Jeans Tamil Movie Scene 03 Prashanth Nassar Aishwarya Rai, 45% OFF

ஹலோ அம்மா, என்னம்மா முடிவு பண்ணிருக்கே? டிக்கெட் புக் பண்ணட்டுமா? இல்ல இன்னும் யோஜனை பண்ணி முடியலையா ?.  அமெரிக்காவில் இருக்கும் கவிராஜன்  தன்  அம்மா கோமதியிடம் போன் மூலம் வாரம் ஒரு முறை பேசும் உரையாடலை துவக்கினான்.

“என் பிரண்ட் பார்வதி அங்கே போய் வந்தவ. பயமுறுத்தரா. அங்கே கூண்டிலே மாட்டிக்கிட்ட மாரி இருக்கும். நாம நினைச்சாக் கடைக்குப் போய் கறிவேப்பிலைக் கூட வாங்க முடியாதுங்கிறா’.

“அந்த அம்மாவை எங்கிட்டப் பேச சொல்லு. ரொம்ப ஓவரா அவ சொல்றா!. நம்பாதே அந்தக் கதையெல்லாம். நான் இருக்கிற ஏரியாவிலே, எதிர்த்தாப்பில கன்னடம் மாத்தனாடுபவரு.  இந்தப் பக்கத்திலே மதுரைக்காரர். இன்னொரு பக்கத்திலே தெலுங்கு செப்பரவ. கொஞ்சம் தள்ளி இந்தியிலே ‘கியா, கியா’ன்னுச்  சொல்றவங்க இருக்காங்க. என் பிரண்ட் நாகராஜன் அங்கிருந்து இங்கே வர்ரான்.  நான் அவன் கிட்டேச்  சொல்லியிருக்கேன். நீ அவன் கூடப் பத்திரமா வா. கொரானாவினால வீடியோவில் தான் பாப்போம். ரொம்ப வருஷம் ஆச்சி. நீ கண்டிப்பா வரணும்”.

“ரெண்டு மாசம் ஆகட்டுமேடா!.”

“அம்மா, அப்போ ரொம்ப குளிர் ஸ்டார்ட் ஆயிடும். ரொம்ப கஷ்டமாயிடும். நீ இப்ப வந்தா, கொஞ்சம் ஊரெல்லாம் சைட்-சீயிங் பார்க்கவும் முடியும்.”

“சரிப்பா, என்னவோப் பண்ணு. உன் இஷ்டம். வரேன். அப்புறம் வந்தப்பிறவு ‘போ போ’ ன்னு சும்மா சொல்லக்கூடாது. நானே விரும்பறப்போ போகணும்’.

“சரிம்மா. உன் இஷ்டம் போல வரலாம் போலாம்.”.

பக்கத்தில் அத்தனையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் மனைவி காமினி. “என்னங்க, அம்மா வரப்போறாங்களா? அவங்க வேணாம்னா எதுக்கு கட்டாயப்படுத்தி வரச் சொல்றிங்க?. விட வேண்டியது தானே”.

“உடம்பு ஓரளவு நல்லா இருக்காங்க. இப்ப வந்தா கொஞ்சம் ஓடியாடி நாலு இடமும் பார்க்க முடியும். பின்னே எப்பத் தான் வர முடியும்?. மனைவி காமினியிடம் விவாதம் ஆரம்பித்தது. காமினிக்குத் தன் மாமியார் கொஞ்சம் பழமையான கட்டுப்பெட்டி என்று அவ்வளவாகப் பிடிப்பதில்லை. கோமதி ‘பஜனை பாட்டு’ என்று உற்சாகமாக இருப்பவள். இன்றைய டெக்-உலகில் சொன்னால் ‘அந்த காலத்து பழைய பஞ்சாங்க மனுஷி’.

“எங்க அம்மா அப்பா வந்தப்போ ரெண்டு மாசம் தான் இருந்தாங்க. அவங்களும் ரெண்டு மாசம் மட்டும் இருந்தா தேவல”.

“அந்த மாதிரியெல்லாம் கம்பேர் பண்ண முடியுமா?. உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் இன்னும் ரிட்டையர் ஆவலே. ஊரில் வேலை இருக்கும். நாம ஒன்னும் விரட்டியடிக்கலையே. அவங்களாத் தானே போனாங்க.  எங்க அம்மா வீட்டு வேலைப் பார்த்துக்கிட்டு  சும்மாத் தானே இருக்காங்க. அவங்க இஷ்டப்பட்ட மாதிரி எத்தன நாளாவது இருக்கட்டும்”.

“இல்ல, அவங்களுக்கு சுகர், BP, கொலஸ்டெரால்-ன்னு நெறைய தொந்தரவு இருக்கு. இங்கே வந்து எதாவது ஆச்சுன்னுனா என்னப் பண்ணறதுன்னு யோசிக்கிறேன். ”.

‘நீ ஒன்னும் யோசிக்க வேணாம். நல்லதா எல்லாம் நடக்கட்டும்னு வேண்டிக்குவோம். ஒருத்தரோட முடிவு தேதி அந்த ஆண்டவன் கையில் மட்டும் தான் இருக்கு. சரியா?’.

கோமதி தன் தோழி பார்வதியிடம் சென்று, அமெரிக்காவிற்கு என்னன்ன கொண்டுச் செல்லலாம் என்று ஆலோசித்து பட்டியல் போட்டாள். தேங்காய் விட மாட்டார்களாம். பருப்பெல்லாம் சில சமயம் விடுவார்கள். சில சமயம் விட மாட்டார்கள். வெள்ளைப்பொடி மாதிரி இருந்தா போதை பொருள் இருக்கான்னு கூட செக் பண்ணுவாங்களாம். கஷ்டம்ஸ் ஆபிசர் பொறுத்தது. நாகராஜன் ஒரு தடவை வந்து எல்லா பாக்கெட்டிலும் அழியா மையால் ஐட்டம் என்னவென்று எழுதிப்போட்டான். எல்லாவற்றையும் சூட்கேசில் நல்லவிதமாக பேக் செய்ய உதவி செய்தான்.

புறப்படும் நாளும் வந்தது. கோமதிக்கு விமானப் பயணம் பற்றி விதவிதமான பயங்கள். இருபது மணிக்கும் மேலாக கூண்டில் இருப்பது போல விமானத்தில் அடைபட்டுக்கொண்டு இருக்க முடியுமா?. வீட்டில் இருக்கும் போது எதாவது காரணத்தால் வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்கும் பழக்கம் கொண்டவள். காய்கறிகாரர்கள் முதல் தையல்காரன் வரை இப்போதெல்லாம் ஸ்பீக்கர் வைத்து அலறியடிக்க வைத்து வியாபாரம் செய்ய தெரு தெருவாக வருகிறார்கள். அதையெல்லாம் வேடிக்கைப்பார்க்க வெளியே வரும் வழக்கம் உள்ளவள்.

நாகராஜன் கூட வருவது தைரியம் கொடுத்தது. வீல்-சேர் உதவியும் வரவழைத்துயிருந்ததால், விமான நிலையத்தில் சுலபமாக எல்லாம் கடந்து, இம்மிகிரேஷன் சிக்கலின்றி முடித்து சிகாகோ சென்றடைந்தார்கள்.

 வீட்டிற்குப் போகும் வழியில்  அதிசய உலகத்தைப் பார்ப்பது போல் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கோமதியின் முதல் வெளிநாட்டு விஜயமல்லவா!. எல்லோருக்கும் கனவு தேசமான அமெரிக்கா அவளுக்கு மட்டும் ஏனோ கொஞ்சம் அலர்ஜி மாதிரி ஒரு உணர்வு.

சிகாகோவில் வில்லா போன்ற பெரிய வீடு. மூன்று பெரிய படுக்கையறைகள். கோமதி செட்டில் ஆவதற்கு கொஞ்சம் டைம் பிடித்தது. சமையல் அறையில் உள்ள சாதனங்களுடன் உறவாடி பழகிக் கொள்ள இன்னும் கொஞ்சம் நேரமாயிற்று. மற்றபடி மிகுந்த சௌகரியங்களைக் கொண்டதாக இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவிலேயே ஒரு பத்து நிமிட நடையில் சென்று விடக் கூடியதாக ஒரு பார்க் மற்றும் ஒரு சமுதாயக் கூடம் இருந்தது. முதலில் ஒரு சில தடவை மகனுடன் அங்கு வந்து உலாவி பல இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்தாள். கவிராஜன் இருக்கும் வட்டாரத்தில் ஒரு பழக்கம் உண்டு. யாராவது புதியதாக அங்கு வந்திருந்தால் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இருக்கும். அப்பொழுது எல்லா குடும்ப நண்பர்களும் கலந்துக் கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த விதவிதமான உணவுகளை அவர்கள் சமைத்துக் கொண்டு வர வேண்டும். அதுதான் அங்குள்ள விதி.

கோமதி அம்மாளை வரவேற்கும் நிகழ்வு அன்று நடந்தது. அன்று கோமதி அம்மாள் புட்டு தயாரித்துக் கொண்டுச் சென்றிருந்தாள். மற்றவர்கள் இடியாப்பம்,  அடை, தோசை, மல்லிகை இட்லி என்று விதவிதமாகக் கொண்டு வந்திருந்தார்கள். கோமதி கொண்டு வந்திருந்தப் புட்டை அவர்கள் கொஞ்சம் ஆர்வத்துடன் வினோதத்துடன் பார்த்தார்கள். அத்தகைய சிற்றுண்டி உணவு இப்போதெல்லாம் உள்ளதா என்று அவர்களுக்குக் கொஞ்சம் ஐயம் வந்தது.

இந்தப் பிட்டுக்காக சிவபெருமானே மண்ணு சுமந்து இருக்கிறார் என்று அவர்களிடம் அதன் பின்னணியில் உள்ள கதையைச் சொன்னாள் கோமதி அம்மாள். அவர்களும் அதை ரொம்பப் புன்னகையுடன் ஆர்வத்துடன் கேட்டார்கள்.

அங்கிருந்தவர்கள் ஒருவர் அப்போ நாமும் இந்த பிட்டை வாங்கிவிட்டு மண் சுமக்க வேண்டுமா என்று சிரிப்புடன் கூற, அங்கே இருந்தவர்கள் கைதட்டக் கூட்டம் கலகலத்தது.

சில சமயம் எதிர் வீட்டு பாட்டி ஒருவர் அவருடன் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு வருவது உண்டு.  மகன் அம்மாவை தனியாக அனுப்ப விருப்பமில்லை. ஏனென்றால் கோமதிக்கு ஓரளவு ஆங்கிலம் புரிந்தாலும் பேச வராது. அதனால் எதற்கு வீண் வம்பு.  இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்தன நாட்கள்.  ஒரு நாள் அந்தச் சங்கத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாடுவதற்கு பொறுப்பாக தனியாகச் சென்று விட்டு வருகிறேன் என்று மகனிடம் கூறிவிட்டு நடையைக் கட்டினாள்.

இரண்டு மூன்று முறை போய் வந்து அந்த ரூட் வழக்கமாகி விட்டதால் மகன் அம்மாவை ஒன்றும் தடுக்கவில்லை.

‘சரி, ஜாக்கிரதையாப் போய்விட்டு வா. ஆனா ரூட்டெல்லாம் மாத்தாதே. வழக்கமா எப்பவும் போற ரூட்டிலேயே போய் வா’.

அவ்வாறு ஒரு தடவை தனியாக அவள் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நீக்ரோ பெண்மணி பக்கத்தில் வந்து ஆங்கிலத்தில் ஏதோச் சொல்ல இவள் ‘ஒன்றும் தேவையில்லை, நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்பது போல் சைகைக் காட்டினாள். அப்படியும், அந்த நீக்ரோ பெண்மணி அவளை விடுவதாக இல்லை. அவள் இவளுடைய சேலையை ரொம்பவும் பாராட்டி ‘இந்தியன் பியூட்டிஃபுல்’ என்று கூறி தான் ஒரு போட்டோ எடுத்துக் கொள்வதாகச் சொன்னாள்.  ‘சரி பரவாயில்லை’ என்று அவளுடைய புகழ் வார்த்தைகளில் மயங்கிய கோமதி முடிவாக ஒப்புக்கொண்டாள். பின்னர், அந்த நீக்ரோ பெண்மணி அவளை தனியாக ஒரு போட்டோவும் பின்பு இருவரும் ஒன்றாக இருப்பதைப் போல் செல்பி போட்டோவும் எடுத்துக் கொண்டாள்.

அந்த நீக்ரோ பெண்மணி அவளை ‘தேங்க்யூ’ என்று இரண்டு மூன்று முறை சொல்லி ரொம்பவும் பக்கத்தில் வந்து கட்டி அணைத்து திரும்பவும் நன்றி சொல்லி விட்டு தன்னுடைய காரில் போய்விட்டாள். கோமதி தன்னுடையச் சங்கத்திற்குச் சென்று நிகழ்ச்சிகளைப் பார்த்து முடித்துவிட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தாள். அப்பொழுது மகன் வந்து ஏன் ரொம்ப நேரமாகிவிட்டதுப் போலிருக்கிறது என்று வினவ, கோமதி மகனிடம் நடந்ததை விவரித்தாள்.

“அம்மா, நீ அவளுடைய புகழ் மழையில் நனைந்து விட்டாய் போலிருக்கிறது. நீ போய் டிரஸ் மாத்த வேண்டியதிருக்கும். அது சரி, உன் கழுத்தில் இருந்த தங்கநகைச் செயினைக் காணவில்லையே, கவனித்தாயா”.

அப்பொழுது தான் கோமதி தன் கழுத்தைத் தடவிப் பார்க்க, காணவில்லை அந்த தங்கநகை. அடடா,  அப்பொழுது தான் அந்த நீக்ரோ பெண்மணியின் சாகச கைவேலை அது என்றுத் தெரியவந்தது.

‘என்னம்மா. நீ இந்த மாதிரிப் பண்ணிட்டே. இங்கே ஒரு ஐந்து டாலர் டிப்ஸ் கொடுக்க முணுமுணுப்பே. இப்ப பாரு முழுசா பெரிய டிப்ஸ் மாதிரி அசால்டா கொடுத்து வந்து நிக்கிறே. அதான், நான் சொல்றது நீ தனியாப் போக வேணாம் என்று. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாக் கூட வேஸ்ட் தான். அவ்வளவாக, போலீஸ் இந்த மாதிரியான மேட்டரை ரொம்பவும் தீவிரமாக எடுத்துக்க மாட்டாங்க. அம்மா, நீ அந்த தழுவலுக்கு கொடுத்த விலை ஒரு லட்சத்துக்கும் மேலானது.  அவர்கள் எல்லோருக்கும் தெரியும், நம் இந்திய பெண்மணிகள் அணிந்திருக்கும் நகைகள் எல்லாம் மிகச் சிறந்தவை. 22 கேரட் இருக்கும்.  இங்கே ரௌடித்தனம் பண்றவங்க, நீங்க கொடுக்கலேன்னா சில சமயம் ஷூட் பண்ணிடுவாங்க. நம்ம அதிர்ஷ்டம். ஒன்னும் விபரீதமா நடக்கல” .

“அம்மாவுக்கு இன்னும் உஷார் பத்தலை  போலிருக்கு “. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த காமினி நடுவில் குத்திக் காட்டினாள்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நம்ம பெங்களுருவில் கூட இந்த மாதிரி எக்கசக்க ஏமாத்து வேலை நடக்கிறது தான். கோலம் போடறப்போ பைக்கிலே வேகமா வந்து செயின் புடிங்கிட்டுப் போறத எத்தனைத் தரம் பேப்பரில் படிச்சிருப்போம். இனிமே, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். கழுத்து செயின் வெளியேத் தெரியாமயிருக்க லைட்டா ஒரு ஸ்வட்டர் இல்ல,  ஓவர்கோட் போட்டுக்கணம்”.

“வந்து ஒன்றரை மாசம் தான் ஆவுது. ஒன்னரை லட்சம் போச்சு”.

“ரொம்ப கரிச்சிக் கொட்டாதே. இனிமே உஷாரா இருப்பா  அம்மா!. நீ கவலைப் படாதே”.

அம்மா தன்னிலுள்ள வேதனையைக் கொஞ்சம் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டாள்.  “இந்த மாசம் முடிஞ்சி அடுத்த மாசம், நான் போயிடறேன். சரியா?”.

“என்னங்க, அம்மா கோவப்பட்டு போயிறேன்கிராங்க. என்ன சொல்றிங்க?”.

“என்னம்மா சொல்றே!. எதுக்கு திடிரென்னுக் கிளம்பணும்? நடந்தது நடந்து போச்சு. இனிமே ஜாக்கிரதையா இருந்தாப் போச்சே”.

“நான் எங்கேயும் தூரமா போவல. உங்க பக்கத்துலே தான் இருப்பேன்”.

“என்னம்மா சொல்றே? ரொம்ப புதிர் போடறே?. போறேன்னும் சொல்றே. பக்கத்தில தான் இருப்பேன்னும் சொல்றே. குழப்பமா இருக்கே?”.

“இங்கே எதிர் வீட்டு ராஜி தெரியுமில்ல? மதுரைகாரர். அவன் பொண்டாட்டிக்குச் சமையல் ஒன்னும் சரியாய் தெரியல. ராஜிவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் அர்ஜெண்டா இந்தியாவுக்குப் போவணும் போலிருக்கு. என்னை அங்கே ரெண்டு மாசம் இருக்கச் சொல்றங்க. நானும் ஓகே-ன்னு வாக்கு குடுத்திட்டேன். அப்புறம், ஹைதராபாத் கோபால்ராவ் வேற அவங்க வீட்டுலே ரெண்டு மாசம் இருந்திட்டுப் போவனம்னுக் கேட்டிருக்காங்க. நானும் சரின்னு சொல்லிருக்கேன். நம்ம சங்கத்திலே பக்திப்பாட்டு சொல்லிக்கொடுக்க யாரும் இல்லையாம். தினமும், ஒரு ரெண்டு மணி நேரம் பாட்டு பாடம் எடுக்கணும். நானும் அதுக்கு சரின்னுச் சொல்லிருக்கேன். நம்ம ஊரு மாரி எல்லா நல்ல மனுசங்க இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ப்ளீஸ்டா, நான் இங்கியே இன்னும் நாலு மாசம் இருக்கேன். அதுக்கப்புறம் அந்த பகவான் எதாவது வழி சொல்லுவாரு. சரின்னுச் சொல்லுடா”.

கவிராஜனும் காமினியும் ஒருவரை ஒருவர் வினோதமாகப் பார்த்துக்கொண்டார்கள். கோமதி அமெரிக்கா போகவே முதலில் இஷ்டப்பட்டதில்லை.  காமினியும் ரெண்டு மாசத்துக்கு மேல் மாமியார் தங்க வேண்டாம் என்றே நினைத்தாள். கவிராஜன் மட்டும் ஆண்டவன் விளையாட்டுக்கு விட்டிருந்தான். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது சரியாகத் தான் இருக்கிறது. விதி வலியது சும்மாவாச் சொன்னார்கள்.