
இம்மாத சிறந்த கதை :
இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன் – சொல்வனம்
———————————————————————————————————————————————-
அக்டோபர் 2024. தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான கதைகளில் 71 கதைகளை நான் படித்து ஆய்வதற்குப் பணித்த குவிகம் குழுவுக்கு நன்றி. இந்தக் கதைகளில், இன்றைய எழுத்தாளர்களின் எழுத்து நடை, சிந்தனை, கதை சொல்லும் உத்தி, மற்றும் தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் கையாண்ட முறை அனைத்தும் என்னை வியக்க வைத்தது. பலதரப்பட்ட கதைக்களங்கள்! அறுசுவை விருந்து!
என்னைப்பொருத்த வரை, சிறந்த கதை என்பது:
வாசகனை உடனே கையைப்பிடித்துக் கொண்டு, ஆற்றில் செல்லும் படகைப்போல, தான் செல்லும் பாதையில் இழுத்துச் சென்று, வியக்க வைத்து, புதுப்புனலைக் காட்டி, வாசகனின் மனத்தில் வியாபித்து, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி முடியவேண்டும். சிறுகதை என்பதால், அதுவும் ஒரு அளவோடு இருக்கவேண்டும். அளவான வர்ணனை, சீரிய நோக்கம், நடை, உத்தி இவை சிறப்பைச் சேர்க்கும். முடிவில், எந்தக் கதை மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, மறக்க முடியாமல் செய்கிறதோ அதுவே என்னைப் பொறுத்த வரை சிறந்த கதை.
இந்தக்கதைகளில் குடும்பம், சமுதாய விழிப்பு, அறிவியல், நகைச்சுவை ,புராணம், அடர்த்தியான வட்டார வழக்கு தளும்பும் பல களங்கள்/தளங்கள் மிளிறுகின்றன.
ரசித்த சில கதைகள்:
1) பூனை மனிதர்கள் – ஹேமா ஜெய் – அந்திமழை அக்டோபர் இதழ்
சில எழுத்துக்கோர்வைகள் அழுத்தமாக இருக்கிறது.
“என்ன வடை இது காசாட்டம்”
“தோட்டத்து மூலிகைகள் களைகள் தான் என்றுமே”
“தங்கத்தையே பெயர்த்துக் கை நிறைய அள்ளிக் கொடுத்தாலும் நிறைகிற மனம் தானே நிறையும்”
நிறைவைத் தந்த கதை. யதார்த்தமான வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
2) ஏமாந்த சோணகிரி – ஆர் வி ராஜேந்திரன் – நடுகல் – அக்டோபர்
சில காட்சிகளை ஊகிக்க வைத்து, சில மர்மங்களை உள்ளுறவிட்டு எழுதிய ஸ்டைல் சிறப்பு.
3) மறுமலர்ச்சி – அ செல்லப்பாண்டி – நடுகல் அக்டோபர்
வர்ணனை -நன்றாக இருக்கிறது. (கொஞ்சம் அதிகமாகவே இருந்தது). தந்தை வேலைக்குப் போய் தான் ஆக வேண்டும் என்னும் அளவுக்கு வறுமை என்பது கதையில் தெரியவில்லை. பாஞ்சாலி கற்பனை சுகமாக இருந்தது. திருப்பம் எதுவுமில்லாமல், தெளிந்த நீரோடைபோல் நடை.
4) அகாலத்தின் கண்கள் – சிவநேசன் – செப்டம்பர் 24
வளர்ந்த காலம் எப்படி ஒருவன் தர்மங்களை நிர்ணயிக்கிறது என்று சொல்லும் கதை. திருட்டை நியாயப்படுத்தும் அம்மாவின் தர்க்கம், மகனிடம் ஒட்டிக்கொள்கிறது என்னும் இந்த கருத்துக்களுடன், ஒரு திருடனின் மன ஓட்டங்களை , அவனது குழப்பமான நியாயங்களை, நேர்த்தியாக சொல்லும் சித்திரம். பிடிப்பான கதை.
6) மூடப்பட்ட வழிகள் – திருவாரூர் பாபு கல்கி – 10/10/24
குடும்ப நிலைக்காக சாராயம் விற்கும் மாணவனுக்கு, ஆசிரியர் சைக்கிள் ரிப்பேர் செய்யும் தொழிலை ஆக்கிக்கொடுக்கிறார். அவன் அதை விட்டு விட்டு மிண்டும் சாராயம் விற்கப் போகிறான். ஏன்? சமுதாயம் அவனை விடவில்லை. ஆசிரியர் மனம் கனத்ததைப் போல நம் மனமும் கனக்கிறது.
7) என்றாவது ஒரு நாள் – கங்காதரன் சுப்ரமணியன் சொல்வனம் அக்டோபர் 23
முப்பது வருட முன் காணாமல் போன அண்ணன் வந்து, மீண்டும் இறந்து போகும் கதை.
8) கற்பனை செய் மனமே – பட்டுக்கோட்டை பிரபாகர் -குமுதம் -23/10/24
சிறுகதையில் பாத்திரப்படைப்பு செய்வது என்பது கடினம். அதில் இது சிறப்பாக இருக்கிறது.. நாயகன் என் இப்படி நடந்து கொள்கிறான், ஏன் இப்படி முடிவு செய்கிறான் என்பதை அவன் கிராஃபிக் டிசைனர் தொழில் நுணுக்க எண்ணங்களை விவரிப்பதன் மூலம் விளக்கப்படுகிறது. காதல் அரும்பும் கதையில், நாயகனின் அறிவும், கருணையும், காதலுடன் கலந்து தெளிவான சிறுகதையாகத் திகழ்கிறது.
9) அம்புகள் திரும்புவதில்லை – ராஜேஷ்குமார் குமுதம் 30 /10/24
திகில் கதை என்பது போல் தொடங்கும் கதை. நாயகி கோர்ட் கேசில் ஆஜராக நள்ளிரவு வண்டியில் போகிறாள் என்பது ஒரு த்ரில்லர் கதை என்று எண்ணத் தோன்றுகிறது. பயணம் தொடராமல் பெண் திரும்பும் போது, அங்கு கண்ட முதியவரின் மனநிலை அறிகிறாள். இருவருக்கும் தங்கள் தனிமை, மற்றும் ஆதரவின்மையின் புரிதலால், பாசப்பிணைப்பில் இணையும் feel good கதை.
10) இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன்
மகாபாரதத்துக் கதை – ஒரு புதிய பார்வை. கர்ணனின் சிதைக்கருகில் ஒரு காட்சி. புதிய கற்பனை. புதிய தர்க்கங்கள். துரியோதனன் குந்தியிடம் பேசும் கற்பனை வசனம் சிந்தனையைத் தூண்டுகிறது. தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?”
சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுத்தது :
இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன் – சொல்வனம்

தேர்ந்தெடுத்த கதைகள் வெளியான இதழ் பற்றி குறிப்பு இல்லையே.
அதையும் பதிவு செய்யுங்கள்.
LikeLike