(ஓர் அடியார் – ஒரு வெண்பா)
33)சாக்கிய நாயனார்.
சாக்கிய நாயனார், திருச்சங்க மங்கை என்ற ஊரில் வேளாளர் குடியில் தோன்றியவர். இவர், பிறப்பு, இறப்பு இரண்டும் மாறி மாறி வருகின்ற பிறவித் தொடரை விட்டு நீங்கக் கருதினார். தம் ஊரின் அருகில் இருந்த காஞ்சி நகருக்குச் சென்று, ஞானம் பெறும் பல வழிகளை ஆராய்ந்து பௌத்த சமயத்தைப் பின்பற்றலானார். பௌத்த நெறியும், அதன் நூலும் கூறும் முடிவுகள் உண்மைப் பொருள் அல்ல என்று உண்மையை உணர்ந்து கொண்டார். சிவ நெறியே உண்மைப் பொருள் என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.
எந்த நிலையில் இருந்தாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், சிவபெருமானின் திருவடிகளை மறவாமல் இருப்பதே உறுதிப் பொருளாகும் என்பதைப் புரிந்து கொண்டதால், பௌத்த மதத்தின் துறவுக் கோலத்தை நீக்காமலேயே சிவபெருமானைப் பணிந்து வணங்கலானார். சிவலிங்கமே வணங்குவதற்கு உரிய வடிவம் என்றும் தெளிவு கொண்டார்.
நாள்தோறும், சிவலிங்கத்தைக் கண்டு வணங்கிய பின்பே உணவு உண்ண வேண்டும் என்ற முறையை மேற்கொள்ள விரும்பினார்.
அருகில் இருந்த ஒரு சிவலிங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகுதியினால் என்ன செய்வது என்று அறியாதவராய், அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து அந்தச் சிவலிங்கத்தின் மீது எறிந்தார். குழந்தையின் எந்தச் செயலையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களைப் போலச் சிவபெருமான், சாக்கிய நாயனார் கல் எறிந்ததையும் அன்புடன் ஏற்றுக்கொண்டான். தம்மைக் கல் எறியச் செய்ததும் சிவபெருமானின் திருவுள்ளமே என்று சாக்கிய நாயனார் அறிந்து கொண்டு, அச்செயலைத தொடர்ந்து செய்து கொண்டு வரலானார். அதுவே இறைவனுக்குச் செய்கின்ற சிறப்புமிக்க பூசையாக அமைந்தது இச்செயலின் பெருமையை அறியாதவர், அவர் எறிந்தது கல் என்று கருதினாலும், அது சிவபெருமானுக்குப் பூசை செய்யும் மலர் போன்றே அமைந்தது.
ஒரு நாள், தம் வழக்கத்தை மறந்து உண்ணத் தொடங்கியவர், உடனே தம் தவற்றை உணர்ந்து, எழுந்து புறப்பட்டு இறைவனது திருமுன்பு சென்று நின்றார்.
அங்கிருந்த ஒரு கல்லை வழிபாடாக இறைவன் மீது எறிய, நெற்றிக்கண்ணை உடைய இறைவன் தன் துணைவியான உமையம்மையுடன் தோன்றினான்.
சாக்கிய நாயனார், கைகள் கூப்பித் தரையில் விழுந்து, பணிந்து வணங்கினார்.
சிவலோகத்தில் இருந்து கொண்டு, தன்னைப் பணியும் பேற்றினை, இறைவன் அவருக்கு அளித்து அருளினான்.
கண்ணப்ப நாயனார், செருப்புக் காலைத் தன் மேல் வைத்ததையும்,சாக்கிய நாயனார் கல் எறிந்ததையும் அன்பின் அடையாளங்களாகவே இறைவன் கருதியது குறிப்பிடத் தக்கதாகும்.
சாக்கிய நாயனார் வெண்பா
அணிந்தார் துவராடை, அன்பால் சிவனைப்
பணிந்தார், எறிந்தார்கல் பற்றால், – அணைந்த
விடையான் மகவாய் விழைந்து மகிழ்ந்தான்
அடைந்தார் சிவன்வாழ் அகம்.
(துவராடை- பௌத்தர்கள் அணியும் காவி ஆடை)
*************************
34) சிறப்புலி நாயனார்

பொன்னி நதி பாய்வதால் செழிப்படையும் புகழ்மிக்க சோழ நாட்டில் உள்ள அழகிய ஊர் திருவாக்கூர்.
அவ்வூரில், சோலைகள் தோறும், பெரிய மாளிகைகள் தோறும், மாமழையின் முழக்கத்தை வெல்லுகின்ற மறை ஒலி முழக்கம் கேட்கும். அங்குள்ள வேள்விச் சாலைகளில், ஆகுதிகளின் புகை கமழ்ந்து ஓங்கும். கரும்பு ஆலைகளைச் சூழ்ந்திருக்கும் கமுகுகள் வேலி போல் அமைந்திருக்கும் அழகிய திருவாக்கூரில், நான்கு வேதங்களையும் ஓதும் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார்.
இவர், தேடி வரும் அடியவர்களை வணங்கி, அன்புடன் இனிய சொற்களைக் கூறி, நல்ல உணவுகளை விருப்பத்துடன் அளித்துச் செல்வத்தை மழை போல் பொழிகின்ற மேகமென விளங்கினார்.
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, நல்ல முறையில் வேள்விகளைச் செய்து, சிவனடியார்களுக்கு எக்காலத்திலும் அன்புடன் தொண்டு புரிந்து, நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் இறைவனின் திருவடி நிழலில் நிலைத்திருக்கும் பேற்றினைப் பெற்றார்.
“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை இவர் புகழைக் கூறுகின்றது.
சிறப்புலி நாயனார் வெண்பா
தேன்மலர்ச் சோலைத் திருவாக்கூர் தோன்றினார்
நான்மறை வேள்வி நயந்துசெய்தார் – தான்மிக
அன்புடன் தொண்டர்க்(கு) அமுதளித்துச் சென்றடைந்தார்.
இன்பமிகும் ஈசன் இடம்.
*****************************
35)சிறுத்தொண்ட நாயனார்

சோழ நாட்டைச் சேர்ந்த திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் என்ற அந்தணர் மரபில்
தோன்றியவர் பரஞ்சோதியார்.
இவர், ஆயுள் வேதம் ( ஆயுர் வேதம்) என்ற மருத்துவக்கலையும், படைக்கலத் தொழிற் கலையும் பயின்றவர். யானைகளையும், குதிரைகளையும் செலுத்தும் பயிற்சி பெற்றவர்.
பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனுக்குப் படைத்தளபதியாகப் பணியாற்றினார்.
பல்லவ அரசனுக்காகப் படையெடுத்துச் சென்று வாதாவி( வாதாபி) என்ற பழைய நகரை முற்றிலுமாகச் சிதைத்து ,அங்கிருந்து பொன்னும், மணியும், யானைகளும் குதிரைகளும் கொண்டு வந்து மன்னனிடம் ஒப்படைத்தார்.
பரஞ்சோதியார், சிவனடியார் என்பதை அறிந்த நரசிம்ம வர்மன், அவரைத் தளபதி பொறுப்பிலிருந்து விடுவித்துப் பெரும் பொருள் தந்து அவரது ஊரான திருச்செங்காட்டங்குடிக்கு அனுப்பி வைத்தான்.
பரஞ்சோதியார், தம் மனைவியான திருவெண்காட்டு நங்கையுடனும், மகனான சீராள தேவனுடனும் திருச்செங்காட்டங்குடியில் வாழ்ந்து வந்தார்.
நாள்தோறும், சிவபெருமானின் அடியவர்களை வரவேற்று உண்ணச் செய்து, அதன் பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அடியவர்கள் முன் தம்மை மிகவும் சிறியவராகக் கருதி வாழ்ந்து வந்ததால், சிறுத்தொண்டர் என்ற பெயரைப் பெற்றார்.
ஒருமுறை ஞானசம்பந்தர் அங்கு வந்து சிறுத் தொண்டரின் விருந்தோம்பலை ஏற்று, அவரைப் பாராட்டிப் பதிகம் பாடிச் சென்றார்.
இவ்வாறு சிறு தொண்டரின் தொண்டு நிகழ்ந்து வரும் நாளில், சிவபெருமான் அவரது மெய்யான அன்பைப் பெற்று மகிழும் பொருட்டு ஒரு வயிரவத் துறவி உருவில் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார்.
சிறுத்தொண்டரின் இல்லத்திற்குச் சென்று, சிறுத்தொண்டர் இருக்கிறாரா என்று கேட்டார். சந்தனத் தாதியார் என்ற பணிப்பெண், சிவனடியாரைத் தேடிச் சிறுத்தொண்டர் வெளியே சென்று இருப்பதைத் தெரிவித்தார். சிறுத்தொண்டரின் மனைவியான திருவெண்காட்டு நங்கை அவரை உள்ளே வந்து இருக்குமாறு அழைத்தார்.. ஆடவர் இல்லாத வீட்டில் தாம் இருப்பதில்லை என்று கூறிய வயிரவத் துறவியார், தாம் தங்கப் போகும் இடத்தைக் கூறிச் சென்றார்.
இல்லம் திரும்பிய சிறுத்தொண்டர் நடந்ததை அறிந்து வயிரவத் துறவியார் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார். அவரை உணவு உண்டருள்க என்று வேண்டிக் கொண்டார். அவர் அதற்கு, ,”நான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பசுவைக் கொன்று உண்பவன். அவ்வாறு உண்ணும் நாள் இந்நாளே. அவ்வாறு உணவு அளிக்க உன்னால் இயலாது,” என்றார். சிறுத்தொண்டர், தம்மிடம் பல பசுக்கள் உண்டு என்றார். வயிரவத் துறவியார், “நான் உண்ணும் பசு, நரப் பசு; ஐந்து வயது உடையதாய், உறுப்பில் குறை இல்லாத அழகு உடையதாய் இருக்க வேண்டும்; ஒரு குடிக்கு ஒரு மகனாய் இருத்தல் வேண்டும்; அவனைத் தந்தை அறுக்கவும், தாய் பிடிக்கவும் வேண்டும்; இருவரும் விரும்பிச் சமைத்த கறியே யாம் உண்போம்” என்றார்.
சிறுத்தொண்டர், அவ்வாறே அமுது படைப்பதாய்க் கூறிச் சென்றார். வயிரவர் கூறியவற்றை மனைவிக்கு எடுத்துரைக்க, அவரும் சம்மதித்தார். சிறுத்தொண்டர் பள்ளிக்குச் சென்று மகனை அழைத்து வந்தார். அவனைக் குளிப்பாட்டிய பின்னர்த் தாய் பிடித்துக் கொள்ளத் தந்தையான சிறுத்தொண்டர் அவனை அறுத்துக் கறி சமைக்கச் செய்தார். தலைக்கறி ஆகாது என்று விலக்கி வைத்தனர்.
உண்ண அமர்ந்த துறவியார் தாம் சொன்னபடிச் சமைக்கப்பட்டதா என்று கேட்டார். தலைக்கறி மட்டும் உதவாது என்று ஒதுக்கி வைத்திருப்பதை அறிந்து, அதனையும் கொணருமாறு கேட்டார். சந்தனத் தாதியார் அதனைத் தாம் எடுத்துச் சமைத்து வைத்திருப்பதாக்க் கூறிக் கொண்டு வந்து தந்தார்.
பின்னர் அத்துறவியார், தாம் தனித்து உண்பதில்லை என்றும் சிவனடியார் ஒருவரை அழைத்து வரும்படியும் கூறினார். சிவனடியார் யாரும் கிடைக்காமையால் தாமே உண்பதாய்ச் சிறுத்தொண்டர் கூறினார். துறவியார் விரைவில் உண்ண வேண்டும் என்பதால் சிறுத்தொண்டர் உடனே உண்ண முற்பட்டார்.
அவரைத் தடுத்த துறவியார், “உங்களுக்கு மகன் இருத்தால்,அவனை இருவரும் சென்று அழையுங்கள் ” என்றார். அதற்கு நாயனார், “அவன் இங்கு இப்போது உதவான்’. என்றார்
மகனை அழைக்கச். சொல்லித் துறவியார் வற்புறுத்தியதால், சிறுத்தொண்டரும் அவரது மனைவியாரும் வெளியே சென்று மகனை அழைத்தனர்.
“செய்ய மணியே, சீராளா வாராய்! சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார் என்று ஓலமிட”
என்று திருவெண்காட்டு நங்கை அழைத்த பாங்கினைச் சேக்கிழார் உள்ளம் உருகும் வண்ணம் உரைக்கின்றார்
பள்ளியில் இருந்து ஓடி வருபவனைப் போல மகன் வரவும், அவனை அணைத்துத் தாய், தந்தையிடம் கொடுக்க அனைவரும் இல்லத்துக்குள் நுழைந்தனர். அங்கு வயிரவத் துறவியார் இல்லை: சமைத்து வைத்த இறைச்சியும் இல்லை.
உள்ளம் கலங்கித் திகைப்படைந்த சிறுத்தொண்டர் வயிரவரைத் தேடி வெளியே வர, மறைந்த வயிரவர் சிவபெருமானாக,
உமையம்மையுடனும், சரவணப் பொய்கையில் வளர்ந்த முருகப்பெருமானுடனும் காட்சி தந்தான் .
உலகியலை வென்ற சிறுத்தொண்டரையும் அவருக்கேற்ப அமைந்த மனைவியாரையும் மைந்தரையும், சந்தனத் தாதியாரையும், என்றும் தன்னைப் பிரியாமல் வணங்கி இருக்கும்படி சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றான்.
“ஆறு முடிமேல் அணிந்தவருக் கடியார் என்று கறியமுதா
ஊறிலாத தனிப்புதல்வன் தன்னை அரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள் தலைமேற்கொண்டு”
என்று சேக்கிழார் சிறுத்தொண்டரைப் போற்றுகின்றார்
சிறுத்தொண்ட நாயனார் வெண்பா
வென்றிப்போர் வீரர், விழைந்துதம் பிள்ளையைக்
கொன்று கறிசமைத்த கொள்கையர் – மன்றுநடம்
செய்வான் அருளால் சிறுத்தொண்டர்ச் சேய்மீள,
உய்வார் திருக்கதையை ஓது!
(தொடரும்)
