வறுமையின் நிறம் ஆச்சர்யம்!

(குவிகம் நிகழ்வில்  பாமா கோபாலன் – வேதா கோபாலன் பேசியபோது எடுத்த படம்

குவிகம் நிகழ்வு :  28-Dec-2019 – பாமா கோபாலன் தலைப்பு : குமுதமும் நானும்
குவிகம் நிகழ்வு :  25-Jan-2020 – வேதா கோபாலன் தலைப்பு :  என் எழுத்துலக அனுபவங்கள்

 

(நன்றி:தினமலர் )

வெறும் துணுக்குத் தோரணம் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்த என்னை என் கணவர் (அப்போது வெறும் நண்பர்) “கதை எழுத ஆசை வரலையா? எத்தனை நாள்தான் துணுக்கு.. ஆசிரியர் கடிதம் என்று திருப்தியடையப் போறீங்க?” என்று கேட்டு உசுப்பேற்றியபிறகு அதிலேயே மனம் உழன்று கொண்டே…

எல்லாம் சரி..

காதலிக்க நேரமில்லை நாகேஷ் மாதிரி.. கதை? எங்கே கிடைக்கும் என்ற சூட்சுமம்தான் பிடிபட மாட்டேன் என்கிறது.

எப்படிக் கதை எழுதுவது என்ற பயிற்சிப் பட்டறையெல்லாம் அப்போது கிடையாது.

ஆனால்…

அந்த சூட்சுமமும் ஒரு நாள் பிடிபடத்தான் செய்தது.

அப்போதெல்லாம் என் வீட்டில் போன் கிடையாது. வெளியிலிருந்து போன் செய்ய வேண்டும்.

மிக முக்கியமான ஒரு கடிதம் வீட்டுக்கு வந்திருந்தது. அப்பாவின் பிசினஸ் அலுவலகத்தில் போன் இருந்தது . (அச்சாபீஸ்).

நாங்கள் அப்பாவுக்கு போன் செய்ய வேண்டுமென்றால் வீட்டுக்கு அருகில் ஒரு ஐந்து நிமிட நடையில் உள்ள .. பிரெட்டும் பன்னும் வாசனையடிக்கும் ஜாய் பேக்கரிக்குத்தான் போக வேண்டும். உண்மையில் அது பி சி ஓ கிடையாது. ஆனாலும் போன் இருந்தது. கால் செய்ய அனுமதிப்பார்கள்.

லாண்ட் லைன்.

“இந்தக் கடிதத்தின் சாராம்சத்தை அப்பாவுக்கு உடனே தெரிவிக்க வேண்டும்.“ என்று அம்மா சொன்னதால் அந்த பேக்கரிக்குப் போனேன்.

விஷயம் முக்கியமானது என்பதால் மனசில் பரபரப்பு இருந்தது. உடனே போன் செய்து உடனே தெரிவிப்பதற்கான வார்த்தைகளை மனசுக்குள் ஒத்திகை பார்த்தவாறு போனேன். கல்லூரி முடித்த வருஷம் என்பதால் ஒரு மாணவி மாதிரிதான் நடந்து கொள்வேன்.

பேக்கரிக்குப் போனேன்.

எனக்கு முன் யாரோ போனில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

என்ன ஒரு இரண்டு நிமிஷம் பேசுவாங்களா.. மூன்று நிமிடம் பேசுவாங்களா..

அலட்சியமாய் நின்றிருந்தேன். பத்து.. பதினைந்து.. இருபது..

அந்தப் பெண்மணி பேசிக்கொண்டே…

என் பொறுமை என்னைவிட்டுக் கழன்று மெல்ல விலகிப்போய்க்கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் ஒரு கால் செய்தால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.

கடைக்காரரிடம் ஜாடையாய்ச் சொன்னேன். அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும் என்பதுபோல் என்னைப் பார்த்தார். வழக்கமாக அந்தக் கடைக்குப் போனாலே அழகான கேக்குகளின் வடிவங்களையும், வண்ணங்களையும் .. அதையெல்லாம்விட வாசத்தையும் ரசிக்கும் வேதாவின் மண்டைக்குள் எதுவுமே ஏறவில்லை.

என் அவசரத்துக்கு மற்றொரு காரணம் இருந்தது. நான் சொல்வதைப் பொருத்து அப்பா ஒரு முக்கிய முடிவு எடுத்து அதை லெட்டரில் எழுதி அன்றைக்கு மாலைக்குள் என் உறவினருக்குப் போஸ்ட் செய்து அது குறைந்த பட்சம் நாளைக்கு மறுநாள் போய்ச் சேர  வேண்டும். இப்போதுள்ள வாட்ஸப் உலகம் மாதிரியா?

அந்தப் பெண்மணி முக்கியமாய் எதுவும் பேசவில்லை. ஏதோ உறவுக்காரர்கள் மதிக்காததால் அடுத்த மாசம் நடக்கவிருந்த கல்யாணத்தக்குப் போகப்போவதில்லை. இவ்வளவுதான் சாராம்சம். அடுத்த மாசம் வரை எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். விஸ்தாரமாய்… அல்லது அந்த அம்மாள் மனசு மாறிக் கல்யாணத்துக்குப் போகத் தீர்மானிக்கவும் சான்ஸ் இருக்கிறது.

கடைசியில்.. நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக போனை வைத்தார்கள். நான் பாய்ந்து எடுத்து என் அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னதும் அவர் நடவடிக்கைகள் எடுத்ததும் இங்கே முக்கியம் இல்லை.

வீட்டுக்குத் திரும்பி வரும்போதே “அட.. இதையே கதையாய் எழுதினால் என்ன?” என்று மனசுக்குள் ஃப்ளாஷ் அடித்தது.

இளம் பெண்ணைக் கல்லூரி மாணவியாக்கினேன். நான் பேச வேண்டிய தகவலை ‘அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்து டாக்டர் கைவிரித்த’ செய்தியாக்கினேன்.

நம்புங்கள். நான் எழுதிய முதல் கதை அதுதான். பிரசுரமாயிற்று. அதில் அந்த மாணவி பேசும் இள வயசு வம்புகள் பலரைக் கவர்ந்தன. அது என்னைப் பொருத்த வரை அன்றாடம் சிநேகிதிகள் பேசுவதுதான்.

ஆக…

என் கதையா!

முதல் கதையா!

அதுவும் என் பிரியமான குமுதத்திலா..

என்ற பிரமிப்பு என்னைவிட்டுப் போக வெகுநாட்களாயின.

முதல் சிறுகதை வெளியான மூன்றே மாதங்களுக்குள் மாலைமதி நாவலை முயற்சிக்க அதுவும் அச்சு இயந்திரத்தைப் பார்த்துவிட்டது.

      என் முதல் கடிதம், முதல் துணுக்கு, முதல் சிறுகதை, முதல் நாவல் அனைத்தையும் ஆதரித்த அந்தக் குமுதம்தான் எங்களின் கல்யாணப் பேட்டியைப் பிரசுரித்து நாங்கள் ஏதோ முக்கியமானவர்கள் போலும் என்ற பெருமிதத்தை ஏற்படுத்தியது.

      இதற்குள் ஏராளமானவர்கள் எங்களுக்கு நட்பாகிவிட்டார்கள். பிரசுரமாகும்வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று குமுதத்தின் இணை ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான திரு ராகி ரங்கராஜன் சொல்லிவிட்டதால் கமுக்கமாக வைத்திருந்தோம்.

      1980 அக்டோபர் மூன்றாம் வாரத்தில்…. கல்யாணத்துக்கு முதல்நாள் வெளியான குமுதத்தில் அந்தப் பேட்டி வெளியானது.

      இதைவிடப் பிரமாதமான கல்யாணப் பரிசை யாரும் கொடுத்துவிட முடியுமா என்ன?

      திருமணத்துக்கு வந்த ஒவ்வொருவரும் கைகொடுத்துப் பாராட்டிப் பேட்டியைப் புகழ்ந்தார்கள். ரகசியமாய் வைத்திருந்தது பற்றிச் சிலருக்குக் கோபமும் இருந்திருக்கும்.

      எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுர சுந்தரி) பால குமாரன். சுப்ரமணிய ராஜூ, சுகந்தி, நிவேதா, ஷைலஜா, பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், குமுதம் பால்யூ உள்படப் பல எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். பல எடிட்டர்களும் எழுத்தாளர்களும் கடிதம்.. தந்தி மூலம் வாழ்த்தினார்கள்.

      கி வா ஜகன்னாதன் உள்படப் பல பிரபலங்களின் கடிதங்களை இன்றளவும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

      ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி, ராமு ஆகியோர் வந்திருந்தார்கள்.

      வாழ்வில் கல்யாணம் என்பது மறக்க முடியாத நிகழ்வுதான். ஆனால் அதை  மேலும் மறக்க முடியாததாக்கிவிட்டது அந்தப் பேட்டி.

அமுத சுரபி மாத இதழில் ஆசிரியர் திரு திருப்பூர் கிருஷ்ணன் சாரின் தாயார் “கல்யாணத்துக்கு ஆறு லட்சம் பத்திரிகைகள் அடிச்சுட்டாளே” என்று வியந்து சொன்னாராம்.

 

(நன்றி:தினமலர் )     

 

உண்மை.

அப்போது குமுதத்தில் சர்க்குலேஷன் அதுதான். மொத்தம் ஒன்பது லட்சம் பேர் படித்தார்கள் (ஒரு குமுதத்தை ஒன்றரை பேர் படிப்பார்கள் என்றது சர்வே)

      இது மாதிரிப் பலரும் படித்ததால் என்ன ஆயிற்று?

      நிறைய ஆயிற்று.

      கல்யாணமான மறுநாள் நானும் இவரும் சினிமாவுக்குப் போயிருந்தோம்.

      நாங்கள் குடியிருந்தது குரோம்பேட்டையில். (என் அம்மா வீடும் கணவர் வீடும் இதே குரோம்பேட்டைதான். நடுவில் நாலே நாலு தெருக்கள்தான்.)

      .குரோம்பேட்டை வெற்றி உள்ளூர்த் திரை அரங்கம். படம் வறுமையின் நிறம் சிவப்பு.

இப்போது போல் அப்போதெல்லாம் சீட் நம்பர் போட்டு டிக்கெட் கொடுக்கும் வழக்கமெல்லாம் கிடையாது. சீக்கிரம் போனால் நல்ல சீட் பிடிக்கலாம். ஃபேனின் கீழேயோ.. கடைசி வரிசையிலோ அவரவரர் விருப்பத்துக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

நாங்கள் கிளம்பப் போகும் நேரம் யாரோ கல்யாணம் விசாரிக்க வந்துவிட்டதால் நமஸ்கரித்துக் கிளம்புவதற்கு நேரமாகிவிட்டது. தியேட்டர் நிரம்பி வழிந்தது. அங்கொரு சீட் இங்கொரு சீட் என்று மிகச் சில காலியாக இருந்தன.

பக்கத்துப் பக்கத்தில் இரண்டு சீட்கள் இல்லை.

வேறு வழியில்லை. தனித்தனியாக உட்காரத்தான் வேண்டும் என்ற சோகமான முடிவுக்கு வந்தபோது..

அந்த வரிசையின் ஓரத்தில் இருந்த நபர் எழுந்தார்.

“சார் பாமாகோபாலன் சார்.. வேதா மேடம்.. இப்பிடி சேர்ந்தாற்போல் உட்காருங்க. நான் வேற சீட் போறேன்..” என்றார் அந்த நபர்.

“நீங்க  யாருன்னு தெரியலையே,,” என்று இவர் திணற..

அந்த நபர் சிரித்தார். “உங்களுக்கு என்னைத் தெரியாது சார். இன்னிக்குத்தான் குமுதத்தில் உங்க ரெண்டு பேரோட பேட்டியும் படிச்சேன். புதுசாக் கல்யாணமானவங்க. பிரிஞ்சு உட்கார வேணாமேன்னு”

நெகிழ்ந்து நன்றி சொன்னோம் அந்த இளைஞருக்கு. இதற்குள் நாங்கள் பேசிக்கொண்டதை அருகில் இருந்தவர்கள் கவனித்து தங்களுக்குள் பேசி வியந்து..

ஆச்சர்யமாய் இருந்தது.

“அதுதான் குமுதத்தின் வீச்சு” என்று பாமாஜி சந்தோஷமாய்ச் சொன்னார்.

ஒவ்வொரு முறையும் என் நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணத்தை அருள்வது தாங்களாய்த்தான் இருக்க வேண்டும் என்று குமுதம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறதா என்ன?

இதுவாவது சாதாரண நிகழ்ச்சி..

அடுத்த நிகழ்ச்சி அதைவிட செம்ம.

எண்பதுகளில் ஹனிமூன் கலாசாரமெல்லாம் அனேகமாகக் கிடையாது.

என் கணவரின் அண்ணா டெல்லியில் செட்டில் ஆனவர். அண்ணா என்று பெயரே தவிர நண்பர் என்றே சொல்லலாம்.

“டேய். ரெண்டு பேரும் மைசூர்.. பெங்களூர் போயிட்டு வாங்கடா” என்று டிக்கெட் புக் செய்து கொடுத்ததோடு அந்த நாளில் நினைத்து பிரமிப்படையக்கூடய தொகை ஒன்றைக் கொடுத்தார்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸில் என்ன ஆயிற்று தெரியுமா?

அடுத்த அத்தியாயத்தில் என்ன இருக்கப்போகிறது என்று படிக்கக் காத்திருக்கும் உங்களைப் போலவே எழுதக் காத்திருக்கும் நானும் ஆர்வத்துடன் இருகிறேன்.

எ.கு.நா — தொடரும்.

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குவிகம் இலக்கியவாசல் நிகழ்வில்  பாமா கோபாலன் – வேதா கோபாலன் அவர்கள் பேசியதைப் பற்றி  தினமலரின் நிருபர்   எல் முருகராஜ் பதிவு  செய்த தினமலர் செய்தியை இந்த லிங்க்கில் காணலாம்

https://www.dinamalar.com/weekly/pokkisham/chennai/2447920

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&