2024 ஜூலை மாதத்தின் சிறந்த கதை

சாய்ந்தாடி  – ரகுராமன் – சொல்வனம் (28.07.2024)

——————————————————————————————————————————————–

ஜூலை மாதத்தில், அச்சு இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வெளிவந்த எண்பத்திரண்டு கதைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை எனக்களித்த குவிகம் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

நான் தேர்ந்தெடுத்த டாப் ஐந்து கதைகள். 

1.பதற்றம்: அரவிந்தன் (இதழ்: ‘அமிர்தா’) 

அலுவலக ரீதியில் சந்துருவின் நண்பரான சௌம்யா, மனைவி சங்கீதாவிடம் அவனது நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதாகக் கூறி பற்பல சந்தேகங்களை எழுப்புகிறாள். சங்கீதாவின் பதற்றமடைகிறாள். அதை வாசகர்களாகிய நம்மால் உணரமுடிகிறது என்றால் அதன் முழு வெற்றியும் கதாசிரியருக்குத்தான். கடைசியில் பிரச்சனை சிங்கிளாக வாழும் சௌம்யாவிடம்தான் என்று அறியும்போது சங்கீதா தெளிவு பெறுகிறாள். கதாசிரியர் மிகவும் லாஜிக்காக இக்கதையை சிறப்பான நடையில் சீராக எழுதியுள்ளார். பாராட்டுகள். 

2.நிர்மலாவின் தந்தை : (இதழ் : அமிர்தா)  – வேலு .இராஜகோபால் 

ஓடிப்போன பெரியப்பாவைப் பற்றி அறிந்து கொள்ளவிரும்பும் ஒரு இளைஞன். ‘தான் பிறப்பதற்கு முன்னரே ஏன் ஓடிப்போனார்?” என்று மீளாத்துயரத்தில் இருக்கும் பெரியப்பாவின் பெண் நிர்மலா. அவரைப் பற்றின தேடல்களில் எழும் கேள்விகளுக்கான தெளிவற்ற பதில்கள்  அவரைப் பற்றிய செய்திகளைச் சந்தேகத்திற்குரியதாக்குகின்றன.  

“அவர் மனைவியை விட்டுவிட்டு வேறு ஒரு ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்” என்று நிர்மலாவிற்கு கிடைத்த ஒரு செய்தி அவளை ஆறுதல் கொள்ளச் செய்கிறது . 

“வைரத்தைத் தேடிப்போய் கடைசியில் எலும்புக்கூடு கிடைத்தது போல’ அவள் உணர்ந்திருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.  ஆனால் அதுதான் உண்மையா? என்று சொல்லி கதையை அதோடு முடிக்காமல் சற்று நீட்டித்திருப்பதுதான் கதையின் ஹைலைட்.

 ‘விளக்கின் கீழ் இருக்கும் இருட்டுப் போல, நிர்மலாவின் அம்மா மீது மட்டும் வெளிச்சம் படவில்லை. அது தாய்மையின் ரகசியம்” என்று நினைக்கின்றான் அவன்.  தன்னுடைய சந்தேகத்தை நிர்மலாவிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி கதையை மீண்டும் ஆரம்பிக்கவில்லை  என்பது போல கதை முடிகிறது. சிறப்பாக எழுதப்பட்ட கதை. ஆனால் அவனது சந்தேகம் மட்டுமே கதையின் முடிவு ஆகிவிடுமா?  ஆயினும் , ஆசிரியரின் எழுத்து திறமைக்கு பாராட்டுகள்

  1. உயிரெழுத்து பத்திரிகையில் வெளிவந்த “சின்ன பாவாவும், திருமுருகன் டூரிங் டாக்கீசும்” – நா. விச்வநாதன்

கதையைப் படிக்கையில் நாம் (முதியவராய் இருக்கும் பட்சத்தில்) இளமைக்காலத்திற்கு மனதளவில் பயணப்பட்டு  விடுவோம். டூரிங் டாக்கீசின் வர்ணனைகள்,  வில்வண்டியில் ஏறிக் கொண்டு நோட்டீசு கொடுத்தபடி போகும் விஷயங்களும் நன்றாக விவரித்திருக்கிறார். எல்லோருக்கும் நோட்டிசு கொடுக்கிற பாவா, தனக்கு மட்டும் கொடுப்பதில்லையே என்கிற கோபம் எப்போதும். வளர்ந்து , பெரியவனாகி தன்னுடைய ஊருக்குத் திரும்பி வருகையில் எங்கெங்கும் காலத்தின் மாற்றங்கள் அப்பட்டமாகத்  தெரிகின்றன. அதனுடைய விவரணைகள் கவனமாக எழுதப்பட்டிருக்கின்றன. தேடிப்பார்க்கையில், திருமுருகன் டூரிங் டாக்கீசின் மிச்சங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், முக்கியமாக அதனருகில் பாவா வசித்து வருகிறார்.   “எனக்கு மட்டும் ஏன் நோட்டீசு கொடுக்கவில்லை?” என்ற தன் மனதிலுள்ள கேள்வியை   அவரிடம் கேட்டே ஆகவேண்டும். அவரும் பதில் சொல்கிறார். ஆனாலும் சின்ன பாவா கூறும் காரணங்கள் ஏற்புக்குரியதா? அதே சமயம் கதையின் முடிவில் ஒரு டிவிஸ்டும் இருக்கிறது.   எப்படியாயினும் ஒரு வித்தியாசமான சிறுகதை எழுதியமைக்கு ஆசிரியருக்கு பாராட்டு்கள்.  

  1. இடம் பொருள் ஏவல் : யாத்திரி (வாசக சாலை) 

ஒரு கடுமையான விவாதத்திற்குப் பிறகு வினோத்தும் இந்துமதியும் ஆறு மாதங்களுக்கு ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மரோசரித்ரா ஞாபகம் வந்தால் பரவாயில்லை. ஆனால், அவர்களுக்கிடையே இருக்கிற விவாதங்கள் மட்டுமின்றி, அவர்களது வீடுகளில் நடைபெறுகிற உரையாடல்களும்  இயல்பாக இருக்கின்றன. வினோத்தின் அம்மாவைப்  பெண்பார்க்க வந்த நிகழ்வு  மிகவும் சுவையான கற்பனை. திருமண வாழ்க்கையௌ இக்காலத்தின் காதலோடு ஒப்பிட்டுப் பேசுவதும் நன்றாக இருக்கிறது. அப்பா செல்லமான தன் மகளை, “சக்களத்தியைப் பெத்து வெச்சுருக்கேன்” என்று அம்மா பொருமுவது புதிதாக இருக்கிறது. இது இக்கால இளைஞர்களுக்கான கதை. அதை அனைவரும் ரசிக்கும்படி யாத்திரி எழுதியிருக்கிறார். யாத்திரி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.   

  1. சாய்ந்தாடி – சொல்வனம் – ரகுராமன்

1815 மார்ச் 16ல் கதை மெட்ராசில் துவங்குகிறது. இது சுதந்திரப் போராட்டக் கதை அல்ல. போராடும் இந்தியர்களின் கதையும் அல்ல. இந்தியாவில் வந்து குடியேறிய ஆங்கிலேயப் பெண்மணியின் கதை என்று நாம் கதையின் ஆரம்பத்தில் நினைத்துக் கொள்கிறோம்.

உடல்நலம் குன்றி படுக்கையில் கிடக்கும் க்ளாராவின் கையைப் பற்றிக் கொள்கிறான் வில்பர்.

கிளாராவின் மெலிந்த கைகளின் வர்ணனைகள் என்னைக் கதைக்குள் இழுத்துச் சென்றன. அவ்வளவு நுட்பமான எழுத்து. ஒரு சிறுவனாகத் தன் அம்மாவின் கைகளைப் பற்றியபடி இந்தியாவில் வந்து இறங்கியதை நினைவு கூறுகிறான். இளம் விதவையான கிளாரா தன்னுடைய முழுமுயற்சியால் பெரிய வியாபாரி ஆகிறாள். தன் மகனுக்கே வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். கடைசியில் மலேரியக் காய்ச்சலில் படுக்கையில் கிடக்கிறாள். அவளுக்கு இறுதியாக ஒரு ஆசை தோன்றுகிறது. சிறுவயதில் ஓடியாடிய சொந்த  ஊரை நினைவுகூறுகிறாள்.

‘மூக்கின் மேல் அமர்ந்த பனிச் செதில் மெதுவாக உருகி என் உதடுகளைத் தொட்டு…வில்பர்? பனிப்பொழிவை இனிமேல் நான் பார்ப்பேனா?’. அதுதான் அவளது கடைசி ஆசையாக இருக்கிறது.

கண்டிப்பாக என்கிறான் வில்பர். சில நேரங்களில் பொய்களும் ஆறுதல் தருபவைகளாகவே இருக்கின்றன.

அதன் பின்னர், வில்பர் தனது நண்பன் மூலமாக , கடாரத்தார் என்பவரைச் சந்திக்கிறான். அவர் மூலம் தனது அம்மாவின் ஆசையை நிறைவேறும் என்று அறிந்து கொள்கிறான். ஆனால் கழிவறைக்கே செல்லவியலாத அவனது தாய் எப்படிக் கடல் பிரயாணம் செய்யப் போகிறாள்?

ஓரு வரலாற்று நிகழ்வைக் கதையின் இறுதியில் வைத்து , அதைப் பற்றிய ஒரு ஊகத்திற்கும் இடம் கொடாமல்  ஆசிரியர் இலக்கை நோக்கிச்  செலுத்தியிருக்கிறார்.  அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கதை முழுவதும் ஆசிரியரின் விவரணைகள் நம்மை அசத்துகின்றன. அவரது கதை சொல்லும் திறமைக்குப் பரிசாக இக்கதையையே நான் 2024 ஜூலை மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கதாசிரியர் திரு ரகு ராமன் அவர்களுக்கு வாழ்த்துகள். சிறந்த சிறுகதையை வெளியிட்ட சொல்வனம் பத்திரிகைக்கு நன்றி.