தன் கோயில் இடத்தை பெருமாளே பெயர் சொல்ல பயப்படும் சில அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று பகவானே என்னிடம் புலம்பினார் (கனவில் வந்து). எனவே பட்டு மாமிக்கு அந்த இடமும் சரிப்பட்டு வராது.
சென்னையை மாமி மறக்கத் தயார் என்றால் மழை நீரில் தத்தளிக்காத இடம் ஒன்று எனக்குத் தெரியும், என்ன, போய்வர கொஞ்சம் அதிகம் செலவாகும். இப்போதெல்லாம் குளோபல் வார்மிங் வந்த பின் இந்த உலகத்தில் எந்த இடத்தையும் நம்பி வீட்டு மனை வாங்க முடியாது போலிருக்கிறது. இதுநாள் வரை பாலைவனமாய்க் கிடந்த துபாய் கூட வெள்ளத்தில் தத்தளிக்கிறதாம். எனக்குத் தெரிந்து செவ்வாய் கிரகத்தில் மழையே பெய்யாதாம், எனவே அங்கே நம்பி வீட்டு மனை வாங்கலாம். அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பும் இப்போதைக்கு இருக்காது. போய்வரும் செலவைப் பற்றி பட்டு மாமி கவலைப்பட வேண்டியதில்லை, அமெரிக்க மாப்பிள்ளை கை நிறைய சம்பாதிப்பதாக கேள்வி. எலான் மாஸ்க் விரைவில் செவ்வாய்க்கு ராக்கெட் விடப் போகிறாராம். பட்டு மாமி முன் கூட்டியே ரிசர்வ் செய்து கொள்வது உசிதம். ஆனால் சென்னை மழையில் தத்தளிக்கப் பயந்து செவ்வாய்க்குப் போய் குடிநீருக்கு பட்டு மாமி தத்தளித்தால் நீங்களோ நானோ பொறுப்பல்ல.
LikeLike