
என்.சி.சி. அலப்பறைகள் -2
மறுநாள் காலை எல்லோருக்கும் சாதாரணம். எங்கள் ஐவருக்கு மட்டும் அசாதரணம். பள்ளிக்கு வந்த உடனேயே மாலை என்.சி.சி. தேர்வு பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். வகுப்புக்குள் ரோல் நம்பர் வரிசையில்தான் உட்காரவேண்டும். எனவே உள்ளே பேசமுடியாது. காலை இரண்டு பிரீயட் முடிந்தபின் விடப்படும் “இண்டர்வெல்” லில் பேசிக் கொண்டோம். பிறகு “லன்ச்: நேரத்தில் பேசிக்கொண்டோம். அப்படி என்னதான் பேசிக் கொண்டோம்.
”ஏண்டா ஷூ போட்டுண்டு வந்தீங்களா “ என்று கேட்டுவிட்டு ஒருவர் காலை ஒருவர் பார்த்துக் கொண்டோம். பிரபு காலில் லெதர் ஷூ; எக்கள் கால்களில் கான்வாஸ் . ( என்.சி.சி-யில் சேர்ந்துவிட்டால் அவர்களே ரெகுலேஷன் லெதர் ஷு கொடுத்துவிடுவார்கள். ஆர்மி விங் என்றால் பிரவுன், ஏர் விங் என்றால் கறுப்பு. எங்கள் பள்ளியில் இரண்டும் உண்டு )
“ பாலா ! நீ ஏண்டா ஷூ போடலை ? இன்னிக்கு அவ்ளோதான்.. ஒன்ன செலெக்ட் பண்ணமாட்டாங்க..” என்றான் வெங்கட்
“ டேய் ! அதெல்லாம் தெரியும்..டா.. ஷூவைத் தனியா பையில கொண்டுவந்திருக்கேன். கிரவுண்டுக்குப் போறத்துக்கு முன்ன மாத்திப்பேன்”.”
“அடே நல்ல ஐடியா..” என்றேன் நான்.
“டேய் இன்னிக்கு செலெக்ட் ஆனா உடனே யூனிபார்ம் கொடுத்துடுவாங்களா ?
“ கேப் கொடுப்பாங்களா ?”
“சாக்ஸ் கொடுப்பாங்களா ?
“பெல்ட் உண்டு அதப் பளபளப்பா வச்சுக்க “ப்ராஸ்ஸோ” வாங்கணும்”
இப்படி ஏதேதோ அரைகுறையாத் தெரிஞ்ச விஷயம் பத்தி ஆர்வத்தோடு பல பேசினோம்.
மாலை வந்தது. கிளாஸ் முடிஞ்சதும் ஒரே ஓட்டம். கிரவுண்ட்லதான் நின்னோம்.
நான் அந்த சீனியர் ஸ்டுடெண்ட்கிட்டப் போய் நாங்க எங்க வெயிட் பண்ணனும்னு கேட்கப் போனேன். அவன் நாலு ஜூனியர்ஸ் கிட்டப் பேசிண்டு இருந்தான். அவனப் பத்திதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே !
“ சார்ஜெண்ட் நாங்க எங்க வெயிட் பண்ணனும். செலெக்ஷனுக்கு வந்திருக்கோம் “ என்று சொல்லி ஒரு “ட்ரிம் சல்யூட்” அடிச்சேன்.
நான் சார்ஜெண்ட் ன்னு கூப்டதும், சல்யூட் அடிச்சதும் அவனுக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. எங்கள மேலும் கீழும் பார்த்தான். எல்லோரும் ஷூ போட்டு இருந்தோம்.
“ஓகே ஓகே நீங்க ஐஞ்சு பேரும் இந்தப் பக்கம் நில்லுங்க நான் சார் கிட்ட சொல்லறேன். குரூப் குரூப்பாதான் இண்டர்வியூ பண்ணறோம் என்றான்.
பெரிய சார் எங்களைக் கூப்பிட்டார். .நாங்கள் போய் வரிசையாக நின்றோம்.
“ பரேட் நடக்கும் போது லீவு போடாம ஒழுங்கா வரணும். இஷ்ஷூ பண்ணற யூனிபார்ம் கேப் ஷூ எல்லாத்தையும் நீட் டா வச்சிக்கணும். ஷூ பெல்ட் எல்லாம் பாலீஷ் போட்டு வச்சுக்கணும். போங்க அந்த க்யூல போய் நில்லுங்க “ என்றார்.
எங்களுக்கு ஆச்சரியம். வேற கேள்வி ஒண்ணும் இல்ல. எங்கள செலெக்ட் பண்ணிட்டாங்கன்னு தெரிந்தது. அந்த ஸ்டூடெண்ட் சார்ஜெண்ட் வந்து கொஞ்சம் நட்புணர்வோடு கை குலுக்கினான். அன்னிக்கு பேர்தான் எழுதிக் கொண்டார்கள். அந்த மாதம் முழுவதுமாக , ஒரு நாள் ஷூ ஒரு நாள் யுனிபார்ம் ஒரு நாள் பெல்ட், ஒருநாள் கேப் அப்படீன்னு இன்ஸ்டால்மெண்ட்ல கொடுத்தார்கள். கொடுத்தார்கள் என்றா சொன்னேன். சரி புரியும்படி சொல்கிறேன்.
எங்க பள்ளி மூன்று மாடிக் கட்டடம். அந்தக் கால கன்ஸ்ட்ரக்ஷன் . பெரிய காற்றோட்டமான அறைகள். முதல் மாடியில் மிகப் பெரிய ப்ரேயர் ஹால். பள்ளிக் கட்டடம் கிழக்கிலிருந்து எல் வடிவத்தில் மேற்கு வழியாகத் தெற்கில் முடியும். கிழக்குப் பகுதியின் கடைசி அறை என்.சி.சி. அறை. ஒரு முழு வகுப்பறை. அதுதான் என்.சி.சி. ப்ராபர்டி ரூம். உள்ளே பல பீர்ரோக்கள் , ஷெல்ஃபுகள் இருக்கும். ஒரு புறம் சீருடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், இன்னொருபுறம் ஷூ வரிசை, தொப்பிகள் , இடுப்புப்பட்டைகள் என்று பல பொருட்கள் இருக்கும். கணக்கு வழக்கு பார்க்க என்.சி.சி. ஆசிரியருக்கான மேசை நாற்காலி ஒருபுறம் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி எங்களைக் கூப்பிட்டு அந்த அறைக்குள் சென்று எங்களுக்கு சரியான அளவில் உள்ள ஒரு செட் உடைகளையும் ஒரு ஜோடி ஷூக்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். இவை எல்லாமே புதுசு கிடையாது. சீனியர்கள் உடுத்துக் கொண்டவற்றை வாஷ் செய்து வைத்திருப்பார்கள். அதே போலத்தான் ஷூக்கள். கொஞ்சம் ரிப்பேர் பார்த்து , புதிய சோல் போட்டு பாலீஷ் செய்து வைத்திருப்பார்கள். எல்லாம் ஒரு பெரிய பெட்டிக்குள் ஒன்றாகக் கிடக்கும். நாம்தான் தேடி எடுத்துக் கொள்ள்வேண்டும் . இதெல்லாம் வெளியே கிடைக்கும் ஷூ போல இருக்காது. போலீஸ் ஷூ போல முன்னால் ஒரு பகுதி தனியாக தெரியும் படி இருக்கும். ஷூவின் எல்லாப் பகுதியிலும் பாலீஷ் போடுகிறோமோ இல்லையோ இந்தப் பகுதி மட்டும் பள பளவென்று பிரகாசமாக இருக்கவேண்டும்.
நாங்கள் என்.சி.சி யில் செலெக்ட் ஆன ஒருவாரத்திற்குப் பிறகு, “ என்.சி.சி. மாணவர்கள் இன்று மாலை பள்ளி நேரம் முடிந்தவுடன் என்.சி.சி. ரூம் அருகில் கூடவேண்டும்” என்ற சுற்ற்றிக்கை” எங்கள் வகுப்பிலும் படிக்கப்பட்டது. மாலைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்கள் யூனிபார்ம்களையும் அது சார்ந்த பொருட்களையும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஏன் எங்களுக்கு ஒருவாரம் கழித்து இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று உள்ளே போனபிறகுதான் தெரிந்தது. அந்த ஆண்டிற்கான புதிய யூனிஃபார்ம்களை சீனியர்கள் முதலில் எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஜூனியர்களான எங்களுக்கு, வாஷ் செய்யப்பட்ட பழைய உடைகளே கிடைத்தன. மேலும் முதலாம் ஆண்டு ”கேடட்”.களுக்கு லெதர் ஷூ கிடையாது; கேன்வாஸ் ஷூதான் என்று சொல்லிவிட்டார்கள். என்.சி.சி. ஷூ போட்டுக் கொண்டு “டக் டக் என்று நடை பழகலாம் என இருந்த எங்கள் ஆசையில் மண் விழுந்த்து.. என்றாலும் இந்தத் தற்காலிகப் பின்னடைவை, சீருடைகளோடு பங்கேற்க இருக்கும் அடுத்த “பரேடின்” எதிர்பார்ப்பு சரி செய்து, மீண்டும் எங்களிடையே உற்சாகத்தைக் கூட்டியது.
எனது மற்றும் சகோதரன் கணேஷ் இருவரின் என்.சி.சி. உடைமைகளை வீட்டிற்குள் கொண்டு வந்தவுடன். , விஷயம் தெரிந்த எங்கள் அம்மா முதலில் போட்ட ஆர்டர்,
“ எல்லா ட்ரெஸ்ஸையும் அப்படியே பின்னால எடுத்துண்டு போய் நல்லா தோச்சு காயப் போடுங்கோ.”
“ ம்மா ! எல்லாம் அயர்ன் பண்ணி இருக்கு கசங்கிடும்… இத ஒரு வாட்டியாவது அப்படியே போட்டுக்கறோம்..அடுத்த வாரம் வேணும்” என்று முறையிட்டோம்.
அம்மா மசியவில்லை. அம்மா “ஹைஜீன்” பற்றியெல்லாம் படித்தது கிடையாது. ஆனால் வெளியில் இருந்து ஒரு பொருள் வந்தால் அதை நாம் உபயோகிக்கும் போது அது நம்பிக்கை தரும் தூய்மையோடு இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவள். பள்ளியில் படிக்கும் வரை எங்கள் துணிகளை “லாண்டரியில்” போட்டதே கிடையாது. வீட்டில் வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும், எங்கள் துணிகள் அம்மாவின் மேற்பார்வையிலேயே துவைக்கப்பட்டு வந்தன. ( அக்காலத்தில் பள்ளிகளில் எங்களுக்கு சீருடைகள் முறை கிடையாது. ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஃபுல் பாண்ட் அல்லது வேட்டி உடுத்துதான் வரவேண்டும் )
என்.சி.சி. உடை பற்றிச் சில வார்த்தைகள் எழுதவேண்டும். நல்ல தடிமனான துணி. காக்கி கலர். கஞ்சி போட்டு இஸ்திரி போட்டு விறைப்பாக அணியவேண்டும். முழுக்கை என்றாலும் அதை மடக்கி அரைக்கையாக்கிக் கொள்ளவேண்டும். பெரிய அழுத்தமான டார்க் பிரவுன் பட்டன்கள். சட்டையின் மேற்புறத்தில் கழுத்திலிருந்து இறங்கும் தோள் பகுதியில் இரண்டு பக்கமும் , நாய்க்காதுகள் போல பட்டைகள் இருக்கும் அவற்றைப் பொருத்த பட்டன்களும் உண்டு. ரேங்க் குறியீடு, விஸில் கார்ட் போன்றவற்றை அணிய அவை உதவும்.
அரைக் கால்சராய் இடுப்பில் அகலமான பெல்ட் அணிய ஏதுவாக பெரிய “லூப்” களைக் கொண்டிருக்கும். கீழ்ப்பகுதி “நார்மல்” அளவை விடக் கொஞ்சம் அகலம் அதிகமாகவே இருக்கும். “ட்ரில்” செய்யத் தடையாக, கால்சராயின் தொடைப்பகுதி பிடிப்பாக இருக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம்.
இந்த உடைகளை அணிவதன் முன் அவை கஞ்சி போட்டு “மொற மொறப்பாக” இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ( “துணிகளுக்கு கஞ்சி போடுதல்” பற்றிப் பிறிதோர் சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்)
வீட்டில் இரண்டு பேர்களின் என்.சி.சி. உடைகளைத் தோய்த்து கஞ்சி போட்டு விறைப்பாக “அயர்ன்” செய்து வைப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதை எங்கள் அம்மாவும் பாட்டியும் அருமையாக “ஹேண்டில்” செய்தார்கள். இவற்றை உலர்த்துவதற்கென்றே வீட்டின் மொட்டை மாடியில் தனியாக ஒருபக்கம் கொடிகட்டினார்கள். தோய்த்து கஞ்சி போடுவது அவர்கள் வேலை. வெயிலில் காய்ந்ததும் அவற்றை எடுத்து வந்து :அயர்ன்” செய்து மடித்து வைத்துக் கொள்வது எங்கள் வேலை.
இதைத் தவிர உள்ள துணைப் பொருட்களை ( Accessories ) பராமரிப்பதிலும் கவனம் தேவைப்பட்டது. தலைத் தொப்பியை தூசு தட்டி அதனை ஒருபுறம் சுருக்கிக் கட்டும் கயிறு சரியாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். தொப்பியின் முன்புறம் உள்ள முத்திரை “பாட்ஜ்” சரியாகப் பொருத்தப்பட்டு இருக்கவேண்டும். பெல்ட்டில் உள்ள “பக்கிள்” மிக முக்கியமானது அது பள பளவென்று மின்னவேண்டும். அதெற்கென உள்ள “ப்ராஸ்ஸோ” பாலீஷைப் பயன்படுத்தவேண்டும்.
பிரவுன் கேன்வாஸ் ஷூ அழுக்கில்லாமல் இருக்கவேண்டும். பழுப்பு அல்லது கறுப்பு நிற ”சாக்ஸ்” அணியவேண்டும் ( சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவது என்.சி.சி.யில் இமாலயக் குற்றம். தண்டனைக்குரியது. செருப்போடு வந்தால் பரேடில் கலந்துகொள்ள முடியாது. வெளியேற்றம்தான்)
மேற்படி வழிமுறைகளையெல்லாம் சரிவரக் கடைப்பிடித்து வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை “பரேட்” டுக்கு நானும் என் சகோதரனும் தயாரானோம்.
ஞாயிறு காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து. அவசரமாக எழுந்து குளித்து உடுப்புகளை அணிந்துகொண்டு மணியைப் பார்த்தால் 5.55. ஆறு மணிக்குள் பரேட் நடக்கும் மைதானத்தில் இருக்கவேண்டும். முதல் நாள் என்பதால் சீக்கிரம் வரவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். வீட்டிலிருந்து ஒரே ஓட்டம். மைதானத்தில் நுழைந்தோம்.
(தொடரும்)
“
