ஆழ்வார்களும் கண்ணதாசனும் – பகுதி 8 – சௌரிராஜன்

Kannadasan | by artist venkatesan | Venkatesan Purushothaman | Flickr*ஆண்டாள்*. ( *தொடர்ச்சி* )
 
கண்ணதாசனின் பாடல்களில்,   ஆண்டாள்  பாசுரங்களின் தாக்கம்Pin on ஆண்டாள் அழகி
அல்லது ஆண்டாள் பாசுரத்தோடான  கருத்தொற்றுமை  என்று எடுத்
துக் கொண்டால்,  அது ஒரு நீண்ட வரிசை.‌
இருப்பினும் ஒரு பாசுரம் , ஒரு பாடல் என்பதாகத்தான் என்னால் விவரிக்க எடுத்துக் கொள்ள முடியும்.
 
நீண்ட யோசனைக்குப்பிறகு,  நான் ஏற்கனவே கண்ணதாசனின் ஒரு பாடலை எடுத்துக் கொண்டு ஒரு அலசல்  கட்டுரை  எழுதி,  அக்கட்டுரையின்   இரண்டாம் பகுதியில் ஆண்டாள்  பாசுரத்தையும் உட்புகுத்தி விவரித்திருந்தேன்.  அது என் மனதிற்கு மிகவும் உவப்பாக இருப்பதால் அதையே மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.‌  பாடலும் பாசுரமும் அதேதான் என்றாலும் இந்த கட்டுரைக்காக எழுதும் அணுகுமுறை வேறாக இருக்கும்.
 
சரி, ஆண்டாளின் அருளிச்செயலான, *நாச்சியார் திருமொழி* யில் வரும் ஒரு பாசுரத்தை எடுத்துக் கொள்கிறேன். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான  பாசுரங்களில் இதுவும்  ஒன்று.‌
 
*கண்ண னென்னும்* *கருந்தெய்வம்*
*காட்சி பழகிக் கிடப்பேனை*
 
*புண்ணில் புளிப்பெய் தாற்போலப்*
*புறநின் றழகு பேசாதே*
 
*பெண்ணின் வருத்த மறியாத*
*பெருமான் அரையில்*
 
*பீதக வண்ண ஆடை கொண்டு* *என்னை வாட்டம் தணிய வீசீரே*
 
பொருள் :
 
கண்ணன் என்னும் கருநிறக் கடவுளை  எண்ணி உருகி ,  அவனோடு வாழ்வதாக கற்பனை கண்டு,  அந்தக் காட்சியே பழகிக் கிடப்பவளை , அவனை அடைய முடியவில்லையே என்று ஏற்கனவே மனம் நொந்து புண்ணாக இருக்க,  அதை மேலும் புண்ணாக்கும் விதமாக பழிப்பு காட்டாதீர்கள்.   (புண்ணில்  புளிப்பு எய்தது போல –  ஆஹா.
இதுதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்,  adding fuel to fire,  adding insult to injury,  etc ).
இங்கு இப்படி ஒரு பெண் வேதனையில் உழல்கிறாள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத,  என் வருத்தம் அறியாத அந்தப் பெருமானின் இடையில் உடுத்திய  மஞ்சள்  வண்ணப் பட்டாடையை என் மீது கொண்டு வந்து வீசுங்கள்.. அதனை நுகர்ந்து என் மன வாட்டத்தைச் சற்றே தணித்துக் கொள்கிறேன்.
 
அதாவது ஒரு குழந்தையை அதன் தாயார் கோபித்துக் கொண்டாலோ, மெல்ல  அடித்துவிட்டாலோ , அந்த குழந்தையானது அழுது கொண்டே,  அந்த தாயாரிடமே சென்று, அவளை கட்டிக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்.
அதுபோல,  பெண்ணான தன் வருத்தத்திற்கும்,  வாட்டத்திற்கும் காரணமான அந்தக் கண்ணனின் பட்டாடையையே கொண்டு,  தன் வாட்டத்தை தீர்க்க முற்படுகிறாள் நாச்சியார்.‌
 
இந்தப் பாசுரத்தில் இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.
 
*ஒன்று* ,
கண்ணனுக்கு எவ்வளவோ அடைமொழிகள் இருக்க,  கண்ணனை விவரிப்பதற்கு எவ்வளவோ சொற்கள் இருக்க,  *கண்ணன் எனும் கருந்தெய்வம்*  என்று நாச்சியார் கூறுவது.
 
*இரண்டு* ,
வாட்டத்தின் உச்சியில்,  மனம் வெதும்பி,  உரிமையுடன்,  கண்ணனை *பெண்ணின் வருத்தமறியாத பெருமான்* என்று கோபிப்பது அல்லது குற்றம் சாட்டுவது.
 
இந்த இரண்டு விஷயங்களும் என்னை கண்ணதாசனிடம் கொண்டு சேர்த்து விட்டன.
 
*நானும் ஒரு பெண்*  என்ற  திரைப்படத்தில் , R .சுதர்சனம் அவர்களின் இசையமைப்பில்,  பி சுசிலா பாடிய நமது கவிஞரின்  அருமையான பாடல்,  *கண்ணா கருமை நிறக் கண்ணா* .
 
பாடலுக்கான சூழல் என்று பார்த்தால், கருப்பு என்ற ஒரே காரணத்தால் தன்னை ஏற்க மறுக்கும் , தன் குணத்தை பார்க்க மறுக்கும் சொந்தங்களை நினைத்து தன் மனக்குமுறல் வெளிப்பட , கதாநாயகி பாடவேண்டும் என்பதுதான்.
 
கண்ணதாசன் யாரை கூப்பிடுவார், கண்ணனைத்தவிர.
 
தோட்டத்தின் நடுவில் , ஒரு மேடையில் ஜோராக நிற்கும் கிருஷ்ணன் சிலையை பார்த்து கதாநாயகி பாடுகிறாள்.
 
*கண்ணா கருமை நிறக் கண்ணா*
 
*உன்னை காணாத கண்ணில்லையே*
 
*உன்னை மறுப்பாரில்லை*
 
*கண்டு வெறுப்பாரில்லை* –
 
*என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை*
 
மேற்கண்ட பல்லவிக்கு விளக்கம் தேவை இல்லை.‌
 
பாடலின் முதல் சரணத்தில் கூறுகிறார்:
 
*மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா*
 
*நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா*
 
*இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல*
 
*இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா*
 
உனக்கு உவப்பான தோட்டத்தில் உனக்கு மட்டும் நல்ல இடமாக  நீ தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாய். ( நல்ல இடமாக  என்னை சேர்க்காமல்).  நீ சிலைதானே, என்  உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் என்று ஆற்றாமையை வெளிப் படுத்துகிறாள்.
 
பாடலின் இரண்டாவது  சரணத்தில் கூறுகிறார்:
 
*பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்*
 
*பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா*
 
*கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்*
 
*கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா*
 
எனக்கு, பொன் போன்ற மனதை தந்தாய், பூப் போன்ற நினைவையும் ( மெல்லிய உணர்வுகளையும்) தந்தாய். ஆனால் *பிறர் கண்களுக்கு* என் மனமும், குணமும் தெரியாமல் செய்து, என் நிறம் மட்டுமே தெரியும்படி செய்து விட்டாயே. நியாயமா?
யாரிடமாவது பட்ட கடனை அடைக்க வேறு வழி இல்லாமல் என்னை இப்படி படைத்தாயா என்று குமுறுகிறாள்.
 
பாடல் வழியாக வெளிப்படும்  கதாநாயகியின் வருத்தத்தையும் , கோபத்தையும் உணர்ந்து,  உள்வாங்க,  நாம் இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
 
மேலே குறிப்பிட்ட ஆண்டாள் பாசுரத்திலும்,  கண்ணதாசன் பாடலிலும் கண்ணன்,  கருமை நிறக்கடவுளாகவே சொல்லப்பட்டிருக்கிறான்.
 
அதேபோல,  பாசுரத்திலும் சரி,  பாடலிலும் சரி,  தலைவியானவள்,  தலைவனான கண்ணன் மீது வருத்தமுற்று குற்றம் சாட்டுகிறாள்.
 
*கண்ணனென்னும்* *கருந்தெய்வம்*
பாசுரத்தில் கண்ணன் தன்னை சேரவில்லையே என்று வருத்தமுற்று,  *பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்*  என்று கண்ணனை நிந்திக்கிறாள் .‌
 
*கண்ணா கருமை நிறக் கண்ணா* திரைப்பாடலில்,
கண்ணனைப் போல தானும் கருப்பாக இருந்தாலும்,  யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லையே, நிறத்தைக் குறிப்பிட்டு வெறுக்கிறார்களே,   இம்மாதிரி ஏன் படைத்தாய்
என்று கதாநாயகி கண்ணனை கோபிக்கிறாள்.‌
 
வருத்தத்திற்கான‌ காரணம் என்று பார்த்தால்,  பாசுரத்திற்கும் பாடலுக்கும் வேறுபாடு உள்ளது.  ஆனாலும் ஒற்றுமை என்று பார்த்தால்,  இரண்டிலுமே தலைவியானவள் தன் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கண்ணனை குற்றம் சாட்டுகிறாள்.
 
ஆக ஆண்டாள் பாசுரமானது  கவிஞரின் பாடலையும் , பாடலானது  பாசுரத்தையும் நினைவுபடுத்துவதில் வியப்பு என்ன ?
 
இதை,  பாசுரத்தின் தாக்கத்தினால் வந்த திரைப்பாடல் என்பதாக கொண்டாலும் சரி ,
பாசுரத்தை நினைவு கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல் என்பதாக கொண்டாலும் சரி.‌
 
சரி, ஆண்டாளுக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு,
கவிஞர் கண்ணதாசனை அடுத்த பகுதிக்கு அழைத்துச் செல்வோம்.
 
 
 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.