சென்ற இதழில்,

ஜோன் மிகக் கேஷுவலாக, அதெல்லாம் சரி ‘ஒரு கண்டத்திலிருந்து (Continent) மற்றொரு கண்டத்தை’ ஒரு சிறிய நடை பாலத்தின் மூலம் கடந்திருக்கிறீர்களா?

இனி,

“கண்டம் விட்டு கண்டம் ? அதுவும் நடைப் பாலத்தின் மூலமா?!”

 

ஐஸ்லாந்தின் Reykjanes Peninsula வில் உள்ளது ‘மிடிலினா (MIDLINA)’ என்கிற 50அடி     நடைப்பாலம். வட GC2DK2E MIDLINA (Earthcache) in Iceland created by sukosun&piratebride     Bridge Between Continents – Iceland - Atlas Obscuraஅமெரிக்கா மற்றும் யுரேஷியாவின் Techtonic தகடுகளைப் பிரிக்கிறது இந்தப் பாலம்.

மரத்தினாலும், இரும்பினாலும் ஆன இந்த பாலத்தின் ஒரு முனை ‘வட அமெரிக்கா உங்களை வரவேற்கிறது’ என்கிறது. சில வினாடிகளில்,15 மீட்டர் நீளமுள்ள பாலத்தைக்  கடந்து அடுத்த முனையைத் தொட்டால், ‘ஐரோப்பா உங்களை வரவேற்கிறது’ என்ற வாசகத்தையும் காண முடிகிறது. பாலம் அடியில் நீரற்ற கரடு முரடான மண் ஓடை. இளைஞர்கள் இறங்கலாம் ; மற்றவர்கள் அவர்கள் இறங்குவதைப் பார்க்கலாம்.

 

இந்த இடத்தை ப்ளூ லகூன் பகுதியிலிருந்து சுமார் 25 நிமிடத்திலும், ரேக்கவிக் நகரிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திலும் வாகனம் மூலம்  அடையலாம். சுற்றிலும் லாவா படுகைகள்,  அதன் காரணமாக ஏற்பட்ட பள்ளங்களைப் (CRATERS) பார்க்கலாம். அருகில் Sandvik என்கிற கரிய மணல் பீச் ஒன்றும் உள்ளது. இந்த பீச்சில் எடுக்கும் போட்டாக்கள் லைக்’களைக் குவிக்கும் என்பது சமூக ஊடகத்தோர் வாக்கு!

Stora-Sandvik Beach in Iceland // Drone 4k - YouTube

அது சரி, ஒரு நாட்டுக்கு வந்துவிட்டு அதன் தலைநகரை இன்னும் பார்க்காமல் இருந்தால் எப்படி..?

இதோ ரேக்கவிக் – ஐஸ்லாந்தின் தலைநகரம்!

ஜோன் லாவகமாக வாகனத்தை இயக்கியவாறு, மெலிதாக கசியும் இசையினூடே சொல்ல ஆரம்பித்தார்.

ரேக்கவிக்’ என்றால் ஐஸ்லாந்து மொழியில் Smoky Bay என்று அர்த்தம். ஆங்காங்கே  வெந்நீர் ஊற்றிலிருந்து வரும் நீராவி புகையினால் இந்த பெயர். ஐஸ்லாந்தின் அறுபது சதவீத மக்கள் இந்நகரில்தான் வசிக்கிறார்கள்.

டேனிஷ் ஆட்சியில் முதல் ஐஸ்லாந்து கவர்னரான SKUL MAGNUSSON ரேக்கவிக்கின் தந்தை என அழைக்கப்படுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐஸ்லாந்து மக்களை, ‘வாங்க, கம்பளி ஆடைகள் நெய்யலாம், கப்பல் கட்டலாம்’ என இன்னும் பல தொழில்களைத் துவக்க வைத்து புதிய பொருளாதாரத்திற்கு வித்திட்டவர் அவர்.

உலகத்தின் வடகோடி தலைநகரமான ரேக்கவிக்கில் என்ன செய்யலாம்?

Hallgrimskirkja: Planning Your Visitசுற்றுலாப் பயணிகளை முதலில் கவருவது நகரின் நடுநாயகமாக உள்ள HALLGRIMSKIRKJA தேவாலயத்தின் 73 மீட்டர் உயரமுள்ள கோபுரம். திருச்சி மலைக்கோட்டையிலிருந்து நகரைப் பார்ப்பது போல, கோபுரத்தின் மேலிருந்து நகரின் நான்கு புறங்களையும் காணலாம். அழகான மலை, சுற்றிப் பறந்து விரிந்த கடல், பொங்கி வழியும் அலைகளுக்கு நடுவே சிறு சிறு தீவுகள், படகு கூட்டங்கள், சாலையில் சப்தமின்றி செல்லும் வாகனங்கள், எந்த தொந்தரவுமற்ற அமைதியான நகர்ப்புறம் என்று அத்தனையும் தெரிகின்றன.

இந்த தேவாலயத்தின் வாயிலில் LEIF EIRILKSON சிலை வடிவில் கம்பீரமாக நிற்கிறார். ஐஸ்லாந்து சரித்திரத்தின் அடிப்படையில் இவர்தான் வட அமெரிக்காவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியர் என்கிறார்கள். மாலுமியான இவர் பயணித்து அடைந்ததாகக் கூறப்படும் ‘வின்லாண்ட்’ என்கிற இடம் தற்போதைய கனடாவிலுள்ள NEWFOUNDLAND இன் வடக்கு முனை என்கிறார்கள்.

OSKJUHLID என்ற குட்டி மலை மீது, அடுத்துப் பார்க்க வேண்டிய PERLAN மியூசியம் உள்ளது.

மலை மீது 6 பிரம்மாண்டமான வெந்நீர் டேங்க்குகள் வட்டவடிவில் நிறுவியுள்ளார்கள். அதன் மீது இந்த PERLAN மியூசியத்தை கட்டியிருக்கிறார்கள். சுற்றிலும் கண்ணாடி பதித்து வித்தியாசமான கட்டிடக்கலையுடன் விளங்குகிறது. அதற்கு மேல் நகரின் அழகைக் காண ஒரு சுழலும் உணவகம் வேறு உள்ளது.

கீழே தாங்கியிருக்கும் தண்ணீர் தொட்டிகளிலிருந்துதான் அருங்காட்சியகம் உள்படச் சுற்றுவட்டார இடங்களுக்குக் குழாய் மூலம் வெந்நீர்  விநியோகம் நடைபெறுகிறதாம்.

இங்கே உள்ள பிளானடோரியத்தில் NORTHERN Lights ஷோ கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்றார் ஜோன். பார்த்தோம்! சென்னை, கோட்டூர்புரம் பிர்லா பிளானடோரியத்தின் இருட்டில், விண்வெளி நட்சத்திரங்களில் மூழ்கிய அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. இங்கு, காண்பது வானத்திற்கும், பூமிக்கும் இடையே நடக்கும் பச்சை ஒளி ரகசியம்…! இது பற்றி, பின்னர் பேசுவோம்..

ஐஸ்லாந்தின் நிஜ பனி குகை பயணம் செல்ல முடியாதவர்களுக்காக, இந்த வளாகத்தில் 100 மீ செயற்கை பனிக் குகை உள்ளது.

மேலும், LATRABJARG என்கிற இடத்திலுள்ள மிகப் பெரிய ஐரோப்பாவின் பறவைகளின் சரணாலயத்தின் (BIRD CLIFF) முன்மாதிரியும் இங்குள்ளது.

வெளியே வந்ததும் ‘பசிக்கிறது’ என்றோம். ஜோன், மொபைலில் தேடி, காந்தி இந்தியன் ரெஸ்டாரண்ட் & பார் (!), பாம்பே பஜார், மாமா ராமா என்று பெயர்களை அடுக்கினார். ரெஸ்டாரண்டை அடைந்து உள்ளே நுழைந்ததும், பொன்னிற ‘பட்டர் நான்’ மணம் வரவேற்க, ஆஹா! என்றது மனம். இந்திய உணவுகளைப் பற்றி ஜோனுடன் பேசியபடி சூப், ஸ்டார்டர், பன்னீர் பட்டர் மசாலா பிறகு ஐஸ் கிரீம் என்று வரிசை கட்ட, அருகில் UK பர்மிங்ஹாமிலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளி அன்பர் ஒருவர் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு,

“குளிர் ஊருக்குப் போனாலே எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடத் தோன்றும்” என்றார்.

“உங்களுக்குமா?” என்றேன்..!

காரிலிருந்து இறங்கி KOLAPORTIO FLEA மார்க்கெட்டில் நுழைந்தோம். இங்கு வேண்டியதை வாங்கலாம் அல்லது வேடிக்கை பார்க்கலாம். ஒரு புது நாட்டிற்குச் செல்லும் பொழுது இது போன்ற லோக்கல் அங்காடிக்குள் தவறாமல் நுழைவது எங்கள் வழக்கம். அங்குச் செலவிடும் நேரம், அந்த நாட்டின் வாழ்க்கை முறை பற்றி அறிய ஒரு டீசர் போல இருக்கும்.

Review of Sun Voyager | Reykjavik, Iceland, Europe - AFARஅடுத்து, HARPA CONCERT HALL இன் கட்டட அழகைப் பார்த்துவிட்டு, கடற்கரைச் சாலையில் 15 நிமிடங்கள் காலாற நடந்தால் அருகில் உள்ள SUN VOYAGER சிலையை அடையலாம். வாட்டர் ஃபிரன்ட் என அழைக்கப்படும் இந்த இடம், பாப்புலர் செல்ஃபி ஸ்பாட்.

அந்தி மயங்கும் நேரத்தில், இங்கிருந்து பார்த்தால் 914மீ உயரமுள்ள  மவுண்ட் ESJA கண்ணைக் கவருகிறது. அருகிலுள்ள குட்டி குட்டி தீவுகளும் மிக அழகாக உள்ளன. வித்தியாசமான உணவுகளைப் பதம் பார்க்க விரும்புவார்களுக்கு ஏற்ற இடம் HLEMMUR MALHOLL GRANDI இங்கிருந்து 15 நிமிட நடையில் உள்ளது. நிறைய ஹோட்டல்கள் அருகில் உள்ளன.

நம்ம ஊர் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங் நடப்பது போல இங்கு Bath tub பிசினஸ் மீட்டிங்குகள் பிரபலமானவை! கடும் குளிரை இந்த நாட்டுக்குக் கொடுத்த இறைவன், கூடவே ஜீயோ தெர்மல் எனர்ஜி மூலம் சுடுநீரையும் அள்ளிக்கொடுத்த கருணையை என் சொல்ல?

சரித்திரப் பிரியர்கள், அருகிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம். ‘வைக்கிங் காலத்திலிருந்து’ இன்றைய கால கட்டம் வரையிலான ஐஸ்லாந்தின் வளர்ச்சியை, வரலாற்று மற்றும் பாரம்பரிய பின்னணியோடு அறிந்து கொள்ளலாம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு பொதுவான இரவு வாழ்க்கை, இங்கும் உண்டு. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், இன்னிசை மழையின் நடுவே ரேக்கவிக்கின் இரவு கிளப்புகள் களைக் கட்டும்.

ரு நாள் சுற்றுலாவாக கோல்டன் சர்க்கிள் டூர், South Coast Tour, Glacial Lagoon Tour, Black sand Tour, Northern Lights Hunting Tour எனப்

பல சுற்றுலாக்கள் தலைநகரிலிருந்து கிளம்புகின்றன.

ரேக்கவிக் வரும் ஐஸ்லாந்து சுற்றுலா பயணிகள் விரும்பி செய்வது கோல்டன் சர்க்கிள் டூர். தலைநகரில் ஆரம்பித்து ஒரு வட்டம் அடித்து மீண்டும் தலைநகருக்கே திரும்பும் உல்லாச பயணம். குறுகிய கால அவகாசத்தில் ஐஸ்லாந்தின் பல பரிமாணங்களை  தொட்டுணர, கண்ணுக்குள் கவர்ந்து சேமிக்க, இந்த டூர் நல்லதொரு சந்தர்ப்பம்.

Thingvellir National Park: The Complete Guideகாலை உணவு முடித்துவிட்டு சுமார் 45 நிமிடத்தில் இந்த சுற்றுலாவின் முதல் இடமான THINGVELLIR National பூங்காவை அடையலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்களில் இதுவும் ஒன்று. அலைபாயுதே படத்தின் ‘பச்சை நிறமே’ பாடலில் வரும் அத்தனை வண்ணங்களையும், இங்குப் பரந்து விரிந்திருக்கும் மண் பரப்பில் பார்க்கலாம்.

இங்குள்ள பெரிய அழகான ஏரி கண்ணைக் கவருகிறது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வட அமெரிக்க, யுரேஷிய  techtonic தகடுகளின் பிளவு இங்கிருக்கும் SILFRA  Fissure என்ற நீர் பிரதேசத்தின் வழியாகச் செல்கிறது. உங்களுக்கு ‘Snorkel’ தெரியும் என்றால் டைவ் அடித்து நீரின் அடி ஆழத்தில், இரு கண்டங்களையும் நீந்தித் தொடலாம் (பல் இருப்பவர்கள் பகோடா சாப்பிடலாம்!) ; தலைசிறந்த ஸ்கூபா டைவர்கள் நீந்த ஏங்கும் உலகின் தலைசிறந்த 10 இடங்களில் இந்த இடமும் ஒன்று.

THINGVELLIR National பூங்காவிலிருந்து கிளம்பி சுமார் 40 நிமிடங்கள் பயணித்தால் HAUKADALUR என்கிற ஜியோ தெர்மல் வயல் சென்று அடையலாம். சிறிதும் பெரிதுமான நீர் ஊற்றுகளுக்கு இடையே 13 ஆம் நூற்றாண்டிலிருந்து, காலங்கள் கடந்து, நிலை பெற்றிருக்கும் வெந்நீர் ஊற்றான ‘Geysir’ இங்கு மிகப் பிரபலம். ஆங்கில GEYSER என்கிற நீரை வெப்பமாக்கும் ஹீட்டரின் பெயர் இதிலிருந்துதான் வந்தது என்று சொல்கிறார்கள். அசத்தலாக 170 மீ வரை எழும்பி, தடால் என்று விழுந்து கொண்டிருக்கும் இந்த நீரூற்று இப்போது சற்று சோம்பலாகிப் போய், அடிக்கடி வருவதில்லை. ஆயினும்,

அந்த குறையை அருகில் உள்ள STROKKUR நீரூற்று தீர்த்து வைக்கிறது. பூமிக்குள் இருந்து திடீரென கிளம்பி அட்டகாசமாக, அதிசயத்தக்க உயரம் சென்று, சுற்றுப்புறத்தில் குப்பென்று நீராவி புகையையும், ஆவியையும் மக்கள் மீது தெளித்து, உடன் பட்டெனத் திரும்பி பூமிக்குள் சென்று விடுகிறது.. 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை எழும்ப ‘ஹோ!’ என்று கத்தியவாறே அதை வீடியோ எடுக்கக் கூட்டம் கேமராவுடன் காத்திருக்கிறது.

HAUKADALUR அருகில் அழகான GULLFOSS அருவி உள்ளது. கீழிருந்து மேல் நோக்கி எழும் வெந்நீர் ஊற்றை பார்த்த அடுத்த 15 நிமிடத்தில், மேலிருந்து கீழே விழும் குளிர்ந்த அருவியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? இயற்கையின்  மாறுபாடுகளை எப்படித்தான் புரிந்து கொள்வதோ!

இது ஒரு இரட்டை மடிப்பு அருவி. முதலில் 11மீ விழுந்து, திசை திரும்பி பிறகு மீண்டும் 21மீ  கீழிறங்கும் அற்புதம் இது! GULLFOSS என்பதற்கு பொன்னருவி என்று அர்த்தமாம். அருவியானது சூரிய கிரணங்களை நீருடன் கடத்தி செல்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

வழியில் லஞ்ச் முடித்துவிட்டு, தொடர்ந்து மீதமுள்ள அரைவட்டப் பாதையில் ரேக்கவிக் நகரை நோக்கி, 50 நிமிடம் பயணித்தால் Kerid Crator பகுதியை அடையலாம். KERID என்பது எரிந்து முடிந்த  எரிமலையின் பெரிய பள்ளம் ஆகும். 170மீ அகலமும், 270மீ நீளமும், 55மீ ஆழமும் கொண்ட இந்த பள்ளம், 6500 வருடப் பழமையானது.

இந்த பெருங்குழியில் குளம் போலத் தேங்கியுள்ள நீர், சுற்றுச்சூழலை ரம்மியமாக மாற்றுகின்றது. Kerid Crator மேல்பகுதியில் சுற்றி நடக்கப் பாதையுள்ளது. படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்கி குளத்தைப் பார்த்து ரசிக்கலாம். சுற்றுப்புறத்திலுள்ள மண் பரப்புக்களும், தாவரங்களும் வெளிப்படுத்தும் அழகிய வண்ண சேர்க்கைகளைக் கண்டு களிக்க  இங்கு கோடைக்காலத்தில் செல்வது சிறப்பு.

Kerid இலிருந்து 15கிமீ தொலைவில் SELFOSS என்கிற மற்றொரு அருவி உள்ளது. கருப்பு நிற பாறை துகள்களை அடித்துக் கொண்டு வருவதால், நீர் சற்று சாம்பல் நிறத்தில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டுப் பயணித்தால், ஒரு மணி நேரத்தில் தலைநகர் ரேக்கவிக் வந்தடையலாம்.

“ஐஸ்லாந்து மொழியில் இரண்டு வார்த்தைகளைக் கண்டுபிடித்து விட்டேன் ஜோன் !”, என்றாள் என் மனைவி

VIK என்று முடிந்தால் அந்த இடம் Bay (விரி குடா) ; FOSS என்று முடிந்தால் அருவி.. என்ன சரியா?

ஜோன் சிரித்துக்கொண்டே, “இன்னும் இரண்டு முறை இங்கு வாருங்கள், ஐஸ்லாண்டிக் மொழியில் பேசவே ஆரம்பித்து விடுவீர்கள்” என்றவாறே, என்னைப் பார்த்து,

“வேல் பார்த்திருக்கிறீர்களா?”

“நாங்கள் பார்க்காத வேலா? வெற்றி வேல், வீர வேல், சக்தி வேல், ஞான வேல்..! ”

“போதுமே உங்கள் மொக்கை ஜோக்.. ஜோன் குறிப்பிடுவது Whale Shark !”

“ஆம் .. நாம் நாளை கடலுக்குள் போய் நிஜ Whale ஐப் பார்க்கப் போகிறோம்” என்றார் ஜோன், தங்கும் இடம் வாசலில் வாகனத்தை நிறுத்தியவாறே..

 

 (தொடரும்)