புத்தகம் : Looking Back: A Brief Autobiography (English) 

எழுதியவர்: Prof.V.Krishnamurthy

Published by : Indica – 2024

300 பக்கங்கள் விலை ரூ. 630

      முதலிலேயே  நன்றியை சொல்லிவிடுகிறேன். பிட்ஸ் பிலானியில் என்னுடைய சீனியராகவும் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அஸ்ட்ரோ ஃபிஸிக்சில் மூத்த விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான நண்பர் கே.இ. ரங்கராஜன் அவர்கள்தான் இந்த நூலை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

 பிட்ஸ் பிலானியுடன் எந்தவிதமாவது தொடர்புடையவர்களுக்கும் ப்ரொஃபசர் வி .கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னாலே போதும் – அவருடைய மலர்ந்த முகமும், கட்டுக்கடங்காத முனைப்பும், ஆர்வமும், உற்சாகமும், சுறுசுறுப்பும் உடனே கண்முன்னே தோன்றி நிற்கும். அமெரிக்காவில் ப்ரொஃபசராக பணியாற்றிக் கொண்டிருந்த அவரைத் தேர்வு செய்து 1965 லேயே பிட்ஸ் பிலானிக்கு வலிய அழைத்து வந்து கணிதத்துறையில் ப்ரொஃபசராக அமர்த்தினார்கள். 1969 -70இல் அவர் அங்கே அந்த பல்கலைக்கழகத்தின் துணை இயக்குனராக உயர்வு பெற்றார். டாக்டர் சி ஆர் மித்ரா தலைமையில் அவர் செயல்பட்டு பிட்ஸ் பிலானியின் புகழையும் பெயரையும் பல மடங்கு பெருகச் செய்து அதை உலகம் முழுவதும் அறியச் செய்ததில் அவருக்கும் பெரிய பங்கு உண்டு.

   97 வயதில் அவரைப் போன்றவர்கள் அடங்கி ஒடுங்கி கூட்டுக்குள் முடங்கி விடுவார்கள். ஆனால் டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தியோ இதுவரை எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்கள் போதாதென்று, தன்னுடைய சுவையான வாழ்க்கையிலிருந்து பல பகுதிகள் கொண்ட சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.

    300 பக்கங்கள் கொண்ட “லுக்கிங் பேக்” என்ற இந்நூலில் 3 அணிந்துரைகள், 19 அத்தியாயங்கள், 8 இணைப்புகள் மற்றும் ஒரு இறுதிக் குறிப்பும் அடங்கியுள்ளன. இந்த 90 ப்ளஸ் வயது இளைஞரின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. பல படிப்பினைகளைக் கொண்டது. பலவிதமான அடுக்குகளைக் கொண்டது.

    இந்நூலை படிக்கும்போது ஒரு கணித ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரைத் தவிர, எவ்வளவு சவால்களை எதிர்கொண்டு அவர் இந்த உச்சங்களைத் தொட்டார் என்பதையும், அவருடைய ஆன்மீகப் புரிதல்களையும், எவ்வளவு உயரப் பறந்தாலும் பூமியில் கால்களை எப்போதும் வைத்திருக்கும் பூரண மனிதரையும் நாம் ரசித்துக் களிக்க முடியும்.

   அறிவார்ந்த வாசகர்களுக்கேற்ற அருமையான வாசிப்பு அனுபவம்.