தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்தது |  தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக ...
இந்த மாதமும் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் மனதில் நிற்கும் ஒரு நாடகம். எங்கள் வங்கி மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் பெங்காலி மொழியில் கொல்கத்தா மண்டலக் குழு போட்டு பரிசு வாங்கிய நாடகம்.

இதில் முக்கியமான விஷயம், தமிழும் பெங்காலியும் சம்பந்தமே இல்லாத மொழிகள். ஒரு வார்த்தை கூட புரியாது. ஆனால் அந்த நடிப்பால் உணர்த்தி விடுவார்கள். புரிய வைத்து விடுவார்கள்.

10 பேரும் நடிக்கும் போது ஒரு 70 எம் எம்  படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இதுவரை பார்த்தே இராத ஒரு செட் / கதைக்களம்.

ஒரு ஜெயிலில் தூக்குப் போடும் இடம். தூக்கு மேடை. தூக்குக் கயிறு தொங்குகிறது. கீழே ஸ்டூல்..

9 / 10 பேர் இருக்கிறார்கள். தூக்கு தண்டனைக் கைதி. தண்டனை பார்வையிடப் போகும் பெரிய அதிகாரி. ஒரு டாக்டர். ஒரு புரோகித் (சடங்குகள் செய்ய), ஒரு வக்கீல், பல சிறையில் பணியாற்றும் காவல்காரர்கள். கயிறு மற்ற ஏற்பாடுகள் சரிபார்க்கப் படுகின்றன.

தூக்கு தண்டனைக் கைதி ஸ்டூலின் மேல் ஏறி நிற்கிறார். கயிறு கழுத்தில் மாட்டப் படுகிறது. கடிகாரத்தில் நேரம் பார்த்து ஓகே  என்று அதிகாரி கை அசைக்கிறார். ஸ்டூல் தட்டி விடப் படுகிறது. என்ன தவறோ தெரியவில்லை கயிறு அறுந்ததோ அல்லது முடிச்சு சரியாகப் போடவில்லேயோ தெரியவில்லை அவன் கீழே விழுந்து விடுகிறான்.

மீண்டும் ஏற்பாடு செய்ய முற்படுகிறார்கள். டாக்டர் பலவிதமாக சோதித்துப் பார்த்து பின் சொல்கிறார் “இவனுக்கு இப்போது நினைவு இல்லை. மயக்கமா, கோமாவா என்று தெரியவில்லை. மேலும் கருவிகள் கொண்டு சோதிக்க வேண்டும். உயிர் இருக்கிறது. மீட்டும் தூக்கில் போடலாம் ஆனால் சட்டப்படி, நல்ல நினைவில், ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் தூக்கில் போட முடியும். நினைவு வந்ததும் போடலாம்”.

அதிகாரிக்கு பயமும், கவலையும் தொற்றிக் கொள்கிறது. “எப்படியாவது நினைவு திரும்ப ஏதாவது செய்ய வேண்டும். பழி என்மீது வரும். என்ன செய்யலாம்? ” என்று கேட்கிறார்.

டாக்டர் “இவன் இவனுடைய மனைவியைக் கொன்றதற்காக இவனுக்கு மரண தண்டனை கொடுக்கப் பட்டு உள்ளது. அந்த சம்பவத்தை நினைவு படுத்தும்படி நாம் ஏதாவது செய்தால் நினைவு வரக்கூடும். என்ன நிகழ்ந்தது. “

அதிகாரி ” இவன் மிகவும் ஏழை. ஆனால் தன்மானமுள்ளவன். நாலு குழந்தைகள். அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து, கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டு வந்தது குடும்பம். சில நாட்கள் வேலை கிடைக்கவில்லை. சாப்பாடு இல்லை. இவன் ஏதாவது வேலை தேடி எப்படியாவது இன்று பணம் கொண்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே போய்விட்டான். குழந்தைகள் பசியில் வாடின. இவன் மனைவி குழந்தைகளோடு வெளியில் சென்று, பிச்சை எடுத்து பணம் பெற்று, சாமான்கள் வாங்கி சமைக்கத்துக் கொண்டு இருக்கும்போது இவன் வந்து எப்படி இது என்று கேட்க. மனைவி குழந்தைகள் பிச்சை எடுத்ததைச் சொன்னதும் கடும் கோவத்தில் நீ எப்படி குழந்தைகளை பிச்சை எடுக்க விடலாம் என்று சண்டை போட, அவளும் பதிலுக்கு குழந்தைகள் பசி தாங்கள் முடியாமல் அழுததைச் சொல்ல. பெரிய வாக்குவாதம். கைகலப்பும் ஏற்பட்டு மனைவியை அருகாமையின் மேல் தள்ளி கொன்று விட்டான். ஆனால் இவன் எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டான். ஆனால் நான் அவளை அதன்மேல் தள்ளி விட வில்லை அவள் தவறி அதன்மேல் விழுந்து விட்டாள், அன்று சண்டை போட்டேனே தவிர, அவள் என் உயிர் என்று எவ்வளவோ மறுத்தான். ஆனால் குழந்தைகள் சண்டை பற்றி சொன்ன சாட்சி போன்றவை எதிராக இருந்து விட்டது. இந்த தண்டனை கொடுக்கப் பட்டது” என்று சொல்லி முடிப்பார்.

பின்னர் அந்த நிகழ்வை அங்கே மீண்டும் நிகழ்த்திக்காட்ட டாக்டர் யோசனைப்படி தீர்மானமாகிறது.

அந்த அதிகாரி அந்த குற்றவாளியின் பாத்திரம், புரோகித் மனைவி, போலீஸ்காரர்கள் குழந்தைகள் என்று தீர்மானித்து நடிப்பார்கள்.

அதற்குப்பின் அவர்களின் நடிப்பு….. அப்பா… என்ன அபாரம்.. மனைவியாய் புரோகித் அபாரமாக நடிப்பார், அந்த குற்றவாளியாக அதிகாரி எல்லாவற்றையும்விட குழந்தைகளாக அந்த 4 / 5 போலீஸ்காரர்கள்… சொல்லி விளங்க வைக்க முடியவில்லை. ஒரு குழந்தை வாயில் விரலை வைத்துக் கொண்டு அழும், மற்றொன்று தவழ்ந்து போய் வேறு ஒரு குழந்தையின் கையில் உள்ளதை பிடுங்கும், பின் சண்டை, இன்னொரு சின்னக் குழந்தை மல்லாக்கப் படுத்துக் கொண்டு கிலுகிலுப்பை ஆட்டும்…. எல்லாம் பெரிய பெரிய போலீஸ்காரர்கள். குண்டாய் 40 வயதான ஒருவன் தவழ்ந்து போவது போல யோசித்துப் பாருங்கள். கலக்கிட்டாங்க. இதுதான் நாடகத்தின் / நடிப்பின் highlight.

அதிகாரியின் கையை புரோகித் பிடிப்பார் (கைதி கையை மனைவி) அவர் தள்ளி விட்டு விலகிப் போவார். தள்ளி விடப்பட்ட புரோகித் கீழே விழுந்து விடுவார். வெகு நேரம் எழவே இல்லை. எழுப்ப முயற்சிப்பார்கள் முடியாது. டாக்டர் வந்து பார்த்து விட்டு. “அவர் இறந்து விட்டார்” என்று சொல்லி திகைப்புடன் எல்லோரையும் பார்ப்பார். “நீங்க இவரை கொன்று விட்டீர்கள். நீங்கள் தள்ளியதில் கீழே விழுந்து இறந்து விட்டார்” என்பார்.

அதிகாரி கலங்கிப் போய் விடுவார். “நான் ஒன்றும் செய்யவில்லை, அவரே கீழே விழுந்ததில் இறந்து விட்டார். நான் கொலை செய்யவில்லை, நான் கொலை செய்யவில்லை. “

“இதைத்தானே இவனும் சொன்னான் அவனுக்கு மரண தண்டனைதானே கிடைத்தது ” என்பார் டாக்டர்.

அதுவரை எல்லாராலும் மதிக்கப் பட்ட அதிகாரியை, போலீஸ்காரர்கள் கூட சாதாரணமாகப் பார்ப்பார்கள். இதுவரை அதிகாரம் செய்து வந்த அவர் போலீஸ்காரர்கள் ஒவ்வொருவரிடமும் “நான் கொல்ல வில்லை, நான் கொல்ல வில்லை. நீங்களும் பார்த்தீர்களே” என்று கேட்பார். அவர்கள் இவரிடமிருந்து விலகி நகர்வார்கள்.

திடீர் என்று அந்த புரோகிதர் தூக்கத்திலிருந்து எழுந்தது போல எழுந்திருப்பார். டாக்டர் ஆச்சரியமாகப் பார்ப்பார். அதிகாரி நிம்மதிப் பெருமூச்சு விடுவார்.

நடந்ததை மேல் அதிகாரிகளிடம் சொல்லி, என்ன செய்வது என்று கேட்கப் போவார்கள்.

அந்த கைதி படுத்திருப்பான். காவல் இருந்த ஒரே போலீசும், இயற்கை உபாதைக்காக போகும்போது. அந்த கைதி எழுந்து பேசுவான். “என் மனைவி எனக்கு உயிரானவள். குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த கோபத்தில் பேசினேன்.. என் கையைப் பிடித்த போது தட்டி விட்டேன். அவள் அரிவாமனையின் மீது விழுந்து இறந்து விட்டாள். அவள் மிக மிக நல்லவள். அவளைப் பிரிந்து வாழ விரும்பவில்லை. அன்றே நானும் இறந்திருப்பேன். என் மனைவியைக் கொன்ற குற்றவாளியாக சாக விரும்ப வில்லை. ஆனால் என்ன செய்ய விதி இப்படி ஆகி விட்டது.” என்று சொல்லி அவனே தூக்குப் போட்டுக் கொண்டு விடுவான்

நிறைய கேள்விகள், சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அற்புதமான நடிப்பால் எல்லாம் அடி பட்டுப் போயின.