பிரமிக்க வைத்த புத்தகங்கள்-4 – மீனாக்ஷி பாலகணேஷ்

அதிசய மருந்து – ஜென்னிஃபெர் வாண்டெர்பெஸ்

Home | Author Jennifer Vanderbesபல சமயங்களில் நாம் படிக்கும் புத்தகங்கள் பிரமிப்பைவிட வேதனையை, நாம் (மனித இனம்) குரூரமாக வஞ்சிக்கப்பட்டதனை உணர்த்தும்போது, ‘தெய்வமே, இப்படியெல்லாமா நடக்கக்கூடும்?’ என, மிதமிஞ்சிய பயத்தில் நடுங்குகிறோம். யாரைத்தான் நம்புவது இவ்வுலகில்? என்ன, பீடிகை பலமாக இருக்கிறதே என எண்ணுகிறீர்களா? இது தேவைதான். சொல்லப்போகும் விஷயத்தைக்கேட்டால் நீங்களும் நடுநடுங்கி விடுவீர்கள்.

தாலிடோமைட் (Thalodomide) எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், கருவடைந்த பெண்களுக்கும் அவர்களது ‘காலைநேர உடல்சரியின்மை’ (நமது மொழியில் மசக்கை, morning sickness) எனும் நிலைக்காகவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அது ஒரு அதிசய மருந்தாகவே அறியப்பட்டது.

ஜெர்மனியில் 1956-ல் ஒரு பெண்குழந்தை காது மடல்களில்லாமல் பிறந்தது. தாலிடோமைட் எனும் மருந்தின் பயங்கரமான பக்கவிளைவுகளால் தாக்கப்பட்ட முதல் பலி இக்குழந்தை (இது பின்னாளில் கண்டறியப்பட்டது). குழந்தை தன் கருவில் இருக்கும்போது தாய் இந்த மருந்தை உட்கொண்டதன் விளைவு / பாதிப்பு இது. 1962ல் எடுத்த கணக்கின்படி 46 நாடுகளில் அடுத்தடுத்த ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட சிசுக்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டனர். கை கால்களில்லாமல் பிறந்த குழந்தைகள், தோளிலிருந்து மூன்று விரல்கள் குச்சிமாதிரி நீட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எனப் பலப்பல குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்தன. இவற்றுள் பல குழந்தைகள் பிறந்து சில நாட்களிலோ சில மாதங்களிலோ இறந்தும் போயின. (வேண்டுவோர் இணைய தளங்களுக்குச் சென்று இந்தப் படங்களைக் காணலாம்). எப்படி இது நடந்தது? மருந்து உபயோகிப்பதற்கு சரியான ஆராய்ச்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லையா எனப் பல கேள்விகள் எழலாம்.

முதலில் மருந்து கண்டுபிடிப்பு எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றதெனப் பார்க்கலாம். மருந்தாகப் பயன்படக்கூடிய வேதிப்பொருட்கள் ஆராய்ச்சிசாலையில் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றன. பின்பு அவை சரியான அளவுகளில் பரிசோதனை எலிகளுக்கும் மற்றும் சிறிய பிராணிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவை வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றனவா எனக் கண்காணிக்கப்படும். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு வேதிப்பொருள் வெற்றி பெற்றால் பின்பு முதல் கட்டம் எனும் நிலையில் மனிதர்களுக்கு இந்த வேதிப்பொருள் கொடுக்கப்பட்டு அவை நச்சுத்தன்மை இல்லாது இருக்கின்றனவா எனக் கண்காணிக்கப்படும்.

இத்தகைய கடும் கட்டுப்பாடுகள் இல்லாமல் கோவிட், ஃப்ளூ, முதலானவைகளுக்குண்டான தடுப்பூசிகள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கான மருந்துகள் முதலியனவற்றை விற்பனைக்காக நோயாளிகளிடமோ, தேவைப்படுவோருக்கோ எடுத்துச் செல்லவே இயலாது என்பது மருந்து கண்டுபிடிப்புத் துறையில் ‘எழுதப்பட்ட ஒரு விதி’ (written rule!). இதற்கெனவே ஒரு அமைப்பு (FDA – Food and drug administration) அமெரிக்காவில் செயல்படுகிறது.
முதல் கட்டத்தைத் தாண்டி வெற்றிபெற்றால் தான் மேலும் கடினமான அடுத்தடுத்த கட்டங்களாக நான்கு கட்டங்கள் வரை தாண்டி அந்த மருந்து விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இந்தப் பரிசோதனைக் கட்டங்கள் பல ஆண்டுகளுக்கு (10-12 வரை) நீடிக்கலாம். அப்போதுதான் ஒருவழியாகப் பெரிய விபரீதமான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.
இதுவெல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் FDA-வால் வரையறுக்கப்பட்டு மனித சமுதாயத்தின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப் படுகின்றன. கிட்டத்தட்ட பெரும்பாலான வேதிப்பொருட்கள் முதல் கட்டத்தையே தாண்டுவதில்லை. அங்கேயே அடிபட்டுப் போய்விடுகின்றன.

சரி, இப்போது இந்த தாலிடோமைட் பற்றிப் பார்க்கலாம்.

தாலிடோமைட் எனும் வேதிப்பொருள் 1950-களில் மேற்கு ஜெர்மனியின் ‘க்ரூனென்தால்’ (Grunenthal) எனும் ஒரு மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்தால் மருந்தாக ஆக்கப்பட்டது. முதலில் இது ஒரு தூக்க மருந்தாகவும்,(sedative) ஜலதோஷம், ஃப்ளூ, வயிற்றுக் குமட்டல், வாந்தி, கருவுற்ற பெண்களின் காலைநேர சுகவீனங்களுக்காகப் பிற்பாடும் உபயோகப் படுத்தப்பட்டது.
முதல் பரிசோதனைக் கட்டங்களில் எத்தனை அதிகமாக இம்மருந்தைக் கொடுத்தாலும் பரிசோதனை எலிகள் இறக்கவில்லையாதலால், மனிதர்களுக்கும் இது எந்தவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வேதிப்பொருளாக தவறாக கணிக்கப்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பிராணிகளைக்கொண்டு அரைகுறையாக செய்யப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளைத் தவறாக மாற்றி எழுதியும், எங்கு எல்லாம் தடங்கல்கள் தென்பட்டனவோ அந்த முடிவுகளை வெளிப்படுத்தாமலும் ‘க்ரூனென்தால்’ கம்பனி செய்த அட்டூழியச் செயல்களால் மருத்துவர்கள் தவறான முடிவுகளின் அடிப்படையில் தங்களிடம் வரும் கருவுற்ற பெண்களுக்கும் இதர நோயாளிகளுக்கும் இந்த மருந்தை அளித்தனர். 1956ம் ஆண்டு இந்த மருந்தை ஆஸ்பிரின், குரோசின் (Crocin) போல மருந்துக் கடைகளில் வாங்க முடியும் எனும் நிலை வந்துவிட்டது.

இன்னும் சில ஆண்டுகளில் 46 நாடுகள் ‘க்ரூனென்தா’லின் அனுமதியுடன் தங்கள் நாடுகளில் 37 வெவ்வேறு பெயர்களில் இதனைத் தயாரித்து விற்கலாயின. போதாக்குறைக்கு ஒரு விளம்பரம் வேறு: டிஸ்டவல் (Distaval) – (தாலிடோமைடின் இன்னொரு வியாபாரப்பெயர்) இதனை கர்ப்பிணிகளுக்கு ஒரு பக்கவிளைவும் இல்லாமல் கொடுக்கலாம். ‘தாய்க்கும் சேய்க்கும் ஒரு கெடுதலையும் இது செய்வதில்லை’ என்று!

நீண்ட காலத்திற்கு அமெரிக்கா இந்த பேரழிவில், அதிர்ச்சியில் இருந்து எப்படியோ தப்பித்து விட்டது எனும் தவறான எண்ணம் உலகில் பரவியிருந்தது. ஆனால் அது உண்மையேயல்ல. கொஞ்ச காலத்திற்கு FDA இதனை அமெரிக்காவில் அனுமதிக்காமல் இருந்தது. ஆனால் அக்கால கட்டத்தில் அந்நிறுவனம் கடும் சட்டதிட்டங்களை அமல்படுத்தியிருக்கவில்லை. ஆகவே அதன் உயர்மட்ட அதிகாரிகளை நல்லெண்ணத்திற்கு உடன்படுத்தி அவர்களையே விலைக்கு வாங்கிக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கண்டு கொண்டன. இவை அத்தனையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான் இந்தப் புத்தகத்தின் குறிக்கோள் என்கிறார் இதன் ஆசிரியர்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்ட பல மருந்துகள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களைத் தம்மிடம் கொண்டிருந்தன. ராடிதால் (Radithal) என்னும் மருந்து ஆண்மைக்குறைவு, பால்வினை நோய், தொடங்கி 160 குறைபாடுகளுக்காக விற்பனை செய்யப்பட்டது. இதில் கதிரியக்கம் கொண்ட ரேடியம் துகள்கள் இருந்தன. அவை எலும்புகளை அரித்து விடும். இதுபோல எத்தனை எத்தனையோ ‘மருந்துகள்’.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் நாஜி அதிகாரிகள் மருந்துக் கம்பனிகளுக்கு பரிசோதனைக்காக மனிதர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனைகளை நடத்தினர். இதில் இறந்தவர்கள் எத்தனையோ பல்லாயிரக் கணக்கானவர்கள். ஒரு நாஜி அதிகாரியால் தொடங்கப்பட்டதே க்ரூனென்தால் நிறுவனம். இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் – மனித உயிர்களுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பும், பணத்தின் மீதான பேராசையும், புகழும்.
பெரிய தொடர்கதைதான் இது. படிக்கும்போதே குலை நடுங்குகிறது.
தாலிடோமைட் தாக்கத்தில் பிறந்து வளர்ந்து பெரியவளான ஒரு பெண் எழுதுகிறார்: “நான் என் தாயின் ஏழாவது குழந்தை. நான் பிறக்குமுன்பு ஏதோ சரியில்லை என என் தாய் எண்ணினாள். குழந்தை அவள் வயிற்றில் உதைக்கவில்லை, ஏனெனில் நான் கால்கள் இல்லாமல் பிறந்தேன்.”- என்ன கொடுமை! கால்களில்லாத குழந்தை எப்படி உதைக்கும்?

சிதைந்த கை கால்களுடன் பிறந்து வளர்ந்து பெரியவளான பெண் தன் தாயிடம் ‘ஏன் அம்மா நான் மட்டும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறேன்’ எனக் கேட்டதற்குத் தாய், ‘ஏனென்றால் நான் தாலிடோமைடை சாப்பிட்டேன் உன்னைக் கருவுற்றிருக்கையில்’ என்றாளாம். கேட்டதும் நம் கண்கள் கலங்குகின்றன.

‘நான் ஜெர்மனியின் கடைசி தாலிடோமைட் குழந்தை. இதனை முன்பே தடை செய்திருந்தால் நான் இப்படி இருந்திருக்கவே மாட்டேன்’-1962-ல் ஒரு பெண்மணி பதிவிட்டுள்ளார்.

ஆயிரக் கணக்கான குழந்தைகள் கைகால்கள் இன்றி, திரும்பக் கூட இயலாத நிலையில் பிறந்த வண்ணமே இருந்தன- ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா என.

(என் எண்ண ஓட்டம் இங்கு திசை திரும்பியது. இந்தியாவில் பிறந்த நமக்கெல்லாம் இப்போது 60க்கு மேல் வயதாகின்றது. தப்பித் தவறிக்கூட இந்த மருந்து இந்தியாவிற்குள் நுழையவில்லை போலும்! இருந்திருந்தால் நம்மில் எத்தனைபேர் முடமாகப் பிறந்திருப்போமோ? இது ஒன்றும் ஆசுவாசப்பட வேண்டிய விஷயமல்ல. என் தந்தையார் ஒரு மின்சாரப் பொறியியல் வல்லுனர். அவருக்கு அறிவியலில் இருந்த பொது அறிவு ஆர்வம் வியக்கத் தக்கது. எனக்கு சிறிது புரிந்து கொள்ளும் அளவு அறிவு வளர்ந்ததுமே அவர் இந்தத் தாலிடோமைட் குழந்தைகளைப் பற்றி என்னிடம் கூறியுள்ளார்.)
மெர்ரெல் எனும் அமெரிக்கக் கம்பனி கருவுற்ற எலிகளுக்குக் கொடுக்கப்பட்ட இம்மருந்து எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியது.

தாலிடோமைடைப் பொறுத்தவரை முதலில் FDA நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி சமர்ப்பிக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் ஏதோ சரியாக இல்லை என உணர்ந்தார். சக பணியாளர்கள், மருத்துவர்களுடன் விவாதித்தார். மருந்தின் உபயோகத்தை அனுமதிக்க மறுத்தார். அவரை வேலையை விட்டே நீக்குமளவிற்கு இந்த ஊழல் சென்றது. ஆயினும் மனம் தளராமல் போராடினார். வெவ்வேறு கட்டங்களில் தாலிடோமைடைத் தங்களிடம் வரும் நோயாளிகளுக்குப் பரிந்துரைத்த சில மருத்துவர்கள், தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் பலரின் விடாமுயற்சியால் அரைகுறையாகச் செய்ப்பட்ட பரிசோதனை முடிவுகள் தெரிய வந்தன.

பரிசோதனை முடிவுகளுக்காகவும், FDA வின் அனுமதிக்காகவும் காத்திருந்த போது, மருத்துவர்களிடம் இந்த மருந்தை அவர்களுடைய நோயாளிகளுக்காக தாராளமாக வினியோகித்த குற்றத்திற்காக பிரபல அமெரிக்க நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. Block-buster எனும் மருந்தானதால் எக்கச்சக்கமாக இந்த மருந்தின்மூலம் இந்த நிறுவனங்கள் பணம் சம்பாதித்தன. அதனாலேயே வருமானம் போய்விடுமோ எனும் எண்ணத்தில் ஆராய்ச்சி முடிவுகளைக் குழப்பமாக்கி, பாதகமான முடிவுகளை நீக்கி விட்டன.

FDA நிறுவனத்தைச் சேர்ந்த அப்பெண்மணியின் விடாமுயற்சியால் அவர் தாலிடோமைட் விற்பனையை முடக்கினார். நிறுவனத்தின் செயல்பாடுகள் நேர்படுத்தப்பட்டு மேலும் புது மருந்தை ஆழ்ந்து ஆராய்ந்து அனுமதி தர வழிவகைகள் செய்யப்பட்டன. இதற்காக அவர் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியிடம் பரிசும் பெற்றார். மேலும் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளால் தாலிடோமைட் தொடர்பான பயங்கரமான உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முழு புத்தகத்தையும் வாசகர்களுக்கு அவர்கள் சலிப்படையாமல் கூறுவதென்றால் இயலாது. விரும்புபவர்கள் படித்தே அறிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து நமக்கான செய்தி என்னவென்றால், உண்மையை ஆராய முற்பட வேண்டும். ஆழ்ந்து எல்லா தரப்பு வாதங்களையும் படிக்கவேண்டும். மனித சமுதாயத்தை மதிக்க வேண்டும். நாம் பணம் சேர்க்க சமுதாயத்தை, அதன் அழிவை மூல காரணமாகக் கொள்ளலாகாது. யானைக்கும் அடி சறுக்கும் – வல்லரசுகளும் பல விஷயங்களில் கவனக் குறைவாக இருந்திருக்கின்றன. நம்மை நாமே தாழ்த்தி மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது, இன்ன பிற.

(மீண்டும் சந்திப்போம்)

One response to “பிரமிக்க வைத்த புத்தகங்கள்-4 – மீனாக்ஷி பாலகணேஷ்

  1. மருந்து கம்பெனிகளின் பேராசை எப்படி எல்லாம் மனிதக்குலத்தை அறுக்கக் கூடும்? . சரி, அந்த நிறுவனத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதா?

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.