(ஒரு நகைச்சுவைக் கதை எழுதப் போய் ஜிகிர்தண்டாபோல மாட்டிக்கொண்டவன் நான்)  

தலைப்பை எப்போதும்    சரியாகப்  போட்டுக் கொண்டு  கதையோ கட்டுரையோ  எழுதுற  ஆண்ஜாதி நான். கதைத் தலைப்பைச் சொன்னேன். தலைப்பு சரியா இருந்தால்  முழு கதையையும் பேனா  தானா எழுதிவிடும் என்று நம்பும் சில  தீவிரவாதி இலக்கியவாதிகளின் கருத்துதான் என் கருத்தும். 

ஆனா இன்னிக்கு என்ன எழுதபோறேன்னு  எனக்கே தெரியாது . அவர் சொல்வாரு. அதை அப்படியே எழுதணும். அதுவும் கம்ப்யூடரில அடிக்கணும். இதுதான் எனக்குக் கிடைத்த உத்தரவு.  அவரு கிட்டே இந்த பேனா தானா எல்லாம் செல்லுபடியாகாதுன்னு தெரியும்.  இருந்தாலும் தலைப்பைப் போட்டுட்டு எழுதலாமேன்னு சொன்னேன். ” இங்க பாரு! பொடவை ரவிக்கை தலைப்பு எல்லாம் கதைக்குள்ளே வரட்டும்.  தலைப்பு  அப்பப்ப மாறும். மாறனும்.  இப்போதைக்கு என் பேரையே வைச்சுக்க !   

அப்படி முடிச்சுப் போட்டு வந்ததுதான்  இந்த இலக்கிய வாத்தி  தலைப்பு 

யார் இந்த இலக்கிய வாத்தி ?

அவர் ஒரு இலக்கியவாதி மற்றும் வாத்தியார். தமிழ் வாத்தியார் இல்லை. பி டி  மாஸ்டர்.  பி டி மாஸ்டர்ருக்கு எப்படி இலக்கியம் வரும் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்டா அவர் பேச மாட்டார் அவர் கையில் இருக்கிற பிரம்பு பேசும். பிரம்பு இல்லாத சமயங்களில் அவர் கதை எழுதுவார் . கவிதை எழுதுவார். வீதி நாடகம் போடுவார்.  டிராயிங் போடுவார் .சிலை செய்வார். மீன் பிடிப்பார். உழுவார். வரட்டி தட்டுவார்.  மலை ஏறுவார். எல்லா சமயங்களிலும் தண்ணி அடிப்பார் . பொண்ணுங்க விஷயத்தில பெரும்பாலும் நெருப்பா இருப்பார். சுருக்கமா சொல்லப்போனா ‘இளமை  இதோ ‘ என்று இளமையில் பாடின  கமல் மாதிரி சகலகலாவல்லவர் .

இப்ப புரிஞ்சிருக்கும் அவர்  சாதாரண இலக்கியவாதி இல்லே ! அழுத்தம் திருத்தமா செய்யக் கூடியவர் என்று.   அதனால அவர் இலக்கிய வாத்தி ஆயிட்டார். எப்பவும் அவர் பிடிச்ச முயலுக்கு மூணு கால்தான். முயல் என்று  என்று எழுதும்போது கூட ஒவ்வொரு எழுத்துக்கும் பக்கத்தில ஒரு காலைப் போடுவார். அவர்  கரும்பலகையில் எழுதின மூணுகால் முயல் இப்படித்தான் இருக்கும்.

 

கம்ப்யூடரில காலைப் போடறது கடலை போடறது எல்லாம்  ரொம்ப கஷ்டம்.

எழுத்தாளர் சுஜாதா இருந்தா இதை ரொம்ப   சுலபமா கம்ப்யூடரில எழுதிவிடுவார். அவர் ஒரு ஜீனியஸ் . அவர் மாதிரி எழுத யாரால முடியும்?  மாடிப்படியில் இறங்கினான்  என்பதை

     ற

         ங்

                கி

                      னா

                                   ன்

என்று அன்றே எழுதியிருக்கிறார் .

வாத்தி மாதிரி நான் எழுத முயல்கிறேன்.

மா யா லா . ஊகும் . மு -க்குப் பக்கத்தில காலு வர மாட்டேங்குது. 

இலக்கிய வாத்தி  போர்டில எழுதன  மாதிரி மூணு கால் உள்ள  முயலை 

மு (கால்) ய (கால்) ல் (கால்)    என்று யூனிகோடில் அடிக்க முடியவில்லை

ஒருவேளை அழகியின் விசைப் பலகை உபயோகித்தால்  கால் போடலாம் என்று கூகுளில் ஒரு பொதுநலவாதி கருத்து தெரிவித்திருக்கிறார். 

இயற்கை அறிவு இல்லாதவர்கள்  செயற்கை அறிவு     (A I ) உபயோகப் படுத்தாலாம் என்று சாட் பாட் ஒன்று துப்பி மொழிந்தது.

( பேசாம முயலுக்கு எழுத்தில மூணு கால்  எழுத முடியுமா என்று நம் கலை புதிது மக்களிடம் கேட்டால்  இரண்டாவது நிமிடம் நூறு பேர் நம்மைப் பாராட்டிவிடுவார்கள். சிலர் முயல் படம் வரைந்து அதன் ஒரு காலை ஓடித்தும் அனுப்பக் கூடும்.)

அப்படியும் முடியவில்லையா? இலக்கியவாத்தி போர்டில் எழுதியபடி கம்ப்யுடரில்  எழுதி அனுப்புபவர்களில் அதிர்ஷ்டசாலி நேயருக்கு குலுக்கல் முறையில் 100  ரூபாய் பரிசுகொடுக்கப்படும்  என்று குவிகத்தில் போட்டால் வந்துவிடும் என்று குவிகம் ஆசிரியர்  யோசனை கூறினார்.

இந்த மூணு கால் முக்கால் எல்லாத்துக்கும் மியூட் போட்டுட்டு கதைக்குப் போங்க சார்! என்று ஒருவர்  அன்பு மிரட்டல் விட்டார்.

போகிறேன்.

இலக்கிய வாத்தியின் உண்மைப்  பெயர் என்ன  என்று கேட்கிறீர்களா?  அவர் பேர் வைத்தி ! அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிட  அவருடைய பள்ளித்  தலைமை ஆசியருக்கே தைரியம் இல்லை. எனக்கு எப்படி வரும். எல்லாரும் அவரை விளிப்பது –   மாஸ்டர் என்றுதான்.  அவருக்கும் அப்படி அழைத்தால் தான் பிடிக்கும்.  சும்மா கெத்தா வருவார். மாணவர்கள் வேண்டுமானால் அவரது பிரம்புக்குப் பயப்படலாம். அவரது  சக  ஆசிரியர்கள்  பயப்படுவது அவரது  பிரம்புக்கு அல்ல. கவிதைக்கு.

இந்தக் கதையை  அவர் சொல்லித் தான் நான் எழுதுகிறேன். இதில் ஏதாவது சொற்குற்றம் பொருள் குற்றம் இருக்கிறது என்று யாராவது நக்கீரன்  பாணியில் கிருஷ்ணகிரி கிளம்பினார் என்றால் நேரா இலக்கிய வாத்தி கிட்டே அனுப்பிவிடுவேன். அவர் கிட்டேயும் ஒரு ஆபீஸ் ரூம் இருக்கு.  ஏன்னா அவர் பி டி மாஸ்டர் மட்டுமில்லே . என் சி சி மாஸ்டரும் கூட.

“நிறுத்து நிறுத்து..”

“என்னது? யார் கதை நிறுத்தச் சொல்றது?”

“கதை ஆரம்பத்தில ஏன் ஜாதிப் பிரச்சினையை  ஏன் கிளப்பறே! அப்பரம் நக்கீரன் வீரப்பன் என்று சம்மந்தமில்லாமல் சொல்றியே   ?”

“அதில உங்களுக்கு என்ன ஆட்சேபம்? அதனால ஏதாவது தகராறு வருமுன்னு பயமா?  எனக்கு பயமே கிடையாது. யாராவது சண்டைக்கு வந்தா  இலக்கிய வாத்தி கிட்டே விட்டுடுவேன்.

இன்னொரு ரகசியம். இந்த இலக்கிய வாத்தி கதையில  பிரச்சினைகள் தகராறுகள்   அடிதடி வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. இதைப்பத்தி  வாத்தியார் கிட்டே கேட்டேன். அதுக்கு அவர்  ”  வரட்டுமே? அப்படி வந்தாதான் நல்லது. இந்த கதையை  உன்னை எழுதச் சொன்னதுக்குக் காரணமே கொஞ்சம்  அடாவடி செய்வோமே என்கிற நல்ல எண்ணத்திலதான். நல்ல இலக்கியம் வரணும்னா நாலு கழுதைகள் கத்தத்தான் செய்யும். அப்புறம் ரைட்டர் ( என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! நான் எழுதறவன் தானாம். எழுத்தாளன் இல்லை என்பது அவரது தீர்மானம்), அதை எழுதக் கூடாது, இதை எழுதக் கூடாது அப்படீன்னு சில டாபூ – விலக்கு இருக்கும். அந்த விலக்க விலக்கப்போற – கட்டுடைக்கப் போற மாதிரி நான் சொல்வேன்! நீ அப்படியே எழுதணும். ஏதாவது மாத்தி எழுதினே உன்னை தேமா புளிமா மாதிரி  கைமா பண்ணிடுவேன்.

இவ்வளவு பெரிய இலக்கிய வாத்திகிட்டே நான் எப்படி மாட்டிகிட்டேன்னு கேக்கறீங்களா ?  

இப்ப என்னப்பத்தி சொன்னாத்தான் உண்டு. பின்னாடி சொல்ல முடியுமோ தெரியலை. இந்தியாவில சென்னையில அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சு, அப்புறாம் அப்பா அம்மா கூட சிங்கப்பூர் போய் பத்தாவது வரைக்கும் படிச்சு ( அங்கதான் என் முதல் வெண்பா எழுதினேன்) இலக்கியப் பைத்தியமா திரிஞ்சு அப்புறம் சாட் – (SAT )எழுதி அமெரிக்கா போய்  ஸ்கூல் படிப்பு படிச்சு   சிகாகோ யுனிவர்சிடியில் டிகிரி முடிச்சிட்டு   இப்ப  டீச் இந்தியா திட்டத்தில இந்த ஓணாம்பாளையம் பள்ளியில் சம்பளம் வாங்காத வாத்தியாராக இரண்டு வருஷம் இருக்க முடிவு செஞ்சு வந்திருக்கிறேன். இது என்னோட ரிசர்ச் பிராஜக்டும் கூட. வந்து மூணு மாசம்தான் ஆச்சு. ஆசிரியர்கள், மாணவர்கள் , மதிய உணவு ஆயா , இலக்கிய வாத்தி எல்லாரையும் எனக்குப் பிடிச்சிருக்கு. எல்லோருக்கும் என்னையும்  பிடிச்சிருக்கு. அதில் இலக்கிய வாத்தியின் பெண் வைஜயந்தியும் சேர்த்தி. அவளைப் பத்தி இப்ப வேண்டாமே பிளீஸ் !

சும்மா சொல்லக்கூடாது ! இந்த இலக்கிய வாத்தி  பாக்கறதுக்கு கொஞ்சம்  ஜெயகாந்தன் ,பவா செல்லத்துரை , கி ராஜநாராயணன் ஆகிய மூவரின் கலவை போல இருப்பார். அவர் படிக்காத புத்தகம் கிடையாது. பாக்காத எழுத்தாளர் கிடையாது. போகாத இலக்கியக் கூட்டம் கிடையாது.  கைக்காசு செலவழிச்சு சென்னைக்குப் போய் இலக்கிய மேதைகளைஎல்லாம் சந்திச்சுப் பேசிட்டு வருவார். கோயமுத்தூரில  வளர்ந்தவர். ஆனா சொந்த ஊரு    நாகர்கோவில். வர்ற காசெல்லாம் இலக்கியத்துக்கு செலவழிக்கிற ஒரே வாத்தி அவர்தான். 

அவருக்கு ஒரே ஒரு மிகப் பெரிய ஆசை.  தன் இலக்கிய வாழ்க்கையைப் பத்தி ஒரு பயாகிரபி யாரவது எழுதனும்னு அவர் கொஞ்ச காலமா மனசிலேயே போட்டு  உழன்று கொண்டிருந்தவர் என்னிடம் அதைப் பத்திச் சொன்னார். புத்தகம் என்ன ஒரு பயாபிக் குறும்படமே எடுக்கலாம் என்று நான் அவரிடம் சொன்ன போது வைஜயந்திக்காக என்று நினைக்கலாம். அனால் அவளைப் பார்ப்பதற்கு முன்பே நான் அவருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன் என்பதுதான்  உண்மையான உண்மை. 

அவருடைய வாழ்வில் இலக்கியப் பயணம் என்பது பரந்து விரிந்து இருக்கிறது என்பதை அவரிடம் பேசின சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன்.   

அவருக்கும் சென்னையில் இருக்கிற குவிகம் அமைப்புக்கும்  குவிகம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்பு உண்டு. சுந்தரராஜன், கிருபானந்தன், கௌரி கிருபாநந்தன், வ வே சு ,  திருப்பூர் கிருஷ்ணன் , வைதீஸ்வரன், அழகியசிங்கர், ராய செல்லப்பா, டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன், பானுமதி , நாணு, சுரேஷ், ஆர்கே, முத்து சந்திரசேகர் , தில்லை வேந்தன், இரா முருகன்,  நாகேந்திர பாரதி, மந்திரமூர்த்தி , மீனாட்சி பால கணேஷ் , என் செல்வராசு, மியுசிக் கண்ணன், ராஜாமணி, ராமமூர்த்தி எஸ் வி வேணுகோபால் சாய் கோவிந்தன், சாந்தி ரசவாதி, சிறகு ரவி, ஹரிஹரன் தென்காசி கணேசன் ,வளவதுரையன், லதா ரகுநாதன் , விஜயலட்சுமி, கேள்விக்காரன்   இன்னும் எத்தனையோ பேரை நேரிலும் ஜூமிலும் சந்தித்து பர்சனலாக அனைவரையும் அறிந்தவர். குவிகம் மின்னிதழ் 2013  இல் துவங்கியபோது அதன் முதல் வாசகர் அவர்தான். அதிலிருந்து குவிகம் இல்லம், குவிகம் புத்தகப் பரிமாற்றம், குறும் புதினம், பதிப்பகம் முதல் சமீபத்திய அளவளாவல் நேர்காணல் , ஒலிச்சித்திரம் வரை  அனைத்தையும் கேட்டு ரசித்து தன் ஆணித்தரமான கருத்தைக் கூறும் முதல் வாசகர் நம்ம வாத்தியார்.  ஆவணப்படத்தில் இவர்களுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களைப் பற்றி வரவேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு. 

ஆகிய, குவிகம் நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி ! நீங்கள் அனைவரும் இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்கள். உங்களைப் பற்றி இலக்கிய வாத்தி நல்லதும் சொல்வார். நல்லது அல்லாததும்  சொல்வார். அவர் சொன்னதை வைத்து நான் எழுதும் குறிப்புகளை குவிகம் இதழில் தொடராக வெளியிட சுந்தரராஜன் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

எனக்கு அவரே ஒரு புனை பெயர் ( புனைப் பெயர் என்று எழுதுவது தவறு- இ வா) கொடுத்துள்ளார். அதுதான் பாரதன். என் உண்மையான பெயர் பரதன். 

(இ. வாத்தி சொல்ல சொல்ல வளரும்)