திருமகன் சக்கரவர்த்தி

 

Caricature of Brahmin/iyengar uncleஜூலை 18 அன்று தான் எனக்கு அவர் மிகவும் நெருக்கமாகிப் போனார். எனக்கு வயது 12 அப்போது. அதற்குமுன் அவரைப் பார்த்தது இல்லையா என்றால் பாராது இருந்திருக்கவே முடியாது. எனது தாய்மாமன் அவர். ஆனால், அந்த ஞாயிற்றுக் கிழமை மாலை பதட்டமாக அவர் வீட்டுக்குள் நுழைந்த தருணம், உயரமான தனக்குத் தலை இடித்துவிடக் கூடாதென்று வாசல் படி கடக்கையில் தலையைத் தாழ்த்திக் கொண்டாரா, தனக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த அதிர்ச்சி செய்தியைக் காட்சியாகக் காண வேண்டிய கட்டத்தின் வேதனையால் தன்னுடல் குறுக்கிக் கொண்டு நுழைந்து வந்தாரா தெரியாது.  
காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியில் இருந்த அந்த இல்லத்தில் அன்று பிற்பகல் மரித்துப் போயிருந்தார் என் பாட்டனார் கே சி ராஜகோபாலாச்சாரி. அவர் உடலருகே எங்கள் பாட்டியோடு நாங்கள் அழுது கொண்டிருந்த நேரத்தில், செய்தி மெல்லப் பரவி ஒவ்வொருவராக உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து கொண்டிருந்த நேரமது.  என் மாமா உள்ளே நுழையும்போது, உள்ளிருந்து என் கடைசி சித்தி ருக்மணி அவரை நோக்கி, ‘பிச்சை…அப்பா போயிட்டார்டா’ என்று பெருங்குரல் எடுத்துக் கதறியது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மூன்று பெண் குழந்தைகளை அடுத்துப் பிறந்த ஆண் மகவுக்கு சக்கரவர்த்தி என்று பெயரிட்டிருந்தாலும், பிச்சை என்றே அழைக்கத் தொடங்கி இருந்தனர், அக்கால ஐதீகப் படி. 
தாத்தாவைப் பறிகொடுத்த எனது சொந்தத் துயரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. இரண்டரை வயதில் தாயை இழந்த என்னை வாலாஜாபாத் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான தாத்தாவும், அவரைக் கட்டியாண்ட என் பத்தாணி பாட்டியும் தான் வளர்த்தது. இரண்டாம் வகுப்பு படிக்கையில் அங்கிருந்து சென்னைக்கு என் தந்தையோடு வாசிக்கச் சென்றவனை, ஒவ்வோர் ஆண்டு விடுமுறையின் போது பார்க்கும்போதும் என்னோடு வந்து படி என்று என் தாத்தா மிகவும் பாசத்தோடு கேட்டுக் கொண்டிருக்கவே, எட்டாம் வகுப்பு படிக்க பாட்டன் பாட்டி வீட்டுக்குப் போனேன். அப்போதுதான் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்திருந்தனர்.  தாத்தா ஓய்வு பெற்று விட்டிருந்தார், கடும் உடல் நலக்குறைவினால் அப்போது படுத்த படுக்கையாக இருந்தது என்னைப் புரட்டிப் போட்டது. பள்ளிக்கூடம் திறந்த சில நாட்களுக்குள் மாரடைப்பால் மறைந்து விட்டார் தாத்தா. 
ஆனால், ருக்மணி சித்தியின் அந்த அழுகைக்குரலில் இருந்த செய்தி, தகப்பனை இழந்துவிட்ட என் மாமாவிடம் என்னை மிகுந்த அன்போடு நெருக்கமாக்கி விட்டிருந்தது. இறுதிச் சடங்குகள், தொடர்ந்த சடங்குகள், பின்னர் மாதமொருவரை திதி கொடுக்க அவர் சென்னையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்த எல்லாக் காலங்களிலும் அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தேன். அவர் எங்கே உட்கார்ந்தாலும், யாரோடு பேசிக் கொண்டிருந்தாலும், தனிமையில் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், நான் ஏதோ அவரை விடப் பெரிய ஆள் போலவும், அவருக்கு சமாதானம் சொல்லவே நியமிக்கப்பட்டவன் போலவும் கருதிக்கொண்டிருந்தேனோ தெரியவில்லை.  அவரது நட்பு வட்டத்தில் உறவு வட்டத்தில் அவரது வயதையொத்த யார் வந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தாலும் நானும் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.
தாய் மாமன் உறவு யாருக்குத் தான் உள்ளத்திற்கு நெருக்கமாக இருக்காது! ஆனால் எங்கள் நெருக்கம் இன்னும் ஆழமானது என்றே பட்டது. தனக்கு நெருக்கமான அக்காவின் பிள்ளைகள் நாங்கள், தாயற்ற குழந்தைகள் என்பதால் அவரது பிடி கூடுதல் நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். எங்கள் சித்திகள் லலிதா, ருக்மணி, பிச்சை மாமா மூவருமே எங்கள் மீது அளவற்ற பாசம் பொழிந்து கொண்டிருந்தவர்கள் தங்களது இறுதிக்காலம் வரை.
நாட்கள் நகர நகர, துக்கம் நடந்த வீட்டில் ஓராண்டுக்குள் நல்லதும் நடக்க வேண்டும் என்று பேச்சு ஆரம்பித்தது. மாமாவுக்கான கல்யாணப் பேச்சு அது. தாத்தாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்குமுன் அவருக்குத் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று எல்லோரும் பேசத் தொடங்கி இருந்தனர். அது முக்கியமில்லை, மாமாவின் மனசுக்குள் யார் இருந்தது என்று அந்தக் கதவை அவர் மெல்லத் திறந்து கூச்சப் புன்னகையோடு சொல்ல அருகிருந்து கேட்ட இடம், மறக்காது ஒரு போதும்.  தனது மாமன் மகள் மீது அபார நேசம் வைத்திருந்ததை அவரது கண்களில் படித்தேன் அன்று. எங்களிடம் வாய் விட்டுச் சொல்லவும் செய்தார். ஜூன் 18இல் அவர் கைப்பிடித்தது எனக்கு சித்தப்பா மகளான மாலதியை.  அக்காவே மாமியுமான அன்பின் உறவு அது.   
கல்லூரிப் படிப்புக்கு சென்னை செல்லும்போது பாட்டி எங்களை மாமன் வீட்டில் இருத்தி வாசிக்க வைத்தாள். அவள் காஞ்சியை விட்டு நகர்வதாயில்லை, வாலாஜாபாத் அருகே பாலாற்றங்கரை அடுத்த சிற்றூர் இரண்டில் இருந்த நிலபுலன்களை அவளைப் போல் இன்னொருவர் பராமரித்து வந்திருக்க முடியாது. வேகாத வெயிலில் அவள் காலணி கூட அணியாது நடந்த வெற்றுப் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டது பாலாற்று மணல். 
மேற்கு மாம்பலத்தில் பத்துக் குடித்தனங்களுள் ஒன்றாக மாமாவின் குடில்.  அனுமார் கோயில் தெரு ஆறாம் நம்பர் வீடு எப்போதும் கலகலப்பான சூழலில் இருக்கும். மாடியில் கடைசி போர்ஷன் மாமா இருந்தது.  அந்த மூன்றாண்டுக் கதைகள் ஒரு நாவலுக்கு உரியவை. மாம்பலத்தில் இருந்து சேத்துப்பட்டு வரை ரயிலில் சென்று, அங்கே ரயிலடி அருகில் இருந்து 71 எண் பேருந்து பிடித்து அம்பத்தூர் எஸ்டேட்டில் இருக்கும் தனது பணியிடத்திற்குச் சென்று வருவார் மாமா.  
டான்சி நிறுவனத்தில் டிராஃப்ட்ஸ்மேன் ஆகப் பணியாற்றி வந்த அவரது பொறியியல் கட்டுமான டிராயிங் அமர்க்களமாக இருக்கும்.  எங்கே எப்போது டீஸ்கொயர்  பார்த்தாலும் சக்கரவர்த்தி மாமா நினைவு வந்துவிடும்.  மாலதி மாமி எங்களைக் கண்ணாகப் பார்த்துக் கொண்டவர். மாமாவின் மணியான மூன்று குழந்தைகளையும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்ட நாட்கள் மறக்க முடியாதவை. அவர்களைப் பள்ளிக்கூடத்தில் சென்று சேர்த்துவிட்டு வந்த நாட்கள் உள்பட. 
அவர்களைத் தூளியில் போட்டு ஆட்டிக் கொண்டே பாடுவது, அவர்களுக்குக் கதை சொல்வது, விளையாட்டு காட்டுவது எல்லாம் ஐம்பது ஆண்டு ஆனாலும் நினைவில் நிற்கிறது. முதலாமவன் கிஷோர். அவனுக்கு என்றே அம்மா தாய் விளையாட்டு ஒன்று இட்டுக்கட்டி இருந்தேன். அம்மாத் தாய் என்றால் பேய். அது வாசலில் வந்து காத்திருக்கிறது, யார் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் பிடித்துக் கொண்டு போய்விடும். ஆனால் எனக்கு மட்டும் அதைப் பார்த்தால் பயம் கிடையாது என்று சொல்லி முடிப்பேன். கிஷோர் மெல்லச் சொல்ல வேண்டும், மாமா வாசலில் யாரும் இல்ல… தெரியும்… ஆனா அம்மாத் தாய் இருந்தாலும் இருக்கும்.  எனக்குத் தான் பயம் கிடையாதே…அம்மா தாயாவது…கும்மா தாயாவது என்று சொல்லிக் கொண்டே நான் வாசலுக்குப்போய் எட்டிப் பார்த்துவிட்டு அலறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிவருவேன் …விழுந்து விழுந்து சிரிப்பான் கிஷோர். அதற்குமுன் போர்வையை எடுத்து மேலே தலைவரை மூடிக்கொண்டு வாசலில் போய் நின்று அம்மாத்தாய் என்றால் எப்படி இருக்கும் என்று பயங்காட்டிவிட்டு வரவேண்டும். என்னோடு மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த சித்தி மகன் ராஜூவுக்கும் இந்த விளையாட்டு பிடிக்கும், அவனும் கூட சேர்ந்து நடிப்பான் இந்த விளையாட்டில். எல்லோரும் சிரித்து விளையாடிக் கொண்டிருப்போம். 
மாமா வந்தால் பெரும்பாலும் நிறுத்தி விடுவோம். அல்லது அவர் நாளேடு புத்தகம் ஏதாவது ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் இந்த ஆட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்போம். ஒரு நாள் மாமா, டேய்…ரொம்ப போர் அடிக்குது…அந்த அம்மாத்தாய் விளையாட்டு எனக்காக செய்டா என்று கேட்க அவ்வளவு தான் வீடு முழுக்கவும் சேர்ந்து கொண்டது அதை ரசிக்க.  அவரது குழந்தைமை உள்ளம் அசத்தலானது. தெரியாமல் அரசியல் கூட்டத்தில் நடிகர் சோ பேசுவதைக் கேட்கப்போய் இரவு தாமதமாகத் திரும்பி வந்து மாட்டிக் கொண்டு முழிக்கையில், ஒரு பாட்டம் எங்களைத் தித்தித்த தீர்த்துவிட்டு, ஏம்பா…சோ என்ன பேசினார்னு யாருமே சொல்லலியே என்று அவர் கேட்டதும் வீடு முழுக்க அடக்கமாட்டாத சிரிப்பில் வெடித்தது, இறுதிவரை மாமாவுக்கு சொல்லவில்லை, அன்று சோ வரவே இல்லை என்று.  அரசியல் சினிமா ஒன்று விடாது அவரோடு அடித்த கூத்துகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. 
சினிமா அரட்டை ஒரு வேளை என் தாய் வீட்டு சீதனமா என்று தெரியாது, என் மாமாவுக்கு சமமாக அமர்ந்து திரைப்படங்கள் பற்றி நாங்களும் அன்பு கலந்திருந்த வம்பு அது. எம் கே டி பாகவதரின் மகா ரசிகரான மாமா, சொப்பன வாழ்வில் மறந்து …..என்று ஒரு தம் கட்டி இழுத்து, நிறுத்தி, சுப்ரமண்ய சுவாமி…உனை மறந்தார்…என்ற இடத்தில அந்த சுவாமிக்கு அபார அழுத்தம் கொடுத்து, அடுத்த அடியில் அந்தோ….என்ற நீட்டிப்பும், அற்ப பணப்பேய் பிடித்தே…என்று வளர்த்தெடுக்கும் போது அராஜக ரகளை செய்து ரசித்துக் கைதட்டி அட்டகாசம் செய்வோம்.  
அடுத்த வரிசையில் சி எஸ் ஜெயராமனின் அணுக்கத் தொண்டர் மாமா. அதுவும், இரத்தக் கண்ணீரின் ‘குற்றம் புரிந்தவன்…’ அதிலும்  ‘நிம்மதி ஏது’ என்று அவர் எடுத்த குரல் எம் ஆர் ராதாவுக்குக் கேட்டதா தெரியாது.  அடுத்து, இருக்கவே இருக்கிறது, வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள் …அதை லயித்துப் பாடுவார் மாமா. சிவாஜியின் குரலில் இடையே இடையே வரும் வரிகள் அவ்வண்ணமே இசைத்தால் தான் கடமை நிறைவேறும் அவருக்கு. 
அதற்காக டி எம் எஸ் பிடிக்காது என்றில்லை…’பெண்களை நம்பாதே…கண்களே பெண்களை நம்பாதே’ மாமாவின் சிக்னேச்சர் சாங்!  ‘அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை’ பாடலின் தொகையறா அவருக்கு முக்கியமானது, ‘பத்து மாசம் சுமந்து பெற்றாள் ..பகலிரவாய் விழித்திருந்து…. ‘ முழுக்க அவரே நாயகனாகிப் பாடுவார். ‘யாரடி நீ மோகினி…’ பாடலில் டி எம் எஸ் , ஹா சொல்லுமிடம் மாமா அசாத்திய கம்பீரத்தோடு சொல்வார். தானே சிவாஜியாகி விடுவார். உத்தம புத்திரன் படத்தில் எந்தெந்தப் பாடல்கள் யார் பாடியது என்று அவருக்கும் என் அண்ணன் ரவிக்கும் வாத பிரதிவாதங்கள் ஓடும், ‘யாரு கிட்ட சொல்றே, சுசீலாவா பி லீலாவா பாக்கலாமா….பந்தயம் வச்சுக்கலாம், வர்றியா’ என்று அதற்கும் தம் கட்டுவார் மாமா.  
வசந்த மாளிகையின் ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ பாடல் வந்த நாட்களில், கண்ணதாசன் தனக்காகவே அதை எழுதியதாக உணர்ந்தார் மாமா.  ‘கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா…அதில் கட்டில் அமைந்ததடா..கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை..இன்பச் சக்கரம் சுற்றுதடா…’ என்று நிறுத்துவார்.  அங்கே ஒரு கம்பீர சிரிப்பு இருக்கும், ஹா ஹ ஹா….’அதில் நான் சக்கரவர்த்தியடா …’  என்ற அடியைப் பாடும்போது மாமாவின் உடல் மொழி சொல்லும், எனக்கான பாடல் தான் இது என்று. 
2KMnO4+16HCl→2KCl+2MnCl2+8H2O+5Cl2. 

இது என்னது என்கிறீர்களா…குளோரின் தயாரிப்பு வேதியியல் சமன்பாடு. மாமாவுக்குத் தலைகீழ் மனப்பாடம். நான் கெமிஸ்ட்ரி எடுத்துப் படிக்கிறேன் என்றதும்,  ஈக்குவேஷன் சொல்லு பார்ப்போம் என்று அடிக்கடி கேட்பார்!  தலைவர் நினைவாற்றல் பயங்கரம்.  ஒரு செய்தி, ஒரு விஷயம் மறக்க மாட்டார். 

பிறகு ஆலங்குளம் பிராஜெக்ட் வரவும் மாமா குடும்பத்தை அழைத்துக் கொண்டு அங்கே சென்றாலும், எங்கள் படிப்புக்காக மாம்பலம் வீட்டை காலி செய்யவில்லை. பாட்டி காஞ்சிக்கும் சென்னைக்குமாக அலைந்து எங்களைக் கரை சேர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள். மாமா பாட்டியைப் பார்க்கவும் அலுவலக வேலைகளுக்காகவும்  சென்னை வந்து செல்வார். நானும் அண்ணன் ரவியும் சித்தி மகன் ராஜூவும் எழும்பூர் ரயில் நிலையம் சென்று ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் மாமாவுக்கு இடம் பிடித்து அவர் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டு வருவது சுவாரசியமான அனுபவம். போர்ட்டர்களோடு சண்டை, வேறு பயணிகளோடு தள்ளுமுள்ளு எல்லாம் கடந்து ரயில் புறப்படும் போது மாமா வந்து சேர்கிற தருணமே அத்தனை இன்பமாக இருக்கும். அப்புறம் கண்டுபிடித்தோம், தி நகர் ராஜபாதர் தெருவில் ஒரு மாடியில் தென்னக ரயில்வே துணை அலுவலகம் ஒன்றில் சில ரயில்களுக்கு இரண்டிரண்டு டிக்கெட்டுகள் கோட்டா உண்டு என்று. அப்படியாக புக்கிங் செய்யவும் வழி கண்டுபிடித்தோம். 

எம் எஸ் சி படிக்க நான் கோவைக்குச் சென்றது, பின்னர் வேலை கிடைத்தது, இதற்குள் மாமா வேளச்சேரிக்குக் குடி பெயர்ந்தது எல்லாம் வேறு ஒரு காலத்திற்கு எல்லாவற்றையும் பெயர்த்துவிட்டது.  அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வதாயிற்று. மாமாவின் உடல் நலம் இலேசாக பாதிப்புற்றாலும் எங்களைப் பார்க்கத் துடிப்பார்.  நான் மருத்துவமனையில் போய் நின்றால், கனவில் சுகந்தா (என் அம்மாவின் பெயர்) வந்தாள் என்று ஆரம்பிப்பார். மாமியின் அக்கறையான கவனிப்பால் மாமா எழுபது கடந்து வந்து கொண்டிருந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் பரஸ்பரம் பார்த்து விசாரித்துக் கொள்வோம். மூன்று மகன்களுக்கும் திருமணம் முடிந்து பேரக்குழந்தைகள் அன்பும் சுவைத்து அவரது நிகழ்ச்சி நிரல் உறவுகளின் பொருளடர்த்தியோடு வளர்ந்தது.
2022இல் அவரது ஐம்பதாவது திருமண நாளில் அவரைப் போய்ப் பார்த்து ஆசி பெற்று வந்தோம்.   காஞ்சிபுரம் தவிர்த்து வேறு பயணங்கள் அதிகமின்றி மாறி இருந்தது. அவரது உடல் நலம் சார்ந்த புதிய சூழல்.  கனவில் சுகந்தா மட்டுமின்றி 2018இல் மறைந்த அடுத்த தமக்கை லலிதாவும் வரத் தொடங்கி இருந்தாள்.  கடந்த செப்டம்பரில் மூன்றாம் தமக்கை ருக்மணி எதிர்பாராது மாரடைப்பில் சட்டென்று மறைந்தது மாமாவை மிகவும் தாக்கியிருந்தது. அவரது நினைவு அடுக்குகளின் சுழற்சி இப்போது எதிரெதிர் திசையில் மாறி விட்டிருந்தது.  அசாத்திய நினைவாற்றலுக்குப் பெயரெடுத்திருந்த அவர் எப்போதோ இறந்துபோன உறவுக்காரர் பெயரைச் சொல்லி, பாவம் போய்விட்டார், எடுத்துவிட்டார்களா தெரியவில்லையே என்று திடீர் என்று கேட்கத் தொடங்கினார். குரல் தளர்ந்து போயிருந்தது. நடையை மெல்ல மறக்கத் தொடங்கி இருந்தன கால்கள்.
இரண்டு மாதங்களுக்குமுன் காஞ்சிபுரத்தில் உள்ள இல்லத்திற்கு மாமியை அழைத்துக் கொண்டு சென்றார். இந்த வரியில் இலக்கணப் பிழை இருக்கிறது. மாமாவின் ஆசைப்படி மாமி அவரை அழைத்துச் சென்றாள் என்பதே சரி. தனது பெற்றோர் வசித்து வந்த வீடு அவரது மனத்திற்கு நெருக்கமானது.  வைகாசி மாதம் கோயில் பிரும்மோற்சவ நேரத்தில் அங்கே இருக்கும் ஆசை அவருக்கு. அவரது எண்பதாவது பிறந்த நாள் அவரை நோக்கி மெல்ல வந்து கொண்டிருந்தது. அப்படியும் இப்படியும் மாத்திரை மருந்துகளுமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் மாமி, அவருக்கும் சேர்த்து கோயிலுக்கு ஓடோடிப் போய் வந்து கொண்டிருந்தும்!
ந்த மே மாதம் 3ம் தேதி காலை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதி 60 A இலக்க வீட்டுக்கு நான் செல்கையில் எட்டாம் வகுப்பு படிக்க நான் குடியேறியிருந்த வீடு, வாசல் திண்ணைகள், அந்தக் காலத்து மரக்கதவு எல்லாம் அப்படியே இருந்தது.  உள்ளே நுழைகையில் அந்த வாசல்படி அவரை எனக்கு நினைவூட்டியது. 53 ஆண்டுகளுக்குமுன்  தாத்தா கிடத்தப்பட்டிருந்த அதே இடத்தில் குளிர்பதனப் பெட்டிக்குள் மாமாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் முற்பகல் பிரிந்து விட்டிருந்தது அவரது உயிர்.