siruvar malar, Author at சிறுவர் மலர் - தமிழ் சிறுவர் கதைகள் - Page 4 of 5

ஒரு குதிரை மீது ஒரு இளம் பெண். குதிரை சவாரி, குதிரை மீது சவாரி செய்யும் பெண் b - பங்கு புகைப்படம் © miramiska #38545443

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய  அரசை ஒரு ராஜாவும், ராணியும் ஆண்டு வந்தார்கள். ராஜா வேட்டைக்குச் செல்கையில், எல்லைகளின் பாதுகாப்பைக் கண்காணிக்கச் செல்கையில், நட்புறவாக பக்கத்து தேசங்களுக்குச் செல்கையில், ராணி அரசாள்வார். அவர்களுக்கு 14 வயதில் ஒரு குட்டிப் பெண், எதிர்கால அரசி இருக்கிறாள். இளவரசி, வாள் வீச்சு, ஈட்டி எறிதல், குதிரையேற்றம், விற்போர் போன்ற அனைத்துத் துறைகளிலும் நல்ல திறமை கொண்டவள். படிப்பிலும் படு சுட்டி. சந்திரிகா என்ற பெயர் கொண்ட அந்த இளவரசி, நிலவைப் போலவே பேரழகும் படைத்தவள்.

அவள் காட்டிற்குச் செல்கையில் யாருக்குமே அறிவிக்காமல் சென்று விடுவாள். பின்னர் அவளைத் தேடி காவல் படை செல்லும். அவள் அவர்களை ஏமாற்றிவிட்டு சாது போல அரண்மனைக்கு வந்து விடுவாள்.

அப்படி ஒரு முறை அவள் வெகு தூரம் காட்டிற்குள் சென்று விட்டாள். குதிரையும் கனைத்துக் கொண்டு, அவளைச் சுமந்து காற்றில் சீறிப் பாய்ந்தது. அவர்கள் இருவருக்குமான ஒரு சைகை மொழியில் அவள் ஏதோ சொல்லவும், அது நாலு காலில் விரைந்தோடி காற்றில் நீந்துவதைப் போல் பறந்தது. அப்போது அவர்கள் ஒரு அதிசயத்தைப் பார்த்தார்கள். வானில் ஒரு மிகப் பெரிய பறவை, கருடன் சிறகுகள் விரித்து வருவதைப் போல வந்தது. இவ்வளவு கீழாக கருடன் பறப்பது ஒரு அதிசயம் என்றால், அதில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பது பேரதிசயம். அந்த மனிதனும், காட்டில் ஒரு பெண் தனியே குதிரையில் வருவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு தரைக்கு வர முற்பட்டான்.

குதிரை கனைத்துக் கொண்டு நின்றது. சிறகுகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பறவையின் உடலுடன் ஒட்டியதும் அந்த வாலிபன் அதிலிருந்து குதித்திறங்கினான். அவன் தன்னை விமலன் என்று அறிமுகம் செய்து கொண்டான். இளவரசி, தன்னை யாரென்று சொல்லாமலே பேச்சுக் கொடுத்தாள். அவன் வள நாட்டுக்காரன். அவர்கள் நாட்டிலே ஒரு பெருங்காடு இருக்கிறது. அதில் ஒரு குகையின் அருகில் இருக்கும் புனித மரத்தின் பட்டைகளைக் கொண்டு அவன் இறக்கைகள் செய்தான். மரம் உறுதியான ஒன்று, அதன் பட்டைகள் எடையற்று இருக்கும், அதனால் பறப்பது எளிது. அதே நேரம் அது எடையையும் தாங்கும். அந்த மரத்திற்கு காவல்காரன் மிகப் பெரிய ஆண் சிங்கம்.

‘அது என்ன பண்ணித்து தெரியுமா? மரத்துக்கிட்ட போனாலே கர்ஜிச்சிண்டு குகலேந்து ஓடி வரும். அதைக் கொல்லக் கூடாது. அப்படித்தான் எங்க  நாட்டுச் சட்டம்.’

“அப்றம் எப்படி இந்த பறவை வந்தது?”

‘சொல்றேன், சொல்றேன். அதுக்கு முன்னாடி, உங்கிட்ட சாப்ட ஏதாவது இருந்தா கொடேன்.;

இளவரசி குதிரையைப் பார்த்து சிரித்தாள். பின்னர் அதன் முதுகுப் பையிலிருந்து மாம்பழமும், கொய்யாவும் கொடுத்தாள்.

ஆவலாக அதை வாங்கி உண்டவன், ‘நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள் இந்தக் காட்டில்?’ என்று கேட்டான். “அப்றம் சொல்றேன். உங்கக் கதையச் சொல்லுங்க” என்றாள் இளவரசி.

‘அந்த மரத்துக்கிட்டவே போக முடியலயா? அப்போ எங்க தாத்தா ஒரு மந்திரம் சொன்னாரு. அத அந்த சிங்கத்தோட வாசல்ல நின்னு அது வேட்டையாடக் கிளம்பறப்ப சொல்லணும்.’

“அப்படி என்ன மந்திரம்?”

‘பெரிசா ஒண்ணுமில்ல. ராஜா, ராஜா, சிங்க ராஜா, நா உனக்காகத்தான் பறக்கணும்னு ஆசப்பட்றேன், உனக்கு வயசாயிடுச்சு இல்லயா? உம் புள்ளய கூண்டுல அடைச்சுப் போட்ட மந்திரவாதியை, வானத்துல பறந்துதான் பாக்க முடியும். நான் ஒரு பறவல ஒக்காந்து வந்தா, அவன் பயந்தோடிப் போய்டுவான். நா உன் புள்ளயக் காப்பாத்தி உங்கிட்ட கொண்டு வரேன். உனக்கப்றம் இந்த மரத்துக்கு காவல் வேண்டாமா?’

இளவரசி கண் கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் தொடர்ந்தான்- சிங்க ராஜா சொன்னார்  “விமலா, நீ இரகசியமா இதைச் செய்யணும். ஆறு மாசம் ஆயிடும் செஞ்சு முடிக்க. நீ சொன்ன சொல்லக் காப்பாத்துவேன்னு நம்பறேன்.”

‘நிச்சயமா, சத்தியமா நா இதச் செய்வேன்னு  சொன்னேன். அந்த மரப்பட்டகள சீரா, மெலிசா சீவணும் ,அப்றம் பிசிரெடுக்கணும், அதோட கிளைகள்லேந்து எலய உதுத்துட்டு, சீவின மரப்பட்டைல தொள போட்டு கோக்கணும். அந்த மரப் பிஞ்சுகள, அதோட பிசினாலயே இறுக்கி ஒட்டணும். முன்னமே உதுத்தோமில்ல அந்த எலகள அரைச்சு வண்ணம் பூசினா பள பளன்னு வரும். அதோட நடுவுல பாரு. ஒரு மர உருள இருக்கா?’

“ஆமாம், அது எதுக்கு?”

‘அதுலதான் பத்து சூர்ய காந்தக் கல் இருக்கு. அந்த உருளைல இருக்கற தொளைகள் மூலமா, சூர்யக் கதிர் போயி, இரண்டு பக்கமும் இருக்கற சக்கரத்த உருட்டும்.’

“அதனால?”

‘அதுதான் மேலயும், கீழயும் இருக்கற பெரிய சக்கரங்களுக்கு சக்தி கொடுக்கும். மேல பறக்க கீழ் சக்கரத்த அழுத்தணும். கீழ வரதுக்கு மேல் சக்கரத்த அழுத்தணும். சீரா பறக்க காத்தை கவனிச்சுக்கணும். இராத்திரில பறக்கக் கூடாது, அப்போ, கந்தவர்கள் பறந்து பூமிக்கு வருவாங்கன்னு எங்க தாத்தா சொன்னார்.’

“அடேங்கப்பா, எவ்ளோ தெரிஞ்சுருக்கு உங்களுக்கு.

சரி, குட்டி சிங்கத்தக் காப்பாத்தினியா?”

அவள் தன்னை ஒருமையிலும், பன்மையிலும் மாற்றி மாற்றி அழைப்பது அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது.

‘எல்லா இடத்துலயும் பாத்துட்டேன். கண்ல படல’

இளவரசி குதிரையைப் பார்த்து சிரித்தாள், சைகையால் அதனிடம் ஏதோ கேட்டாள். அது சம்மதித்து தலையாட்டியது.

“எனக்குத் தெரியும்.”

விமலனுக்கு அதிர்ச்சியும், பரவசமும்.

‘சொல்லுங்க, சொல்லுங்க எங்கேன்னு சொல்லுங்க’ என்று பரபரத்தான்.

“சொல்றேன், ஆனா, நீ இந்தப் பறவைல எப்படிப் பறக்கணும்னு சொல்லிக் கொடுத்தா நா இடத்தச் சொல்றேன்.”

‘நீங்க ஒரு பொண்ணு, இதுல பறக்க நல்ல துணிச்சல் வேணும்.’

“அதெல்லாம் எங்கிட்ட நெறய உண்டு.”

‘சரி, என்னோட பறங்க, தனியா வேணாம்.’

“இல்ல, அது சரி வராது. நா வீடு திரும்பப் போறேன். நீயா தேடிக் கண்டு பிடிச்சுக்கோ”

‘இருங்க, அவசரப்பட்றீங்களே. எனக்கு ஒரு சந்தேகம். நீங்க மாட்டுக்கும் பறந்து போய்டீங்கன்னா, நா என்ன செய்யறது? சிங்க ராஜா என்னக் கொன்னுடுவாரே.’

“விமலா, இந்தக் குதிர இங்க தான நிக்கப் போகுது. நா இல்லாம அது இல்ல, அது இல்லாம நானில்ல. நீ பறக்க ஒரு தடவ சொல்லிக் கொடு, எனக்கு வரலேன்னா விட்டுடலாம்.”

‘உங்க குதிரகிட்ட சொல்லுங்க. உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, என் பறவையும் போய்டும், நீங்களும் அவ்ளோதான். அப்ப, இந்தக் காட்ட விட்டு நா வேகமாப் போணாத்தான் உசுரு நிக்கும். அதுக்கு குதிர வேணும். நீங்க உசுரோட வந்தீங்கன்னா, அந்த இடத்தக் காட்டிக் கொடுக்கணும்.’

இளவரசி எளிதாக பறக்கக் கற்றுக் கொண்டாள். தன் அரண்மனை வரை பறந்து சென்றவளைப் பார்த்த வீரர்கள் இவளை எப்படிப் பின் தொடர்வதென்று மலைத்தார்கள். மீண்டும் காட்டில் தரையிறங்கியவளைப் பார்த்து விமலன் பிரமித்துப் போனான்.

‘நா குதிரல போறேன். நீங்க வானத்ல வாங்க. அந்த மந்திரவாதியப் பிடிக்க இதான் சமயம். மயக்க மூலிக குடுத்து குட்டி சிங்கத்த கூண்டுல வச்சு, அது தெரியாம இருக்கணும்னு, செடி கொடியால மறச்சிருக்கான். நா குதிரல வரச்ச ஆடு கத்தற சத்தம் வந்தது. ஆட்டை சிங்கத்தோட தீனிக்காக புடிச்சுக் கட்டியிருக்கான் அவன். இந்தக் காட்ல யார் ஒரு ஆட்டக் கட்டியிருப்பாங்கன்னு யோசிச்சப்ப தான், எங்க ராஜாகிட்ட மந்திரி சொன்ன சேதி ஞாபகம் வந்தது. வெளி தேசத்லேந்து ஒரு மந்திரவாதி ஊர்ல நடமாட்றான், அவன் காட்டு மிருகத்தையெல்லாம் கொடும செய்யறான்னு அவர் சொன்னாரு.’

“அப்ப, நீங்க ஒரு இளவரசியா? நா ஏதாவது தவறாப் பேசியிருந்தா மன்னிச்சிடுங்க.”

‘அதெல்லாம் எந்தத் தப்பும் நீங்க செய்யல. குட்டி சிங்கத்த கூண்டோட ஓட்டிக்கிட்டு நா குக சிங்கத்துக்கிட்ட போறேன். அந்த மந்திரவாதி தொரத்திண்டு வருவான். நீங்க வானத்துலேந்து தடால்ன்னு பாஞ்சு அவனைக் கைது பண்ணுங்க. அப்றமா..’

“அப்றமா ஏதாவது பரிசு தருவீங்களா?”

‘என்னவிட உங்களுக்கு என்ன பரிசு வேணும்?”

திட்டப்படி எல்லாம் நடந்தது. மந்திரப் பறவையில் இளவரசியும், அவள் குதிரையில் விமலனும் ஊருக்குள் வந்தார்கள். “குட்டி சிங்கத்தக் காப்பாத்திய இளவரசி வாழ்க! எந்திரப் பறவை செய்துள்ள விமல அரசர் வாழ்க! என்று மங்கல முழக்கங்கள் எங்கும் எழுந்தன.