முன்னுரை

எப்படி சார் காதல் ஏற்பட்டது?

 

 

File:Kumu.jpg

File:சுஜா.jpg

 

 

அறுபது எழுபதுகளில் வாழ்வை ரசித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். எங்களுக்கெல்லாம் வேறு பொழுது போக்கு கிடையாது. சினிமாவும் பத்திரிகையும்தான்.

பத்திரிகைகளில் கலைமகள், அமுதசுரபி கல்கி என்பவை சாவித்திரி, பானுமதி என்றால் குமுதம் ஜெய மாலினி, ஜோதி லட்சுமி எனலாம், சிலர் பகிரங்கமாகப் பார்த்து ரசிப்பார்கள். சிலர் சீ சீ என்று கண்ணை மூடிய மாதிரி பாவனை செய்தவாறு அரைக் கண் திறந்து ரசிப்பார்கள். மொத்தத்தில் அனைவரும் ரசிப்பார்கள்.

அறுபதுகளில் பல வீடுகளில் குமுதம் வாங்குவதற்கு யோசிப்பார்கள். நடிகைகளின் போட்டோக்களைக் கவர்ச்சியாக போட்டிருப்பார்கள். குழந்தைகள் பார்த்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்று பயம்.

என் அப்பா அப்படியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. வாரா வாரம் குமுதம், விகடன், கல்கி என்று வாங்கிவிடுவார். கலைமகள், அமுத சுரபி இவை இரண்டும் மாதா மாதம்.

ஆக.. என் குமுத நாட்கள் அப்போதே ஆரம்பமாகிவிட்டது எனலாம். என் அம்மா அத்தனை தொடர் கதைகளையும் பைண்டு செய்து வைத்துவிடுவார். ஜாவர் சீதா ராமனின் கதைகளை எப்படிப் படித்தோம் என்று நினைத்துப் பார்த்தால் இன்றும் சிலிர்க்கும்.

அம்மா ஆட்டுக்கல்லில் தோசைக்கு அரைத்துக் கொண்டிருப்பார். நான் புத்தகத்துக்கு அட்டைபோட்டுக்கொண்டும் அண்ணா ஏதேனும் வேலை செய்துகொண்டும் இருக்கையில் அக்கா கதையை உரக்கப்படிப்பாள். குரலில் ஏற்ற இறக்கத்துடன் படிக்கும்போது அனைவரின் கவனமும் உன்னிப்பாகக் கதையில் இருக்கும்.

தொடர் கதைகள் வர்ணம் படத்துடன் நிலவு மாதிரி ஜொலிக்கும். கதையை அக்கா வாசிக்க ஆரம்பிக்குமுன் படத்தைப் பார்த்து ரசித்துக் கொள்வேன். பிறகு எந்தக் காட்சிக்கான படம் அது என்று தொடர்பு படுத்தும்போது சின்ன த்ரில்.

இப்படியெல்லாம் ரசித்த குமுதத்தில்.. பிற்காலத்தில் நானும் ஓர் அங்கமாவேன் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

கல்லூரி நாட்களில் வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன். பிரசுரமானது மட்டுமல்ல.. அட.. ஒரு பிரதி அனுப்பியிருந்தார்கள்.

1975 இல் என் பெயரை முதலில் அச்சில் பார்த்த  அந்த தினம் மறக்காது.

என் அண்ணாவின் கதை முதல் முதலாகக் கல்கியில் பிரசுரமானது. அவர்  பெயர் எஸ் கோபால். நாங்கள் வசித்த அதே குரோம்பேட்டையில் திரு பாமா கோபாலன் வசித்து வந்தார். அந்தப் பிரபலமான பெயருக்கு உரியவர் உள்ளூரில் வசிப்பது தெரியும். ஆனால் அவர் என் வீடு தேடி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.

“என் பெயரும் எஸ் கோபாலன்.. நீங்களும் எஸ் கோபால். உங்கள் கதையைக் கல்கில பார்த்தேன். உள்ளூர் ஹிந்து பத்திரிகை ஏஜென்ட்தான் சொன்னால் நீங்க குரோம்பேட்டைன்னு.. அவர்தான் அட்ரஸ் குடுத்தார்” என்றவாறு வந்தார்.

கதைகள்.. எழுத்தாளர்கள்.. பத்திரிகைகள் என்று பேச்சு சுழன்றதில் குடும்ப நண்பரானார். ரசனை மிக்க என் அம்மா உள்பட அனைவரும் உட்கார்ந்து நிறையப் பேசுவது ஞாயிறுகளில் வழக்கமானது.

“உங்க அண்ணா கதை எழுதிட்டாரு.. நீங்க எழுத்தாளராக வேண்டாமா? பத்திரிகைகளில் லெட்டர் பிரசுரமானதையும் அரசு பதில் பகுதியில் கேள்விகள் எழுதினதையும் எத்தனை நாளைக்குத்தான் பெருமையாச் சொல்லப் போறீங்க?” என்று அவர்தான் என்னை உசுப்பேற்றிக் கதை எழுத வைத்தார்.

என் முதல் கதையே குமுதத்தில் பிரசுரமானது.

முதல் நாவல் குமுதம் மாலை மதியில் பிரசுரமாயிற்று.

ஆக.. அனைத்து முதல்களும் குமுதத்தில்தான்.

ஆரம்பத்தில் பாமா என்பது அவர் மனைவி பெயர்தான் என்று நினைத்திருந்தேன். அவர் பாட்டியின் பெயர் என்பதால் அவரின் வீட்டுப் பெயர் ஆனது. வீட்டுப் பெயர் ஆனதால் புனை பெயரும் ஆனது என்று பிற்பாடு தெரிந்தது.

அவருக்கும் எனக்கும் எண்ண அலைகளும் ரசனையும் எழுத்தார்வமும் ஒத்துப்போனதால் பெற்றோர் மற்றும் பெரியோரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டோம்.

பாமா கோபாலன் 1985 ஆம் ஆண்டு குமுதத்தில் இணைந்தார்.

அவர் குமுதம் ஆபீசுக்குப் போய் வேலை பார்த்தார்.

நான் அதே குமுதத்துக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்தேன்.

சுவாரஸ்ய அனுபவங்கள் ஒன்றா இரண்டா..

நான் துவங்கவிருக்கும் ‘என் குமுத நாட்கள்’ நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில்..

இதில் நான் என்னைப் பற்றி எழுதப் போவதில்லை.

ஏராளமான பிரபலங்களுடன் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லப் போகிறேன். சுவையாகத்தான் இருக்க முடியும்..

குமுதத்தில் வீச்சு லேசானதல்ல என்று நான் முதல் முறையாக உணர்ந்தது எப்போது தெரியுமா?

எனக்கும் திரு கோபாலனுக்கும் திருமணப் பத்திரிகை அடித்ததும்.. யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று லிஸ்ட் போட்டோம். அதில் குமுதம் ஆசிரியரின் பெயர் முதலில் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

பாமாஜி மட்டும் போய்க் குமுதம் ஆபீசில் பத்திரிகை கொடுத்திருக்கிறார். குமுதம் ஆசிரியரை யாரும் சந்திக்க முடியாது. அது ஓர் அரண். துணை ஆசிரியர்கள் திரு ஜ ரா சுந்தரேசன் அல்லது புனிதனையோ.. இணை ஆசிரியர் திரு ரா கி ரங்கராஜன் சாரையோ பார்க்கலாம். அதுவும் ரிஸப்ஷனில் இருந்து கொண்டு சொல்லி அனுப்பினால் அவர்கள் வருவார்கள்.

அது மாதிரிதான் கோபாலன் ஜி அவர்களையெல்லாம் சந்தித்துப் பத்திரிகை கொடுத்தார்.

“எடிட்டர்கிட்ட நானே கொடுத்துடறேன்.” என்று ரங்கராஜன் அவர்கள் பத்திரிகையை வாங்கிக்கொண்டாராம்.

இது மாதிரிக் கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளையும் (ஒரு சில எடிட்டர்களையும்) சந்தித்துப் பத்திரிகை கொடுத்தார்தான்.

ஆனால்..

மற்ற யாருக்கும் தோன்றாத ஐடியா ரா கி ர சாருக்கு ஏற்பட்டது.

“நீங்க முதல் முதல் எப்போ எப்பிடி சந்திச்சீங்க.. இது எப்படிக் காதலாய் உருவானது. எவ்வாறு கல்யாணம் நிச்சயமானது? எதிர்ப்பு இருந்ததா? என்பதையெல்லாம் ஒரு கட்டுரையா எழுதுங்க. கட்டுரைன்னா நேரடியா கட்டுரையா வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுப் பேட்டி காண்கிற மாதிரி இருக்கட்டும்.” என்று சொல்லியிருக்கிறார்.

பாமாஜி உற்சாகமாய் “என்னிக்கு?” என்று கேட்டிருக்கிறார்.

“இன்றைக்கே.. இப்பவே.. உள்ளே வாங்க.. நிருபர்கள் ரூமில் உட்கார்ந்து எழுதிக் குடுத்துடுவீங்களாம்..” என்று சொல்லிவிட்டார்.

என்னமாய் ஒரு உற்சாகம் ஏற்பட்டிருக்கும்? உடனே உள்ளே போய் உட்கார்ந்தார். நிருபர்கள் உபயோகிக்கும் தாள் இருந்தது. அதைக் கொடுத்து எழுதச் சொன்னார்கள். எத்தனை பக்கங்கள் அச்சில் வர வேண்டும் கச்சிதமாய்ச் சொல்லிவிட்டார்.

இவரும் மளமள என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.

ஒரு மணி நேரம் ஆயிற்றாம்.

“சந்தோஷம். வீட்டுக்குப் போயிட்டு.. நல்ல  போட்டோகிராபரை வைச்சு நீங்க ரெண்டு பேரும் சந்திச்சுப் பேசற மாதிரி போட்டோ எடுத்து மண்டே கொண்டு வந்து குடுத்துடுங்க..” என்று அவர் சொல்லும்போது வெள்ளிக்கிழமை ராத்திரி.

போட்டோ எடுப்பதில் என்னென்ன சிரமங்கள் ஏற்பட்டன..

பேட்டிக் கட்டுரை பிரசுரமாயிற்றா?

எனில் அதன் விளைவுகள் என்ன?

என்பது போன்ற சுவாரஸ்ய விவரங்களை நீங்கள் இந்தத் தொடரில் படிக்கப் போகிறீர்கள்.

உண்மையில் என் கணவர் பிரபல கட்டுமான நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் பிரிவில்தான் இருந்தார். நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.

எனில் எதனால் அந்த வேலையை விட்டார்?

எவ்வாறு குமுதத்தில் சேர்ந்தார்?

முதல் முதலாய் அவருக்கு என்ன மாதிரியான அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது?

அங்கு வேலை பார்த்த பதிமூன்று வருடங்களில் என்னென் வகையான அனுபவங்கள் ஏற்பட்டன…

த்ரில்லான..

திகிலான..

சுவாரஸ்யமான..

பயங்கரமான..

இனிமையான

ஏராள சம்பவங்கள் நேர்ந்தன.. நினைத்தாலே சிலிர்க்கிறது.

அந்த நாட்களைத் திரும்பிப் பார்க்க.. சுருங்கச் சொன்னால் மறுமுறை வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கும் குவிகத்துக்கு எப்படி நன்றி சொல்ல?

வானுலகில் இருக்கும் பாமா கோபாலன் இதற்குப் பரிபூரண ஆசிகள் அளிப்பதைச் சகுனங்கள் எனக்குச் சொல்கின்றன.

அவர் துணை இருப்பார்.

அவர் வழி நடத்துவார்.

ஏன்.. அவரே எழுதுவார் என்ற நம்பிக்கையுடன்…

இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.

முதல் முதல் குவிகம் பற்றி நான் அவரிடம் சொன்னபோது “என் காதுல குமுதம்னு விழுந்தது” என்றாரே பார்க்கணும்.

இருமலா என்று டாக்டர் கேட்டால் நிர்மலா என்று காதில் விழுகிறது என்று மு மேத்தா எழுதியமாதிரி என்ன சொன்னாலும் அவர் காதில் குமுதம் என்றுதான் விழும்.

இந்தக் காரணத்தினாலேயே அவருக்குக் குவிகத்தை ரொம்பவும் பிடிக்கும். அவரை அழைத்து ஸ்ரீனிவாசகாந்தி நிலையத்தில் உரையாற்றச் சொன்னதை ஒரு பெரும் கௌரவமாகவே கருதினார்..

எனில் தொடர் எழுதுவது எவ்வளவு பெரிய கௌரவம்..

மீண்டும் குவிகத்துக்கு நன்றி சொல்லி..

என் குமுத நாட்களுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேன்.