சிறுவர் மணிஜூலை மாத “குவிகம் மின்னிதழ்”,  சிறார் இலக்கியத்தைப் போற்றும் விதமாக சிறார் சிறப்பிதழாக  வெளி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறோம்.

புகழ் பெற்ற “தினமணி” நாளிதழில், சனிக் கிழமைகள் தோறும் சிறுவர்களுக்கென்று  16 பக்கங்களில் வெளியிடப்பட்டு வந்த சிறார் சிறப்பிதழான “சிறுவர் மணி”  சிறப்பிதழின் ஆசிரியராகப் பணி புரிந்து, ஓய்வு பெற்றவர் “சுமன்” எனப்படும் திரு மணி.

குவிகம் மின்னிதழின் சார்பாக “சிறுவர் வனம்” ஆசிரியர் திரு சூடாமணி சடகோபன் (N.GOPINATH) திரு சுமன் அவர்களை பேட்டி கண்டு அவரது அனுபவங்களை இங்கு வழங்கியுள்ளார்.

புகழ் பெற்ற ஓவிய ஜாம்பவான்களான  கோபுலு, ஆர்.கே.லட்சுமணன், மற்றும் மணியன் செல்வன் போன்றவர்களின் நட்பு வட்டத்தில் இருந்து கொண்டு, தன்னுடைய ஓவியத்திறமைகளை, பட்டை தீட்டி, இருபது ஆண்டுகளுக்கு மேலாக  சிறார் இலக்கியத்துக்கு அணி சேர்ந்து புகழ் பெற்றவர்  திரு சுமன் அவர்கள்.

வாருங்கள், பேட்டியைக் கண்டு மகிழ்ந்து, திரு சுமன் அவர்களை சிறப்பு செய்வோம்!

சூடாமணி சட கோபன்:  “உங்களிடம் ஓவியக்கலை ஒளிந்து கொண்டிருப் பதை எப்படி உணர்ந்து கொண்டீர்கள்?

சுமன்: ”ஓவியத் திறமை என்பது சராசரியாக எல்லோரிடமும் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலர் ஓவியங்களை ரசிப்பதோடு நிறுத்தி விடுகின்றனர். சிலர் அந்தக் கலையில் தேர்ச்சி பெற முயற்சிக்கின்றனர். நானும் அதுபோலத்தான். சுமார் 24 வயதில்தான் ஓவியப் பயிற்சியில் நான் ஈடுபட்டேன். முறையான பயிற்சி என்றெல்லாம் இல்லை. அவ்வப்போது நான் சந்தித்த ஓவியக்கல்லூரி மாணவர்கள் சிலர் ஆலோசனைகள் வழங்குவர். நான் அப்போது தபால் விநியோகம் செய்யும் வேலையில் இருந்தேன். பகுதி நேரமாகத்தான் பயிற்சி செய்ய முடிந்தது”.

சூடாமணி சட கோபன்:  “முதன் முதலில் நீங்கள் வரைந்த ஓவியம் எந்த வயதில் வெளி வந்தது?”

சுமன்: “பயிற்சி பெற்ற சில வருடங்களிலேயே அது நிகழ்ந்து விட்டது. மங்கையர் மலர் என்ற இதழ் திரு கஸ்தூரி ரங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வந்தது. அதில் நான் விமலா ரமணி அவர்களது தொடர்கதைக்கு எடுத்த உடனே தொடர்கதை வரைந்தேன். என் அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் எனக்கென்னவோ அந்த ஓவியங்கள் சிறப்பாக அமைந்தது என்ற அபிப்பிராயம் இல்லை”.

சூடாமணி சட கோபன்:  “ஓவியக்கலையில் உங்களுடைய குரு யார்?”

சுமன்:  “அழகாக இருக்கும் பத்திரிகை ஓவியங்களை நான் காப்பி அடித்துக் கொண்டி ருந்தேன்.திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் கே.சி.முனுசாமி என்பவர் எனாமல் சைன் போர்டுகள் எழுதுவார். அவருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார். அவரது பெயர் கமலக்கண்ணன். அவர் எனது ஓவியங்களை பார்க்க நேரிட்டது. அவர் கோட்டோவியங்களே ஓவியத்தின் பலம் என்றும், பத்திரிகை ஓவியர்களில் திரு கோபுலு கோட்டோவியங்களில் சிறந்தவர் என்றும் தெரிவித்தார். பிறகு நான் திரு கோபுலுவின் ஓவியங்களைக் காப்பியடித்துக் கொண்டிருந்தேன். பிறகு கோபுலுவே எனது குருவாகவும் ஆனார். எனக்கு சுமன் என்ற பெயரையும் வைத்தார். கமலக்கண்ணனை நான் மறக்க இயலாது”.

சூடாமணி சட கோபன்:  “உங்களுடைய ஆரம்ப காலத்தில் உங்களை        ஊக்கப்படுத்தியவர்கள் யார்?”

சுமன்: “நாங்கள் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்பா சமையல் கலைஞர். நான் ஏதோ முயற்சி செய்கிறேன் என்ற அளவில் மட்டுமே அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தடை ஏதும் செய்யவில்லை”.

“1974-75 களில் சென்னை கவின் கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சிலரின் நட்பு எனக்குக் கிடைந்தது. அவர்கள் அனைவரும் திருவான்மியூர் தெற்கு மாடவீதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். அதில் திரு கண்ணன் – மாயவரத்தைச் சேர்ந்தவர்  திரு தங்கராஜ், சுந்தர்ராஜன், அகஸ்டின் போன்றோர் முக்கியமானவர்கள். அந்த அறையிலேயே நான் சில மணிநேரம் பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்புவேன். சில சமயங்களில் அவர்கள் சாப்பாடு கூட வழங்கியிருக்கிறார்கள்”.

சூடாமணி சட கோபன்:  “சிறார் கதைகளுக்கு ஓவியம் வரையத் தொடங்கியது எந்த ஆண்டு?”

சுமன்:  “நான் எல்லா ஓவியங்களையும்தான் வரைய ஆரம்பித்திருந்தேன். வேலையில் இருந்ததால் எனது ஓவியங்கள் அதிக அளவில் பத்திரிகைகளில் வராது. எனினும், ஆனந்த விகடன், குமுதம், கல்கி, சாவி, குங்குமம், மகலைமகள், அமுதசுரபி, தினமலர், அரும்பு, போன்ற பத்திரிகைகளில் ஓவியங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. சிறுவர்களுக்கான பிரத்யேகமான ஓவியங்கள் என்று ஏதுமில்லை. சில சமயங்களிஸ் அசைட் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு மார்டன் ஓவியங்கள் கூட வரைந்திருக்கிறேன்”.

சூடாமணி சட கோபன்:  “சிறுவர் மணி இதழில் உங்களது மறக்க முடியாத அனுபவம் எது?”

சுமன்: “அந்தப் பத்திரிகையில் ஆசிரியராக நான் பணி புரிந்தேன். தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் எனக்கு முழுச் சுதந்திரம் அளித்திருந்தார். அற்புதமான தருணம் அது. நான் எனது வேலையையும், படைப்பாளிகளின் திறைமைகளையும் ரசித்துக் கொண்டிருந்த காலம் அது. திரு சாவி அவர்களின் அறிமுகத்தால் எனக்கு பத்திரிகையின் நுணுக்கங்கள் புரிந்திருந்தது. முழு உற்சாகத்துடனும், சலிப்பின்றியும் செய்தேன். ஓவியங்களைத் தாண்டி, கருத்துக்களுக்கான வடிவமைப்பு, உதாரணமாக, கதைகளை பாடல் வடிவில் சொல்வது, நாடக வடிவில் சொல்வது, கடித வடிவில் சொல்வது என்ற ஏராளமான யுக்திகளைக் கையாண்டேன். விஞ்ஞானங்களை படக்கதை வடிவில் சொல்வது, வார்த்தைகளின்றி ஸ்ட்ரிப் ஜோக்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என அமர்க்களமாக இருந்தது சிறுவர்மணி!”

சூடாமணி சட கோபன்:  “சிறார்களுக்கென்று ஓவியம் வரைவதில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன?”

சுமன்: “ஓவியங்களில் உணர்ச்சி இருந்தல் வேண்டும். அழகு வேண்டும். அது பாடலோ, கதையோ, கட்டுரையோ, நாடகமோ கற்பனை பிரதிபலிக்க வேண்டும். மனிதர்களில் சிறுவர்களே அனைவரையும் ஈர்க்கிறார்கள். அவர்களது உலகம் தனி. அதில் பகை இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இல்லை. நம்பிக்கையும் உற்சாகமும், சக்தியும் நிறைந்த உலகம் அது. பத்து சிறுவர்களை ஒன்றாகச் சேருங்கள். அவர்கள் ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்துக் கூடிக் களிப்பார்கள். சொல்லப்போனால் இன்றுள்ள அனைத்து விளையாட்டுகளும் அவர்களது கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சிதான்.அவர்களுக்கு ஊட்டப்படும் ஞான உணவே சிறுவர் இலக்கியம். அதில் எப்படி ஈடுபாடு இல்லாமல் இருக்கும்? அன்பு, பரஸ்பர நம்பிக்கை, நேர மேலாண்மை, ஊக்கமளித்தல், ஊக்கம் பெறுதல், தலைமைப் பண்பு, கீழ்ப்படிதல், கூட்டு முயற்சி, உண்மை,தேசப்பற்று, கற்றல், உதவுதல், சூழல் விழிப்புணர்வு, திட்டமிடல், செயல்படுத்துதல், நல்லோர் மற்றும் நற்காரியங்களை நினைவூட்டுதல், இரக்கம், தயை, எல்லோரையும் மதித்தல், பங்களித்தல், பகிர்தல் போன்ற பல்வேறு தளங்களில் உதாரணங் களுடன், பாடல், விளையாட்டு, கதைகள், நாடகங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் அவர்களுக்கு சிறுவர் இலக்கியங்கள் போதிக்கின்றன”.

“இது ஒரு பெரிய சப்ஜெக்ட்.  கற்றறிந்த அனுபவம் நிறைந்த முதியோர்கள் சிறுவர் இலக்கியத்திற்கு பங்களிக்க வேண்டும். சிலர் சிறுவர்களை எழுதத் தூண்டுகிறார்கள். கற்பனைகளுக்கான தூண்டுதல் அது. அந்தச் சிறிய வயதில், குறைந்த அனுபவங்களில், அவரகள் வாழ்க்கைக்கான மதிப்பீடுகளை எப்படி கதைகளில், கட்டுரைகளில், விளையாட்டுகளில், பாடல்களில், கற்பனைத் திறன்களோடு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் கவனிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக சிறுவர்கள் படைக்கும் சிறுவர் இலக்கியங்கள் உதவும்.. அதில் குறை நிறைகள் இருக்கலாம். ஆனால் அது எழுத்துப் படைப்பாற்றலை மேம்படுத்தும். பாராட்டுக்குரிய விஷயம் அது”.

சூடாமணி சட கோபன்:  “ஓவியப்பள்ளியை ஆரம்பிக்கும் யோசனை உங்களுக்கு உள்ளதா?”

சுமன்: “ஒரு அமைப்பை உருவாக்கினால் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். அல்லது அந்த அமைப்பை உருவாக்குவதில் என் பங்கை நிச்சயம் செய்வேன். என்னிடம் நிஜமான ஆர்வத்துடன் வந்து கேட்பவர் களுக்கு எனக்குத்தெரிந்ததை சொல்லித் தருவேன்”.

சூடாமணி சட கோபன்:  “கூகுள்” தளத்திலிருந்து  ஓவியங்களை இலவசமாக இறக்குமதி செய்து வருகின்றனர். இது ஓவியர்களை பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

சுமன்: “நிச்சயம் பாதிக்காது. மனம், கை, மனிதக் கற்பனைகளை எந்தக் கம்ப்யூட்டரும் மிஞ்ச முடியவே முடியாது. கைமணம் என்பார்களே அதை மிஞ்ச முடியுமா?”

சூடாமணி சட கோபன்:  “கையினால் ஓவியங்கள் வரைவதற்கும், கம்ப்யூட்டர் துணையுடன் ஓவியங்கள் வரைவதற்கும் உள்ள குறை நிறைகள் என்ன?”

சுமன்:  “கம்ப்யூட்டர் மென்பொருள், ஓவியரின் இன்னொரு ஆயுதம் அவ்வளவே”.

சூடாமணி சட கோபன்:  “இளைஞர்களிடையே படிக்கும் வழக்கம் குறைந்து வருகின்றன. இது எந்த அளவு ஓவியர்களின் எதிக்காலத்தைப் பாதிக்கும்?”

சுமன்: “எந்த விதத்திலும் பாதிக்காது. எப்படியும் மனிதன் பல்வேறு ஊடகங்களில் படித்துக் கொண்டு தான் இருக்கிறான். எழுத்தாளரின் முயற்சிக்கு ஓவியங்கள் துணை நிற்கும். ஓவியங்களின் ஈர்ப்பால் படிக்கும் பழக்கம் ஏற்படும். எழுத்துகளே வரை வடிவங்களின் பரிணாம வளர்ச்சி எனக் கருதுவோர் உண்டு. எழுத்து ஒரு நீண்ட தொடர்ச்சியான பயணம் எனக் கொள்ளலாம். ஓவியம் என்பது ஒரு ஃப்ரேமில் நிலைத்து விடுகிறது”.

சூடாமணி சட கோபன்:  “புகழ் பெற்ற ஓவியர் மணியன்  மற்றும் கோபுலு அவர்களுடன் பழகிய  இனிமையான தருணங்களைப் பற்றி கொஞ்சம் கூற முடியுமா?”

சுமன்: “என் குருநாதர் கோபுலுவை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஓவியத்துறை கடினமானது என்றும், இதில் ஈடுபட்டால் வருமானம் குறைவாக வரும் என்றும் நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட வேண்டாம் என்றும் என்னைப் பலமுறை எச்சரித்துக் கொண்டிருந்தார்”.

“மணிக்கணக்காக நான் அவரிடம் உரையாடியிருக்கிறேன். தினமணி ஆசிரியர் சிவராமன்  அவர்கள், காங்கிரஸ் கட்சியின் தோற்றம் மற்றும் தேச விடுதலை பற்றி தினமணி 75 ஆம் ஆண்டு மலரில் ஒரு மாபெரும் கட்டுரை எழுதினார். அதற்கான ஓவியங்கள் அனைத்தையும் வரையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மலர் வெளிவந்தது. நான் மலரின் நகலுடன் அவரது வீட்டிற்குச் சென்றேன். மாடியிலிருந்து என்னைப் பார்த்த அவர் ஓடோடி வந்து என்னை அணைத்து அழைத்துச் சென்றார்”.

“அந்த மலரின் நகலில் எனது ஓவியங்களைக் கண்ட அவர், மிகவும் பாராட்டினார். அப்போதுதான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு விஷயத்தைச் சொன்னார். “நீ இப்போது வேலையை விட்டு விடலாம். கை நன்றாக அமைந்துவிட்டது ” என்பதுதான் அது! மறுநாளே, நான் எனது ராஜினாமா கடிதத்தை அலுவலகத்தில் கொடுத்துவிட்டேன். அந்த முடிவில் இன்றளவும் எனக்கு வருத்தமே இல்லை”.

“மணியம் செல்வன். எனது இனிய நண்பர் அவர். காட்சிகளை கலைத்திறமையால் கம்பீரப் படுத்தும் அற்புதமான கலைஞர். மனதைக் கொள்ளை கொள்ளும் ஓவியங்களை படைக்கும் திறன் உள்ளவர்.. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. எனது ஓவியங்களை பெரிதும் மதிப்பவர். எல்லாம் குருநாதரின் மகிமை. அது மட்டுமின்றி காலம் சென்ற மாருதியை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். மாருதி ஆள்வார்ப்பேட்டையில் லட்சுமி லாட்ஜில் இருந்தார். யாராயிருந்தாலும் தன் அறைக்குள் அனுமதிப்பார் எனக்குத் தேனீர் வாங்கித் தருவார். மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டிருப்போம். இல்லஸ்ட்ரேஷன்களை ஒரு பெயின்டிங் போலச் செய்வார். பெயின்டிங் முறையில் செய்வதால் சற்று நேரம் ஆகும். சிரமமான யுக்தி அது. அதில் வெற்றி அடைந்த புகழ் பெற்ற ஓவியர் மாருதி. நான் தினமணியில் பணி புரிந்தபோது ஒரு போன்கால் வந்தது. ராமு என்னை மனமாரப் பாராட்டினார். இப்படி எல்லா ஓவிய உலகப் பிதாமகர்களும் எனக்கு ஆசி வழங்கியுள்ளனர்”.

சூடாமணி சட கோபன்:  “புகழ் பெற்ற கார்ட்டுனிஸ்ட் திரு R.K. லக்ஷ்மணனைப் பற்றி கூறுங்கள்”

சுமன்: “அவர் ஒரு அற்புதமான கார்ட்டூனிஸ்ட். ஓவியங்களில் தகவல் சொல்வது, கருத்தைச்சொல்வது, அதை நகைச்சுவையோடு சொல்வது, அதற்கான சிந்தனை சாத்தியங்கள், பரிமாணங்கள், யுக்திகள் பற்றி நான் அவரது கார்ட்டூன்களில் தெரிந்து கொண்டேன். ஒரு முறை அவரை நான் பெசன்ட் நகரில் சந்தித்தேன். எனது ஓவியங்களை அவரிடம் காண்பித்தேன். அவர் அதை புன் சிரிப்புடன் பார்த்துவிட்டு உணர்வு பூர்வமாக இருப்பதாகச் சொன்னார். என்னை, கடற்கரைக்கு உலாவ அழைத்துச்சென்றார். அது ஒரு இனிய பயணம்”.

 

சூடாமணி சட கோபன்: “கார்ட்டூன்கள்”  ஓவியங்களில் ஒரு வகையா?

சுமன்: “ஆம்” கார்ட்டூன் என்பது சிந்தனையோடு கூடிய ஓவியத் திறனாகும். ஆனால் கோடுகளில் பலமும் தெளிவும் தேவை. அப்போதுதான் எல்லோரிடமும் சென்றடையும். கார்ட்டூன்களை வரையும் முயற்சிகள் குறைந்து வருகின்றன. சந்தர்ப்பம் கிடைத்தால், அது பற்றி பிறகு விரிவாகக் காணலாம்.

சூடாமணி சட கோபன்:  “மாடர்ன் ஆர்ட்ஸ்” பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன?”

சுமன்: “ரியலிஸ்டிக்”  ஒவியங்களைத் தாண்டி “மார்டன்” ஓவியங்களும் ஓவிய உலகிற்கு புதுப்புது பரிமாணங்களை அளித்துள்ளன. “சர் ரியலிஸம்”, “கான்டெம்பரரி”, “எக்ஸ்ப்ரஷனிஸம்” என பல்வேறு தளங்களில் உணர்வுகள், காட்சிகள், வண்ணங்களை வெளிப்படுத்தும் கலைஞர்கள் உலகளாவியுள்ளனர்.

சூடாமணி சட கோபன்:  “ஓவியம் என்பது உயிரூட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.. அந்த உயிரூட்டத்துக்கு இணையாக இப்பொழுது, இலக்கியங்கள், நாவல்கள் மற்றும் சிறுகதைகள் உள்ளனவா?”

சுமன்: “எழுத்துகளோ, ஓவியங்களோ படைப்புகள் ஏராளமாக வந்துகொண்டுதான் இருக்கும். நாம்தான் நம் ரசனைக்கேற்ப தேர்வு செய்து ஸ்வீகரிக்க வேண்டும்”.

சூடாமணி சட கோபன்:  “இலக்கிய நூல்களுக்கு ஓவியங்கள் தேவையா?”

சுமன்: “வாசகனின் கற்பனைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இருந்தால் தேவை தான்”.

சூடாமணி சட கோபன்:  “தற்பொழுது ஒவியர்களுக்கான இலக்கிய மேடை கள் உள்ளனவா?”

சுமன்: “ இலக்கிய மேடையா! பாராட்டுதல்கள் கலைஞனை ஊக்கப் படுத்தும் இல்லையா… அதற்கு ஒரு மேடை அவசியமே.”

சூடாமணி சட கோபன்:  “ஒரு காலத்தில் சிறார்களுக்கான இதழ்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஒரு ஓவியராக  உங்களுடைய கருத்துக்கள் என்ன?”

சுமன்: “அச்சு ஊடகங்கள் குறைந்து விட்டதென்னவோ உண்மை தான். ஆனால் வெவ்வேறு ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஏராளமான சிறுவர்களுக்கான இலக்கியங்கள், பாடல்கள், தகவல்கள், விளையாட்டுகள், விஞ்ஞானச் செய்திகள், கட்டுரைகள் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சரியானபடி கொடுத்தால் வாசிக்க இன்றைய சிறுவர்கள் தயாராகத்தான் இருப்பார்கள். அச்சு ஊடகங்கள் உட்பட!”

சூடாமணி சட கோபன்:  “வார மற்றும் மாத இதழ்களுக்கு ஓவியம் வரைவது எளிதானதா? அல்லது சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரைவது எளிதானதா?”

சுமன்: “வரைவதே ஒரு சந்தோஷமான விஷயம்தான்! இதில் வாரமென்ன? மற்றும் சிறுகதை என்ன?”

சூடாமணி சட கோபன்:  “ஓவியக்கலையில் பெண்களின் பங்கு குறைவாக வே உள்ளது.  இது பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன?”

சுமன்: “உண்மைதான்! காரணம் தெரியவில்லை! தொழில்முறை ஓவியராக வருவதில் இருக்கும் பொருளாதாரச் சிக்கல் ஒரு காரணமாக இருக்கலாம். சம்பாதிப்பதற்கான உத்தரவாதம் பற்றிய சந்தேகம், காரணமாக இருக்கலாம். குடும்ப, சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்கள் பெண்கள். ஆனால் பெண்களுக்கு நன்றாக ஓவியம் வரும். அவர்கள் போடும் கோலங்களே சாட்சி. வீட்டை அலங்கரிப்பதில் அவர்களுக்குள்ள ஆர்வமே சாட்சி. புராணத்தில் வரும் லட்சுமணனின் மனைவி ஊர்மிளை ஒரு கை தேர்ந்த ஒவியராவார்”.

சூடாமணி சட கோபன்:  “வார, மாத இதழ்கள், ஓவியர்களுக்கான சிறந்த  மேடை என்பது உண்மையா?” 

சுமன்: “உண்மைதான்”.

சூடாமணி சட கோபன்:  “அரசின் ஆதரவு, ஓவியர்களுக்கு இருக்கின்றதா?”

சுமன்: “இருக்கிறது. கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு அமைப்புகளும் ஓவியர்களை ஊக்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் போதாது”.

சூடாமணி சட கோபன்:  “இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு, அனைத்து பள்ளிகளிலும் ஓவியத்துக்கென்று, தனி வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.  இப்பொழுது அவை இருக்கின்றனவா?”

சுமன்: “இப்போதும் சில பள்ளிகளில் ஓவிய வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அழகுணர்வு, கைகளில் லாகவம், கற்பனை வளம், பல் வேறு கோணங்களில் பொருட்களை ஓவியங்களில் கொணர்தல், கருத்துருவாக்கம், ஒளி, நிழல், உருவங்களில் பரிமாண உணர்வு, வண்ணங்களைக் கையாளுதல் போன்றவை ஓவியப் பயிற்சியால் மேம்படும்”.

சூடாமணி சட கோபன்:  “வெளி நாடுகளில் ஆங்கிலத்தில் வெளிவரும் சிறார்களுக்கான சிறுகதை புத்தகங்களில், கண்களைக் கவரும் விதத்தில் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. ஆனால், நம் நாட்டில் இதைப்போன்று, சிறார்களுக்காக ஓவியங்கள் இடம் பெறுவதில்லை. இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?”

சுமன்: “செலவு, வியாபார நோக்கம், போன்றவைதான் காரணம். நம் ஓவியர்கள் எந்த விதத்திலேயும் குறைந்தவர்களல்ல. வெளிநாடுகளில் கூட நம் ஓவியர்களின் கலைத்திறன்களுக்கு நல்ல சான்றுகள் உள்ளன”.

ஓவிய வரைதலில் எத்தனை வகைகள் உண்டு?  வார மற்றும் மாத இதழ்களுக்கான ஓவியங்கள் எந்த வகையில் இருக்க வேண்டும்?

சுமன்: “நிறைய உள்ளன. முக்கியமானவைகளைப் பார்ப்போம். அடிப்படைக் கோட்டுச் சித்திரம், ஹாஃப் டோன் வாஷ் சித்திரம், நீர் வண்ணச் சித்திரம், அக்ரிலிக் சித்திரங்கள், போஸ்டர் வண்ணச் சித்திரங்கள், தைலச் சித்திரங்கள் போன்றவைகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் அடிப்படை கோடுகள்தான். இதழ்களுக்கு ஹாஃப் டோன், கோட்டுச் சித்திரங்கள், நீர் வண்ணச் சித்திரங்கள் உகந்தது. தைலச்சித்திரங்கள், போஸ்டர் வண்ணச் சித்திரங்கள், அக்ரிலிக் சித்திரங்கள் வரைய நேரம் அதிகமாகும். காலம் சென்ற ஓவியர் மாருதி போஸ்டர் கலர் ஓவியங்களிலேயே ஓவியங்கள் வரைந்தவர்”.

சூடாமணி சட கோபன்:  “ஒரு ஓவியராக  நீங்கள் சமூகத்துக்கு என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள்?”

சுமன்: “சமூகத் தேவைகள், விழிப்புணர்வுகள், அனைத்துத் துறைகளின் முக்கியத்துவம், ஒற்றுமை, கூடிச் செயல்படுதல், மனித வாழ்க்கைக்கான மதிப்பீடுகள், மேம்பட்ட வாழ்க்கை, பொருளாதார விடுதலை, இயற்கைப் பேரழிவின்போது செயலாற்றல், பொருட்களின் வடிவமைப்பு, நவீனத் கட்டிட வடிவமைப்பு, ஆடைகள், மற்றும் ஆபரணங்களின் வடிவமைப்பு, விஞ்ஞானம், நோய்ப் பரவல் பற்றிய விழிப்புணர்வு சான்றோர்களின், மூதாதையரின் நினைவு, பொழுது போக்கு, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், அனிமேஷன் துறைகள், இன்னும் ஏராளமான துறைகளில் ஓவியர்களின் பங்கு உள்ளன. இத்துறையில் ஈடுபட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். இவை ஓவியங்கள் மூலம் சாத்தியப்படும்”.

சூடாமணி சட கோபன்: “ஒரு ஓவியராக சமுதாயத்திடமிருந்து என்ன எதிர்ப் பார்க்கிறீர்கள்?”

சுமன்: “பாராட்டு, அங்கீகாரம் அவ்வளவே”.

சூடாமணி சட கோபன்:  “ஒரு எழுத்தாளருக்குக் கிடைக்கும் அங்கீகாரம், ஓவியர்களுக்கும் கிடைக் கிறது என்று நம்புகிறீர்களா?”

சுமன்:  “நல்ல ஓவியங்களுக்குக் கிடைக்கிறது”.

சூடாமணி சட கோபன்:  “உங்களுடைய ஓவியப் பணிகள் மேன்மேலும் சிறக்க “குவிகம் மின்னிதழின்” வாழ்த்துக்கள்”.

“பாட்டு சிறந்ததா அல்லது பரதம் சிறந்ததா என்று  ஒரு கலையை, பிரிந்துப் பார்க்காமல், பாட்டும் பரதமும் சேர்ந்தால், எவ்வளவு இனிக்குமோ, அதைப் போன்றே, புகழ் பெற்ற கல்கியின் சிறந்த புதினமான “பொன்னியின் செல்வன்” நாவலில் வரும் ஒவியங்கள் ஓவியர் மணியம்  அவர்களின் புகழை இன்னும் பாடிக் கொண்டிருப்பதைப் போன்றே,   ஓவியர்களின் புகழும் மங்காமல் இருக்கும் என்பதை  அழுத்தம் திருத்தமாக இங்கு பதிவு செய்திருக்கிறீர்கள்.  ஒரு ஓவியராக மேன்மேலும் புகழ் சேர இன்னும் ஒரு முறை வாழ்த்தி விடை பெறுகிறோம். வணக்கம்.”

சுமன்:   “குவிகம் ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் என்னுடைய ஆசிகள்”

 

**************