Renowned Tamil writer, novelist K Rajanarayanan dies at 98 in Puducherry -  India Todayல்லாம் ‘பண்டிதன் கிணறு’ தான் காரணம். படைப்பாளி சுகா எழுதிய அந்தச் சிறுகதை அந்த வியாழனன்று (மே 2020) ஆனந்த விகடனில் வந்திருந்தது. நெல்லை தோழர் நாறும்பூநாதனிடம்  அலைபேசி  எண் கேட்டு வாங்கி சுகா அவர்களை அழைத்துப் பேசி வாழ்த்துகள் சொன்னதோடு விட்டு விடுவோமா…. நெல்லையைச் சார்ந்த நண்பர்கள் சிலருக்கு  கதையைப் புகைப்படம் எடுத்து அனுப்பியாயிற்று. 
 
சார்வாள் என்று பிரியத்தோடு அழைக்கப்படும் கிருஷி அழைத்தார். பேசிக்கொண்டிருந்தார்….  பேச்சின் திசை ஒரு கட்டத்தில் மூத்த படைப்பாளி கி ராஜநாராயணன் (கி.ரா) அவர்கள் பக்கம் போயிற்று….தமிழ் இந்து பத்திரிகையில் அவரோட நேர்காணல் வாசிச்சீங்களா தோழர் என்கிறார்…ஆமாம், அருமையாக இருந்தது, நேர் காணல் செய்த சமஸ் அவர்களுக்கும் என் வாழ்த்தைத் தெரிவித்தேன், என்னமாக அமைந்த நேர்காணல் அது என்றேன்… 
 
“.கி.ராவை எப்போ பார்த்தீர்கள்” என்றார். 
 
சொன்னேன். அது எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்தைய சந்திப்பு. நெருக்கமாக அறிந்தவன் இல்லை என்றாலும், மிக அருகே ஒரு மணி நேரத்திற்குமேல் அவரோடு  இருக்கக் கிடைத்த அனுபவம் மறக்கக் கூடியதா என்றேன்.  ‘அய்யாவோட பேச ஆசையைத் தூண்டி விட்டீர்கள், நம்பர் கொடுங்கள்’ என்றேன்,  கி.ரா அவர்களுடைய அன்பு மகன், பிரபி என்று அழைக்கப்படும் பிரபாகர் எண் கொடுத்தார் கிருஷி. 
 
அவரோடு பரிச்சயம் இல்லை தான்…இருப்பினும் பேசுவோம் என்று 2020 மே மாதம் 29ம் தேதியன்று மாலை அழைத்தேன்… 
 
கொஞ்சம் வறண்ட குரலில் மிக சன்னமாக பதில் ஒலித்தது, அடுத்த முனையில். ‘ஒய்வு எடுத்திட்ருக்கியளோ?’ என்றேன். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை, யாரு?’ என்றார்.
 
என் பெயரைச் சொன்னேன், ‘உங்களுக்குத் தெரிந்திராது….பிறகு பேசட்டுமா’ என்றேன்…
 
‘இல்லை இல்லை பேசுங்க’ என்றார். இப்போது நீர்த்திரட்சி குரலில். 
 
அப்புறம் என்ன 33 நிமிட இலக்கிய நடை நடந்தேன் எங்கள் வீட்டுப் புழக்கடைக்கும், ஹாலுக்குமாக, அலைபேசியில் பேசிக்கொண்டே! அது கொரோனாக் காலம், வீட்டை விட்டு வெளியே எங்கே போக ! 
 
‘பேசுங்க’ என்று உங்களை ஒருவர் கேட்கிறார், அது ஒரு மந்திர விசை.  நாம் பேசக் கூடாது, விசையை இலேசாக அழுத்தினால் போதும், பேச்சருவி அடுத்த முனையில் பொங்குகிறது…பொங்கி எழுந்து உள்ளம் நனைக்கிறது. 
 
அரை மணி நேரம் ஒரு பெரிய கால அளவா எனில், ஒரு திருமண வரவேற்பில் தான் அந்தக் கால அளவுக்குள் மிக அதிகமான புதிய நபர்களை மணமகனோ, மணமகளோ சட்டென்று எதிர்கொள்வார்கள். பரிச்சய புன்னகை செய்வார்கள்.  அதிவேக வாகனம் ஒன்று கூட, அரை மணி நேரத்திற்குள்  அதிகபட்சம் 50 கிலோ மீட்டர் தூரம் தான் கடக்க முடிகிறது.  அதில் உட்கார்ந்து போகிறவர்களுக்கு அருகருகே கடந்து போகும்  ஊர் தெரியும், பெயர்ப்பலகை வாசிக்க முடியாது. கடைகள் தெரியும், உள்ளே கடிகாரத்தில் என்ன மணி என்று சன்னல் வழி பார்த்துக் கண்டுபிடித்து விட முடியாது. 
 
ஆனால், முப்பது நிமிட நேரத்தில், ஒரு மனிதர் இடைசெவலில் இருந்து கோவில்பட்டி, அப்புறம் அங்கிருந்து புதுவைக்கு.  அப்புறம் அங்கிருந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு… மீண்டும் புதுவைக்கு, அப்புறம் அங்கிருந்து நெல்லை புத்தகக் கண்காட்சிக்கு, அங்கிருந்து மீண்டும் புதுவைக்கு (வழி: இடைசெவல்)… ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம், வழி நெடுக மனிதர்கள் அறிமுகம், பெயர்களோடு…சும்மா பெயர்கள் அல்ல….மனிதர்களை ஒரு கோட்டுச்சித்திரம் வரைகிறார் மக்களே, கோட்டுச் சித்திரம் !
 
இத்தனைக்கும், அது தான் எங்களுக்கு இடையே நிகழ்ந்த முதல் உரையாடல்……’என்ன பேசிட்டிருந்தோம் நேற்றைக்கு?’ என்று, விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடரும் பக்கத்து வீட்டுக்காரர் போல ஒருவரால் பேச இயலுமா? பிரபி பேசுகிறார்.
 
இலேசான அறிமுகத்தோடு நான் பேசத் தொடங்கினேன்… கி ரா அவர்களை மிகத் தற்செயலாக அருகே அறிமுகம் செய்துகொண்டு அவர் பேசக்  கேட்கும் அற்புதமான  வாயப்பு 2008 நவம்பரில் வாய்த்தது பற்றிச் சொன்னேன். 
 
குழந்தைகள் தின கொண்டாட்ட நிகழ்ச்சி, புதுவையில் ஒரு பள்ளியில் (லாஸ்பேட்டை என்று நினைவு). ஒன்பதரை மணி என்று கி.ரா அவர்களிடம் சொல்லி இருப்பார்கள் போலிருக்கிறது. அப்படியே வந்து சேர்ந்துவிட்டார்.  குழந்தைகள் வந்திருக்கவில்லை. கலைநிகழ்ச்சிகளுக்காக பட்டுக்கோட்டை குறிச்சி இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் வந்து சேர கொஞ்சம் நேரம் பிடிக்கும் என்று தெரிந்தது. யாருமற்ற ஓர் அரங்கில், என்னை அவருக்கு அருகில் நாற்காலி போட்டு அமரவைத்து, பாத்துக்கங்க என்று சொல்லிவிட்டுப் போனார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். 
 
அய்யாவைக் கேட்கணுமா…’என்ன நீங்க மாட்டிக்கிட்டீங்களோ’  என்று புன்னகையோடு கேட்டார்… 
 
“இல்லை, இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வது கூடத் தெரியாது, பட்டுக்கோட்டை மாணவர்கள் வருகிறார்கள் என்று நேற்றிரவு கேள்விப்பட்டு சட்டென்று இன்று விடியற்காலையில் எழுந்து சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தேன்…எனக்கு இது இரட்டை போனஸ்” என்று சொன்னேன். 
 
“அப்புறம் சொல்லுங்க ஏதாவது” என்று கேட்டார் கி ரா. 
Ki.Ra2.jpgஅது தான் மந்திர விசை. நான் எதுவும் பேசவில்லை, அவரிடம் பேசத்தக்க விஷயம் என்ன இருக்க முடியும் என்னிடம் ? ஒரு நடமாடும் கருத்துக் கருவூலம், களஞ்சியம், அனுபவச் சுரங்கம் தன்னடக்கத்தோடு அமர்ந்திருக்கிறது என்பதற்காக நாம் பேசி விட முடியுமா….மந்திர விசையை இலேசாக அழுத்தினேன். ஒரு 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் இருக்குமோ…..நூற்றாண்டுகளைக் கடந்து முன்னும் பின்னும் பேசவல்ல  ஒரு கதை சொல்லி முன்பாக, நிமிடக்கணக்கு எல்லாமா பார்ப்பார்கள், கேவலமாக, அது ஒரு பேறு !
 

அந்த நேரம், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கம் குறிச்சியில் நடத்தும் பள்ளியின் தாளாளர் தி தனபால் வந்து சேரவும் தன்னை கி ராவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“தமிழ்நாட்டில் காருகுறிச்சி, கல்லிடைக்குறிச்சி, கள்ளக்குறிச்சின்னு….நிறைய குறிச்சி உண்டு” என்று சொன்ன கி ரா, “அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை உண்டு, விடாத வறட்டு இருமல் இருமிக்கிட்டே இருக்கறவன் ஒடம்புல குறிச்சி, குறிச்சின்னு எழுதி வச்சா இருமல் நிக்கும்னு!” என்று புன்னகைத்தார்.

 
பேச்சு தொடர்ந்தது.  புதுவை பல்கலைக் கழகத்தில் இவரை நாட்டுப்புறக் கலை தொடர்பான துறை பேராசிரியராக நியமித்த பின்னர் வருகை பதிவேடு தயாரிக்கும் ஓர் ஊழியர் இவரை முனைவர் என்று போட்டுவிட்டு, இவர் நான் டாக்டரேட் எல்லாம் வாங்கவில்லை என்றதும், Dr என்று போட்டதை Mr என்று மாற்றிய கதை!  அப்புறம் குழந்தைகள் பக்கம் திரும்பியது பேச்சு.
 
“குழந்தைகள் உலகம் தனி…ஹாரிபாட்டர்னு புத்தகம் போட்டு இத்தனை பேசுறாங்களே .. நம்ம கிட்டயே அதைவிட நூதனமான கற்பனைக் கதைகள் அபாரமா இருந்தது…பலதும் பதிவாகல்ல… கற்பனைக்கு எல்லை உண்டா… டால்ஸ்டாய் என்ன பண்ணினார், சுளகு கட்டிக்கிட்டு …ஆமா, சுளகு தெரியுமா உங்களுக்கு…. ஓ நீங்க அந்த பக்கத்துக்காரர் இல்லை, எந்த ஊர் நீங்க, வடாற்காடு மாவட்டமா, அப்போ தெரியாது. சுளகுன்னா முறம்… அதை எடுத்துக் கட்டிக்கிட்டு விமானம் மாதிரி பறக்க முடியுமான்னு பார்த்திருக்கார்… 
அவரோட குழந்தைகளுக்கான கதைகள் படிச்சிருக்கீங்களோ…படிக்கணும். ஒரு கதையில் வரி வசூல் பண்ண வரும் தலையாரியை வீட்டு வாசலில் இரண்டு கைகள் பரப்பி நின்னு தடுக்கப் பார்க்கிறான் வீட்டுச் சிறுவன்…எதுக்கு வரி கட்டணும்னு கேப்பான்…அவனுக்கு எப்படி புரிய வைக்கிறது…ஜார் மன்னருக்கு நன்கொடை கொடுக்கணும் என்பார் அவர். அவர் கிட்டதான் கொள்ளை கொள்ளையா பணம் இருக்கே நாங்க எதுக்கு நன்கொடை கொடுக்கணும் என்று மடக்குவான் சிறுவன்…இடையில ஒண்ணு சொல்ல மறந்துட்டேன், இந்த வரியெல்லாம்  உங்களுக்கு நல்லது செய்யறதுக்கு என்று சொல்லி இருப்பார் தலையாரி…இப்ப தலையாரி சொல்றார், வரி கட்டலன்னா ஒங்க மாடுகளைப் பத்திக்கிட்டுப் போயிருவம்னு.  பையன் கேக்குறான், இதான் மன்னர் எங்களுக்கு நல்லது செய்யறதான்னு…எத்தனை அற்புதமான படைப்பு பாருங்க” என்கிறார்.
அப்புறம் கோவில்பட்டிக்கு நகர்ந்தது அவரது பேச்சு…வில்லடி பிச்சுக்குட்டி கேள்விப்பட்டிருக்கீங்களோ…… 
“பிச்சுக்குட்டி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் பண்ண வருவார்…. நாங்கள்ளாம் போய் நிப்போம்…அங்கே ஒரு தலைவர் இப்படி சொல்றார்: பிச்சுக்குட்டி  பேசுவார் இப்ப  யாரும் வாயைத் திறக்கப்படாது…ஒரு சத்தம் கேக்கப்படாது…….சரியாய்ப் போச்சு…பிச்சுக்குட்டி பேசும்போது அப்படி ரசிப்பா இருக்கும்.  சிரித்து குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணி கேக்காமல் எப்படி உர்னு உக்காந்து கேக்கறது …”
எவ்வளவு கதைகள்…எவ்வளவு செய்திகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் கி. ரா. 
ஒரு வழியாகக் குழந்தைகள் ஹாலில் நிரம்பி சள சள என்று பேசிக்கொண்டிருந்தனர். கி ரா மேடைக்கு அழைக்கப்பட்டார். என்னையும் அவர் அருகே அமர வைத்தனர். பின்னர் நிகழ்ச்சி அமைப்பாளர் எழுந்து மைக் அருகே போனார், குழந்தைகளே, நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது…மூத்த எழுத்தாளர் கி ரா உங்க கிட்ட பேசப் போறார்….யாரும் சத்தம் எதுவும் போடக்கூடாது…வாயைத் திறக்கக் கூடாது என்றார். கி ரா மெல்ல என் காதருகே, ‘பிச்சுக்குட்டி கதை தான்’ என்று சிரித்தார்.
அதை அப்படியே பிரபி அவர்களிடம் கொஞ்சமாக நினைவு கூர்ந்தேன்…. 
 
பிரபி ஆரம்பித்தார்:
 
“ஆமா… வில்லடி பிச்சுக்குட்டி… வீட்டுக்கு வந்திருந்தார் அப்பாவைப் பார்க்க. அப்போ எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும். நல்லா நினைவிருக்கு…. அரைக்கை சட்டை, முழுக்கை சட்டை அப்படின்னு சொல்வமே, அவர் போட்டிருந்தது, முக்கால் கை சட்டை…. அப்படி இறங்கி வழிந்து அப்படி நிக்கும். நல்லா இருந்தது…அவருக்கு நல்லா எடுப்பாத் தான் இருந்தது. நெத்தியில் ‘இதா இருக்கேன்’ அப்படிங்கிற மாதிரி குங்குமப் பொட்டு, சிவப்பா. அப்புறம் அவரோட மூக்கு நல்லா விடைச்சி… அதாவது நமக்கெல்லாம் எப்பமாவது விடைக்கும் பாத்தீங்களா அப்படி அவருக்கு எப்பவுமே விடைச்சி தெரிகிற மூக்கு. அப்பா இருக்கார், அம்மா இருக்கா. நான் தள்ளி கொஞ்சம் தள்ளி தான் நின்னுட்டிருக்கேன்… இங்கே வா பாப்பம் அப்படினு என்னைக் கூப்பிடறார்….
 
” நல்லா நினைவிருக்கு….ஏழு வயசுதான் எனக்கு அப்போ… கன்னத்துக்கு கீழே கையால் நெருடி நெருடி என்னவோ பாக்கறார்…எங்க அப்பா கண்ணுல படல, அம்மா கண்ணுல படல …இலேசா வீக்கம் மாதிரி… கைய வச்சு பாக்கறப்ப நல்லா உள்ளே வீங்கின மாதிரி தெரியுது…. இது பாதவள இல்லைங்கிறார்….பாதவள தெரியுமா உங்களுக்கு….. நீங்க எந்த ஊரு, வடாற்காடு மாவட்டமா…அப்ப தெரிஞ்சிருக்காது…எங்க பக்கத்துல சொல்றதுண்டு… தொடை இடுக்கில வரும்…கழுத்துப் பக்கம் வரும்போதும் சொல்றது உண்டு பாதவள.., இது அது இல்ல….தெரிஞ்சுதா…ஏதோ கிளாண்ட் பிரச்சனை..உடனே டவுன்ல டாக்டரை பாத்துடணும் என்கிறார் அப்பா கிட்ட.
 
“கோவில்பட்டி அப்பல்லாம் அவ்வளவு பரபரப்பான ஊர் கிடையாது…என் ஏழு வயசென்ன அப்புறம் பத்து வருஷத்துக்குப் பிறகும் கூட அத்தனை பரபரப்பு இல்லாத ஊர். அங்கே அப்பாவுக்கு தெரிஞ்ச டாக்டர் உண்டு. அவரப் போய் பார்த்து மருந்து எடுத்து….இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா…பிச்சுக்குட்டி தான் மொதல்ல பாத்தது…”
 
அடுத்து, கி ரா போலவே அடுத்தடுத்து போய்க் கொண்டிருந்தது பிரபியின் பேச்சும்.
 
“கோவில்பட்டி வீதிகள்ல  அப்ப மாடுகள் எப்படி இருக்கும்கிறீங்க….கம்பீரமாக வாட்ட சாட்டாமாக இருக்கும்….திமில் இல்லாமையே…அப்புறம் டில்லி எருமைகள் அதுக்கு பேரு உண்டே, சட்டுன்னு வராது….ஆமாம், முர்ரா அப்படின்னு சொல்வாங்க…அப்படி ஜம்முனு நிக்கும்….. எல்லாம் பாத்துட்டே வருவோம். சில நினைவுகள் அப்படியே இருக்கு வாழ்க்கையில்…”
 
பிரபியிடம் நான் பேச ஆரம்பித்தேன்: “நீங்க நாவல் ரெண்டு அருமையா எழுதி இருக்கீங்க அப்படின்னு கிருஷி சொன்னார்… அப்புறம் சுவாரசியமான மனிதர்னு சொன்னார். குறிப்பா, அந்தக் கருப்பட்டி விவகாரம்…நல்ல கருப்பட்டின்னு எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு கேட்டா, கருப்பட்டியே சொல்லிருமே என்று சொன்னீங்களாம்.”
 
 அழகாக சிரித்தார். பிரபி. ” ஆமா, பனங் கருப்பட்டி…அதுவே சொல்லுமே….அந்தப் பேச்சு வர்றப்ப நாஞ்சில் நாடன் கூட இருந்தார்.  கிருஷி சார் நல்லாத் தெரியும்…. அப்பா கிட்ட அவ்வளவு மதிப்பு, பிரியம், நெருக்கம். வாரம் ஒருக்கா நேர இடை செவலுக்கே வந்துருவார் ..அப்பாவோட பேசிட்டிருப்பார்…ஒரு செட்டு சேர்ந்திரும் அப்பல்லாம்  பேச்சு போய்க்கிட்டே இருக்கும். கிருஷி சாரை நீண்ட நாள் கழிச்சு எப்ப பாத்தேன்… மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துல விழா. நான் தான் போயிருந்தேன், அப்பா வல்ல. உள்ளே போகும்போதே பாத்தாச்சு…கிட்ட போய், ‘நீங்க இராமகிருஷ்ணன் அண்ணாச்சி தான’ அப்படின்னு கேட்டேன். அதே மாதிரி இருந்தார்…மாத்தமே இல்ல. என்ன, தலை நரைச்சு இருந்தது… அப்படியே சொன்னேன் அவர் கிட்ட.  இலேசா சிரிச்சார்…அதிகம் பேசிக்க முடியல… நிகழ்ச்சி முடிஞ்சு, அப்புறம் ராமசாமி அவர்கள் உள்ளே அழைச்சுகிட்டுப் போனார்.. அங்கே VC அவ்வளவு அருமையாக நடத்தினார். அவர் தான் சாப்பிடாமல் போகக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதுக்குமுன்னால் ஓர் அறையில் பேசுறப்ப, வண்ணதாசன் இருந்தார். உள்ளே கிருஷியும் வந்து ஒரு பக்கத்தில் இருந்தார்…ஆனால் அதிகம் பேசிக்க முடியல… புறப்படும்போது அப்பா கிட்ட   சொல்லுங்கோ என்றார்.  இங்கே வந்து அப்பா கிட்ட சொல்றேன், அப்பா கிருஷியை பார்த்தேன் அப்படியா இருக்கார்.. மாத்தமே இல்ல, தலை கொஞ்சம் நரைச்சது தவிரன்னு…
 
“அப்புறம் இப்ப… நெல்லை புத்தகக் கண்காட்சி சமயத்துல…சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களை அழைச்சு …அதுக்கு கூப்பிட்டு விட்டாங்க… அப்பாவால் முடியாது, நீங்க வந்துரணும் அப்படின்னு நாறும்பூநாதன் ரெண்டு மூணு தடவை அழுத்தி சொல்லிட்டிருந்தார்… இல்ல, இங்கே அப்பாவை விட்டுட்டு வர்றது எப்படின்னேன்… இல்ல ஒரு நா அண்ணனை பாத்துக்க சொல்லிட்டு வந்திறணும் அப்படின்னார்… அப்பா கிட்ட கேட்டேன், சரி அவ்வளவு சொல்றாங்க போயிட்டு வந்திருன்னார்.  நாதனிடம் சொன்னேன், ஒரே நாள்ல போயிட்டு வரணும்னா கார் வச்சிட்டுத் தான் வரணும்னு.  அதெல்லாம் பாத்துக்கலாம்னார் 
 
“இங்கேருந்து புறப்பட்டுப் போனதுதான்…அடாடாடா….அந்தக் குழந்தை…ஆமாம் அப்படித்தான் சொல்ல முடியும்… நெல்லை மாவட்ட கலெக்டர், தான் ஓர் ஐ ஏ எஸ் அதிகாரின்னு கொஞ்சமும் காட்டிக்கணுமே…ஹூஹூம்…அத்தனை சாதாரணமா…என்ன வரவேற்பு… அந்த நிகழ்ச்சி முடியற வரையிலும்..ஒவ்வொண்ணும் பாத்துப் பாத்து…. அவங்க அதிகம் எதுவும் மேடையில் பேசல..ஆனா எத்தனை கவனிப்பு…ஆர்வம்.. ஷில்பா…. ஷில்பா பிரபாகர். உண்மையில் எத்தனை ஆர்வம். இந்த நிகழ்ச்சிகளை சிறப்பா நடத்தணும்னு…கூட ஒரு துணை வட்டாட்சியர், அவரும் அப்படி பொறுப்பா…மறக்க முடியாத அனுபவம்… நாறும்பூநாதன் கூடவே இருக்கார். அப்பவும் கிருஷியை அங்கே பார்க்கறேன்…  
 
“எல்லாம் முடிஞ்சு புறப்படணும். ஒரு வேட்டி துண்டு அப்பாவுக்குன்னு கலெக்டர் கொடுக்கறார்… ‘ஷில்பா கொடுத்ததுன்னு சொல்லி அப்பாட்ட கொடுக்கணும்’ அப்படின்னு சொல்றார்… நிச்சயம் சொல்றேன்னு சொல்றேன். சரி, ஊருக்கு எப்படி போகப் போறீங்க அப்படின்னு கேள்வி.  இதா புறப்பட்டுருவேன் என்கிறேன்… அய்யயோ இத்தனை அவசரம் எதுக்கு..இன்னிக்கு தான அவ்வளவு தொலைவுப் பயணம் …தங்க ஏற்பாடுகள் செஞ்சிருக்கு..இன்றைக்கு இருந்துவிட்டு நாளை புறப்படலாம் அப்படின்னு சொல்றார்… இல்ல, இங்கிருந்து புறப்படணும்னு சொல்றேன்.. 
 
“அங்கே பாருங்க, ஒரு கலெக்டர் எத்தனை அக்கறை எடுத்துக்கிட்டு, சார், டிரைவர் கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுத்துக்கட்டும், அதுதான் நல்லது என்கிறார். நானும், இன்னிக்கு பாண்டிச்சேரி போகல…இடைசெவல் போய் ராத் தங்குறோம். காலையில் புறப்பட்டுப் போகிறோம் என்றதும் தான் ஆறுதல் அடைந்தார். எத்தனை கரிசனம், ஜாக்கிரதையாக அனுப்பி ஊர் போய்ச் சேர்ற வரைக்குமான அக்கறை….ஷில்பா !”
 
‘அதாவது குழந்தைன்னு நீங்க சொன்னவர்’ என்றேன் இடையே.
 
“ஆமாம்… எனக்கு என்னவோ எங்க மகளை பாக்கற மாதிரியே தான் தோணிச்சு…. என் மக ஐஏஎஸ் தேர்வுகள் முயற்சி எடுத்தா… வெற்றி பெறல. இந்த இளம் வயசுல ஐஏஎஸ் முடிச்சு ஒரு மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று, எத்தனை விதமான கடமைகள், எத்தனை எளிய முறையில், ஆளு அம்புன்னு காட்டிக்கிடாம, அது தான் என் மகளை பார்த்த உணர்வுல குழந்தை குழந்தைன்னு சொன்னது…
 
“அப்புறம் இடைசெவல் வந்து தங்குனோம். பாண்டிச்சேரியில் இருக்கும் மனைவியை அழைச்சு பேசினேன், மூணு மணி நேரத்துல ஃபோன் போட்டு எழுப்பி விட்ருன்னு. அவங்களும் அங்கிருந்து அழைச்சு எழுப்பி விட்டாங்க… டிரைவரை எழுப்பி விட்டேன்.. இருட்டுன பிறகு வந்து விடியறத்துக்கு முன்ன புறப்பட்டாச்சு…எவ்வளவோ காலம் வாழ்ந்த ஊர், விட்டுப் போய் என்ன அஞ்சு வருஷம் இருக்குமா… …ஊரைப் பாக்காம புறப்பட்டாச்சு….
 
:”வழியில டிபனுக்கு ஒரு ஓட்டல்ல நிறுத்தினார்….அப்புறம் பாண்டிச்சேரிக்கு பகல் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.. ‘ஊருக்கு வந்திட்டோம், இந்தா வீடு வந்துருவோம்னு  அப்பாவை அழைச்சு சொல்றேன்… ஏன்னா, வழி நெடுக அவர் அழைச்சு கேட்டுக்கிட்டே இருந்தார்…எங்கே இருக்கீங்க, எப்படி வர்றீங்க, எப்போ வந்து சேருவீங்க…அதனால அவருக்கு சொல்லியாச்சு…. “
கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்: “இன்னிக்கு நீங்க கூப்பிடுவீங்கன்னு கிருஷி சொன்னார்.”.. 
 
உடனே நான் கேட்டேன், “யார் கூப்பிடுவார்னு சொன்னார், என்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டேனே “
 
“ஒரு முக்கியஸ்தர் கூப்பிடுவார்னு சொன்னார். “
 
“முக்கியஸ்தரா, நானா, பிரியமான ஒருவர்னு சொல்றேன்னார், சரின்னேன்” என்றேன். 
 
“ஆமாம். அப்படியும் சொன்னார்…. பிரியம் தானே முக்கியம்” என்றார் பிரபி.  
“இந்த பிரியம் என்கிற சொல் அருமையானது…. இந்த பிரியத்தால் தானே, இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர் கொண்டனள்னு சொல்றார் வள்ளுவர்” என்றேன் நான்.
 
அதற்கு, பிரபி அருமையாக பதில் சொன்னார்: “அப்படியான ஒரு தம்பதியர் உண்டு என்றால், எங்க அப்பா அம்மாவைப் போல் வேற ஒரு தம்பதி நான் பார்த்ததில்லை.” 
 
உரையாடல் நிறைவுக்கு வந்தது மாதிரி இருந்தது இந்த உணர்ச்சிகரமான வாக்கியத்தில்…. 
 
நான் சொன்னேன், “நீங்க கருப்பட்டி பற்றி சொன்னது திரும்ப நினைவுக்கு வருது… நானும் கருப்பான ஆள் தான்… கருப்பட்டியே பேசும்னு சொன்னீங்களே “. என்றேன். 
 
“கருப்பு என்ன வெளுப்பு என்ன….ரொம்ப ஈர்ப்பாக இருந்தது பேசுறதுக்கு….. ரசனையோடு கேக்கறவங்க கிட்ட பேசணும்னு தோணும்..அப்பா கிட்ட பேசறீங்களா” என்றார். 
 
“காத்திருக்கிறேன்” என்றேன். 
 
“அப்பா, சென்னையில் இருந்து எஸ் வி வேணுகோபாலன்னு உங்க கிட்ட பேசணும்னார்” என்று கொடுத்தார். 
 
“சொல்லுங்க” என்றார் மகத்தான படைப்பாளி கி ரா. 
 
நான் ஏன் பேசப் போகிறேன், இலேசாக அதே மந்திர விசையை மெல்ல அழுத்தினேன், “உங்களை மிக அருகே பார்த்த நினைவு இப்போ போல இருக்கு, பிச்சுக்குட்டி பற்றியெல்லாம் நீங்க சொன்னது..”
 
“பிச்சுக்குட்டி பற்றியா…சரி சரி …”என்று சிரித்தார். 
 
“நீங்க என் கிட்ட பேசினது எல்லாம் அடுத்த சில நாள் கழிச்சு அப்படியே எழுதி புத்தகம் பேசுது இதழுக்கு அனுப்பினேன், அவங்க அப்படியே வெளியிட்டாங்க,  ரெண்டு பக்கம் இருக்கும் உங்களோட உரையாடல்” என்றேன். 
 
“அப்படியா, அந்த பிரதி இருக்கா, கிடைக்குமா, அனுப்புங்களேன்” என்றார் கி ரா. 
 
அப்போதெல்லாம் கணினியில் அமர்ந்து அடித்து அனுப்பத் தொடங்காத காலம், கையிட்டு எழுதிக் கொடுத்தது….தேட வேண்டும் அந்த இதழை. தேடி எடுத்து அவருக்கு சேர்த்தே ஆக வேண்டும். அனுப்பி வைக்கிறேன் என்று மட்டும் சொன்னேன்.
எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் கண்டெடுக்க முடியவில்லை.  இந்த ஜூலை மாதம் எதையோ தேடிக் குடையப் போய், அந்த இரண்டு பக்கங்களும் கத்தரித்து வைத்தது அப்படியே பத்திரமாக இருந்தது.  ஆனால், கி ரா எப்போதோ மறைந்து விட்டிருந்தார். 
இல்லை, அந்தப் பக்கங்களுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.