Punarapi Jananam - Sri Sathya Sai Balvikasஞாயிற்றுக்கிழமை..

காலை எட்டு மணி.எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டு
கொண்டிருந்தேன், பக்கத்தில் வைத்திருந்த அலைபேசி சிணுங்கியது..

எடுத்துப் பார்த்தேன்.உடன் வேலை செய்யும் சீனியர் கிளார்க் பாலகிருஷ்ணன்
சார்தான் அழைத்திருந்தார்.

ஆன்மீக சேனல் ஒன்றில் அவருடைய ஆன்மீக சொற்பொழிவு ஞாயிறு காலை
ஒலி/ஒளிபரப்பாகிறது என்றும்,அதைப் பார்த்துவிட்டு எனது கருத்தைச் சொல்ல
சொல்லியிருந்தார் முன்னமேயே.

அதை நினைவு படுத்தவே அழைத்திருப்பார் என எண்ணி அலைபேசியை எடுத்து தடவிக்
கொடுத்தேன்.

நினைத்தது சரிதான்.”ரகு..மறக்காம  பாரு..அதை ஞாபகப்படுத்த தான்
கூப்பிட்டேன்” என்றார்.

எனக்கு ஆன்மீக விஷயங்களில் அவ்வளவு நாட்டமில்லை.ஆனால்..”நான் எப்படி
பேசினேன்?” என பின்னால் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல
வேண்டுமென்றால் ,அந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும்.

என் விதியை நொந்தவாறே எழுந்தேன்.

9-58 க்கு மீண்டும் ஒருமுறை அலைபேசி..நினைவுப் படுத்தினார் அவர்.

டிவியின் முன் அமர்ந்து..அந்த சேனலை தேடிப் போட்டேன்.

அப்போதுதான் பாலகிருஷ்ணன்..”நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..”என
ஆரம்பித்திருந்தார் .

இன்னைக்கு நான் பேசப் போறது..”புனரபி மரணம் புனரபி ஜனனம்”னு ஆதி சங்கரர்
சொன்னதை பற்றி..

மரணம்,ஜனனம் இயற்கையானது.ஒவ்வொரு ஜீவனும்..பிறப்பு-இறப்பு என்ற சுழலில்
வருகிறது.ஜீவன் நித்யமானது.மரணம்-ஜனனம் எல்லாம் மாயத் தோற்றங்கள்.ஏன்
பிறந்தோம்? ஏன் இறக்கின்றோம்? என்ற கேள்விகள்   அர்த்தமற்றது.ஜீவன் ஒன்றே
நித்யமானது.

இதற்கு மகாபாரதக் கதையில் இருந்து..ஒரு சிறிய கதை ஒன்றைக்
கூறுகிறேன்.கேளுங்கள்.

பாரதப் போரில் தன் மகன் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி இறந்ததும்..அர்ச்சுனன் அவனைக் காண ஒரு முறை சொர்க்கத்திற்குச் சென்றான்.மகன் அபிமன்யுவை மிகவும் நெருங்கிச் சென்றான்.

தந்தையான அவனைப் பார்த்தும் கூட அபிமன்யு விடமிருந்து எந்த விதமான
உணர்ச்சியும் ஏற்படலை.இதைக்கண்ட அர்ச்சுனனுக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

“மகனே! உன் தந்தை வந்திருக்கேன்” என்றான்.

“ஓ..அப்படியா! நான் எத்தனையோ ஜென்மங்கள் எடுத்திருக்கிறேன்.நீ என் எந்த
பிறவிக்கு தந்தை?” என அபிமன்யு கேட்டான்.

பின் அவனே,”ஓ..மானிடா..உனக்கு ஆன்மா என்றால் என்னவென்று தெரியவில்லையே! பிறப்பும்,இறப்பும் பஞ்ச பூதங்களால் ஆன உடலில் ஆன்மா சஞ்சரிக்கும் போது ஏற்படும் தோற்றங்கள்.ஏதோ, ஒரு முறை நான் பிறப்பெடுக்க நீ காரணமாய் இருந்திருக்கிறாய்.அதனுடன்
உன்னுடன் ஆன தொடர்பு என்றோ முடிந்து விட்டது.எனவே எனக்கு தற்போது
தாய்,தந்தை என்று யாரும் இல்லை.நீ சென்று வரலாம்” என்று கூறிவிட்டு அந்த
இடத்தை விட்டு ,திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.

அதிர்ச்சி அடைந்தாலும் அர்ச்சுனனுக்கு ஆன்ம ஞானத்தை அபிமன்யு உணர்த்தியதால் மரண
ரகசியங்களை அறிந்த திருப்தியில்  அங்கிருந்து பூலோகத்திற்கு வந்து
விட்டான்.

நேயர்களே! இப்போது புரிந்ததா..மரணம்..ஜனனம் எல்லாம் மாயை”

அவர் இதை சொல்லி முடித்ததும்..டிவியை ஆஃப் செய்தேன்

எதிர்பார்த்து போல அலைபேசி சிணுங்கியது.அவராய்த்தான் இருக்கும் என
திரையைப் பார்த்தேன்..கிராமத்தில் தங்கியிருக்கும் என் அப்பாவின்
அழைப்பு.

அம்மா பேசினாள், “டேய் ரகு..அப்பாவுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்
வந்துடுச்சு.பக்கத்து ஊர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கிறோம்..உடனே கிளம்பி
வா..” என்றாள்.

மனம் பதபதைக்க பாலகிருஷ்ணனை அழைத்தேன்.ஃபோனை எடுத்தவர்,”எனக்குத்
தெரியும்..என் பேச்சில் மயங்கி என்னைப் பாராட்டத்தானே இப்ப ஃபோன்
பண்ணின..”என்றவரிடம், “ஐயோ சார்..அப்பாவுக்கு ஊர்ல உடம்பு சரியில்ல..இப்ப
நான் கிளம்பிட்டு இருக்கேன்.ஆஃபீஸ்ல லீவ் சொல்லிடுங்க.அங்க போய்
பேசறேன்..”என்று அழைப்பைத் துண்டித்தேன்.

இப்போது உங்களுக்கு என்னைப் பற்றி சொல்ல வேண்டிய நேரம்.

என் அப்பா தஞ்சைமாவட்டத்தில் பூஞ்சோலை என்ற ஊரைச் சேர்ந்தவர். விவசாயி.               அப்பா,அம்மா
சேர்ந்து உழைப்பார்கள்.என்னை விவசாயத்திலிருந்து வரும் வருமானத்தில் தான்
தஞ்சையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க
வைத்தார்கள்.படித்து முடிப்பதற்குள் கேம்பஸ் இன்டர்வியூ வில் ஒரு பிரபல
எம் என் சி யில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.சென்னையில் வேலை.ஆனால்
ஊரை விட்டு வர என் பெற்றோர் சம்மதிக்காததால்..சென்னையில் ஒரு வாடகை
அடுக்ககத்தில் தங்கியிருக்கிறேன்.

நான் ஊருக்குப் போய்ச்  சேருவதற்குள்..அப்பா போய்ச் சேர்ந்திருந்தார்.அவர் உடலை எங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்றோம்.

கிராமத்து எல்லையில் இருந்த சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது

விறகு..வறட்டி எல்லாம் அடுக்கி தயாராக வைத்திருந்தான் வெட்டியான்.அப்பாவை
அதில் இருத்தி..பின்..சில சடங்குகள் முடிந்ததும்..அப்பாவின் முகத்தை
வறட்டிகளால் மூடினான் வெட்டியான்.அவர் நெஞ்சுப் பகுதியில் ஒரு சட்டியில்
கொண்டு போய் இருந்த தணலைக் கொட்டினேன்.அப்போது..அடக்க முடியாமல்
கண்ணீர்..கதறிக் கதறி அழுதேன்.

“திரும்பிப் பார்க்காம போங்க..” என்றார் ஐயர்..கண்களை துடைத்தபடியே
சென்றவனை..பின்னால் இருந்து வந்த ..”சாமி..சாமி..” என்ற குரல் தடுத்தது.
என் முன்னால் வந்து நின்ற வெட்டியான்,”ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு
போங்க..” என்றான்.

அந்த நேரத்திலும், அந்த சூழலிலும்..இவன் பணத்தைப் பறிப்பதில் குறியாய்
இருக்கின்றானே..என எனக்குக் கோபமும்..எரிச்சலும் அதிகமானது.

“என்ன மனுஷன்யா நீ..நானே என் அப்பாவை இழந்துட்டு தவிச்சு கிட்டு
இருக்கேன்..இந்த சமயத்துல கூட மனசுல கொஞ்சம் கூட ஈரமில்லாம பணம்..பணம்னு
அலையறியே”

“சாமி..தப்பா நினைச்சுக்காதீங்க..உடலை விட்டு மூச்சுக் காற்று
போயிடுச்சுன்னா அது யாரா இருந்தாலும் பொணம்.அது எரியும் போது ஈரம்
அடங்கியதும் பொணம் எழுந்துக்கும்..அதை அடிச்சு படுக்க வைக்கணும்.நாத்தம்
கொமட்டும்..குடலைப் பிடுங்கும்..அது தெரியாமல் இருக்க நான் கொஞ்சம்
ஊத்திக்கணும்..அதுக்குத்தான் காசு..கேட்கறேன்”

அவன் மீது சற்று இரக்கம் தோன்ற..”அதுக்காக இந்த சமத்துலேயா? செத்தது என்
அப்பா..நான் எவ்வளவு துக்கத்துல இருக்கேன் தெரியுமா?..இப்ப போய்..”
என்றேன்.

“வயசானவர்..கல்யாண சாவுன்னு சொல்லுவாங்க.அதோ அங்க பாருங்க..நாலு முட்டுத்
தள்ளி..ஐந்தாவது முட்டு..இன்னும் ஈரம் காயாமல் இருக்கே.அதுல…அதுல
என்னோட பத்து வயசு..ஒரே மகனை , இதே சுடுகாட்டில இரண்டுநாள் முன்னாலே
பாம்பு கடிச்சு செத்த மகனை..இதோ இந்த கைகளால பள்ளம் தோண்டி புதைச்சு
இருக்கேன்.என் சம்சாரம் கதறிக் கதறி அழுதுச்சு..ஆனா எனக்கு பொட்டு தண்ணீ
கூட கண்ணுல இருந்து வரலை.

சாமி..பொறப்பு..எறப்பு எல்லாம் நம்ம கையிலேயா இருக்கும்.செத்துப் போயிட்ட
என் பையனோட ஆன்மா இன்னொரு இடத்துல போய் பொறக்கப் போவுது.எங்கக் கூட
எசக்கிங்கற பேர் வைச்ச உடலோட கொஞச காலம் இருந்தது அவ்வளவுதான்.இத
புரிஞ்சுக் கிட்டு இருக்கேன்..அதுதான் ..எல்லா சாவும் எனக்கு பெரிசா
தெரியல..சரி சாமி…நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்.போங்க..காலைல
பாலுக்கு வந்துடுங்க..”என்றான் வெட்டியான்.

பாலகிருஷ்ணன் சார்..நேற்று டிவி யில் சொன்னதை விட இவன் சொன்னது மனதில்
ஆழமாகப் பதிந்தது எனக்கு.

ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன்.