என் சி சி . அலப்பறைகள் 3

AIR WING | NCC | How to join Air Wing NCC | RAHUL MEHTA

கிரவுண்டில் நுழைந்தோம். நல்ல வேளை . எல்லோரும் அப்போதுதான் அணிவகுத்துக்கொண்டிருந்தனர். நேரமாகிவிடவில்லை. அப்படியே ஓடிப் போய் வரிசையில் கலந்துவிட்டோம்.

ஸ்டூடண்ட் சார்ஜென்ட் உரத்த குரலில் அறிவித்தான், “ ஆல் கேடட்ஸ் ஒங்க உயரத்துக்கு ஏற்றபடி வரிசையில் நில்லுங்க .. உயரமானவர்கள் வலது பக்கம் குட்டையானவர்கள் இடது பக்கம் ..” “லம்பா தஹினே சோட்டா பாயே லைன் பனாவோ ஆகே”

இதுதான் தொடக்கம்.

பிறகு “பாயே மோட்” “தைனே மோட்” பீச்சே மோட்” “ஆகே  மோட்”  என்று பலமுறைகள் சுற்றி வந்தோம். வந்ததிலிருந்து ஒரு மணி நேரம் ஓட்டம்தான் . ஐந்து நிமிடம் “வாட்டர் டைம் “ ரொம்ப நல்ல பேரு . ஏன்னு  அப்புறம்தான் புரிந்தது. அந்த டைம் “ வாட்டர் குடிக்க, போக எல்லாத்துக்கும்தான்..

இரண்டு மணி நேரம் பரேட் . செம வலி  உடம்பெல்லாம். இது போல காலையிலே எழுந்து ஓடினதே கிடையாது. “பரேட் வாங்கிட்டான் “ என்ற சொல்லைக் கேட்கும்  போது ,அந்த பழைய ஞாபகம் இப்பவும் வரும்.

இதன் பிறகுதான் மிக முக்கியமான நிகழ்வு. எங்களை என். சி. சி. யில் சேர ஊக்கம் கொடுத்த அடிப்படை விஷயம். “ஹோட்டல் பொட்டலம்”

“இன்றைய பரேட் ஓவர் . ஆல் டிஸ்பர்ஸ் “ என்று கமாண்ட் வந்ததும் எல்லோரும் கியூ வரிசையில் சென்று நின்றோம். ஒவ்வொருவராக நகர்ந்து எங்கள் டிபன் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு கிரவுண்டின் மரத்தடி ஒன்றில் அமர்ந்துகொண்டு பாக்கெட்டைப் பிரித்தோம். கம கம வென்ற வெங்காய சாம்பார் மணம், தேங்காய் சட்னி . உள்ளே இரண்டு இட்லி , ஒரு வடை. ஒரு செட் பூரி மசாலா. ( என்ன சார்! இவ்வளவு கரெக்டா சொல்லறீங்க ! என்று சந்தேகப்படாதீர்கள். என் வாழ்வில் அதுதான் முதன் முறை வீட்டில் வாங்கித் தராமல் வெளியே காசு கொடுக்காமல் சாப்பிட்ட முதல் டிபன் ! மறப்பேனா  ) வேண்டுமென்றால் இரண்டாம் முறை சாம்பார் கேட்டு வாங்கலாம் என்றார்கள். முதல் நாளே  நாங்கள் அத்தகைய தீவிர  சுவைஞர்களாக மாற விரும்பவில்லை.

“ஏண்டா எல்லா பரேடுக்கும் இதுதான் கொடுப்பங்களா ?’ என்றான் கணேஷ்.

“ஏன் கொடுத்தாத்தான் என்ன ? நல்லா இல்லியா ? “ என பதில் கேள்வி கேட்டான் ஏகாம்பரம்.

“ டேய் ! சீனியர் சொன்னாங்க.. சில நாள் தோசை இல்லை ஊத்தப்பம் உண்டாம்” வடையை ருசித்துக் கொண்டே சொன்னான் வாசு.

“ சாப்பிட்டாச்சா .. வாங்கடா எல்லாம்.. அதோ அந்தப் பக்கம் “டீ” தராங்க.  வாங்க” என்றான் காரியத்தில் கண்ணான சத்யா .

என். சி. சி என்பது எத்தகைய உயர்ந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப் பட்டதென்று பின்னாளில் அறிந்த போது , நாங்கள் ஐந்தாறு பேர்கள் அன்று  “டிபன்” கிடைக்கும் “ ஷூ’ கிடைக்கும் என்று அதில் சேர்ந்ததை நினைத்தால் இப்போதும் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கின்றது.

போகட்டும் ! என் நண்பன் ராமசாமி.  டிபன் மோகத்தில் சேர்ந்த எங்களில் அவன் ஒரு தீவிர சாம்பார் பிரியன் என்றாலும் மூன்றாம்  ஆண்டு என். சி. சி. யில் இருக்கும் போது அவன் “குவார்ட்டர் மாஸ்டர் “ பதவிக்கு பேர் கொடுத்து வென்றும்  விட்டான்.

இப்போது “குவார்ட்டர் மாஸ்டர்” என்றால் என்ன என்று உங்களுக்குச்  சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.

CQMS – Company Quarter Master Sergeant என்பது என்.சி. சி. யில் உயர்ந்த பதவிகளில் ஒன்று. 154 மாணவர்கள் கொண்ட படை ஒரு கம்பெனி எனப்படும் . அதில் உள்ள ஐந்து சார்ஜெண்ட்களில் ஒரு பதவி இது. திட்டமிடுதல், பரேட் நடத்துவதற்கான தேதிகள், நேரங்கள் நிர்ணயித்தல், மாணவர்களுக்குத் தேவைப்படும் உடைகள், உணவு பற்றி தேவைக்கு ஏற்ப என். சி. சி. ஆசிரியரிடம் தெரிவித்தல் போன்ற பல முக்கியமான முடிவுகளை அவன் எடுக்கவேண்டும். எனவே அதற்கான போட்டியும் பலமாக இருக்கும்.

சம்பந்தப்பட்ட தேர்வாளர் என். சி. சி. நடத்தும் தேர்வுகளில் “பி” சர்டிபிகேட் பாஸ் செய்திருக்கவேண்டும். 75 % பரேட் லீவு போடாமல் வந்திருக்கவேண்டும். மூன்றாம் ஆண்டு மாணவர்களே போட்டியில் கலந்துகொள்ள முடியும் .இத்தனையிலும் வென்று அவன் மேலே வந்தான் என்றால் , ஏதோ ஒரு கணத்தில் அவனது சாம்பார் மோகம் உண்மையான சாரணர் மோகமாக மாறியிருக்கவேண்டும். அது மட்டுமல்ல அவன் கல்லூரி நாட்களில் சி சர்டிபிகேட் பாஸ் செய்து நேஷனல் டிபன்ஸ் அகடெமியில் சேர்ந்து அங்கிருந்து இராணுவத்திலும் சேர்ந்துவிட்டான், அதன் பிறகு அவன் தொடர்பு இல்லாமல் போனது.

எதனால் ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறோம் என்பதும் அதன் பிறகு எப்படி அது வாழ்க்கையின் திருப்புமுனை ஆகிவிடுகின்றது என்பதும் நம் கையில் இல்லை என்பதை ராமசாமி வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. விளையாட்டாக என்/சி/சி/ யில் சேர்ந்தாலும் அது அவனது வாழ்க்கையை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மாற்றிவிட்டது !

என். சி. சி. எனது வாழ்க்கையில் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்தது. பல இனிய அனுபவங்களைத் தந்தது. அதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கல்லூரியில் சேர்ந்ததும் பி. யு. சி. யில் என். சி. சி. யில் சேர பெயர் கொடுத்தேன். ஆனால் “ரைபிள்ஸ்” என்ற பிரிவில் அனைத்து மாணவர்களும் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதில் சிலரையே சீனியர் டிவிஷன் என். சி. சி. யில் சேர்த்துக் கொண்டனர். எங்கள் கல்லூரியில் இருந்தது ஆர்மி விங். எனக்கோ “ஏர் விங்” விமானப்படைப் பிரிவில் சேர ஆசை. எங்கள் கல்லூரி என். சி. சி பொறுப்பாசிரியர் மேஜர் ஜான். அவரிடம் சென்று என் ஆசையைத் தெரிவித்தேன். ஒவ்வொரு கல்லூரிக்கென்று தனி விமானப் படைப் பிரிவு கிடையாது. அதற்கான  பொது இயக்ககம் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடில் உள்ளது. அங்கு சென்று இந்த அப்ளிகேஷனைக் கொடு என்று ஒரு ரெகமேண்டேஷன் கடிதத்தோடு  என்னை அனுப்பிவைத்தார்.

அது மிகப் பெரிய ஏர் ஃபோர்ஸ் அலுவலகம். அங்கே சென்று ஸ்டூடண்ட்ஸ் படைப் பிரிவின் தலைவரான ஸ்குவாடர்ன் லீடர் ராமன் என்பவரை நான் பார்க்கவேண்டும். அந்த நேர்காணலுக்குப் பிறகே அவர்கள் என்னைத் தேர்வு செய்ய வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஓராண்டுக்கு சில மணவர்களுக்கே வாய்ப்புக் கிடைக்கும். நான் ஜூனியர் பிரிவில் பள்ளியில் இருக்கும் போதே ஏ சர்டிபிகேட் பாஸ் செய்திருந்தேன். விமானப்படைப் பிரிவு பற்றிய தகவல்கள் , ரேங்க் அதாவது வெவ்வேறு  பதவிகள் பற்றிய வரிசை , தோள்பட்டையில் இருக்கும் குறியீடு இவை பற்றி எல்லாம் படித்திருந்தேன். இதற்கான கையேடுகளும் , சிறிய குறிப்பேடுகளும் என்னிடம் இருந்தன. நேர்காணலுக்குக் காத்திருக்கும் நேரத்தில் இவற்றை “உரு” போட்டுக்கொண்டிருந்தேன். ( இது போன்ற ஒரு நேர்காணலை சந்திப்பது எனக்கு இதுவே முதல் தடவை) கொஞ்சம் பதட்டமாக இருந்தது. செலெக்ட்  ஆகாவிட்டால் பெருத்த ஏமாற்றம் ஆகிவிடும். காரணம் எனக்கு விமானப்படை பிரிவுதான் முதலிலிருந்தே ஆசை. பள்ளியிலும் கல்லூரியிலும் அது இல்லை. இப்போது சீனியர் டிவிஷனில் வாய்ப்பு வந்துள்ளது இதை விடக்கூடாது. விமானப்படை சீருடையே மிக அழகாக இருக்கும். ஸ்கை புளூ வண்ண பேண்ட் சட்டை. கறுப்பு நிற பூட்ஸ். தலைக் குல்லா ஆர்மி நேவி போல் இல்லாமல் காங்கிரஸ் குல்லா போல இருக்கும். சல்யூட் வைப்பதிலும், பரேட் செய்யும் போது செய்யும் பயிற்சிகளிலும்  சிறிது வேறுபாடுகள் உண்டு. இன்ஜின் இல்லாமல் பறக்கும் “கிளைடர் “ பயிற்சியும் பெற வாய்ப்புண்டு.

“வி. வி. சுப்பிரமணியன் , ஃபர்ஸ்ட் இயர் விவேகானந்தா கல்லூரி “ என்ற அழைப்பு வந்தது.

அவசர அவசரமாக நினைவுகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு , தள்ளு கதவை திறந்து, “எக்ஸ்க்யூஸ் மீ “ சார் என சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்து “பிராப்பர் அட்டென்ஷன்” ல் நின்று விறைப்பான ஒரு சல்யூட் அடித்தேன்.

பெரிய காற்றோட்டமான அறை . நடுவில் மூன்று பேர் பயன்படுத்தக் கூடிய அளவுள்ள முரட்டு மரமேசை. மேசையின் மேற்பகுதி பச்சை வெல்வெட் துணியால் மூடப்பட்டு அதன் மேல் கனமான கண்ணாடி போடப்பட்டிருந்தது. மூவண்ணக் கொடி கொண்ட ஒரு சிறிய ஸ்டாண்ட் . ஒரு புறம் சில கோப்புகள். சிறிய பில்லியர்ட்ஸ் டேபிள் அளவு இருந்த மேசையில் நிறைய காலியிடம். கையெட்டும் தொலைவில் ஓர் அழைப்பு மணி. நாற்காலியின் பின்புறம் தேசப் பிதாவின் படம். அதனருகே பெரிய சைஸில் தேச மற்றும் உலக வரைபடங்கள். அரை செகண்ட் கண்ணில் பட்டவை இவை.

எதிரே என்னைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்த ஸ்குவார்டன் லீடர் வயது ஐம்பதிருக்கும். ஒட்ட வெட்டப்பட்டிருக்கும் சால்ட் பெப்பர் முடி. புன்னகைக்கு அதிகம் பழக்கம் இல்லாத சதுர முகம். அப்பழுக்கற்ற கம்பீரமான சீருடை. கண்ணாடி போடும் பழக்கமுள்ள ஆனால் இப்போது போடாத முகத்தில் கனமான புருவங்கள்.  

“ஸோ ! யு ஆர் சுப்ரமணியன் ஃப்ரம் விவேகானந்தா காலேஜ் . டெல் மீ சம்திங் அபௌட் சுவாமிஜி “ என்றார். கரகரப்பில்லாத கனமான குரல்.

நான் ஒன்றாவதிலிருந்து ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவன். பல பேச்சுப் போட்டிகளில் பேசி வென்றவன். எனவே தயக்கமின்றி ஒரு நிமிடம் சுவாமிஜி பற்றி தெளிவாகப் பேசினேன்.

என்னைப் பற்றிய தகவல்களை அப்ளிகேஷனில் பார்த்துப் படித்துக் கொண்டே இருந்தவர் சட்டென்று தலையைத் தூக்கி

“யு வேர் இன் ஜூனியர் டிவிஷன் ஆர்மி விங் ! இப்ப ஏன் ஏர் விங் சேர வந்திருக்கிறாய். ஸ்டிரேஞ்ச் .. என்ன காரணம் ?’ என்றார்.

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை . ஒரு நிமிடம் யோசித்தேன். பிறகு யோசிக்காமல் பதில் சொன்னேன். ஆனால் அந்த பதிலால்தான் எனக்கு ஏர் விங்கில் இடம் கிடைத்தது. அப்படி என்ன பதில்?

அடுத்த இதழில் சொல்கிறேன்.

(தொடரும்)