
என் பொண்ணு இறந்துட்டா.
இப்பதான் சில நிமிஷம் முன்னாடி. இன்னும் உடல் சூடு கூட அடங்கலை.
மனசுக்குள் இனம் புரியாத வேதனையுடன், லேசாய் ஒரு நிம்மதியும் எழுந்தது. அப்பாடாங்கற நிம்மதி. அவளின் தொல்லைகள், அவள் மூலம் மற்றவர்களின் தொல்லைகள் என்று அனைத்துக்கும் ஒரு விடுதலை.
சாருமதி இறந்துட்டா என்ற வார்த்தை, ஒவ்வொருவரின் மனதிலும் நிச்சயம் ஒரு ரிலாக்சை உண்டு பண்ணும்.
எனக்கு நல்லா தெரியும். நானே நினைச்சேனே.
“ஒரு தாயா நான் நினைக்கலாமா?
“கூடாது தான். ஆனா என் குழந்தை சிரமப்படக் கூடாதுன்னு நினைக்கற தாய் நான்.”
நான் சொல்றது யாருக்கும் புரியாது. ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளே நில்லுன்னு பொண்ணை வற்புறுத்தற உலகம் தானே. நீ அம்மா. தியாகம் செய். அழு. குழந்தை போச்சு. உலகை வெறுத்து வாழுன்னு உபதேசம் செய்யும். மாறி நடந்தா, அவ திமிர் பிடிச்சவ. பெத்த பொண்ணை பறி கொடுத்துட்டு எப்படி ஜாலியா வாழறா பாருன்னு தூற்றும். என் மனசுல இருக்கிற கொதிப்பை யாரால் அறிய முடியும்?
அதுசரி. மனசுல ஓடற எண்ணங்களை எல்லாம் வெளிப்படுத்த முடியுமா? சரியான வார்த்தைகள்தான் உண்டா? உங்க வலி வேற, என் வலி வேற. வார்த்தைகள் மூலம் எல்லாவற்றையும் மிகச் சரியாக வெளிப்படுத்தறதுங்கறது ஊமை, குருடன் கிட்ட விளக்கற விஷயம் மாதிரிதான்.
ஆனா நம்ம மனசுக்குள் இருந்து பகவான் தானே பாக்கறார். இந்த உணர்வுகள் கூட அவர் தந்தது தானே! இந்தக் குழந்தையும் அவர் தந்ததுதான்.
“அம்மாடி உன் கர்ம வினை தீர நீ இந்த மாதிரி ஜென்மம் எடுக்கணும். உன்னை பத்திரமா பாத்துக்க சரோஜாவால் தான் முடியும். போன்னு சொல்லி அனுப்பி விட்டுட்டார்.
வந்து என் வயித்துல மூத்த குழந்தையா பொறந்துட்டா. ஆச்சு. இருபத்தெட்டு வயசு வரைக்கும் இருந்துட்டு, சட்டுன்னு இந்த உடல் பந்தங்களை உதறிட்டுப் போய்ட்டா.
எப்பவும் என் மேல் காலை போட்டுண்டுதான் தூங்குவா.
நேத்து ராத்திரி அப்படி படுத்தவ என் மேலயே மூத்திரம் போய் வச்சிருந்தா.
“என்னடி குழந்தே இப்படிப் பண்றே?”- நான் கேட்டுண்டே அவளை நகர்த்தி, அவ துணி, என் துணி எல்லாத்தையும் மாத்தி, வேற ஜமுக்காளம் போட்டு அதுல இழுத்து விட்டா அப்படியே துணியா கிடந்தப்பவே புரிஞ்சு போச்சு.
என் குழந்தை பயணம் கிளம்பிட்டா.
என் பிரார்த்தனை பலிச்சுடுத்து.
என்ன அப்படிப் பாக்கறீங்க? பெத்த குழந்தை சாகணும்னு ஒரு தாய் நினைப்பாளா?
“நான் நினைச்சேனே. எனக்கு முன்னாடி என் குழந்தை செத்துடணும்னு.
ஏன்னா என் குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட்.
அதுக்கு என்ன அர்த்தம்? எனக்குத் தெரியாது. நான் எட்டாம் கிளாஸ் தாண்டலை. ஆனா ஆளாளுக்கு, என் பொண்ணு ஆட்டிசம், மூளை, வளர்ச்சி இல்லை. மெண்டலி ரிடார்டர்டு, பைத்தியம்னு. ஆனா நான் சொல்றேன், அது பரப்பிரம்மம், தெய்வக் குழந்தை. அது புரியாம அவளைப் பார்த்துச் சிரித்து, ஏளனம் செஞ்சவங்க தான் பைத்தியம்.
அமைதியா உட்காந்துண்டு இருக்கும். பேச்சு வரலை. சாப்பாடு தந்தா சாப்பிடும். இல்லைன்னா அப்படியே உட்கார்ந்துண்டு, இருக்கிற இடத்துலேயே மூத்திரம், மலம் கழிச்சிண்டு கெடக்கும். நானா பாத்து சரி செஞ்சா உண்டு. யாரும் கண்டுக்க மாட்டா.
வேற யாரு இங்க இருக்கா? சாருவோட அப்பா, அப்புறம் நான்தான். ஒரு புள்ளை இருக்கான். அவன் ஜெர்மனியில் இருக்கான். அவன் பொண்டாட்டி நல்லவதான். என்னைச் ’ச்சீ’ன்னு சொல்லாம இருக்காளே, அதுவே என் அதிர்ஷ்டம். ஆனா சாருவை ’ச்சீ’ன்னு சொல்லிட்டா.
அவ வந்திருந்தப்போ, மலம் கழிச்சி சாரு அதைக் கழுவாம அப்படியே போய் அவளைக் கட்டிண்டா. நாட்டுப் பொண்ணுக்கு அருவருப்பா இருக்கும்ல? ’ச்சீ’ன்னு தள்ளி விட்டுட்டா.
நான் கிச்சன்ல வேலையா இருந்தேன்.
பிள்ளை வேகமா வந்தான் என்கிட்ட.
“அம்மா இவளை இனி வீட்டுல வச்சுக்காதே. இந்த மாதிரி ஆளுங்களுக்குன்னு ஹோம் இருக்கு. அங்க விட்டுடலாம்னான். மனசு பொங்கித்து. அன்னைக்குத்தான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன். நான் சாகறதுக்கு முன்னாடி என் குழந்தை போயிடணும்னு.
என் பிள்ளை கிட்ட சொன்னா சந்தோஷப்படுவான்.
அடடா, நான் சாரு அப்பா கிட்டயே இன்னும் சொல்லலையே.
குழந்தையை காலை இறக்கி விட்டேன். வெளியில் வந்தேன்.
இவர் பூப்பறிச்சி தட்டுல வச்சிருந்தார். செம்பருத்தி, நந்தியா வட்டை, ரோஸ் எல்லாம் இருக்கும். சாரு எந்நேரமும் அது பக்கத்துலதான் நின்னுண்டு இருப்பா. மணிக்கணக்குல.
“சாரு எழுந்துட்டாளா? பால் வாங்கிண்டு வந்துட்டேன்.”
“உடனே உங்களுக்கு காபி வேணுமா?”
“சாருவுக்கு தரணும்ல?”
“வேண்டாம்.”
“ஏன்?”
“அவ செத்துட்டா.”
“என்னது?” அவர் அலறினார். என்னதான் இருந்தாலும் பெத்த குழந்தை இல்லையா?
“உளறாதே. மயக்கமா இருக்கப் போறா.”- அவர் வேகமாக உள்ளே ஓடினார். பக்கத்து வீடுகள் வந்தது. எதிர் வீட்டில் ஒரு டாக்டர் இருந்தார். அவர் வந்து ’சாரு இறந்துட்டா’ என்று உறுதிப்படுத்தினார். இவர் இடிந்து உட்கார்ந்தார். மேல் வீட்டில் குடி இருக்கும் கேஷியர் தானாக வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். தெரு முழுக்க விஷயம் பரவ, இவரின் தங்கை பையன் பாலு வந்து விட்டான். அவன்தான் எங்களுக்கு ஆதரவு. அடிக்கடி வந்து பார்ப்பான்.
இங்க வீட்டில் யாருக்கானும் உடல்நலம் சரியில்லை என்றால் அவன்தான் எல்லாம் செய்வான். இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது, சாரு கீழே விழுந்து கால் உடைந்த போது, எனக்கு கருப்பை எடுத்த போது பாலு தான்.
என் பிள்ளை உடனே கிளம்பி வர முடியாது. இதற்கெல்லாம் அவன் அடிச்சுப் பிடிச்சு வர முடியுமா? பணம் அனுப்பிடுவான். பாலு தான் சகலமும் பாத்துண்டான்.
கடவுள் யாரையும் நிர்கதியாய் விடறதில்லை. எதோ ஒரு மனுஷா ஆதரவைக் காண்பிப்பார்.
இப்பவும் அவன் தான் நின்னான்.
“நீங்க உட்காருங்கோ மாமா” என்று சொல்லி, அவரிடம் கேட்டு ஒவ்வொன்னையும் செய்ய ஆரம்பித்தான். அந்த மனசு எப்படி கொந்தளிக்கும்னு எனக்குத் தெரியும்.
சாரு பொறந்து நாலு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தா. ஒண்ணாங் கிளாஸ் கூடப் போனாளே. அப்புறம்தான் செயல்ல மாற்றம் தெரிஞ்சு டாக்டர்கிட்ட காட்டி, அவர் கண்டுபிடிச்சு இவ ஸ்பெஷல் சைல்டுன்னு சொல்லி…!
அந்த நாட்களை நினைக்கவே முடியாது. கொடுமையான நரக வேதனை நாட்கள். இவர் இடிஞ்சு உட்காந்துட்டார்.
என்னவோ சொல்றோம் ஆண்கள்னு. ஆனா ரொம்பப் பூஞ்சை மனசு இவங்களுக்கு. பொண்களோட தைரியத்துல தான் இவங்க செயல் படறதே. நான்தான் தெளிந்தேன்.
“இதோ பாருங்க. பகவான் நம்பளை நம்பி இந்தக் குழந்தையை அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் இவ நம்ம குழந்தை. பாத்துக்கலாம்.”
“நம்ம காலத்துக்குப் பிறகு இவளை யார் பாத்துப்பா?”
“அது பத்தி நமக்கு என்ன கவலை. பகவான் கவலை அது.”
நான் அப்படித்தான் நினைச்சேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு சாரு. அவளை நான் பத்திரமா பாத்துகிட்டேன். அவ வளர, வளர என் பொறுப்புகளும் அதிகரிச்சுது. அவ பரப்பிரும்மம் என்றாலும், அந்தந்த வயசுக் குழந்தைகளுக்கு உண்டான உணர்வுகள் இல்லாமையா இருக்கும்.
குழந்தைல அழகழகா கவுன், அப்புறம் பாவாடை சட்டை, பிறகு புடவை. காலைல எனக்கு எத்தனை வேலை இருந்தாலும், அவளை குளிக்க வச்சு, அலங்காரம் செஞ்சு ஹால்ல உட்கார வச்சுடுவேன். அப்போ என் மாமியார் இருந்ததால அவங்க பார்வைல உட்கார வச்சுட்டு என் வேலைகளைப் பார்ப்பேன்.
ஆனா அவங்க, என் நாத்தனார், என் பையன் பாலாஜி எல்லாரும் சாருவை பைத்தியம்னு சொல்றப்போ, மனசு துடிக்கும். அதுவும் பாலாஜி ’என் பிரண்ட்ஸ் வரப்போ இவளை வெளில விடாதே’ங்கறப்போ மனசு கொதிக்கும்.
அவன் கல்லூரி நண்பனும், என் மாமா ஒருத்தரும் இந்தக் குழந்தை கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தப்போ, அவங்களை செருப்பால அடிச்சு விரட்டினேன். அப்பவும் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினாங்க.
“நீ இருக்கிற வரைக்கும் அவளைக் காப்பாத்துவே. உனக்குப் பிறகு?”- பாலாஜி கேள்வி கேட்டான்.
“நீ பாத்துக்கறியா?”
“எனக்கென்ன தலைவிதி?”
“அப்போ உன் வேலையைப் பார்த்துண்டு போ.”
அவனே தான் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுண்டான். நான் போகலை. இவர் மட்டும் போய்ட்டு வந்தார். சாரு மாதிரி இவர் இன்னொரு பரப்பிரம்மம். நான் சாருவுக்கு என்னென்ன கேக்கறேனோ, எல்லாம் வாங்கித் தருவார். அமைதியா பாத்துட்டு போயிடுவார்.
நகைக்கடை, பட்டுப் புடவை விளம்பரத்துல வர பெண்கள் மாதிரி அழகா அலங்காரம் செய்வேன். மாதா மாதம் மருதாணி வச்சு, தலையை எண்ணெய் தேச்சு தண்ணி விட்டு, ஒரு பியூடிஷியனை வரச் சொல்லி அழகு சிகிச்சை செய்து அற்புதமா வச்சிருப்பேன்.
தங்க விக்கிரகம் மாதிரி இருப்பா தெரியுமா? தகதகன்னு ஒரு நிறம். அதுவும் வயசுக்கு வந்த பெறகு அப்படி ஒரு மினுமினுப்பு. எதுக்கு பகவான் அப்படி ஒரு அழகைக் கொடுத்தார்னு தெரியலை.
அவ அழகுன்னுதான் பார்த்தாங்களே தவிர, மன வளர்ச்சி இல்லாத குழந்தைன்னு யாருக்கும் தெரியலை. அவளை விட்டு நான் விலக மாட்டேன். ஒரு நிமிஷம் அந்தப் பக்கம், இங்கன்னு விலகினது இல்லை. கண் கொத்திப் பாம்பா காத்திருந்தும் ஒரு மிருகம் அவகிட்ட அத்து மீறிடுச்சு. அதுக்கும் கருணை காட்டினா சாரு.
என் மாமியார் இறந்தப்போ நான் ஒரு நாள், நாலு தெரு தள்ளி இருந்த என் மச்சினர் வீட்டுக்குப் போயிட்டேன். அங்கதான் அவங்க காரியம் நடந்தது. மாடியில குடியிருந்த பெண்ணுகிட்ட பாத்துக்கச் சொல்லிட்டுதான் போனேன். அவ ரேஷன் கடைக்குப் போகணும்னு அவ மாமனார் கிட்ட சாருவை ஒப்படைச்சிட்டுப் போயிருக்கா. அந்த மிருகம் பெண் அப்படின்னு தானே பார்த்தது.
என் குழந்தைக்கு தொடுதல் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கேன். அவன் தொட்டதும் கத்தியிருக்கா. அந்த மிருகம் அவளை அடிச்சிருக்கு. சாரு அவனை எட்டி உதைச்சு, கையைக் கடிச்சு வெளில ஒடி வந்திருக்கா. அதுக்குள்ளே அவனுக்கு அதிர்ச்சியில ஸ்ட்ரோக் வந்துருக்கு. சாரு போட்ட கூப்பாடுல, அக்கம் பக்கம் ஓடி வந்து நிலைமையைப் புரிஞ்சுகிட்டு, அவனை ஹாஸ்பிடல் கொண்டு போனது.
அந்தப் பொண்ணு ஆயிரம் தரம் மன்னிப்பு கேட்டுது.
என் சாரு அவனை மன்னிச்சா போதும்னேன்.
அவன் வந்தான். கை, கால் விளங்கலை. கண்ணீர் மட்டும் வழிஞ்சது. அவன் கண்ணீரைத் துடைத்து, தண்ணீர் கொடுத்தா என் தெய்வம். கதறி அழுதது அந்தக் குடும்பம்.
பாலாஜி கூட நெகிழ்ந்து போயிட்டான்.
“இந்த புத்திக்கு இது கூடத் தெரியுதா?”
“அவ புத்திக்கு என்னடா குறை. சொல்லப் போனா அவதான் முழுமையான மனுஷி. நீங்கதான் மன வளர்ச்சி இல்லாதவங்க.”
“…”
ஆனா பாலாஜியும் அவளை ரொம்ப வெறுத்தான். கல்யாணத்தப்போ அவளைக் கூட்டிண்டு வரக் கூடாதுன்னு சண்டை. அப்படின்னா நானும் வரலைன்னு சொல்லிட்டேன்.
“என் அக்கான்னு சொல்ல ரொம்ப அவமானமா இருக்கு.”
“எல்லாம் நல்லா இருந்தாத்தான் உறவுன்னு இல்லை. எதுவும் சரியா இல்லாதப்பவும் அன்பா இருக்கறதுதான் அக்கறையான உறவு. உனக்கு அவமானம்னா நீ இனி மேல இங்க வராதேன்னு சொல்லிட்டேன்.”
“நான் தான் உனக்குக் கொள்ளி போடணும்.”
“தேவையில்லை. உடம்பு நாறிச்சின்னா, முனிசிபாலிடியில தூக்கிப் போட்டுடுவான்”
என் பதிலில் கோபம் வந்து போனவன் தான் பாலாஜி. அஞ்சு வருஷம் ஆச்சு.
வராட்டிப் போறான்.
செத்த பிறகு அழுது பிரயோஜனம் இல்லை. இருக்கற வரை அவங்ககிட்ட அன்பா அனுசரணையா இருக்கணும். புத்தி உள்ளவங்களோ, இல்லாதவங்களோ, அதைப் பத்தி கவலை இல்லை. தன்னைப் போலவே ஒரு மனித உயிர். நேசிப்பும், பரிவும் இருந்தா எந்த வன்முறையும் இல்லையே.
சாரு எல்லார் கிட்டயும் எவ்வளவு அன்பா இருப்பா தெரியுமா?
யாரானும் வந்தா நான் சொல்லாமலேயே தண்ணீர் கொண்டு வந்து தருவா. அவங்க பக்கத்துல சிரித்தபடி நிப்பா. பாலாஜின்னா உயிர். ஆனா அவன் அக்காவை வெறுத்தான்.
அவ்வளவுதான் மனிதர்கள். அவ்வளவுதான் மனித வாழ்க்கை. மரணம் தலைக்கு மேல நின்னுகிட்டே இருக்கு. அதை உணர்ந்து நடக்கணும். மனித வாழ்க்கை பாறை மாதிரி.
எப்பவும் பாறைகள் மேல் அலைகள் மோதிகிட்டே தான் இருக்கும். அதனால் ரெண்டும் சலிச்சிக்கறது இல்லை. அதது வேலையை அதது செஞ்சுகிட்டேதான் இருக்கும்.
நல்லதோ கேட்டதோ வாழ்க்கை நகர்ந்து கொண்டே தான் இருக்கும். சலித்துக் கொள்ளலாம், ரசிக்கலாம். வளைந்து, வளைந்து. அன்பையும், கருணையையும் அள்ளி வழங்கலாம்.
என் சாரு வழங்கினாள். மேல் வீட்டுப் பெண்ணோட மாமியார் தன் கணவனின் செய்கைக்காக வந்து நின்னு அழுதா. அப்போ சாரு செஞ்சது எதிர்பாராமல் செய்த செயல்.
அந்த அம்மாவின் கண்ணைத் துடைத்து விட்டாள். தத்தித் தத்தி நடந்து போய் தன் பட்டுப் புடவை ஒன்றைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினாள். கதறி அழுதாள் அந்த அம்மா.
என்னையும் கலங்க வைத்தாள் என் சாரு.
அதன் பிறகு சாருவுக்கு நான் சேர்த்த எட்டு பவுன் நகையை இரண்டு ஏழைக் குழந்தைகளின் கல்யாணத்துக்குக் கொடுத்தேன். அநாதை இல்லக் குழந்தைகளின் படிப்புக்கு சில நகைகளை, பட்டுப் புடவையை விற்று, அவள் கையால் பணத்தைக் கொடுத்தேன்.
பாலாஜி கத்தினான்.
“அவளையே வேண்டாம்னா பிறகு அவ நகைகள் உனக்கெதுக்கு?”
அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
“பாலாஜிக்குச் சொல்லணும்ல?” என் தங்கை கணவர்.
விஷயம் தெரிஞ்சு எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டா. துக்கம் விசாரிக்கறேன்னு ஆளாளுக்கு கிளற ஆரம்பிச்சாங்க.
“இதோ பாருங்க. அது நல்ல ஆத்மா. யாருக்கும் தொந்தரவு தராம போயிட்டா. அவ மரணம் அவளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரு விடுதலை. என் காலத்துக்கு அப்புறம் அவ நிலை என்னங்கற கவலைக்கு தீர்வு சொல்லிட்டா. எல்லோருக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சின்னு எனக்குத் தெரியும். ஆக வேண்டியதைப் பாருங்க.”
“உனக்கு வருத்தமே இல்லையா சரோஜா?” – அண்ணா
“நான் ஏன் வருந்தணும்.? ஒரு பரப்பிரும்மம் என் வயத்துல வந்து பொறந்திருக்கு. எந்த ஒரு கல்மிஷமும் இல்லாம, மனசுல எந்த தீய உணர்வுகளும் இல்லாம தெய்வம் என் வயித்துல வந்து பொறந்திருக்கு. என்னை நம்பி பகவான் தந்த ஒரு உயிரை பத்திரமா பாதுகாத்து, அவர்கிட்ட திரும்பவும் ஒப்படைச்சிட்டேன். எவ்வளவு பெரிய கொடுப்பினை இது. நன்றி இறைவா.”
நான் நிதானமா, அழுத்தமா பேசினேன்.
“அதனால் தான் நான் அழலை. அற்புதமான ஒரு காரியத்தை செஞ்சுட்டு அழுதா, நான் அந்தக் குழந்தைக்கு துரோகம் செஞ்சவளாவேன். போங்க, போய் அவளுடைய இறுதி யாத்திரைக்கு ரெடி செய்யுங்க.”
என் கணவர் அருகில் வந்து என் கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.
முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
“நான் பாலாஜிக்கு தகவல் சொல்லிட்டு வரேன்.” எழுந்து போனார்.
மனசு பதற்றம் தணிந்து அமைதியா இருந்தது எனக்கு.
நான் உள்ள திரும்பி குரல் கொடுத்தேன்.
“யாரானும் சூடா ஒரு கப் காபி கொடுங்களேன்.”
