நான் நடிச்சதுல 20-30% படங்களுக்குத்தான் சம்பளம் வாங்கியிருக்கேன். மீதி..." - `காத்தாடி' ராமமூர்த்தி | Kathadi Ramamurthy talks about his personal life and acting career - Vikatan

 

குவிகம் மின்னிதழ் நகைச்சுவை சிறப்பிதழுக்கு எங்கள் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” நாடகங்களிலிருந்து சில சிரிப்பலைகளை வழங்குகிறேன். முடிந்தால் சிரித்து விடுங்கள்.. முடியாவிட்டால்.. பரவாயில்லை.. போனால் போகிறதென்று ஒரு புன்சிரிப்பு சிரிப்பதுபோல் நடித்து விடுங்கள்..

1. மூர்த்தி : சித்தப்பா.. நீங்க இந்த வீட்டுக்கு வந்து எத்தனை வருஷமாவுது. சும்மா தண்டச்சோறு சாப்டிட்டு உட்கார்ந்திருக்கீங்க..

சித்தப்பா: டேய்.. என்னடா அப்படிச் சொல்லிட்டே.. இந்த வீட்டுக்கு வந்த அப்புறம் நான் எப்படி இளைச்சுப் போயிட்டேன் தெரியுமா?

மூர்த்தி : நீங்களா? இளைச்சுப்போயிட்டீங்களா? யாரு சொன்னா?

சித்தப்பா: நான் தான் சொல்றேன்.. பாரு என் வேட்டி எவ்வளவு லூசாப் போயிருச்சு.

2. சித்தப்பா : டேய் மூர்த்தி.. நான் ஊருக்குக் கிளம்பறேன்.. இப்பவே என் கைப்பையை செக் பண்ணிக்க.. அப்புறம் சித்தப்பன் அதை எடுத்திட்டுப் போயிட்டான் இதை எடுத்திட்டுப் போயிட்டான்னு என் மேல பழி சொல்லாதே..

மூர்த்தி : என்ன சித்தப்பா.. உங்க மேல பழி சொல்லுவேனா? இருந்தாலும் செக் பண்ணிப் பார்க்கறது நல்லது தான்.. (சித்தப்பாவின் பைக்குள் கை விட்டுத் துழாவி).. ஆ.. நினைச்சேன்.. மாட்டிக்கிட்டீங்களா? (என்று ஒரு டம்ளரை எடுத்து) எவர்சில்வர் டம்ளர்.. மாட்டிக்கிட்டீங்களா?

சித்தப்பா: டேய் அந்த டம்ளர் என்னுது..

மூர்த்தி: எப்படிச் சொல்றீங்க?

சித்தப்பா: இதப்பார்.. டம்ளர்ல போட்டிருக்கு.. ஓட்டல் ராமபவனில் திருடியது..

3. கைலாசம் : டேய்.. ஏண்டா இப்படி சிகரெட் பிடிக்கறே?

ரகுபதி : இப்படித்தான் சிகரெட் பிடிக்கணும்.. திருப்பி வெச்சுப் பிடிச்சா சுட்டுரும்..

கைலாசம் : அடேய்.. சிகரெட் பிடிச்சா கேன்சர் வரும்..

ரகுபதி: மடையா.. எனக்குத் தெரிஞ்சு சிகரெட் பிடிச்சா புகைதான் வரும்..

4. ரகுபதி : ஐயங்கார்.. இன்னிக்கு என்ன சமையல்?

ஐயங்கார் : புடலங்காய் சாம்பார்.. ரசம்..

ரகுபதி: ஐயங்கார்.. சாம்பார்ல வெங்காயத்தை முழுசு முழுசாப் போட்டா எனக்குப் பிடிக்கும்னு நான் சொன்னதென்னவோ வாஸ்தவம்தான்.. அதுக்காக நீங்க அதே ப்ரின்சிபலை எல்லாக் காய்க்கும் உபயோகப்படுட்தக் கூடாது..

ஐயங்கார்: என்ன சொல்றீங்க?

ரகுபதி: இப்படித்தான் போன வாரம் லஞ்சுக்கு புடலங்கா சாம்பார் கொடுத்து அனுப்பிச்சீங்க.. நான் கேரியர்லேர்ந்து புடலங்காயை எடுக்கறேன்.. அது திரௌபதி வஸ்த்ரஹரணம் மாதிரி வந்துண்டே இருந்தது.. எனக்கு ஆபீஸ்ல லஞ்ச் அவர் அரை மணிநேரம்.. இதுல புடலங்காயை இழுக்கவே நான் கால் மணிநேரம் செலவு பண்ணிட்டா அப்புறம் எப்ப சாப்பிடறது?

ஐயங்கார் : அது எங்காத்துத் தோட்டத்துல காய்ச்சுது.. உமக்குப் பிடிக்குமேன்னு பறிச்சிண்டு வந்தேன்..

ரகுபதி : புடலங்கா காய்க்கும்போது முழுதுசாத்தான் காய்க்கும்.. அது சுவபாவம் அப்படி. நாம சாம்பார்ல போடும்போது நறுக்கி நறுக்கி போடலாமே.. சரி.. ஆபீஸ்ல லஞ்ச் கொடுத்துட்டு அப்படி திரும்பி வர வழில டெய்லர் பாவா ராவ்கிட்ட ஒரு பேண்ட் ஆல்டர் பண்ணக் கொடுத்திருக்கேன்.. வாங்கிண்டு வாரும்.

கைலாசம்: யாரு? நம்ம டெய்லர் பாவா ராவா? அவன் டைட்ஸ்லாம் ரொம்ப நல்லாத் தெப்பானே..

ரகுபதி: அவன் சாதாரண பேண்டையே டைட்டாத்தான் தெப்பான்.. ஒரு பேண்டை ரொம்ப டைட்டாத் தெச்சுட்டான்.. ஒரு லூசு வெச்சுக் கொடுடான்னு சொன்னேன்.. பயங்கர லூசு வெச்சுட்டான்.. அன்னிக்கு அந்த பேண்டைப் போட்டுண்டு ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்டுட்டு நான் எழுந்திருக்கறேன்.. நான் எழுந்துண்டுட்டேன்.. பேண்ட் சீட்டுலயே இருக்கு..

5. ரமணி: செட்டியார்.. என்ன லேட்டு?

செட்டியார் : அதையேன் கேட்கறீங்க? என் மவன் பேனாவை விழுங்கிட்டான்.

ரமணி : ஐயையோ.. பேர் என்ன?

செட்டியார் : பார்கருங்க..

ரமணி : பேனா பேர் இல்லை.. உங்க மகன் பேரு..

செட்டியார் : ராமுங்க.. எட்டு வயசாவுது..

ரமணி : என்னது.. எட்டு வயசு மகன் பேனாவைப் விழுங்கிட்டானா?

செட்டியார் : இதென்னங்க பிரமாதம்.. அவன் பிறந்த உடனே அவம்மாவையே விழுங்கிட்டானே..

6. ரகோத்தமன் : என்ன.. உன் பிரெண்டோட Small Scale Industryல நீ பார்ட்னரா சேரப் போறயா? ஆமா என்ன பிராடக்ட்?

ரமணி : Small Scale.. இப்ப பள்ளிக்கூடப் பசங்களுக்கு அரையடி ஸ்கேல் பண்ணிண்டிருக்கான்.. நான் போய் பார்ட்னரா சேர்ந்த உடனே முழு அடி ஸ்கேல் பண்ணப் போறான்..

7. குணா : என்னது.. அவனுக்குக் காதுல பலமா அடிபட்டு பெரிசா கட்டு போட்ட உடனே கண்ணு தெரியலையா? எப்படி?

மாரி : அவன் தான் சோடாபுட்டி கண்ணாடியாச்சே.. காதுல கண்ணாடியை மாட்ட முடியாம அவனுக்கு எதுவுமே தெரியலை..

– எஸ்.எல். நாணு