அஞ்சலியும் அலங்கார ஹோட்டலும் = ரேவதி ராமச்சந்திரன், ஜான்சி

    வீட்டு வேலைக்காரி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை சுருதி | Actress  Shruti To File Criminal Case Against Maid Servant - Tamil Filmibeat    

புவனா வீட்டில் வேலை செய்யும் அஞ்சலிக்கு வீட்டில் நுழைந்தவுடன் மற்ற எங்கே எவ்வளவு காபி, டீ குடித்து இருந்தாலும் புவனா வீட்டு பில்டர் காபி மிகவும் பிடிக்கும். உள்ளே நுழைந்தவுடன் காபி சாப்பிட்ட பிறகு அதுவரை அடக்கி வைத்திருந்த வம்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும். அப்படி வாய் வேலை செய்யும் போது அவளுடைய கையும் வேலை செய்யும். நன்கு வேலை செய்வதாலும், நம்பிக்கையானவளாக இருப்பதாலும் அவளது அட்டகாசங்களை புவனா வீட்டார்  பொறுத்துக் கொண்டிருந்தனர். இது போதாது என்று அவ்வப்போது தான் ஆசைப்படும் பொருளை சொல்லி புவனாவை செய்து தரச் சொல்லுவாள்.

அக்காரவடிசலும்  அடைதோசையும் செய்து கொடு என்று ஒரு நாள், மற்றொரு நாள் கல் தோசை பால் கொழுக்கட்டை. ஒரு நாள் ‘அம்மா எல்லாரும் பிச்சை  சாப்பிடுகிறார்கள், எனக்கும் சாப்பிட ஆசையா  இருக்கிறது’ என்றாள்.

‘என்னடி நீ என்ன பிச்சை கேட்கிறாய்’ என்று முதலில் சொன்னாலும் அவளுக்குப் புரிந்து விட்டது இவள் பீட்சாதான் கேட்கிறாள் என்று.

‘பீட்சா, பர்கர், பாஸ்தா என்று வாங்கிக் கொடுத்து அவளை மேலைநாட்டுக்காரி ஆக்கி விடாதே’ என்று அவள் கணவரும் புவனாவை கேலி செய்வார்.

 மற்றும் ஒருநாள் ‘அம்மா என் வீட்டுக்காரர் ஒரு தடவை என்னை ஹோட்டலுக்கு இட்டுக்குனு போய் இட்லி வாங்கிக் கொடுத்தார், எனக்கு மறுபடியும் ஹோட்டலுக்கு போய் தோசை சாப்பிட ஆசையா இருக்கு’  என்று சொன்னாள்.

சின்னக் குழந்தை மாதிரி அப்பப்ப தன்னோட ஆசைகளை எடுத்துச் சொல்லும் அஞ்சலியை ரசித்துக்கொண்டு ‘அதற்கென்ன ஒரு நாள் எல்லாரும் போய்விடலாம், உனக்கும் சமையல் வேலையில் இருந்து விடுதலை கிடைக்கும், எங்களுக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும்’ என்று கேலியாகவும் பரிவோடும் சொன்னாள் புவனா.  

இரண்டு மூன்று நாட்கள் கழித்து கல்கத்தாவில் இருக்கும் பெண் விடுமுறைக்கு வந்த பொழுது எல்லோரும் ஹோட்டலுக்குப் போகலாம் என்று முடிவாயிற்று. நாள், நட்சத்திரம், கிழமை எல்லாம் பார்த்து ஒரு வியாழனன்று அடையாரில் பிரசித்தி பெற்ற ‘மத்ஸ்யா’க்குப் போவதாக முடிவு செய்தார்கள். அஞ்சலிக்கு ஒரே குஷி.

சின்னக் குழந்தை மாதிரி கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டு ‘நான் மசால் தோசை, மினி குஷ்பூ இட்லி எல்லாம் சாப்பிடப் போகிறேன்’ என்று சந்தோஷமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்த அஞ்சலியைப்  பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

வியாழனன்று முகத்தில் நிறைய பவுடர், கண்களில் மை, அழுத்தமான கலரில் லிப்ஸ்டிக், தலை நிறைய கதம்பம், கையில் யாரோ கொடுத்த ஒரு சின்ன ஹேண்ட் பேக் (அதனுள் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்) வந்து நின்ற அஞ்சலியைப் பார்த்து இவள் ஓட்டலுக்கு வருகிறாளா, இல்லை பேஷன் பரேடுக்குப் போகப் போகிறாளா என்று புரியாமல் திகைத்தனர்.

அது மட்டுமில்லாமல் புவனாவையும் ‘இந்தப் புடவை கட்டிக் கொள், அந்த வளையலைப் போட்டுக் கொள்’ என்றும், எப்பொழுதும் எளிமையாக இருக்கும் கவிதாவிடம் சென்று ‘கண்மை தீட்டிக் கொள், லிப்ஸ்டிக் போட்டுக் கொள்’ என்று சொல்லவும் கவிதாவுக்கு வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ‘இந்தப் பூ வைத்துக் கொள்’ என்று சொல்லவும் கவிதாவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும் அஞ்சலியின் மீது உள்ள அபிமானத்தால் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

 காரிலும் அஞ்சலி வழிநெடுக யாரையோப் பார்த்து கையாட்டிக்  கொண்டே வந்தாள். தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த தனது தோழி சரசுவைப் பார்த்துவிட்டு ‘முந்தானை முடிச்சு’ ஊர்வசி மாதிரி ‘அக்கா நான் ஹோட்டலுக்குப் போகிறேன்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.

 அவளை அடக்கி சீட்டில் உட்கார வைக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. அவ்வளவு பெரிய ஹோட்டலைப் பார்த்து மலைத்து ‘இது அம்பானி வீடா!’ என்று தனக்குத் தெரிந்த தற்போதைய செய்தியையும் எடுத்து விட்டாள்.

 வாயிலில் நின்றிருந்த பெண் தலை குனிந்து இவளை வரவேற்றுபோது இவளும் நின்று நிதானமாக அவளுக்குக் குனிந்து பதில் கூறியது வேடிக்கையாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் சர்வர் வரவேற்று நாற்காலியை இழுத்து இவர்களுக்கு உட்கார வசதி செய்து கொடுத்த பொழுது அஞ்சலி கவனியாமல் விழுந்து விட்டாள்.

சர்வர் ‘ஆர்டர் ப்ளீஸ்’ என்று கேட்ட பொழுது கை அலம்பச் சென்றிருந்த பையனும் வந்து விடட்டும் என்று ‘ஆர்டர் லேட்டர்’ என்று சொல்வதை காதில் வாங்கி அஞ்சலி மெதுவாக ‘அக்கா எனக்கு லேட்டர் வேண்டாம், தோசை தான் வேண்டும்’ என்றாள்.

 முதலில் சூப், அதனுடன் பிரட் ஸ்டிக்ஸ் என்றதற்கு ‘சாம்பாருக்குப் பிறகு தானே ரசம் சாப்பிடுவார்கள், ஏன் முதலிலேயே ரசத்தைக் கொடுக்கிறார்கள்!’ என்று சூப்பை உறிஞ்சிக்  கொண்டே அஞ்சலி கேட்டாள்.

அவளுக்கு முதலில் இது பசியைத் தூண்டும் என்று புரிய வைத்து சாப்பிட வைத்தோம். பிறகு எல்லோரும் தங்களுக்கு விருப்பமான உணவைச் சொல்ல மறுபடியும் அஞ்சலி ‘எனக்கு ஒரு தோசை’ என்றாள்.

  சர்வரும் ‘என்ன தோசை வேண்டும், ரோஸ்ட், கீ ரோஸ்ட், பேப்பர் ரோஸ்ட், ஃபேமிலி ரோஸ்ட், ஊத்தப்பம், தோசை, செட் தோசை. கோன் தோசை, மசாலா தோசை, ரவா தோசை, ஆனியன் ரவா தோசை, ஆனியன் மசாலா ரவா தோசை என்று அடுக்கிக் கொண்டே போக, ‘அக்கா இங்கு தோசை இல்லையா?’ என்று அப்பாவியாகக் கேட்டாள்.

‘அட இத்தனை விதமான தோசைகள் உள்ளன, உனக்கு வேண்டியது சொல்’ என்று சொல்லவும் ‘எனக்கு இதெல்லாம் என்னன்னே தெரியாது, நீயே யோசிச்சு எது நல்லா இருக்குமோ அதையே சொல்’ என்று தன் நிலையை வெளிப்படுத்தவும், அவள் ஆசைக்காக ஒரு பேப்பர் ரோஸ்ட் சொல்லப்பட்டது.

 கூம்பு வடிவத்தில் இருந்த தோசையைப் பார்த்து இந்த தோசையை செய்வதற்கு எந்த கல்லை உபயோகப்படுத்தி இருப்பார்கள், அதை எப்படி சுத்தம் செய்வது என்று புவனா காதைக் கடித்தாள். பிறகு தோசையைப்  படுக்க வைத்து பிரம்மா மாதிரி அதன் அடி, நுனி தேட ஆரம்பித்தாள். அந்தப் பெரிய தோசை பக்கத்து தட்டிலும் சிறிது விழ, ‘அக்கா முழு தோசை எனக்குத் தானே, ஏன் உன் தட்டில் பாதி விழுது?’ என்று குழந்தைத்தனமாகக் கேட்டாள். தோசையை விட தோசைக்குத் தொட்டுக்கொள்ள கொடுக்கப்பட்ட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மிளகாய் சட்னி, மிளகாய்ப்பொடி, சாம்பார் என்று அந்த குட்டி குட்டி கிண்ணங்களை ஒன்றொன்றாக ஆராய்ந்தாள். அரிசி, உளுந்தும் எந்த அளவில் போட்டிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே தோசையை மிகவும் விரும்பி சாப்பிட்டாள்.

ஒரு காபியும் குடித்துவிட்டு ‘என்ன இருந்தாலும் அக்கா கை காபிக்கு  கீடாகாது’ என்று நொட்டை விட்டாள்.

 கடைசியாக கை  கழுவ எழுந்த பொழுது, சர்வர் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைப்பழம் போட்ட சுடு தண்ணீர் கொடுத்தவுடன் பழத்தை தண்ணீரில் பிழிந்து பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் இருந்து சர்க்கரையும் எடுத்துப் போட்டு குடிக்க ஆரம்பித்தாள். அவளது அறியாமை அழகாக இருந்தது.

 கடைசியில் பில் வந்தது. ‘தோசை விலை என்ன?’ என்று கேட்டால், ‘நீ கொடுக்கப் போறியா?’ என்று எதிர் கேள்வி போட ‘இல்லைக்கா எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ஹோட்டலில் 30 ரூபாய்’ என்று சொல்லவும், அவளிடம் எப்படி செல்வது என்று தயங்கினால், ‘சும்மா சொல்லுக்கா, நான் ஒன்னும் பைசா கொடுக்கப்படுவதில்லை’ என்றாள். பில்லை அவளிடம் காட்டிய போது ‘என்னக்கா, எனக்கு என்ன படிக்கவா தெரியும், சொல்லுக்கா, என் பசங்களுக்கு எப்பவாவது வாங்கித் தரலாம் இல்ல?’ அப்படின்னு கேட்டதுக்கு ‘உண்மையான விலையைச் சொல்லணுமா, இல்ல பொய்யான விலையைச் சொல்லணுமா? சரி 250’ என்று சொன்னவுடன் இந்த விலையில நான் ஒரு மாசத்துக்கு என குடும்பத்தை ஓட்டியிருப்பேனே!’ என்று இந்திய பொருளாராதத்தை அலசினாள் அழகி அஞ்சலை!

 

                                      

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.