Soldiers in a jeep hi-res stock photography and images - Alamy

இராணுவ வாகனம் அவர்களை கொல்லூர் மலையடிவாரத்தில் இறக்கி விட்டுச் சென்றது. சிலுசிலுவென்று காற்று வீசியது. சூழலில் பச்சை வாசனையை நுகர முடிந்தது. நீலமும், பச்சையுமாக இயற்கை அன்னை காட்சி தந்து கொண்டிருந்தாள்.

‘நாம ஒரு ப்ளாட் வாங்கிப் போடணும் இங்க. ஒரு பெரிய செட்டி நாட்டு பாணில வீடு கட்டணும். நாம எல்லோரும் இங்க குடியிருக்கணும். வாசலுக்குப் பக்கத்துல நமக்கே நமக்கான ஒரு ஆய்வுக் கூடம். நாம் செய்யறதப் பாத்து உலகமே வியந்து போகணும்.’

“எதுக்கும் உங்க அப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லிவை. அவர் ஃபினான்ஸ் பண்ணலன்னா, எங்களுக்கா ஐவேஜூ இல்லம்மா.”
‘அப்படியா சேதி, வரதட்சணை கேசுல மாட்டிப்ப, ஜாக்ரத’ என்று சிரித்தாள் சித்ரா.

இவர்கள் நால்வர் மட்டுமே பயணிக்கும் ஹெலிகாப்டர் தயாராக நின்றிருந்தது. விமான ஓட்டுனருக்கு 25 வயதிருக்கலாம். பார்த்தால் காஷ்மீரைச் சேர்ந்தவர் போல், செழுமையான கன்னங்களுடன், ரோஜா நிற இதழ்களுடன், செவ்வரிக் கண்களுடன், உயரத்திற்கேற்ற பருமனாய், சிவப்பும், வெளுப்பும் கலந்த மேனியாய் அவர் இருந்ததைப் பார்த்த சித்ரா, சுந்தரத்தைப் பார்த்து ‘ஜஸ்ட் மிஸ்ட்; உன்னப் பாக்கறத்துக்கு முன்னாடி இவரப் பாத்திருந்தேன்னா, உன் விக்கெட் காலி’ என்றாள். “இப்பயும் மோசமில்ல; நானே அவங்கிட்ட தூது போறேன். எப்பட்றா தப்பிக்கலாம்னு நானே யோஜனை செஞ்சுண்டிருந்தேன். சித்ரா கண்ணு, எங்கிருந்தாலும் நீ வாழ்க, என் இதயம் அமைதியைக் காண்க” என்று மாற்றி கர்ணகடூரமாகப் பாடினான் சுந்தரம்.

‘வில் யூ போத் ஷட் அப்? எத்தன அழகா மலை  வளஞ்சு வளஞ்சு வருது. திடீர் திடீர்ன்னு அருவிகள் பாலாகப் பொங்கி வழியறது. நீண்ட வால் குரங்குகள், சிங்க முகத்தோடு கிளைக்குக் கிளை தாவுது.’

“ஆரம்பிச்சுண்டான்டா தங்கத் தமிழன்; வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்; மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். அதுக்கு மேலத் தெரியாம சுந்தரம் தவிப்பான்.” என்றவுடன் அனைவரும் சிரித்தார்கள்.

‘இப்ப நாம் எதுக்காக குடஜாத்ரிக்குப் போறோம், அதுவாவது நெனவுல இருக்கா?’ என்றாள் ஆனந்தி

“என்ன ஹனி இது? வான் ஆய்வு அமைப்போட வரைபடம் போட்டவ நீதானே? முன் தயாரிக்கப்பட்ட கட்டிடத் தொகுதிகள புல்லி அமைப்பு மூலம் ஏத்தினது சித்ரா. அதுல ரேடார் கண்ணுக்குத் தப்பும் வலைகளை, தளத்த அமைச்சது சுந்து. அதோட நுண்ணிய தொலை நோக்கி, ஒலி அதிர்வு பதிவுக் கருவி, கட்டிடத்தின் உள்ளே இருக்கும் ஒளி, ஒலி, பிற சாதனங்கள் வெளியே தெரியாத மாதிரியான வண்ணப்பூச்சு, எட்டுத் திசையையும் கண்காணிக்க ஒரு ரோபோ என எல்லாம் செஞ்சது நா.” என்றான் விமலன்.

“கடும் மழை, இருண்ட காடு, கோடையிலேயே சூர்யக் கதிர் காட்டுக்குள்ள ஒப்புக்கு எட்டிப் பாக்கும். மலை திடீர்னு சரியும்; அந்த இடங்கள்ல பாறையா, மரமான்னு தெரியாது. தொடர்ன்னு பேரே தவிர சீரான பரப்பில்ல. பாத குறுகி, ஒத்தக் காலக் கால வச்சு, முதுகுல சுமையோட, வயித்ல பசியோட எத்தனப் போராட்டம் இந்த இரகசிய வானத் திட்டத்ல.”

‘சரி, நாம் எதிர்பாக்கறது கலவையான ஒண்ணான்னா இருக்கு? பிரபஞ்ச இரகசியமா, வேற்றுக் கோள் உயிரினமா, அயல் நாடுகள், குறிப்பா அண்டை நாடுகள் மற்றும் மேற்கத்திய தேசங்கள் நம்மை உளவு பாக்கிறதான்னு கண்டுபிடிக்கிறதா, இல்ல எல்லாமுமேவா?’ எனக் கேட்டாள் ஆனந்தி.

“இது எல்லாமும்தான். எந்த ஆராய்ச்சியும் குறிப்பிட்ட நோக்கத்தோடதான் ஆரம்பிக்கும். ஆனா, எதிர்பாக்காதது நடக்கறச்சே என்ன ஒரு ப்ரமிப்பு வரும் தெரியுமா?”

‘வேற்றுக் கோள்ல உயிரிகள் இருக்கலாம். ட்ரேப்பிஸ்ட் கிட்டத்தட்ட நம்ம சூரியன் போல’

“ஆறு லைட் இயர்ஸ் தொலைவுல இருக்கே அந்தப் பதினோரு கோள்ல எதிலாவது உயிர்கள் இருக்காதா என்ன?”

‘சரி, இருக்கட்டும். அவங்க தேவர்கள், கந்தர்வர்கள், கிம்புருடர்கள், நாரதர்….’ என்று அடுக்கினான் சுந்தரம்.

“ஏன்டா, ப்ரும்மா, விஷ்ணு, இந்திரனெல்லாம் உன் வாயில வல்ல?” என்று கலாய்த்தாள் சித்ரா.

‘ஜோக்ஸ் இருக்கட்டும், ராபர்ட் ஷப்பைரோ சொன்னாரே- உயிரோட எல்லா அடிப்படைக் கூறுகளையும் உண்டாக்க முடியும்னு. சேர்மானம் தெரிஞ்சா உயிர் வந்துடாதா?’

“வரலாம். உனக்குத் தெரியுமில்ல ட்ரேக்கோட ஃபார்முலா. நட்சத்ரம் வரதுக்கே ஒரு சோலார் நிற வேணும்; அதுல கிரகத்தோட கூடின நட்சத்ரம்1 சதவீதம்; அதுலயும் உயிர் வாழறதுக்கு சாத்தியக்கூறு நாலு தானாம். அதுகளும் 0.25 சதவீதம் தான் உயிரை உருவாக்குமாம்.”

‘இருக்கட்டுமே. விண்கல்லுல கூட புரதம் இருக்கே’ என்றாள் ஆனந்தி.

ஓரளவு சமமாக இருந்த தளத்தில் அவர்கள் குதிப்பதற்கேற்றவாறு கயிற்றில் பிணைத்து நால்வரையும் பாதுகாப்பாக இறக்கி விட்டது வானூர்தி.

ஹோவென்று காற்று இரைந்தது. அத்தனை உயரத்திலும் பூச்சிகள் மரங்களில் அப்பியிருந்தன. தலையைச் சிலுப்பிச் சிலுப்பி அவற்றை உதிர்க்க முயன்ற மரங்கள் தோற்றுப் போய் காற்றிடம் செல்லமாக முறையிட்டன. சுழன்றடிக்கும் காற்று அருகில் எங்கோ பாயும் அருவியின் நீர்த்திவிலைகளை இவர்கள் மேல் தெளித்துச் சென்றது.

தரையில் குதித்த இடத்திலிருந்து இவர்கள் இன்னமும் 25 கி மீ மேலேறிச் செல்ல வேண்டும். ஏரோஜெல் நார்களால் அமைந்த தெர்மல் சூட் என்ற உஷ்ண ஆடையை அணிந்திருந்தாலும், அனைவரையும் குளிர் நடுங்க வைத்தது. சிறு மண் சட்டியில் ஏற்றப்பட்ட மின் காந்த நெருப்பினால் உடலில் இதமான சூடு பரவவும் அவர்களால் குறுகிய பாதையில் மேலேற்றத்தில், முதுகில் சுமையோடு செல்ல முடிந்தது.

இந்த மலையை ஏன் குடஜாத்ரி என்று சொல்கிறார்கள் என்றாள் ஆனந்தி.

“இவள் மலைகளில் மல்லிகைப் பூவை ஒத்தவள் என்று ஒரு பொருள். வாசம் மிகுந்த மல்லிகைப் புதர்களால் நிரம்பிய காடு என்று மற்றொரு பொருள்.” என்றான் விமலன்.

‘ஆஹா, மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ?’ என்று சுந்தரம் பாட ஆரம்பித்தவுடன் அந்தச் சிறு பாதையில் மற்றவர்கள் ஓட ஆரம்பித்தனர்.

ஆய்வு மையத்திற்கு வந்துவிட்டார்கள். இந்த முறை பிரித்துப் பிரித்து எடுத்து வந்துள்ள பெரும் தொலை நோக்கியை மலையின் மறு முனையில் நாளை பொருத்த வேண்டும். சுந்தரமும், ஆனந்தியும் அதன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்க விமலனும், சித்ராவும் அனைவருக்குமான சூடான சூப்பையும், வென்னீர் ஊற்றியதும் பதினைந்து நிமிடங்களில் சுவை மிக்க உப்புமாவாக மாறும் ‘ரெடி டு ஈட்’ உணவையும் தயாரித்தார்கள். மலையையே முழுங்கும் அளவிற்கு பசித்தது அனைவருக்கும். அதற்குள் அம்மா கொடுத்தனுப்பிய சத்துருண்டைகள் இரண்டை கபளீகரம் செய்த சுந்துவை முறைத்த விமல், டப்பாவைப் பறித்து ஆளுக்கொன்றாகக் கொடுத்தான். ‘டேய், இத இப்பவே காலி பண்ணினா, வாய்க்கு ருசியா அப்றம் ஒண்ணும் இருக்காதுடா.’

“சரிடா, என் பாட்டைக் கேட்டு நீங்கள்லாம் ஓடலேன்னா, நான் ஏன்டா இப்படித் திங்கப் போறேன்?”

‘பாடியே எங்களை மலைக்கு விரட்டிய வீரன்னு உனக்கு டைட்டில் வழங்குவதில் இந்தச் சித்ரா பெரு மகிழ்ச்சி அடைகிறாள்.’

ஒலி அதிர்வினைப் பதிவு செய்யும் கருவி சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவ முப்படைத் தலைமை தளபதியிடமிருந்து செய்தி வந்திருந்தது. ‘நீங்கள் நால்வரும் சரி சமமாகப் பணிகளைப் பிரித்துக் கொண்டு செய்கிறீர்கள். அதற்கு எங்கள் வாழ்த்து. சில முக்கிய நிகழ்வுகளை நீங்கள் கவனித்து நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என அரசு நம்புகிறது. திரிபுராகிட்ட மிகச் சமீபத்தில் பறக்கும் தட்டு மிகத் தாழ்வாக பறந்து வந்து மீண்டும் வான்வெளியில் சென்று மறைந்து விட்டது என்ற செய்தியும் உங்களுக்குத் தெரியும். அது என்ன என்று வடகிழக்கு இராணுவக் கேந்திரமும், இந்திய தொழில் நுட்பக் கழகமும் ஆராய்கின்றன. ஆனால், போதுமான தகவல் இல்லை. எங்கள் ஊகம், பாதையை மாற்றி அது மீண்டும் எந்தத் திசையிலும் வரலாம். அதிக விழிப்புடன் இருங்கள்.’

“யெஸ், சார்”

‘ஏதேனும் ஒரு சூழலில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தால், விமலன் சொல்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். ஆல் த பெஸ்ட்.’

நால்வருக்கும் இதுவரை இப்படியெல்லாம் தோன்றவில்லை. ஆனால், தலைமை சொல்வது சரியெனப் பட்டது. விமலனுக்கு மட்டும் ஏன் பெரும்பான்மையினரின் கருத்துப்படி செயலாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை என்று தோன்றியது.

தேன் கூடுகளாய் விண்மீன்கள். கரு நிற வானில் மிகுந்த ஒளியுடன் விகசித்து நின்றன. வெள்ளி எழுந்து வியாழம் உறங்கியதைப் பார்த்தார்கள். சனிக்கோள், செவ்வாய் இரண்டும் சம நேர்க்கோட்டில் தென்பட்ட இரண்டு நாட்களை வியந்தார்கள். திறம்மிக்க தொலை நோக்கி விதவிதமான கோணங்களில் கிரக இயக்கங்களையும், விண்மீன்கள் சிந்தும் ஒளி, வான்வெளியில் பயணித்து எந்த வேகத்தில் பூமியை அடைகிறது என்பதையும் உடனுக்குடன் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள கணினித் திரையில் காட்டிக் கொண்டிருந்தது. அதன் சிக்கலான கணிதத்தை ஆனந்தி ஆர்வமுடன் படித்து பிறர் புரிந்து கொள்ள எளிதாக விளக்கினாள்.

பட்டுக் கரு நீலப் புடவை பதித்த நல் வயிரம்.
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி என்று சீட்டி அடித்தான் விமலன்.

(இன்னும் வரும் )