புத்தகம் :  “எந்த இடத்தையும் அடைய அல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறேன்

 ( மாலன் நேர்காணல் )”

எழுதியவர் : அந்தி மழை

முதற்பதிப்பு: அக்டோபர் 2019

 பக்கம் 118  விலை ரூ.150

   கருப்பு வெள்ளை புகைப்படமாக மாலன் முன்னட்டையிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் என்னுடைய பிறந்தநாளுக்கு அன்புப் பரிசாக உரத்த சிந்தனை அமைப்பு அனுப்பி வைத்திருந்தது.  அட்டைப்படத்தைப் பார்த்தே திருப்தி அடைந்து படிக்காமலேயே மேசை மேல் வைத்திருந்தேன். சமீபத்தில்தான் கடகடவென்று படித்து முடித்தேன்.

   2014ல் வெளிவந்த என்னுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறுகதைத் தொகுப்புகள் இரண்டிற்கும் சேர்த்து ஓர் அழகான அணிந்துரை வழங்கியவர் மாலன். அது எனக்கு ஒரு பெருமைதான்.

   இந்த சிறிய புத்தகத்திற்கு முன்னுரை என்று எதுவும் இல்லை. பொருள டக்கமும் இல்லை. இது ஒரு ஆச்சரியமான விஷயமாக எனக்குப்பட்டது. அதனால், முதலிலும் கடைசியிலும் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி இப்படியும் அப்படியுமாக படித்த பிறகுதான் புத்தகத்தின் பின்புலத்தை அறிய முடிந்தது.

   மாலனின் 50 ஆண்டு கால எழுத்துப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்ட நூலாகத் தெரிகிறது.

    அவருடைய இந்தப் பயணத்தில் அவருடன் உறவாடிய, அவருடைய எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்த பல தமிழ் எழுத்துலக பிரபலங்கள் மாலனைப் பற்றியும் அவருடைய எழுத்துக்களைப் பற்றியும் அவ்வப்போது பகிர்ந்து கொண்ட கருத்துக்களை, இந்நூலின் ஆசிரியர் அந்திமழை வாசகர்களுக்கு விருந்தாக தொகுத்தளித்திருக்கிறார்.

   பின்னட்டையில் மாலனே தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

  “அச்சு இதழ்கள் (இலக்கியச் சிற்றிதழ், இளைஞர்களுக்கான இதழ், வெகுஜன வார இதழ், Current Affairs இதழ், நாளிதழ்), வானொலி, தொலைக்காட்சி, இணையம், பல மொழி இணைய இதழ் என எல்லா ஊடகங்களிலும் முக்கியப் பொறுப்பில் பங்களிக்கும் வாய்ப்புப்பெற்ற மிகச்சில இதழாளர்களில் நானும் ஒருவன் என்பதும் என் மகிழ்ச்சிகளில் ஒன்று. அதைவிட என் இதழியல் பணிக்காலம் முழுவதும் தமிழ் இதழியலின் விளிம்புகளை நகர்த்த முயன்றேன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு. தமிழ் இதழியலின் ஜாம்பவான்களான ஏ.என்.சிவராமன், எஸ்.ஏ..பி,  சாவி ஆகியோர் அமர்ந்த நாற்காலிகளில் அவர்களுக்குப் பிறகு அமரும் வாய்ப்பு என் ஒருவனுக்கே கிட்டியது என்பதும் நான் எண்ணி மன நிறைவு கொள்ளும் ஒரு விஷயம்”.

இப்படிப்பட்டவரைப் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள், பகிர்தல்கள் என்றால், சுவாரசியத்திற்கு குறைவிருக்காது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

   முதல் கட்டுரையின் தொடக்கத்தில் மாலனின் கவிதை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மட்டும் இங்கே தருகிறேன்:

 

“வீடென்று எதனைச் சொல்வீர் ?

அது இல்லை எனது வீடு.

ஜன்னல் போல் வாசல் உண்டு.

எட்டடிக்கு சதுரம் உள்ளே

பொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்.

நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்.

தலைமேலே கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும் .

கவி எழுதி விட்டுச் செல்ல கால் சட்டை மடித்து வைக்க

வாய்பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……”

 

  போகிற போக்கில் தன்னுடைய சிறுகதை ஒன்றின் தொடக்கத்தில் மாலன் இந்த சிறு கவிதையை எழுதி இருக்கிறார்.

   நீங்களும் மாலனைப் போல இந்நூலை சும்மாவே படிக்கலாம். சுவாரசியம் சர்வ நிச்சயம்.