![]()
கவிதை என்பது கவின்மிகு அமைதியின்
நிறைவில் மலர்ந்த நினைவுகள் என்பர்.
எனக்குக் கவிதை வருகிறது. ஆனால்
ஏதுவாய் மூலமாய் இருப்பது வேறாய்.
அம்புலி காட்டிய அமுதூட்டிய அன்னை
இப்புவி வாழ்வின் ஆதார சுருதியாய்
அழகிய இயற்கை இருப்பது குறித்து
இயம்பிய பாட்டின் எழுச்சி அல்ல.
பழைய சோற்றில் பதமாய்த் தயிரிட்டு
பாங்காய் வடுமாங்காய் கடித்திடத் தந்து
என்னருமைப் பாட்டி என்றும் பொருந்துவதாய்
சொன்ன கதைகளிற் சூல் கொண்டதல்ல.
கா விரித்தோடும் ஆற்றின் கரைதனிலமர்ந்து
காற்றில் மிதந்து வரும் கோவில் நாகசுரத்தின்
நாத வாரிதியில் நனைந்து மனம் மகிழ்ந்து
குதித்துக் குலாவிய கோலாகலமும் அல்ல.
உதட்டுக்குப் பகட்டாய் உரைப்பது ஒன்று
உள்ளத்தின் ஆழத்தில் இருப்பது ஒன்று
அணிவதெல்லாம் அலங்காரத்திற் கென்று
ஆடம்பரப் பிரியர்களின் அணிவகுப்பு கண்டும்
சீலம் துறந்து சமூகம் மறந்து சிலர்
கயமைக் கலங்களாய் ஆனது கண்டும்
கனன்று வருகிறது; கவிதையாய் வெடிக்கிறது.
கோபம், குமுறல், தாபம், தவிப்பு,
தணியாத வேகம் தருகிறது கவிதையை.
அவலமும் கோபமும் ஆனது கவிதை என்றால்
அடிப்படை இலக்கணம் அத்து மீறியதாகுமா?
“இருக்கட்டும் இருக்கட்டும் இதுவே கவிதை என்றும்
ஊருக்கு உரைத்திடு உரக்கக் கூவிடு” என்றும்
உள்மனம் சொல்கிறது உண்மை என நம்புகின்றேன்.
