The Geeta 1 by Chandresh Patelவாழ்க்கை ஒரு வரம். இந்த வரத்தை அசுரர்களைப்போல் வீணாக்கவும் செய்யலாம் அல்லது நல்ல உள்ளங்களைப்போல் இந்த வரத்தைப் பெரும் பாக்கியமாகவும் கருதலாம்.

கீதை, வாழ்க்கையை வரமாக மாற்றும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறது. தவத்தின் பயனாக வருவது வரம். அதனாலேயே அதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சரி. தவம் என்றால் என்ன? துருவனைப் போல் ஒற்றைக்காலில் நின்று நாராயணனை ஒருமுகமாய் தியானித்து வழிபடுவதா அல்லது முனிவர்கள் செய்ததுபோல் தியானத்தில் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் இறைவனை நினைந்து வழிபட்டார்களே அதைப் போலவா? தவம் என்பது மனத்தையும் இந்திரியங்களையும் தன் வயத்தில் வைத்திருப்பதுவே. மனம் என்ற எண்ணங்களின் கூட்டமைப்பாக இருக்கும் இந்த நுட்பமான உணர்தல் கருவி, உலகில் அனைத்து மனிதர்களையும் ஆட்டுவிக்கும் சக்தி படைத்தது. இந்த மனத்தைப் புரிந்து கொள்ளவும் அதைச் சமாளிக்கக்கூடிய  திறனையும் கொடுக்கக்கூடியது கீதை. வயதாகி அனுபவங்கள் பல பெற்ற பிறகே கீதையை அணுகவேண்டும் என்ற சிந்தனை நிறைய பேருக்கு இருக்கிறது. இளமையில் கீதையைக் கற்கும் பேறு பெற்றவர் வாழ்க்கையை சமன் செய்து சீர் தூக்கி நிறுத்தும் பணியைத் திறம்படச் செய்வர். வாழ்க்கையை நல்லபடி வாழக் கற்றுக்கொடுக்கும் ஆசான் கீதை.

உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் அதனதன் தத்துவார்த்தங்களுக்கு ஏற்ப சாத்திரங்கள் உண்டு. கிறித்தவ மதத்திற்கு பைபிளும், இஸ்லாமிய மதத்திற்கு குர்-ஆனும் சாத்திரமாகும். புத்த மதத்திற்கு தம்ம பதமும், ஜைனர்களுக்கு ஆகம சூத்திரங்களும் சாத்திரம். இதே போல், இந்துக்களுக்கு, சாத்திரம் என்று அறியப்படுவது பிரஸ்தானத் த்ரயம் என்பர். இதில் அடங்கியவை பிரும்ம சூத்திரம், உபநிடதங்கள், மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை என்பர். இந்த பகவத் கீதையானது மகாபாரதம் என்ற இதிகாசத்தில் அடங்கியுள்ளது. பீஷ்ம பர்வத்தில், 25வது அத்தியாயத்திலிருந்து 4 2 வது அத்தியாயம் வரை ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடலே பகவத் கீதையானது. அர்ஜுனனின் கேள்விகளுக்கும் மனக்கிலேசத்திற்கும் பதிலளிக்கும் விதமாய், கிருஷ்ணர் நம் எல்லாருக்குமே வாழ்க்கைப் பாடத்தினை நடத்திச் செல்கிறார்.

மகாபாரதப் போரில் கிருஷ்ண பரமாத்மா தன் சேனை பலத்தை துரியோதனனுக்கு வழங்குகிறார். பாண்டவர்களுக்குத் தானே துணையாக நிற்கிறார். படையெடுத்துப் போர் புரிய மாட்டேன் என்றுரைத்த ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்கு, தேரோட்டும் சாரதியாக இருக்க இசைகிறார். கடவுள் துணையிருந்தால், பிரதிகூலமாக இருக்கும் மற்றவைகள் எல்லாம் நமக்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்க முடியாது என்பதையும், கடவுளின் துணையின்றி மற்றவை அனுகூலமாய் இருந்தாலும், அவை உண்மையிலேயே நமக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது என்பதையும் கீதை உணர்த்துகிறது.

வாழ்வில் உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம். ஆனால் உடல் ஆரோக்கியத்துடன் உள்ள ஆரோக்கியமும் முக்கியமானது. இந்த உள்ள ஆரோக்கியத்திற்கு வழி காட்டுவது கீதை. கிருஷ்ண பரமாத்மாவால் அர்ஜுனனுக்கு சொல்லப்பட்டது கீதை. அதுவும் போர்க்களத்தில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னே இருவருக்கும் இடையே நடந்த சம்பாஷனை தான் கீதை. மகாபாரதக் கதை நடந்த காலத்தில், அர்ஜுனன் மிகப் பெரிய வீரனாகப் புகழ் பெற்றிருந்தான். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே இருந்த பகையினாலும் பாஞ்சாலிக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கும் விதமாக, பழி வாங்குவதற்காக ஏற்பட்ட யுத்தமே  மகாபாரதப் போர். போர்க்களத்தில் போர் துவங்கப் போகிறது என்ற நிலையில், அர்ஜுனன், துணிச்சலுடன், போரை வென்று தன் வீரத்தை நிலைநாட்டி பாஞ்சாலியின் துயர் துடைக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் மட்டுமே, போர்க்களத்தில் நுழைந்திருந்தான்.

போர் துவங்குவதற்கு முன்னால், பார் புகழும் வீரனான அர்ஜுனன் தனது எதிரிகளின் படை பலத்தைப் பற்றி அறிய விழைந்து தனது சாரதியான ஸ்ரீகிருஷ்ணரை  இரு படைகளுக்கும் இடையே ரதத்தை ஓட்டச் சொன்னான். எல்லாம் உணர்ந்த பகவானான கிருஷ்ணரோ இரு படைகளுக்கும் இடையே பீஷ்ம துரோணாதிகளுக்கு முன்னால் ரதத்தை நிறுத்தினார்.

தன் கண்களுக்கு முன்னே தன்பாட்டனையும் ஆசிரியனையும் ஏனைய உறவினர்கள் மற்றும் நண்பர்களையும்  பார்த்துத் தடுமாறுகிறான் விஜயன். தன் ஆசான். தன் தாத்தா மற்றும் ஏனைய மாமன் மச்சான்களும் தன் சிற்றப்பா பெரியப்பா மகன்களும், அத்தை மாமன் மகன்களும் இருப்பதைப் பார்த்தான் பாண்டு புத்திரனான தனஞ்சயன். உடல் மூலம் வரும் பந்தங்கள் அர்ஜுனனைக் கடமை மறக்கச் செய்தது. உறவினர்களுடன் போர் புரிவது தவறான செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. க்ஷத்திரியர்களுக்கான தர்மத்தின்படி போர் புரிந்து தர்மத்தை நிலை நாட்டி தன் கடமையைச்  செய்ய வேண்டும் என்பதை மறந்தான்; தன் வீர பராக்கிரமத்தை மறந்தான்; தன் மனைவிக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்தான். புத்தி சிந்திக்க மறுத்தது; மனம் உறவினால் ஏற்படும் பற்றினாலும் பாசத்தாலும் ஆட்கொள்ளப்பட்டு வேதனையில் தவித்தது. இந்த நிலை சாதாரண மனிதன் யாருக்கும் ஏற்படக்கூடியது. உறவினர்களுடன் பரிமாறப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் துன்பத்தை ஏற்படுத்தினாலோ, தன்னைச் சேர்ந்தவர்களின் பிரிவு துக்கத்தை ஏற்படுத்தினாலோ உள்ளம் வேதனையில் வாடும். மனத்தில் துக்கம் வந்துவிட்டால், புத்தி வேலை செய்யாது. இதனால் புத்தி சொல்லும் எதையும் மனம் கேட்காது. இது தான் அர்ஜுனனின் நிலை.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காலகட்டத்தில் மீள முடியாத நெருக்கடி வரும். இந்த நெருக்கடியிலிருந்து எப்படி விடுபடுவது என்று புரியாமல் போவதற்கான காரணங்கள், வாழ்வில் பொதிந்துள்ள உண்மைகளை அறியாமலும் உணராமலும் இருப்பதே ஆகும். புறப்போர் நடக்கும் யுத்தகளம் குருக்ஷேத்திரமாக அறியப்பட்டாலும், ஒவ்வொரு மானிடனுக்கும் அவனது சரீரமே குருக்ஷேத்திரமாகவும், தர்மக்ஷேத்திரமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நல்ல இயல்புகளையும் கெட்ட இயல்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாலேயே பகவத் கீதை வாழ்க்கைப்படத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக நிற்கிறது.

உபநிடங்களில் ஒரு கதை உண்டு. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருந்தனவாம். பறவைகளில் ஒன்று தன் இந்திரியங்களை அடக்கி தன்னுள்ளே நிலை பெற்றதாய் இருந்ததாம். மற்றொன்றோ இனிய கனிகள் மற்றும் இனிப்பற்ற கனிகளை உண்டு இன்பதுன்பங்களுக்கு ஆளாகி நின்றதாம். இரண்டாவது பறவை துன்பப் படும்போதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைத்துப் பார்த்து அதன் அருகே வர முயன்றதாம். அருகே வரவர அதன் துன்பம் குறைந்ததாம். கடைசியில், மேலான நிலையிலிருந்த பறவையுடன் ஒன்றி ஆனந்தமயமாக நின்றதாம். ஒவ்வொரு மனிதனும் தன் நிலை அறியாத ஜீவாத்மாவாக நிற்கிறான். நிறைநிலையில் நிற்கும் பரம்பொருளுடன் ஐக்கியமாகும்போது பரமானந்த நிலையை உணர்கிறான். இந்த ஐக்கியத்திற்கும் பரம்பொருளின் மகத்துவத்தை உணர்வதற்கும் ஒரு நெருக்கடியான நிலை அவசியமாகிறது. நெருக்கடியின்போது மட்டுமே நாம் நம் பலத்தையும் பலவீனங்களையும் அறிய முடியும். அர்ஜுனனுக்கு குக்ஷேத்திர யுத்தம் என்ற நெருக்கடி வந்தவுடன், இதுவரை யுத்தம் என்றால் மனம் கலங்காது, அச்சத்தை உணராத அர்ஜுனனுக்கும் மனக்குழப்பம் நேரிடுகிறது.

இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? ஒவ்வொரு மனிதனும் பாசப் பிணைப்பு என்ற பந்தத்தில் மாட்டுகிறான். இந்தப்பிணைப்போடு வருவது சோகம்; மனதில் சோகம் வந்தால் தானே மோஹம்  என்ற மாயையில் மாட்டி புத்தி செயலிழக்கும். இது தான் அர்ஜுனனுக்கு ஏற்பட்டது.26 லிருந்து 28 வரை உள்ள பாடல்கள் அவனது பாசப்பிணைப்பைக் காட்டும். 29லிருந்து 35வரை வரும் பாடல்கள் அர்ஜுனனின் சோகத்தையும், 36 லிருந்து 47 வரை உள்ள பாடல்கள் அவனது மோகத்தையும் காட்டுகின்றன. மோகம் வரும்போது தான் இந்தப் போரை என் ஏற்க வேண்டும் என்ற கேள்விகளும் எழும். அர்ஜுனனும் இந்தக் கௌரவர்களுடன் போரிடுவதனால் என்ன கிடைக்கப் போகிறது? பாபம் தான் கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொள்கிறான். இதுவே சம்சாரம். அதாவது சம்சாரம் என்றால் பாசப்பிணைப்பு + சோகம் + மோகம் என்பர். தன்னைச் சேர்ந்தவர்களை அழிப்பது பாபம் என்றும் போரிலிருந்து விலகுவதே புண்ணியம் என்றும் நினைக்கிறான். மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்ட புத்தியும் இந்தச் செயல்களை நியாயப்படுத்துகிறது.  இதனுடன், ஆண் மக்கள் மடியும்போது பெண்டிரும் பெண் குழந்தைகளும் வழி தவறிச் செல்வராம். வர்ணாஷ்ரம வழிமுறைகள் மறக்கப்பட்டு குல தர்மங்கள் அழியும். மானுடர் ஆன்மீக நெறிகளை மறந்து குடும்ப ஒற்றுமையும் அன்பும் மறைந்து போய் நம்பிக்கையும் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையும் மறையும் என்று பல விதமான பின் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறான்.

இப்படியொரு நெருக்கடி நிலையில் பார்த்தன் யுத்தத்திலிருந்து பின்வாங்குவது என்ற ஒரு முடிவை ஏற்க நினைக்கிறான். ஆனால் உள்மனமோ சஞ்சலத்தில் ஆழ்ந்திருக்கிறது. தர்மத்திற்காக நடத்தப் பட்ட இந்த யுத்தம் ராஜ்ய சுகத்திற்காக இல்லை என்பது அவனுக்கும் தெரியும். தான் எடுத்திருக்கும் முடிவு சரியா இல்லையா என்ற சந்தேகமும் மறையவில்லை. இந்த நிலையில் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் உன் சிஷ்யனாக நிற்கிறேன் எனக்கு நல்வழி காட்டு என்று பகவானை குருவாகப் பாவித்து திருவடிகளில் வீழ்ந்து அடைக்கலம் புகுகிறான்.

கீதையின் முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம் என்ற பெயருடன் அர்ஜுனனின் சோகத்தை விவரிப்பதுடன், சம்சாரம் என்பதன் உண்மையான பொருளையும் தருகிறது.