மூன்றாம் குலோத்துங்கன் தொடர்ச்சி

undefined

GANGAIKONDA CHOLAPURAM. There are so many places of ...

குலோத்துங்கனின் ஆட்சி தொடர்ந்தது. மதுரையின் இளவரசன் சுந்தரபாண்டியன், படைகளைப் பெருக்கி வந்தான். அடிமைப்பட்டுக் கிடந்த தனது மக்களை, வீறு கொண்டு எழுப்பித்தான். காலம் கனியக் காத்திருந்தான்.

கொஞ்சம் கதை சொல்வோம்:

மூன்றாம் குலோத்துங்கனின் மகன் இளவரசன் ராஜராஜன். மூன்றாம் ராஜராஜன். வாசகர்கள் அஞ்சத்தேவையில்லை. நான்காம் ராஜராஜனோ, அல்லது நான்காம் குலோத்துங்கனோ இனி சரித்திரத்தில் வரப்போவதில்லை! இது உங்களுக்கு நான் கொடுக்கும் வாக்குறுதி!

முன்னூறு ஆண்டுகளாக, வீரத்துக்கும், ஆட்சித்திறத்துக்கும் பெயர்போன சோழமன்னர்களின் பாரம்பரியத்தில், ஆளத்தகுதியற்ற ஒரு இளவரசனாக ராஜராஜன் இருந்தான். இளவரசனுக்கு, அறிவும், ஆற்றலும் வெகுவே குறைவாக இருந்தது. தந்தையின் நிழலிலேயே வாழ்ந்திருந்தான். தந்தையின் எந்த ஒரு வீரப்போரிலும் அவன் பங்கு பெற்றிருக்கவில்லை. அரசாட்சியிலும் பங்கு பெற்றிருக்கவில்லை. அந்தப்புரத்திலேயே காலத்தைக் கழித்திருந்தான். குலோத்துங்கன்‌, இப்போது வயதுமுதிர்ந்து, தளர்ச்சியுற்றிருந்தான். தனது ஆட்சிக்குப் பிறகு, தன் மகன், சோழநாட்டை எப்படிக் காப்பாற்றுவானோ என்ற ஐயம் அவனுக்கு இருந்தது.

வருடம் 1218: குலோத்துங்கன், கங்கைகொண்டசோழபுரத்து அரண்மணையில் நோய்வாய்ப்பட்டிருந்தான். அரண்மனை வைத்தியர், மன்னனுக்கு ஆறுதல் சொல்ல முயன்று தோற்றார். “மன்னா! உங்களது இந்த வியாதி முற்றிவிட்டது. இறைவன் அருள் ஒன்றே உங்களுக்குத் துணை” என்று மெல்லக் கைவிரித்துவிட்டார். குலோத்துங்கனுக்குத் தெரிந்துவிட்டது. ‘தனது நாட்கள் இனி குறைவு’ என்பது.

சயன அறையில் படுத்திருந்த குலோத்துங்கன், மகனை அழைத்தான். “மகனே! என் ஆயுள் முடியும் நாள் நெருங்கிவிட்டது. நீ அரசனாகி சோழநாட்டை ஆளும் நாளும் வந்துவிட்டது” என்று மெல்லச்சொன்னான். ராஜராஜன், திகைப்பூண்டை மிதித்ததுபோல் துடித்தான். சோழ அரசாட்சியென்னும் பாரம் அவனை நடுங்கவைத்தது. யுத்தங்கள் அவனை பயமுறுத்தின.

“அப்பா! நீங்கள் இல்லாமல் நான்  எப்படி அரசாள்வது? எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. ஆட்சியிலும், படைத்தலைமையிலும், அனுபவமோ ஆற்றலோ எனக்கு என்றுமே இருந்ததில்லை. நீங்கள்வேறு, போரில் வெற்றி பெற்ற பிறகும், பாண்டிய நாட்டில் துவம்சம் செய்து, மதுரையைக் கழுதையால் உழுது பாண்டியர்களை அவமதித்திருக்கிறீர்கள். பாண்டியர்கள், மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில், பெரும்படை சேர்த்து, நம்மைப் பழிவாங்க வெறி பிடித்து அலைகின்றார்கள்” என்றான் ராஜராஜன். அவன் குரலில் அச்சம் வழிந்தது.

குலோத்துங்கன், தான் அன்று பாண்டியநாட்டில் செய்த அவமதிப்பை எண்ணி இப்போது வருந்தினான். மகனை, இப்படிப்பட்ட வெறிகொண்ட எதிரிகளின் அருகே விட்டுவிட்டுச் செல்கிறோமே என்று வருந்தினான்.

அதைத்தவிர இன்னொரு விஷயமும் குலோத்துங்கனை பெரிதும் வருத்தியது. தங்கள் முன்னோர்கள் காலத்தில், சோழச்சிற்றரசர்கள் பழுவேட்டரையர்கள், காடவராயர்கள் போன்ற அனைவரும் சோழப்படைக்கு உறுதுணையாக இருந்து, வெளிநாட்டுப் படையெடுப்பில் பங்கெடுத்துச் சோழநாட்டைக் காத்தனர். பழுவேட்டரையர்கள் சோழமன்னனுக்குத் தீங்கு வராமல் தடுக்கத் தங்கள் உயிரையும் தர உறுதி எடுத்தவர்கள். அது அந்தக்காலம். இன்றோ, மெல்ல மெல்ல, அவர்கள் தங்கள் சிற்றரசுகளை சுதந்திரமாக ஆளத்தொடங்கிவிட்டனர். கப்பம் கொடுப்பதை அடியோடு நிறுத்திவிட்டனர். இன்று அவர்கள், சோழனுக்கு எதிராகவே உள்ளனர். சந்தர்ப்பம் கிடைத்தால், நமது எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளவும் தயங்காதவர்களாக உள்ளனர். இது சோழநாட்டுக்குப் பெரும் அபாயமாக இருந்தது. இதுவரை எதிரிகள், வெளிநாட்டில் மட்டும் தான் இருந்தனர். ஆனால், இன்று, நம்நாட்டிலும், அதுவும் அருகிலேயே எதிரிகள் இருக்கிறார்கள்’, என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது, ராஜராஜன் அதையே கூறினான்: “தந்தையே! சோழச்சிற்றரசர்கள் நமக்குக் கப்பம் செலுத்துவதை நிறுத்தியது மட்டுமல்லாமல், நமக்கு எதிராகப் போர்க்கொடியும் உயர்த்துகிறார்கள். மேலும் இதனால் நமது கருவூலமும் காய்ந்து இருக்கிறது” என்றான்.

பெருமூச்செறிந்த மன்னன் சொன்னான். “மகனே! நீ சொல்வதில் உண்மை இருப்பதை நான் மறுக்கவில்லை.. இருந்தாலும், உன் தங்கையை, சிற்றரசனும், மாவீரனுமான காடவராயனுக்கு மணமுடித்திருக்கிறோம். மற்றும், போசள மன்னன் வீரநரசிம்மனின் மகளை நீ திருமணம் செய்து கொண்டிருக்கிறாய். அப்படியிருக்க, இந்த இருவரும் உனக்குப் பலமாக இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்” என்றான்.

சரித்திரத்தின் பாடங்களை ஊன்றிப்படித்திருந்தால், இத்தகைய அரசியல் மணவுறவுகள், கூட்டணிகள் அனைத்தும் ஒரு தலைமுறை கூட நீடிப்பதில்லை என்ற உண்மை குலோத்துங்கனுக்குப் புலப்பட்டிருக்கும். அதை மட்டும் நம்பி போரில் இறங்குவது என்பது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்.

அதேநேரம், அரண்மனைக்காவலன் உள்ளே வந்து, “சக்கரவர்த்தி, என்னை மன்னிக்கவேண்டும். தலைமை அமைச்சர் அவசரமாக தங்களைக் காண வந்துள்ளார்” என்றான். குலோத்துங்கன் “வரச்சொல்” என்றான்.

மந்திரி சொன்ன சொற்கள் மன்னரைத் திகைக்கவைத்தது. ராஜராஜன் மயங்கியே விழுந்தான். செய்தி இதுதான்: “சுந்தரபாண்டியன் தலைமையில், பாண்டியப்படைகள் தஞ்சைக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு படை கங்கைகொண்டசோழபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது” என்றான்.

மன்னன் சொன்னான்: “அமைச்சரே! நானோ எழுந்திருக்கமுடியாமல் கிடக்கிறேன். இளவரசனோ, போருக்குப் பயந்து மயங்கிக்கிடக்கிறான். சோழநாட்டின் இன்றைய நிலைமையைப் பார்த்தாயா! எத்தனையோ போர்க்களங்களைக் கண்டிருக்கிறேன். இன்று என் கண்ணில் கண்ணீர் வருவது, வரும் எதிரிக்குப் பயந்தல்ல, வீரமற்ற இந்நாளய சோழநாட்டை எண்ணி” என்றான்.

மந்திரியார் சொன்னார்: “மன்னவா! நமது படைகளைத் தளபதியின் தலைமையில் தஞ்சையையும், தலைநகரையும் காக்க அனுப்புகிறேன். முதலில், தங்களையும், இளவரசரையும், மற்றும் அந்தப்புர அரசிகளையும், தேர்கள் மூலம் பழையாறைக்குப் பாதுகாப்பிற்காக அனுப்புகிறேன். தஞ்சையும், கங்கைகொண்டசோழபுரமும் இன்று பாதுகாப்பான நிலையில் இல்லை” என்றான்.

குலோத்துங்கன் சொன்னான்: ”எனக்கு மட்டும் தேகத்தில் வலிவிருந்தால், போர்க்களத்தில் உயிர் விடுவேன். அமைச்சரே, பாண்டியனுக்குப் பயந்து சோழன் ஓடும் நிலையை அந்த தில்லையாண்டவன் ஏன் எனக்குக் கொடுத்தான்” என்று மனம் நொந்து பேசினான். சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, “அமைச்சரே.. நீ சொல்வது போலவே ஆகட்டும். இன்னொரு முக்கியமான சமாச்சாரம். போசள மன்னன் வீரநரசிம்மனுக்கு உதவி கேட்டு ஒரு ஓலையை அனுப்புவாயாக. இனி சோழநாடு காக்கப்படவேண்டுமானால் அவன் உதவி அவசியம்” என்றான்.
“அவ்வண்ணமே செய்கிறேன்” என்று மந்திரியார் கூறினார். மன்னனின் இந்த ராஜதந்திரம், சில மாதங்களில் சோழநாட்டை  முழு அழிவிலிருந்துத் தற்காலிகமாகக் காத்தது.

தேர்கள் நகர்ந்தன. குலோத்துங்கன், ஜகஜோதியாகத் திகழ்ந்த கங்கைகொண்டசோழபுரத்தைப் பார்த்துக்கொண்டபடியே சென்றான். அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, கங்கை கொண்ட சோழபுரம் அழியும் நாள் விரைவில் வந்துவிட்டது என்பது. நகர் எல்லை இன்னும் தாண்டப்படவில்லை. உளவுப்படை வீரன் குதிரையில் வெகு வேகமாக மன்னரின் தேர் அருகில் பறந்து வந்தான். மன்னனின் தேர் நின்றது. வீரன், மன்னனைப் பார்த்துத் தயங்கிக்கொண்டே சொன்னான்.

“சக்கரவர்த்தி! பாண்டியனின் படைகள் தஞ்சை அரண்மனைக்குள் நுழைந்து விட்டது. அங்கே, சுந்தரபாண்டியன் வீராபிஷேகம் செய்யப்போகிறான். மேலும், பாண்டியப்படைகள், கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனைக்குள்ளும் நுழைந்து விட்டது. கங்கைகொண்டசோழபுரத்து நெல்வயலில் உப்பு இரைத்து, கழுதையால் ஏர் பூட்டி “ என்று திக்கித்திக்கிச் சொன்னான். சொல்லும் போதே அவன் அழுதுவிட்டான். குலோத்துங்கன் விக்கித்துப் போய் நின்றான். நடந்ததையும், நடக்க இருப்பதையும் ஊகித்துக்கொண்டான்.

‘நான் மதுரையில் அன்று செய்ததை சுந்தரபாண்டியன் இன்று செய்கிறான். முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளைகிறது. விஜயாலயசோழன் தொடங்கி வைத்த வீரச்சோழநாட்டுக்கு என்காலத்தில் இப்படி ஒரு கதியா?’ என்று புலம்பினான். செய்தியைக் கேட்டதுமே அவனது உயிரில் பாதி போய்விட்டது. திரும்பிப்பார்த்தான். விளக்கின் ஒளியால், என்றுமே பொன்போல மின்னும் கங்கைகொண்டசோழபுரம், அன்று, எதிரியின் படையெடுப்பால், ஒளியிழந்து, மயானம் போலக் காட்சியளித்தது. முன்னொருநாள், ராஜேந்திரசோழன் கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து உருவாக்கிய அந்தத் திருநகரைப் பார்த்தபடியே குலோத்துங்கன் கண்மூடினான். அவன் கண்கள் மீண்டும் திறக்கவில்லை. உயிர் பிரிந்தது.

துரதிருஷ்டங்கள்‌ சோழநாட்டைச் சூழ்ந்துகொண்டவேளையில் தமிழகத்தில் புதிய ராஜ்யமொன்று ஒளிவீசத்தொடங்கியது.

சரித்திரம் என்ன சொல்கிறதென்று நாம் பார்ப்போம்.. விரைவில்..