தீபாவளிக்கு நேரமாச்சு…!!

 

NSB Road Trichy: Shopping Street | Places to Visit Near Rockfort

 

“இந்த விஷயம் நமக்குள்ள இரகசியமாக இருக்கணும்..!” – திருச்சி தெப்பக்குளக் கரையில் பஜ்ஜி மாமா வண்டியருகே, காதை கடித்தான் சீமாச்சு.

பொதுவாக மோடி வித்தைக்காரனைக் கண்டாலே பத்தடி விலகிச் செல்லும் இவன், என்ன மர்மமான காரியத்தைச் செய்யப் போகிறான்? என்ற கவலை மற்றும் ஆவல் மேலிட,

‘அப்படியென்ன..டா விஷயம்? என்றேன், சூடான பஜ்ஜியை வாயில் போட்டவாறே..

“எனக்கு ‘பிங்க்’ கலரில் ஒரு சட்டைத் துணி இந்த தீபாவளிக்கு (1978) எடுத்துத் தைக்கணும்”

தொடர்ந்து ;

“மாப்ள, எ(ன்) ஆளு, இந்த வருடம் ‘பிங்க் பாவாடை, தாவணி’, அதுக்கு ‘மேட்சிங் – மேட்சிங்’ ஆக ஒரு பிங்க் ஷர்ட் போட்டு தீபாவளியன்னிக்கு அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போறேன். உன்கிட்ட மட்டும்தான் சொல்லறேன். விஷயம் லீக் ஆயிடக் கூடாது! நம்ம ‘மக்களுக்கு’ தெரிஞ்சா, சும்மா வாரி கொட்டுவாங்க”

(வாரி கொட்டுவாங்க, என்பதற்குத் தற்கால இளைஞர்களின் thesaurus – கழுவி, கழுவி ஊத்துவாங்க..)

‘சாரதாஸ்’ கடலில் தேடிப்பார்த்தோம். கிடைக்கவில்லை. பல துவார டிசைன்..னுடன் சற்றே வளைந்த முகப்புடன் இருந்த ‘கீதாஸ்’..ல் தேடினோம், ‘ஆனந்தா கார்ப்பரேஷன்’ சென்றோம். ‘பிங்க் கலர்..’ என்று பொதுவாக இவன் ஆரம்பிக்க,

“லேடீஸ் செக்ஷன்?, மாடிக்கு போங்க..” – என வழிகாட்டுதலுக்குட்பட்டோம். 

ஒரு வழியாக, அந்தப் பிங்க் சட்டை துணி சிங்காரத்தோப்பில் ஒரு வட இந்தியக் கடையில் கிடைத்தது. கையோடு,

அருகிலிருந்த ஜோதி மயமான டைலரிடம், நாய் காது காலர், முன் பாக்கெட்டில் V ஷேப்பில், பட்டனுடன் மூடி, உட்படப் பல விவரக் குறிப்புகளுடன் தைக்கக் கொடுத்தான்.

“என்னிக்கு கொடுப்பீங்க?”

“நாளைக்குச் சாயங்காலம் ரெடியா இருக்கும். வந்து வாங்கிக்குங்க தம்பி” என்றார், பெரிய கிருதாவும், நரை மீசையுடனிருந்த தலைமை டைலர்.

பிறகு, ஒருவாரம் ஆகியும் சட்டை தயாராகாததால், “வர்ரயா, ஒரு நடை ‘சிங்கார தோப்பு’ போய் டைலர்..ஐ பாத்திட்டு வந்துடலாம்” என்று என்னை அணுகினான்.

“சாரி.. எனக்கு வேலையிருக்கு”

“அலட்டாத. வசந்த பவன்’..ல சோளா பூரி சாபிடரோம். அப்புறம், டைலர் ஓகே வா..? 

சோளா பூரி என்னும் வஸ்து திருச்சியில் புதிதாக நுழைந்த சமயம் அது.. (வடக்கின் ‘சோளே பூரி’, தெற்கில் ‘சோளா பூரி’ ஆகி, தற்போது மேலும் மருவி, அஃது அழகாக ‘சோழா பூரி’ என்றே புறநகர்களில் அழைக்கப்படுகிறது என்று தெளிக..!)

“வாங்க தம்பி, உங்க துணிதானே, வெட்டியாச்சு. ஓரம் அடிச்சு காஜா தைக்கணும் அவ்வளவுதான். நாளைக்கு வாங்கிக்கங்க”

“இல்ல, கொடுத்து பதினஞ்சு நாள் ஆச்சுங்க. காத்திருந்து வாங்கிட்டுப் போறேன்”

“காஜா அடிக்கிற பையன் வெளில போயிருக்கான். காலைல வாங்க, கண்டிப்பா ரெடியா இருக்கும்”

காலுக்கு அடியில் ஏற்கனவே அரை டஜன் பையன்கள், காஜா தைத்துக் கொண்டிருக்க, இவர் எந்த பையனைச் சொல்லுகிறார்? என்று தேட,

“விடுடா சீமாச்சு, தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே” – என நான் ஆசுவாசப் படுத்தினேன்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு, NSB ரோடு ஜன சமுத்திரத்தில் நீந்திக் கொண்டிருந்தேன்.

கடைசி நிமிட போனஸ் கரைப்பில் திருவெறும்பூர் குடும்பங்கள் இருக்க, இன்று கொண்டு வந்ததை விற்று முடித்தால்தான் நமக்குத் தீபாவளி என ஒரு சாரார் பூ வியாபாரம் முதல், கர்ச்சீப், ஈரோடு வேஷ்டி துண்டு, பாண்ட் பிட்ஸ், சென்னிமலை ஜமக்காளம், திருப்பூர் பனியன்கள், காதணி, காலணி வகையறாக்கள் – என விற்க, மறுபுறம் தள்ளு வண்டியில் அமோகமாகப் பட்டாசுகளின் விற்பனை..!

இரவு நெருங்க நெருங்க பட்டாசு விலை குறைந்து கொண்டே வரும். இதற்காக ஒரு கூட்டம் Stock Exchange index லெவலில், களநிலவரங்களை அவ்வப்போது ஆய்வு செய்து வீட்டுக்குத் தகவல் தந்து கொண்டிருக்கும்.

இந்தச் சந்தடியில்தான், சீமாச்சு கலவரமாக வந்தான். “இன்னும் கிடைக்கலடா சட்டை..”

மணி இரவு 10:00 ஐ தொட, விடிந்தால் தீபாவளி! – டைலர்..ஐ அணுகினோம். கடைக்குள் கழுத்தை, நுழையமுடியாத அளவிற்கு ஒரே கும்பல்.

“வாங்க தம்பி – உங்க துணி, ஓரம் அடிச்சி காஜா தைக்கனும் அவ்வளவுதான், ரெடியாயிடும்”

சீமாச்சு அழுதிடுவான் போல இருந்தது ; எல்லாத் தையல் மெஷின் காலடிகளில் கலர் கலராய், ஓலை சுவடியை ஒரு துணி நாடாவில் கட்டி  வைத்தாற் போல ஜவுளிச் சிதறல்கள். சொல்லவொண்ணா இந்தத் துணி சங்கமத்தில், இவனது பிங்க் சுருளைத் தேடி எடுத்துக்கொடுத்தோம்.

நேரத்தைக் கடத்த, ‘ராக்ஸி’ க்குள் நுழைந்தோம். அடுத்த நாள் தீபாவளி ரிலீஸ் பட கட்அவுட் மேலேறிக்கொண்டிருக்க, அரதப்பழசான படம் இரவுக் காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது. பார்த்து, அழுதுவிட்டு, மீண்டும் டைலர் கடைக்கு சென்று ஒருவழியாகச் சட்டையைப் பெறும்போது, மணி விடியற்காலை மணி 2:45 !

சீமாச்சு, தெருவில் நுழைந்ததும், தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, ஓர் ஆயிரம் வாலா ‘ரெட் போர்ட்’ஐ வைக்க ராக்போர்ட் அதிர்ந்தது!

“யாரடா அது.. மூணு மணிக்கே வெடி வச்சு ஊரை எழுப்பறது? – ஒரு மாமா அலற, ‘தீபாவளி’ இனிதே தொடங்கியது.

வீட்டில் வெற்றிலையை மென்றபடி எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், தீபாவளி மருந்து உட்கொள்வது (ஸ்வீட்..ஐ விட இதற்கு டிமாண்ட் அதிகம்) பட்டாசு வெடிப்பது, ராக்கெட் திசை மாறிய பறவையாய், எதிர்த்த வீட்டு ‘கோண்டு மாமா’ மாடி ஜன்னலில் நுழைவது, காலை 5:30 மணிக்கே ஓமப்பொடி, மிச்சர், மைசூர் பாகு சாப்பிடுதல் எனக் கோலாகலம் தொடர, தெரு குப்பையானது.

சற்று கொட்டம் அடங்கியவுடன், தீபாவளி ரிலீஸ் படங்கள் வேட்டை துவங்கியது.

“மாப்ள எல்லாத் தியேட்டரும் கூட்டம். ‘ராமகிருஷ்ணா..தான்’  கொஞ்சம் காத்து வாங்கற மாதிரி தெரியுது ”- லேட்டஸ்ட் சர்வேயுடன் வந்தான் பால்கி.

ஒருவழியாக அந்த படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தபோது சீமாச்சு அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்க வெளியில் நின்று கொண்டிருந்தான்.

பழைய, வெளிர் நீல சட்டை அணிந்திருந்தான்.

“படம் எப்படி..டா?”

“எனக்கு ஓகே.. தான், அதைச் சொன்னா இவனுங்க அடிக்க வரானுங்க” என்றபடி,

“எங்கடா உன் பிங்க் புது சட்டை..?” (சீமாச்சுவிடம் ரகசியமாகக் கிசு கிசுத்தேன்)

“அதை ஏன் கேட்கிற..? அவ என்னைப் பார்த்ததுமே, ‘அட நீயா..? – முதல்ல இந்த பஞ்சு மிட்டாய் சட்டைய கழட்டு, இல்லைனா, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னடி?, உங்காளு புதுசா ஏதும் வியாபாரம் தொடங்கிட்டானான்..னு கோட்டா பண்ணுவாங்க..னு முறைத்தாள் ; மொத்தமே அந்த சட்டைக்கு ஆயுள் வெறும் பத்து நிமிஷம்தான்..டா”

கண்களில் வருத்தம்..

VASANTA BHAVAN, Tiruchirappalli - Restaurant Reviews, Photos & Phone Number - Tripadvisor

சீமாச்சுவை, சமீபத்தில் எதேச்சையாக தி.நகரில் ஒரு துணிக் கடையில் சந்தித்தேன் ;

சியாட்டி’லிருந்து, வெகேஷனுக்கு வந்திருக்கிறேன் என்றேன். ஜெனட்டிக் இன்ஜினியரிங் டெக்னாலஜி துறையில் இருப்பதாகச் சொன்னான். ‘ஜினோமிக்ஸ், DNA சீக்யுவென்ஸிங்…….’ என்று ஏதேதோ சொல்ல, நான் கொட்டாவியைத் தவிர்த்து, அவனது துணிப் பைக்குள் எட்டிப்பார்த்தேன்.

தீபாவளிக்கு குடும்பத்திற்காக வாங்கிய துணிகளைக் காண்பித்தான். மனைவி, மகள்கள் உட்பட ‘பிங்க்’நிறத்தில் எந்த உடையும் இல்லை!

{BTW, நாங்கள் தீபாவளியன்று பார்த்த அந்தப் படம் : கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த, இளைய ராஜாவின் இசையில் ‘உறவுகள் தொடர்கதை’ போன்ற பாடல்கள்  கொண்ட ‘அவள் அப்படித்தான்’ – CNN-News18, included this film in its list of 100 greatest Indian films of all time